Published:Updated:

ஊரடங்கு காலத்தில் - விவசாயிகளுக்கு உதவும் கேள்விகளும் பதில்களும்!

ஆலோசனை

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா ஊரடங்கால் பல துறைகள் முடங்கிக் கிடக்கச் சுறுசுறுப்பாகச் செயல்பட்ட துறை விவசாயம்தான். அந்த விவசாயம் தொடர்ந்து செயல்பட அரசு அமைப்புகள், பல்வேறு தனியார் அமைப்புகள் பல முயற்சிகளை முன்னெடுத்தன. அந்த வகையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் மூலமாகச் சில பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதுகுறித்துப் பேசிய புதுக்கோட்டையில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானி ராஜ்குமார், “ஊரடங்கு அறிவித்த ஐந்தாம் நாள் எங்களுக்கு ஓர் அழைப்பு வந்தது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண் விவசாயி ஒருவர், நிலக்கடலைச் சாகுபடி தொடர்பான ஆலோசனை கேட்டார். அதற்கான விளக்கம் கொடுத்தோம்.

ஊரடங்கு காலத்தில் -  விவசாயிகளுக்கு உதவும் கேள்விகளும் பதில்களும்!

‘இதுபோன்ற பிரச்னைகள் பல விவசாயிகளுக்கு உள்ளது. கத்திரி, மிளகாய், பூச்செடிகள், நெல் போன்ற பயிர்களில் பூச்சி மற்றும் நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஊரடங்கின் காரணமாக விவசாயிகள் யாரிடமும் சென்று விவரங்களைக் கேட்க முடியவில்லை. நீங்கள் உதவலாமே’ என்றார்.

அதன் தொடர்ச்சியாக, இந்த இக்கட்டான சமயத்தில் விவசாயிகளுக்குக் கைபேசி வழி தகவல் பரிமாற்றம் கைகொடுக்கும் என்று நினைத்தோம். கிராமப்புறங்களில் தொலைபேசியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் இதனைப் பெரும்பாலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் எடுத்துச்செல்லத் திட்டமிட்டோம். வேளாண்மைத்துறையையும் இணைத்துக்கொண்டோம். விளைபொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள், அரசு விவசாயிகளுக்காகச் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் மற்றும் அனுமதி பெறுவதற்கான விவரங்களையும் விளக்கிக் கூற வாய்ப்பாக அமையும் என்று எண்ணினோம்.

புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ் பாபு, வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் லதா ஆகியோர் எங்களோடு இணைந்து செயல்பட முன்வந்தார்கள். விவசாயிகளையும், விவசாய வல்லுநர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களையும் இணைக்கும் முயற்சியாக ‘போன்-இன்–நிகழ்ச்சி’ என்று சொல்லக்கூடிய கைபேசி வழி கலந்துரையாடலை ஏற்பாடு செய்தோம். நல்ல வரவேற்பு இருந்தது.

நிலக்கடலை
நிலக்கடலை

ஊரடங்கு சமயத்தில் நடத்தப்பட்ட முதல் நிகழ்ச்சியில் 121 விவசாயிகள் பங்குபெற்று 162 கேள்விகள் கேட்டார்கள். பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துதல், உர மேலாண்மை, சந்தை நிலவரம், விவசாய விளைபொருள்களை விற்பதற்கான வழிமுறைகளைப் பற்றிய கேள்விகள் அதிகமாக இருந்தது.

தொடர்ச்சியாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், விழுப்புரம், புதுச்சேரிப் பகுதிகளில் தொலைபேசி வழிக் கலந்துரையாடல் மற்றும் பயிர் மருத்துவ முகாம்களை நடத்தினோம். இதுவரை 11 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 680 விவசாயிகள் பங்குபெற்றார்கள்” என்றார்.

தொலைபேசி மற்றும் காணொலி வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடலில் விவசாயிகளின் கேள்விகளுக்கு வல்லுநர்கள் அளித்த பதில்கள் இங்கே இடம் பெறுகின்றன.

- வைலட்மேரி, வெல்லாகுளம், புதுக்கோட்டை மாவட்டம்.

“நான் 3 ஏக்கரில் நிலக்கடலைப் பயிர் செய்துள்ளேன். செடியின் இலைகள் பரவலாக மஞ்சள் மஞ்சளாக உள்ளன. இதனைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்?’’

“ஊட்டச்சத்துப் பற்றாக்குறை காரணமாக இலைகள் மஞ்சள் நிறம் அடைந்துள்ளன. இதனைச் சரிசெய்ய ஒரு ஏக்கருக்கு, 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து இலைகள் நன்கு நனையும்படி, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதேபோல நிலக்கடலை இலைகளில் ஏற்படும் டிக்கா இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனஸை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.’’

-சங்கர், மறமடக்கி, புதுக்கோட்டை மாவட்டம்.

ஊரடங்கு காலத்தில் -  விவசாயிகளுக்கு உதவும் கேள்விகளும் பதில்களும்!

“எனது தோட்ட மல்லிகைச் செடிகளில் இலைகள் பழுப்பு நிறமாகவும், முடக்கு விழுந்தும் காணப்படுகிறது. பூக்கள் அழுக்கு நிறமாக உள்ளன. இதை எவ்வாறு சரிசெய்வது?’’

‘‘மல்லிகையில் அழுக்குப்பூ என்பது வெள்ளை ஈக்கள் எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சியின் தாக்குதலால் ஏற்படுவதாகும். இதனைச் சரிசெய்ய ஒரு ஏக்கருக்கு 12 எண்கள் என்ற அளவில் மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறியினைச் செடி மட்டத்திற்குச் சற்று மேலாக அமைக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊரடங்கு காலத்தில் -  விவசாயிகளுக்கு உதவும் கேள்விகளும் பதில்களும்!

மேலும் அசாடிராக்டின் என்ற வேம்பு பூச்சிவிரட்டியினை ஒரு ஏக்கருக்கு 400 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.’’

- சுப்பிரமணியன், அண்டகுளம், புதுக்கோட்டை மாவட்டம்.

“உளுந்துப் பயிரில் இலைகள் மஞ்சளாகவும், தடிமனாகவும் உள்ளன. இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?’’

‘‘உளுந்துப் பயிரில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது மஞ்சள் தேமல் நோயின் அறிகுறி. பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அப்புறப்படுத்தியபிறகு, நோய் மேலும் பரவாமல் தடுக்க ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனஸை பத்து லிட்டர் புளித்த மோரில் கலந்து தெளிக்க வேண்டும்.’’

- கணேசன், வைத்திக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம்.

ஊரடங்கு காலத்தில் -  விவசாயிகளுக்கு உதவும் கேள்விகளும் பதில்களும்!

‘‘பருத்திக் காயில் புழு துளைத்த துவாரம் உள்ளது. மேலும் சப்பைகள் உதிர்கின்றன. இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?’’

‘‘உங்கள் பருத்தியில் புள்ளிக் காய்ப்புழுக்களின் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்யப் பாதிக்கப்பட்ட மற்றும் கீழே விழுந்த காய்களையும், சப்பைகளையும் அகற்றி அப்புறப்படுத்தியபிறகு, ஒரு ஏக்கருக்கு BT குர்ஸ்டக்கி என்ற எதிர் உயிரி பாக்டீரியாவை 300 மி.லி என்ற அளவில் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் பருத்தி காய்ப்புழுவிற்கான இனக்கவர்ச்சிப் பொறியினை ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் அமைக்க வேண்டும்.’’

- திருப்பதி, வடகாடு, புதுக்கோட்டை மாவட்டம்.

“ரஸ்தாளி வாழையில் இலைகள் மஞ்சள் நிறமடைந்து கருகுகின்றன. இதனை எவ்வாறு சரிசெய்வது?’’

