Published:Updated:

`உழவன் கைகளே உலகின் நம்பிக்கை!’ - கிறிஸ்துமஸ் குடிலில் ஆசிரியரின் விவசாயிகள் போராட்ட விழிப்புணர்வு

கிறிஸ்துமஸ் குடில்
கிறிஸ்துமஸ் குடில்

தூத்துக்குடியில் `உழவன் கைகளே உலகின் நம்பிக்கை' என்ற தலைப்பில், விவசாயிகள் போராட்டம் பற்றி ஓவிய ஆசிரியர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.

தூத்துக்குடி பெரையறா தெருவைச் சேர்ந்தவர் இசிதோர் பர்னாந்து. இவர், இங்குள்ள புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஒவ்வோர் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவின்போதும், தனது வீட்டில் கிறிஸ்துவின் பிறப்பைச் சித்திரிக்கும் வகையில் குடில் அமைத்து, அதன் பின்னணியில் அந்த ஆண்டில் நடைபெற்ற சமூக நிகழ்வுகளை மையப்படுத்தி விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து வைப்பது வழக்கம். முந்தைய ஆண்டுகளில் இதுவரை, புவிப் பாதுகாப்பு, இயற்கை பாதுகாப்பு, பழங்கலைகள் பாதுகாப்பு, உலக சமாதானம், செல்போன் கதிர்வீச்சுப் பாதிப்புகள், சிட்டுக்குருவிகள் அழிவு, போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், மழை, வெள்ள பாதிப்புகள், கஜா புயலின் பாதிப்புகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடில் அமைத்திருந்தார்.

கிறிஸ்துமஸ் குடில்
கிறிஸ்துமஸ் குடில்

இந்த ஆண்டு, கொரோனாவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மட்டுமல்லாமல் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடில் அமைத்துள்ளார். இதில் அமைக்கப்பட்டுள்ள குடிலை, மாணவர்கள் பயன்படுத்திய ஸ்கெட்ச் பேனாக்களைக் கொண்டு வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்துப் பேசியபோது, "உலகத்தையே அச்சுறுத்தி அனைத்து மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் புரட்டிப் போட்டதுடன், கோடிக்கணக்கான விலை மதிப்பில்லாத உயிர்களையும் பறித்துள்ளது கொரோனா. தற்போது இரண்டாவதாகவும் சுற்றி வந்து கொண்டிருக்கும் கொரோனாவைத் தடுக்கும் முறைகள், பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் ஓவிங்களின் மூலம் விளக்கியுள்ளேன். இந்த கொரோனா காலத்தில் மக்களுக்காக சேவை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவுத்தொழிலாளர்கள் ஆகிய உண்மை நாயகர்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.

ஓவிய ஆசிரியர் இசிதோர்
ஓவிய ஆசிரியர் இசிதோர்

கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்களுக்கு இன்றளவும் தொடர்ந்து வரும் `ஆன்லைன் வகுப்புகள்’ குறித்தும் கொரோனா காலத்தில் பிழைப்பின்றி, உணவின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுத்து உதவியவர்கள் குறித்தும் ஓவியங்கள் மூலமாக உணர்த்தியுள்ளேன். கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்துவிட்டது. அடுத்தடுத்த நாள்களில் குறையலாம், மறையலாம். ஆனால், நமக்கெல்லாம் உணவு படைக்கும் கடவுளர் விவசாயிகள்தாம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களால் எங்களுக்கு பாதிப்பு எனச் சொல்லி, இந்தியாவின் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திலும் பல கட்சியினரும், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் அச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அச்சட்டத்துக்கு எதிரான அவர்களின் போராட்டங்கள் குறித்தும் `உழவன் கைகளே உலகின் நம்பிக்கை’ என்ற கருத்தை மையப்படுத்தியும் ஓவிங்கள் வரைந்துள்ளேன்” என்றவர் குடில் அமைப்பு முறை பற்றிச் சொன்னார். ``ஒவ்வோர் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் அந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு குடில் அமைப்பதற்கான மையப் பொருளை நான், என் மனைவி பெர்லின், குழந்தைகள் இணைந்து பேசி முடிவெடுப்போம்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்தாண்டு கொரோனா, விவசாயிகள் போரட்டத்தைத் தேர்வு செய்தோம். இவை சம்பந்தமான நாளிதழ்கள், வார இதழ்களில் வெளியான அட்டைப்படங்கள், கார்டூன்களைச் சேர்த்து ஓவியமாகவும் தேவைப்பட்டால் அந்தக் கட்டிங்குகளையும் காட்சிப்படுத்துவேன். இதில், ஒட்டியுள்ள பெரும்பாலானவை `ஆனந்த விகடன்’, `ஜூனியர் விகடன்’ இதழ்களில் வெளியானவைதான். நான் விகடனின் தொடர் வாசகன் என்பதால் இவை எனக்கு எளிதாகக் கிடைத்தன. இந்த ஓவிங்களை வரைய 18 நாட்கள் ஆனது” என்றார். இந்த விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடிலை அப்பகுதியிலுள்ள மாணவர்கள், பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு