Published:Updated:

ஏக்கருக்கு ரூ.7 லட்சம்! - இனிப்பான லாபம் தரும் டிராகன் ஃப்ரூட்!

டிராகன் ஃப்ரூட் தோட்டம், சுந்தர்ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
டிராகன் ஃப்ரூட் தோட்டம், சுந்தர்ராஜன்

மகசூல்

வெளி நாடுகள் மற்றும் வட மாநிலங்களில் மட்டுமே பயிர் செய்யப்படும் ‘டிராகன் ஃப்ரூட்’டைத் தேனி மாவட்டத்தில் விளைவித்து வருகிறார், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான சுந்தர்ராஜன். சீலையம்பட்டி-வேம்பம்பட்டிச் சாலையில் அமைந்துள்ள சுந்தர்ராஜனின் டிராகன் ஃப்ரூட் தோட்டத்திற்குச் சென்றோம்.

“இப்ப எல்லாப் பழக்கடைகள்லயும் ‘டிராகன் ஃப்ரூட்’ கிடைக்கிது. இளஞ்சிவப்பு நிறத்தில டிராகன் உடம்புல இருக்கச் செதில் மாதிரி இருக்கும். அதனைச் சாப்பிட்டா சர்க்கரை வியாதி குணமாகும்னு சொல்றாங்க. டிராகன் ஃப்ரூட்ல ரெண்டு ரகம் இருக்குது. வெளித்தோற்றம் ஒரே மாதிரியா இருந்தாலும், உள்ளே விதையோடு இருக்கிற சதைப்பகுதி ஒரு ரகத்துல சிவப்பு நிறத்திலும், இன்னொன்னுல வெள்ளை நிறத்திலும் இருக்கும். நம்ம ஊர் பழக்கடைகள்ல பெரும்பாலும் வெள்ளை நிறச் சதைப்பகுதி இருக்கப் பழம்தான் கிடைக்கும். ஆனால், நான் ரெண்டு ரகங்களையும் பயிர் பண்ணியிருக்கேன்” என்று அறிமுகம் கொடுத்த சுந்தர்ராஜன், தொடர்ந்து பேசினார்.

டிராகன் ஃப்ரூட்
டிராகன் ஃப்ரூட்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குஜராத்தில் வாங்கிய கன்று

“நான் பிறந்தது விவசாயக் குடும்பம். பேங்க்ல வேலைகிடைச்சது. ஓய்வுபெற்ற பிறகு, விவசாயத்துல முழுசா இறங்கிட்டேன். மத்தவங்க மாதிரி இல்லாம, வித்தியாசமா ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். பேரீச்சை நடவு செஞ்சேன். பெருத்த நஷ்டம் ஆகிப்போச்சு. அப்ப, அமெரிக்காவுல இருக்கிற என் மருமகன் தான் டிராகன் ஃப்ரூட் பற்றிச் சொன்னார். பெருசா பராமரிப்பு தேவையில்லை. நல்ல லாபம் கிடைக்கும்னு சொன்னார். அதைக்கேட்டு சரி, டிராகன் ஃப்ரூட் பயிர் செய்யலாம்னு முடிவு செஞ்சேன். தேனி தோட்டக்கலைத்துறை அதிகாரிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். ‘டிராகன் ஃப்ரூட்டா, அப்படின்னா என்ன?’னு என்கிட்ட திருப்பிக் கேட்டாங்க. தொடர்ந்து, என் மருமகனே இன்டர்நெட் மூலம் தேடி, கடைசியா குஜராத் மாநிலத்தில டிராகன் ஃப்ரூட் கன்றுகள் கிடைக்கும்னு பார்த்துச் சொன்னார். பிறகு, 2013-ம் வருஷம், பெங்களூருல வேலையில இருக்க என் மகன், குஜராத் வரைக்கும் போய், கன்றுகளை வாங்கிட்டு வந்தார். முதல்ல 20 சென்ட் நிலத்தில பயிர் செய்யலாம்னுதான் நினைச்சேன். அதனால, 200 கன்றுகளை வாங்குனோம். ஒரு கன்றின் விலை ரூ.220. இப்ப விலை கூடியிருக்கலாம். வாங்கிட்டு வந்து நடவு செய்றதுக்கு முன்ன, நிலத்தைக் குஜராத்ல இருக்கத் தோட்டம் மாதிரியே தயார் செய்ய முடிவு பண்ணினோம்’’ என்றவர்,

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிமென்ட் தூண் அவசியம்

“டிராகன் ஃப்ரூட் வளரத் தூண் தயார் செய்யணும். 7 அடி உயர சிமென்ட் தூண், அதோட உச்சியில 4 ஓட்டைகள் இருக்க வட்ட வடிவ சிமென்ட் மூடிச் செய்யணும். இதைச் சின்னமனூர்ல செஞ்சேன். தூண் செய்ய ரூ.250, வட்ட வடிவ மூடிச் செய்ய ரூ.200னு மொத்தம் ரூ.450 ஆச்சு. 20 சென்ட்ல 8 அடி இடைவெளியில மொத்தம் 50 தூண்களை வெச்சேன். தூணை நடுறதுக்கு முன்ன, ஒரு அடி குழி தோண்டி தூண் நடணும். சுத்தி மண்ணைப் போட்டு 2 அடி உயரத்துல மேடு அமைக்கணும். பிறகு, ஒரு தூணைச் சுற்றி 4 டிராகன் ஃப்ரூட் கன்றுகளை நடணும். முதல்ல நான் வாங்கிட்டு வந்து நடவு செய்தது சிவப்பு நிற டிராகன் ஃப்ரூட். மறுபடியும் 2018-ம் வருஷம், இன்னும் கொஞ்சம் கன்றுகளை வாங்கிட்டு வந்து 80 சென்ட் நிலத்துல நடவு செஞ்சேன். இப்ப என்கிட்ட 1 ஏக்கர்ல 1,000 டிராகன் ஃப்ரூட் செடிகள் இருக்குது. அதுல 250 வெள்ளை, 750 சிவப்பு” என்றவர் தோட்டத்தைச் சுற்றிக்காட்டினார்.

டிராகன் ஃப்ரூட் தோட்டம், சுந்தர்ராஜன்
டிராகன் ஃப்ரூட் தோட்டம், சுந்தர்ராஜன்

18 மாதங்கள் காத்திருப்பு

தொடர்ந்து பராமரிப்பு பணிகள் குறித்து விளக்கினார், “கன்று நடவு செய்ததிலிருந்து முதல் ஒரு வருஷம் எதுவும் நடக்காது. செடி மெல்லத் தூணில் ஏறும். அதற்கு ஏற்றவாறு தூணோடு சேர்த்து கயிறு வைத்துக் கட்டிவிட வேண்டும். ஒரு வருட முடிவில், தூண் உச்சியில் உள்ள வட்ட வடிவ மூடியைச் செடி தொடும். அடுத்த ஒரு வருடத்தில், மூடியில் உள்ள ஓட்டை வழியாக வளர்ந்து குடை போல மாறும். 18 மாதங்கள் முடிந்த பிறகுதான், பூ வைக்கும். அதிலிருந்து இரண்டாவது மாதத்தில் பழங்களை அறுவடை செய்யலாம். முழுதாக 20 மாதங்கள் பொறுமையாக இருந்தால் மட்டுமே பழத்தைக் கண்ணில் பார்க்க முடியும்.

சொட்டுநீர்ப் பாசனம்
சொட்டுநீர்ப் பாசனம்

ஆடு, மாடுகள் சாப்பிடாது

இதற்குப் பராமரிப்பு என்று எதுவும் இல்லை. களைச் செடிகள் மட்டும் வளரும். ஆடு மாடுகளை விட்டால் அதைச் சாப்பிட்டுவிடும். டிராகன் ஃப்ரூட் செடியில் முள் இருப்பதால், செடி பக்கத்தில் அவை போகாது. செடியும் பாதுகாப்பாக இருக்கும். குடை போன்ற அமைப்புப் பெரிதாக மாறும். எனவே, வருடத்திற்கு ஒருமுறை கவாத்துச் செய்வதுபோல வெட்டி விட வேண்டும். இல்லையென்றால், பழங்கள் அதிகமாகக் கிடைக்காது. மேலும், 8 வருடங்கள் வரை தாங்கக்கூடிய தூண், எடை அதிகமாக இருப்பதால், விரைவில் உடைந்துவிடும். எனவே, தூண் செய்யும்போது நல்ல உறுதியாகச் செய்தால் 15 வருடங்கள்கூட உறுதியாக இருக்கும். சொட்டுநீர்ப் பாசன முறைதான் சிறந்தது. வாரம் இரண்டு முறை, ஒரு மணி நேரம் தண்ணீர்ப் பாய்ச்சினால் போதும். வாரம் இரண்டு முறை கட்டாயம் தண்ணீர் விட வேண்டும்’’ என்றவர்,

குறிப்பு: இது முதல் மகசூல் கணக்கு. அடுத்தடுத்த ஆண்டுகளில் செலவு 50,000 போக 7,00,000 லாபமாகக் கிடைக்கும்.
குறிப்பு: இது முதல் மகசூல் கணக்கு. அடுத்தடுத்த ஆண்டுகளில் செலவு 50,000 போக 7,00,000 லாபமாகக் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு பழம் 450 முதல் 750 கிராம்

“இதுவரைக்கும் நான் உரம் எதுவும் போடலை. ஒரு லோடு கம்போஸ்ட் உரம் மட்டும் வருஷத்துக்கு ஒரு தடவை போட்டிருக்கேன். மாசம் ஒரு தடவை, 200 லிட்டர் தண்ணியில, 20 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து கொடுக்குறேன். குறிப்பாகப் பூ வெச்ச பிறகு, பஞ்சகவ்யாவின் அளவை 30 லிட்டரா அதிகரிக்கலாம். இதனால, பழம் பெருசா இருக்கும். அதிகபட்சமா ஒரு பழம் 750 கிராம் வரைக்கும் பெரிசா கிடைக்கும். 450 கிராமுக்குக் குறையாது” என்றவர்,

சிவப்பு, வெள்ளைப் பழங்கள்
சிவப்பு, வெள்ளைப் பழங்கள்

“இது சீசன் பழம். என்கிட்ட இருக்க 1,000 செடிகளும் பழம் கொடுத்துட்டு இருக்குது. ஒரு நாளைக்கு இவ்வளவு கிலோதான் கிடைக்குதுன்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பழம் பழுக்கப் பழுக்கப் பறிச்சுகிட்டே இருக்கலாம். வருஷத்துக்கு 6 மாதங்கள் மட்டும், அதாவது ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மட்டுமே பலன் கொடுக்கும். மழை, பனிக் காலத்தில பழங்களோ, பூக்களோ இருக்காது. டிராகன் ஃப்ரூட் பயிர் செஞ்சவங்க, பொறுமையாக இருந்தாதான் பலன் கிடைக்கும். இதை மனசுல வெச்சுகிட்டுதான் நடவு செய்யணும். ஆரம்பத்தில் செடி, தூண் செலவு கொஞ்சம் அதிகமா இருக்கும். 2 வருஷத்துக்கு மேல, வரவு மட்டும்தான். வருஷங்கள் அதிகரிக்க அதிகரிக்கச் செடியில பழங்கள் அதிகமாகக் கிடைக்கும். ஒரு செடியிலிருந்து ஒரே நேரத்தில 50 பழங்கள்கூட எடுக்க முடியும். நல்லா பராமரிச்சா, ஒரு செடி 20 வருஷம் வரைக்கும் பழங்கள் கொடுத்துகிட்டே இருக்கும்” என்றவர் நிறைவாக,

டிராகன் ஃப்ரூட்
டிராகன் ஃப்ரூட்

5,000 கிலோ மகசூல்

‘‘என் தோட்டத்துல ஒரு செடியில இருந்து 10 முதல் 20 காய்கள் வரைக்கும் கிடைக்குது. சராசரியா 6 கிலோ கிடைக்கும். 1,000 செடிகள்ல இருந்து 6,000 கிலோ கிடைக்கும். குறைந்தபட்சம் 5,000 கிலோவுக்குக் குறையாது. சிவப்பு கிலோ 175 ரூபாய், வெள்ளை 150 ரூபாய்னு விலைப் போகுது. சராசரியா கிலோ 150 ரூபாய்னு வெச்சுகிட்டா, 5,000 கிலோவுக்கு 7,50,000 லட்சம் ரூபாய் வருமானமாக் கிடைக்குது. நான் செலவு செஞ்ச பணத்தை முதல் மகசூல்லயே எடுத்திட்டேன். இப்ப, வருஷம் 50,000 ரூபாய் செலவாகும். 7,00,000 ரூபாய் லாபமா நிக்குது’’ என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு, சுந்தர்ராஜன், செல்போன்: 97916 59077

மலைப்பகுதிகளைத் தவிர அனைத்து இடங்களிலும் வளரும்!

டிராகன் ஃப்ரூட் தொடர்பாகத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலை உதவி பேராசிரியர் முனைவர் எஸ்.முத்துராமலிங்கத்திடம் கேட்டோம்.

ஏக்கருக்கு ரூ.7 லட்சம்! - இனிப்பான லாபம் தரும் டிராகன் ஃப்ரூட்!

‘‘டிராகன் ஃப்ரூட் ‘இரவு ராணி’ எனச் சொல்வார்கள். இதன் தாயகம் மத்திய அமெரிக்கா. தாய்லாந்து, வியட்நாம், இஸ்ரேல், இலங்கை ஆகிய நாடுகளில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. ஜாம், ஜெல்லி, ஒயின் மாதிரியான பொருள்கள் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த கனி. உடம்பில் கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது. இதோடு மனித உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

சிவப்பு, வெள்ளை, மஞ்சள் என மூன்றுவிதமான பழங்கள் இருக்கின்றன. ஆண்டுச் சராசரி மழையளவு 50 செ.மீ. வெப்பநிலை 20 முதல் 30 டிகிரி சென்டிகிரேட் உள்ள இடங்களில் சிறப்பாக வளரும். தமிழ்நாட்டில் மலைப்பாங்கான இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் வளரும். இதற்குச் சூரியஒளித் தேவை. ஆனால், அது மிகவும் அதிகமாக இருக்கக் கூடாது. அங்கக கரிமச்சத்து உள்ள வண்டல் மண், செம்மண் நிலங்களில் வளரும். வடிகால் வசதியுள்ள நிலமாக இருக்க வேண்டும்.

தண்டு மூலம் நாற்றுத் தயாரிப்பு

இதனை விதை மூலமாகவும், தண்டு மூலமாகவும் நாற்றுகளை உருவாக்கலாம். விதை மூலமாக உற்பத்தி செய்தால் காய் வருவதற்கு நீண்டநாள் ஆகும். 20 செ.மீ நீளமுள்ள தரமான தாய்செடியிலிருந்து கிளைகளை உடைத்து, பாக்கெட்டில் போட்டு வளர்க்க வேண்டும். தொழுவுரம், மேல் மண், மணல் மூன்றையும் 1:1:2 என்ற விகிதத்தில் கலந்து, அந்தப் பையில் கிளைகளை நட்டு வளர்க்க வேண்டும். அங்கு அது வேர் விட்டு வளர்ந்தவுடன், எடுத்து நிலத்தில் நடலாம்.

இரண்டு அடி நீள, ஆழ, அகலத்தில் குழியெடுக்க வேண்டும். இதில் தொழுவுரம், மேல் மண் ஆகியவற்றை இட்டு, செடிகளை நடவு செய்யலாம். வரிசைக்கு வரிசை செடிக்குச் செடி 7 அடி இடைவெளி தேவை. அதிக தண்ணீர் தேவைப்படாது.

5 முதல் 6 லட்சம் வருமானம்

ஒரு செடியில் ஆண்டுக்கு 6 முறை அறுவடை செய்யலாம். நிறம் மாறத் தொடங்கிய 3 நாளில் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 5 முதல் 6 டன் மகசூல் கிடைக்கும். இது 25 முதல் 30 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்’’ என்றார்.

தொடர்புக்கு, முனைவர் முத்துராமலிங்கம், செல்போன்: 97900 58011

நாற்றுகளை நாமே உற்பத்திச் செய்யலாம்!

டிராகன் ஃப்ரூட் தொடர்பாகத் தமிழகத்தில் சில பண்ணைகள் உருவாகி வருகின்றன. அந்தப் பண்ணைகளில் சிலவற்றுக்கு ஆலோசகராக இருப்பவர் ஜார்ஜ். டிராகன் ஃப்ரூட் சாகுபடி தொடர்பாக அவரிடம் பேசினோம். “மலைப்பகுதிகளைத் தவிர அனைத்து பகுதிகளிலும் இதனைச் சாகுபடி செய்யலாம். வெயில் தாங்கி வளரும் பயிர். அதிக தண்ணீர் தேவைப்படாது. 10 நாள்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதும். அதுவும் சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகச் செய்தால் அதிக தண்ணீர் தேவையிருக்காது. டிராகன் ஃப்ரூட் நடவுக்குச் சற்றுச் செலவாகும். ஒருமுறை முதலீடு. பல ஆண்டுகளுக்குத் தொடர் வருமானம் பார்க்கலாம். நாற்றுகள் தமிழகத்திலேயே கிடைக்கின்றன. இரண்டு வயதான செடியிலிருந்து, விவசாயிகளே நாற்று உற்பத்தி செய்துகொள்ளலாம். 5 ஏக்கர் சாகுபடி செய்ய நினைப்பவர்கள், முதலில் 3 ஏக்கர் சாகுபடி செய்தால் போதும். பிறகு, அதிலிருந்து நாற்று உற்பத்தி செய்து நடவு செய்துகொள்ளலாம்.

ஜார்ஜ்
ஜார்ஜ்

தற்போது தமிழகத்தில் சிவப்பு நிற பழம் உடைய டிராகன் ஃப்ரூட் நாற்று 120 ரூபாய். வெள்ளை 100 ரூபாய் விலையில் கிடைக்கிறது. சில பண்ணைகளில் விற்பனை செய்கிறார்கள். 6 அடிக்கு 6 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்தில் குழியெடுக்க வேண்டும். அதில் 7 அடி உயரமுள்ள சிமென்ட் தூண்களை ஊன்ற வேண்டும். உள்ளே ஒன்றரை அடி போக, 5.5 அடி வெளியே இருக்க வேண்டும்.

இந்தத் தூண்களை நாமே தயாரித்துக்கொள்ளலாம். தூண் உச்சியில் சதுரவடிவ சிமென்ட் கிராதியைப் (4 ஓட்டைகள் கொண்ட சிமென்ட் சிலாப்) பொருத்த வேண்டும். தூண் நடவுக்குப் பிறகு, தூணைச் சுற்றி 4 கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அதன் பிறகு, அது வளர்ந்து மேலே ஏறிக் கிராதியைத் தொடும். அதுவரை பாசனம் மட்டும் கொடுத்தால் போதும். வேறு பராமரிப்பு எதுவும் தேவைப்படாது. இயற்கை விவசாயம் செய்பவர்கள், நாற்று நடவு செய்யும்போது, குழியில் இயற்கை உரங்களைத் தேவைக்கேற்ப இட்டுக்கொள்ளலாம்.

8 கிலோ முதல் 20 கிலோ வரை

பூச்சி, நோய் தாக்குதல் பெரும்பாலும் இருக்காது. 18 மாதங்கள் காத்திருக்க வேண்டும். பிறகு மகசூல் கிடைக்கத் தொடங்கும். ஒரு செடியிலிருந்து 2 கிலோ வரை மகசூல் கிடைக்கும். போகப் போக மகசூல் அதிகரித்து ஒரு செடிக்கு 5 கிலோ வரை கிடைக்கும். குறைந்தபட்சம் 2 கிலோ கட்டாயம் கிடைக்கும். அந்த வகையில் ஒரு தூணில் உள்ள 4 செடிகள் மூலம் 8 கிலோ முதல் 20 கிலோ வரை மகசூல் கிடைக்கும். பழக்கடைகளில் ஒரு கிலோ 300 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், விவசாயிகளிடம் சிவப்புப் பழம் கிலோ 150 முதல் 175 ரூபாய் வரையும், வெள்ளைப் பழம் 100 முதல் 125 ரூபாய் விலையில் கொள்முதல் செய்கிறார்கள். ஆக, என் கணக்குப்படி ஒரு ஏக்கரில் உள்ள 1,000 தூண்களிலிருந்து 8,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். கிலோவுக்கு 150 ரூபாய் விலை கிடைத்தாலும், 12 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். குறைவான தண்ணீர், குறைந்த பராமரிப்பு உள்ள பயிர் சாகுபடி செய்ய நினைப்பவர்களுக்கு டிராகன் ஃப்ரூட் சிறந்த தேர்வாக இருக்கும்’’ என்றார்.