‘‘வாழையில் இலைகள் மஞ்சள் நிறமாகிக் கருகுதல், மட்டைக்காய்ச்சல் அல்லது மஞ்சள் இலைப்புள்ளி நோயின் அறிகுறிகளாகும்.

இதனைச் சரிசெய்ய ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனஸை 100 மி.லி ஒட்டும் பசையுடன் கலந்து, 100 லிட்டர் தண்ணீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும். மேலும் நோயால் பாதிக்கப்பட்ட கருகிய இலைகளைக் கூரிய கத்திக்கொண்டு அகற்றி அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும்.’’

- சாத்தையா, வடகாடு, புதுக்கோட்டை மாவட்டம்.

ஊரடங்கு காலத்தில் -  விவசாயிகளுக்கு உதவும் கேள்விகளும் பதில்களும்!

“மல்லிகைப்பூச் செடியில் பூக்கள் குங்குமப்பூ நிறமாக மாறிக் கருகி கீழே உதிர்ந்து விடுகின்றன. இதனை எப்படிச் சரிசெய்வது?’’

‘‘மல்லிகையில் பூக்கள் நிறமாற்றம் அடைவதற்கு மொக்குப்புழுவின் தாக்குதலே காரணமாகும். இதனைச் சரிசெய்ய ‘மெட்டாரைசியம் அனிசோபிலியே’ என்ற எதிர் உயிரி பூஞ்சணத்தை ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் அல்லது அசாடிராக்டின் 400 மி.லி என்ற அளவில் செடி நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். மேலும் ஒரு ஏக்கருக்கு 6 இனக்கவர்ச்சிப்பொறி அமைத்துத் தாய்ப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.’’

- பாலமுருகன், புள்ளான்விடுதி, புதுக்கோட்டை மாவட்டம்.

“தென்னை மற்றும் வாழை இலைகளின் அடிப்புறத்தில் நூலாம்படை போன்று வெள்ளை நிறப் பூச்சிகள் காணப்படுகின்றன. இலையின் மேற்புறம் கறுப்பு நிறமாக உள்ளது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?’’

‘‘தென்னை, வாழையில் இது போன்ற பாதிப்பை ஏற்படுத்துவது ரூகோஸ் வெள்ளை ஈயாகும். இதனைச் சரிசெய்ய விசைத்தெளிப்பான் கொண்டு நீர் மற்றும் காதி சோப்பு கரைசலை அதிக அழுத்தத்தில் இலையின் பின்புறம் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். மேலும் ‘என்கார்சியா’ என்ற ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 100 என்ற எண்ணிக்கையில் விடுவிக்க வேண்டும்.’’

- சந்திரசேகரன், புள்ளான்விடுதி, புதுக்கோட்டை மாவட்டம்

கத்திரிக்காய்
கத்திரிக்காய்

“மிளகாய் நடவு செய்து 45 நாள்கள் ஆகின்றன. இலைகளில் சுருட்டை விழுகிறது. இதனை எவ்வாறு சரிசெய்வது?’’

‘‘மிளகாயில் கோடைக்காலத்தில் இலைப்பேன்கள் எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகளால் இலைச் சுருட்டை ஏற்படும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஊதா வண்ண ஒட்டுப்பொறிகள் 10 எண்கள் என்ற அளவில் செடி மட்டத்திற்குச் சற்று மேலாக அமைக்க வேண்டும். மேலும் ஒரு ஏக்கருக்கு ‘வெர்டிசீலியம் லக்கானி’ என்ற எதிர் உயிரி பூஞ்சணத்தை ஒரு லிட்டர் அல்லது அசாடிராக்டின் 400 மி.லி என்ற அளவில் இலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.’’

- ஸ்ரீதர், ஓணாங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

“ஒரு ஏக்கரில் பூவன் வாழை பயிர் செய்துள்ளேன். குருத்துப்பகுதி விரியாமல் கெட்டித் தன்மையுடன் உள்ளது. இதனை எவ்வாறு சரிசெய்வது?’’

‘‘கோடைக்காலத்தில் வாழையில் இந்தப் பிரச்னை ஏற்படும். இது கால்சியம் மற்றும் போரான் சத்துக் குறைபாட்டினால் ஏற்படுவதாகும். இதனை நிவர்த்திச் செய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால்சியம் சல்பேட் 5 கிராம், போராக்ஸ் 3 கிராம் என்ற அளவில் கலந்து குருத்துப்பாகம் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.’’

- பாரதிதாசன், ஓணாங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

‘‘கத்திரிக்காய்களில் சொத்தை அதிகமாக உள்ளது. இதனை எவ்வாறு சரிசெய்வது?’’

‘‘கத்திரியில் சொத்தைக்காய்களை ஏற்படுத்தக்கூடியவை காய்ப்புழுக்களாகும். இதனைக் கட்டுப்படுத்தப் பாதிக்கப்பட்ட காய்களை அகற்றி அப்புறப்படுத்தியபிறகு, ஒரு ஏக்கருக்கு 300 மி.லி என்ற அளவில் BT குர்ஸ்டக்கி தெளிக்க வேண்டும்.

மேலும் தாய்ப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கக் கத்தரிக் காய்ப்புழுக்களுக்கான இனக்கவர்ச்சிப் பொறியினை ஒரு ஏக்கருக்கு 5 எண்கள் என்ற அளவில் செடி மட்டத்திற்குச் சற்று மேலாக அமைக்க வேண்டும்.’’

- பழனிச்சாமி, அணியாப்பூர், திருச்சி மாவட்டம்.

ஊரடங்கு காலத்தில் -  விவசாயிகளுக்கு உதவும் கேள்விகளும் பதில்களும்!

“பருத்தி இலை மற்றும் தண்டுப்பகுதியில் கள்ளிப்பூச்சி நிறைய உள்ளது. இதனை எவ்வாறு சரிசெய்வது?’’

“பருத்தியில் கள்ளிப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 400 மி.லி அசாடிராக்டினை காதி சோப்பு கலந்து விசைத்தெளிப்பான மூலமாகத் தெளிக்க வேண்டும்.

முதல் தெளிப்பு முடிவுற்ற 8-ம் நாளில் மீன் எண்ணெய் சோப்பு ஒரு ஏக்கருக்கு 400 மி.லி என்ற அளவில் 100 மி.லி ஒட்டும் பசை கலந்து தெளிக்க வேண்டும். மேலும் இந்தப்பூச்சியைப் பரப்பக்கூடிய எறும்புகளையும், எறும்பு புற்றுகளையும் அழிக்கவேண்டும்.’’

- மைக்கேல், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.

“எள் பயிரில் இலைகள் ஒன்றோடொன்று இணைந்து கருகி விடுகின்றது. உள்ளே சிறிய புழுக்கள் இருக்கின்றன. இதனை எவ்வாறு சரிசெய்வது?’’

‘‘எள் சாகுபடியில் இலைப்பிணைக்கும் புழுவினைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு அசாடிராக்டின் 400 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.’’

- செல்வராஜ், கணபதி அக்ரஹாரம், தஞ்சாவூர் மாவட்டம்.

“ஏடிடி.5 ரக உளுந்து விதைத்து 50 நாள்கள் ஆகின்றன. அசுவினிப் பூச்சித் தாக்குதல் தென்படுகின்றது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?’’

உளுந்துச் சாகுபடியில் அசுவினி தாக்குதலைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 400 மி.லி என்ற அளவில் அசாடிராக்டினை செடிகளின் குருத்துப்பகுதி நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

தொடர்புக்கு, முனைவர் ராஜ்குமார், செல்போன்: 98652 31033

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு