Published:Updated:

ஒரு ஏக்கர்... ரூ.6 லட்சம் - குழி நடவு முறையில் முருங்கைச் சாகுபடி!

முருங்கைச் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
முருங்கைச் சாகுபடி

மறுபயணம்-8

ஒரு ஏக்கர்... ரூ.6 லட்சம் - குழி நடவு முறையில் முருங்கைச் சாகுபடி!

மறுபயணம்-8

Published:Updated:
முருங்கைச் சாகுபடி
பிரீமியம் ஸ்டோரி
முருங்கைச் சாகுபடி

டந்த 14 ஆண்டுகளாக ‘பசுமை விகட’னுடன் பின் ஏர் பிடித்த விவசாயிகள் ஏராளம். புதிய தொழில்நுட்பம், மீட்டெடுக்கப்பட்ட பாரம்பர்ய விதைகள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்கள், இடுபொருள் தயாரிப்பு, மதிப்புக்கூட்டல் உள்ளிட்ட ஒவ்வொன்றிலும் முன்னோடி விவசாயிகள் இருக்கிறார்கள். பசுமை விகடன், ஆரம்பகாலங்களில் இத்தகைய முன்னத்தி ஏர்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது. அந்த விவசாயிகளைப் பலரும் பின்பற்றினார்கள். அந்த வகையில், பசுமை விகடன் ஆரம்ப காலங்களில் பதிவு செய்த பண்ணைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன. அந்தப் பதிவால் சமூகத்துக்கு ஏற்பட்ட நன்மைகள், சம்பந்தப்பட்ட விவசாயிகள் கற்றுக்கொண்ட பாடங்கள்பற்றிப் பேசுகிறது இந்த ‘மறுபயணம்’ பகுதி.

10.05.2007 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் ‘சக்கைப்போடு போடுது முருங்கை சாகுபடி!’ என்ற தலைப்பில் முருங்கைச் சாகுபடி பற்றிய கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள பள்ளப் பட்டியைச் சேர்ந்த அழகர்சாமியின் முருங்கைச் சாகுபடி அனுபவங்கள், ஆலோசனைகளை வெளியிட்டு இருந்தோம். தற்போது அழகர்சாமியின் பண்ணை எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்வதற்காக அவரது பண்ணைக்குச் சென்றோம்.

2007-ல் வெளியான கட்டுரை
2007-ல் வெளியான கட்டுரை

பசுமைக் குடில் நம்மை வரவேற்றது. முருங்கை வயலில் இருந்தவர் மகிழ்ச்சியாக வரவேற்றுப் பேசினார். ‘‘80 சென்ட் இடத்துல இருந்த நான், இன்னிக்குத் தோட்டம் வாங்குற அளவுக்கு முன்னேறி யிருக்கேன்னா அதுக்கு காரணம் நான் உருவாக்குன ஒட்டு ரக முருங்கையும், அதை உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்த்த பசுமை விகடனும்தான்’’ என்று உருக்கமாகப் பேசத் தொடங்கியவர், பசுமை விகடன் கட்டுரைக்குப் பிறகு, தனது பண்ணையில் நடந்த மாற்றங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டர்.

விவசாயி முதல் வியாபாரி வரை

‘‘நான் உருவாக்குன ஒட்டுரக முருங்கையில நல்ல மகசூல் எடுத்துகிட்டு இருந்தேன். கூடவே, சிறிய அளவுல நாற்றுகளையும் உற்பத்தி செஞ்சு விற்பனை செய்துகிட்டிருந்தேன். அந்த நேரத்துல பசுமை விகடன்ல என் பேட்டி வெளியாச்சு. பசுமை விகடன் தனி இதழாக வெளிவந்த காலகட்டம். கட்டுரை வெளியானதும் தமிழ்நாடு முழுக்கப் பல மாவட்டங்கள்ல இருந்தும் போன் பண்ணி விசாரிச்சாங்க விவசாயிங்க. பலபேரு பண்ணைக்கே நேரடியா வந்துட்டாங்க. அப்ப இருந்து இப்ப வரைக்கும் விவசாயிகள் வந்துகிட்டே தான் இருக்காங்க. நிறைய விவசாயிங்க ‘எங்களுக்கும் நாற்று தயார் பண்ணிக் கொடுங்க’ன்னு கேட்டாங்க.‘விண் பதியன்’ முறையில மரத்துல ஒட்டுகட்டி நாற்று உற்பத்தி செஞ்சு கொடுத்தேன். அதை நடவு செஞ்சவங்க நல்ல மகசூல் எடுக்கவும், அதைப் பார்த்து இன்னொருத்தர்னு கேட்டு வந்துகிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துல நாற்று தயார் செஞ்சு கொடுக்குறதே முழுநேர தொழிலா மாறிடுச்சு.

அழகர்சாமி
அழகர்சாமி

இப்ப பசுமைக்குடில் அமைச்சு, நாற்று தயார் பண்ணிக் கொடுக்குறேன். என்கிட்ட நாற்று கேட்குற விவசாயிகளுக்கு நான் உடனே நாற்றுக் கொடுத்திடுறதில்ல. அவங்க மண்வகை, தண்ணி வசதி இதையெல்லாம் கேட்டுகிட்டுதான் நாற்றுக் கொடுப்பேன். சில இடங்கள்ல மண்வகை, பாசனம் காரணமா நல்ல மகசூல் எடுக்க முடியாது. அந்த மாதிரி விவசாயிங்களுக்கு நாற்று இல்லைன்னு சொல்லிடுவேன்.

நம்மாழ்வாரின் ஆலோசனை

பசுமை விகடன் 2008-ம் வருஷம் வாடிப்பட்டியில நடத்துன ‘இனியெல்லாம் இயற்கையே’ பயிற்சி கொடுக்க நம்மாழ்வார் ஐயா வந்திருந்தாங்க. பயிற்சி எடுத்த விவசாயிகளை என்னோட பண்ணைக்கு அழைச்சிட்டு வந்தாங்க. அப்ப பண்ணைக்கு வந்து என்னோட பணிகளையெல்லாம் பார்த்துப் பாராட்டுன நம்மாழ்வார் ஐயா, ‘தண்ணி வசதி குறைஞ்ச விவசாயிகளும் முருங்கை மூலமா ஓரளவு வருமானம் பார்க்க முடியும். அதனால அவங்களுக்கு நாற்று விற்பனை செய்றதோடு நிறுத்தாம, தொடர்ந்து ஆலோசனை கொடுக்கணும். லாப நோக்கு இல்லாம இதைச் செய்யணும்’னு சொன்னார். இப்ப வரைக்கும் அதைக் கடைப்பிடிக்கிறேன். நாற்று வாங்கக்கூட வசதியில்லாத ஏழை விவசாயிகளுக்கு இலவசமாகவே நாற்றுக் கொடுத்துட்டு இருக்கேன். இதெல்லாம் நம்மாழ்வார், பசுமை விகடன் மூலம் நான் கத்துக்கிட்ட பாடம்.

‘‘முருங்கை எல்லா மண் வகைகளிலும் வளரும். ஆனால், வடிகால் வசதி அவசியம். களிமண் மற்றும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் போதுமான மகசூல் கிடைக்காது.’’

உலகுக்குக் காட்டிய பசுமை விகடன்

பசுமை விகடன் கட்டுரை வெளிவந்த பிறகு, தமிழ்நாடு மட்டுமல்லாம ஆந்திரா, கர்நாடகாவுல இருந்துகூட வந்து முருங்கை விவசாயத்தைப் பற்றித் தெரிஞ்சுகிட்டு நாற்று வாங்கிட்டு போயிருக்காங்க. நைஜீரியாவுல இருந்து ஒரு தமிழர், இதுக்காகவே இங்க வந்து முருங்கைச் சாகுபடி பற்றித் தெரிஞ்சுகிட்டு, நாற்று வாங்கிட்டுப் போனாரு. முருங்கை தொடர்பா என்னோட ஆராய்ச்சி, செயல்பாடுகளுக்காக எம்.எஸ். சுவாமிநாதன் பவுண்டேஷன், மகேந்திரா நிறுவனம், சிட்டி பேங்க்னு பல நிறுவனங்கள் எனக்கு விருது கொடுத்திருக்கு. இத்தனைக்கும் காரணம் பசுமை விகடன் என்னை வெளியுலகத்துக்கு அடையாளம் காட்டினதுதான்’’ என்றவர், முருங்கைச் சாகுபடி தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

குழியில் கவனம்

‘‘முருங்கையைப் பொறுத்தவரைக்கும் இலை, காய், பூ எல்லாமே காசுதான். இன்னிக்கு உலகமே முருங்கை பின்னாலதான் ஓடிக்கிட்டு இருக்குது. கொரோனா காலத்துல முருங்கை சூப் குடிக்காதவங்களே இல்லைன்னு சொல்ற அளவுக்குப் பலரும் முருங்கையைப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம ஊர்ல இருந்து வெளிநாடுகளுக்குப் போற விவசாய விளைபொருள்கள்ல முருங்கைப் பொடிக்குத் தனி இடம் இருக்கு. முருங்கையில காய் மட்டுமே வருமானம் பார்த்துட்டு இருந்தது அந்தக்காலம். இப்ப காய் மட்டுமல்லாம இலைகளையே தேடி வந்து வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னிக்கு நிலைமைக்கு விவசாயத்துல அதிக செலவு இல்லாத, பராமரிப்பு குறைஞ்ச, அதிக லாபமான பயிர் முருங்கைதான். வழக்கமா முருங்கை நடவு செய்யுறவங்க, குழியெடுக்குறதுல அதிக கவனம் செலுத்துறதில்ல. ஆனா, முறையா குழியெடுத்து நடவு செஞ்சா, நல்ல மகசூல் எடுக்கலாம். அதனால நான் குழி தொழில்நுட்பத்தை விவசாயிககிட்ட சொல்லிட்டு இருக்கேன். அந்த முறையில நடவு செய்யும்போது கடும் வறட்சியான காலத்திலயும் மரம் உயிரோட இருக்கும்’’ என்றவர் முருங்கைச் சாகுபடி குறித்து விளக்கினார்.

பசுமைக் குடிலில்
பசுமைக் குடிலில்

அதிக இடைவெளி

காற்றிலிருந்து காப்பாற்றும்

‘‘முருங்கை எல்லா மண் வகைகளிலும் வளரும். ஆனால், வடிகால் வசதி அவசியம். களிமண் மற்றும் தண்ணீர் தேங்கும் நிலங்களில் போதுமான மகசூல் கிடைக்காது. நடவு செய்த மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். மண்ணின் ஈரத்தைப் பொறுத்து 7 நாள்கள் முதல் 10 நாள்கள் இடைவெளியில் பாசனம் செய்தால் போது மானது. முருங்கை, வேகமா காத்தடிச்சா கீழே சாய்ஞ்சிடும். கடுமையான வறட்சியில மரம் காய்ஞ்சிப்போயிடும். அதுக்குக் காரணம், மேலாகக் குழி எடுத்து நடுறதுதான்.

ஆனா, 5 அடி ஆழத்துக்குக் குழி எடுத்து நடும்போது, வளமான மேல் மண் கீழே போயிடும். சாம்பல், எரு கலவைக் கொடுக்குறது மூலமா செடிக்குத் தேவையான சத்து கிடைச்சிடுது. குழிக்குள்ள மண்ணு பொலபொலப்பா இருக்கும். அதனால, நடவு செய்ற செடியோட வேர் 5 அடி ஆழம் வரைக்கும் வேகமாப் போகும். செடியும் நல்லா வளரும். 5 அடிக்குக் கீழே மண்ணு கடினமா இருக்கும். அதுல போய் வேர் முட்டி, உடைஞ்சு பல கிளைகளாகப் பிரியும்.

ஒரு குழியில ரெண்டு செடிகளை நடும்போது, ரெண்டு வேரும் இப்படிப் பல கிளைகளாப் பிரிஞ்சு ஒண்ணோடு ஒண்ணு பின்னிக்கும். அதனால எவ்வளவு காத்தடிச்சாலும் மரம் சாயாது. பொதுவா முருங்கையை நெருக்கமா வைக்கும்போது, காத்து உள்ள நுழைஞ்சு வெளியப் போக வழியில்லாம கிளைகள்ல மோதி மரம் சாயும். ஆனா, 30 அடி இடைவெளியில முருங்கையை நடும்போது, காத்து உள்ள நுழைஞ்சு, சுலபமா வெளியே போயிடும். அதனால இந்த முறையில நடுறவங்க காற்றைப் பத்தி கவலைப்பட வேண்டாம்.

மானாவாரி முருங்கை

5 அடி குழி ஒவ்வொண்ணும் ஒரு ஒட்டகம் மாதிரி. மழை பெய்யும்போது அந்த இடத்துல விழுகுற தண்ணியைப் பிடிச்சு வெச்சுக்கும். அதனால மரத்தோட வேர் பகுதி எப்பவும் ஈரப்பதமாகவே இருக்கும். ரெண்டு, மூணு மாசம் பாசனமே இல்லன்னாலும் மரம் செழிப்பா இருக்கும். 3 மாசத்துக்குள்ள எப்படியும் ஒரு மழை கிடைச்சிடும். அதனால இடையக்கோட்டை, பள்ளப்பட்டி மாதிரி யான ஒரு சில இடங்கள்ல இந்த முறையில முருங்கையை மானாவாரியாகவே சாகுபடி செய்றாங்க. இப்படிச் செய்யும்போது ரசாயனத்துக்கு வேலையே இல்லை. 6 மாசத் துக்கு ஒருதடவை சாம்பலையும், எருவையும் கலந்து கொடுத்தாப் போதும். காய் வர்ற நேரத்துல, பஞ்சகவ்யா தெளிச்சா, காய் நல்லா பெருசா வரும். இதனால மகசூலும் அதிகரிக்கும்’’ என்றவர் நிறைவாக,

‘‘மர முருங்கை நடவு செய்த 6-ம் மாதம் மகசூலுக்கு வரும். ஆரம்பத்துல 10 கிலோ, 20 கிலோ மகசூல் கிடைக்கும். படிப்படியாக அதிகரிச்சு, ரெண்டு வருஷத்துக்கு மேல ஒரு மரத்திலிருந்து வருஷம் 200 கிலோ மகசூல் வரை கிடைக்கும். ஒரு ஏக்கர்ல 80 குழிகள்... குழிக்கு ரெண்டு மரங்கள் வீதம் 160 மரங்கள் இருக்கும். சராசரியாக 150 மரங்கள்னு வெச்சுகிட்டாலும் 30,000 கிலோ காய் கிடைக்கும். ஒரு கிலோ 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை கிடைக்கும். சராசரியாக கிலோ 20 ரூபாய்னு வெச்சுகிட்டாலும், 6,00,000 ரூபாய் வருமானமாக் கிடைக்கும். இன்னிக்குப் பல விவசாயிகள் இப்படி வருமானம் எடுத்துகிட்டு இருக்காங்க‘‘ என்று மகிழ்ச்சியுடன் சொல்லிமுடித்தார்.


தொடர்புக்கு, அழகர்சாமி,

செல்போன்: 97917 74887

‘குழி’ தொழில்நுட்பம்

“முருங்கைச் சாகுபடி செய்ய ஒன்றரை அடிக்குக் குழி எடுத்து, கன்றை நடவு செய்வார்கள். ஆனால், இப்படி நடவு செய்றதைவிட, ஒவ்வொரு மரத்தோட குழியையும் ஒரு மழைநீர் சேமிப்பு கலனா மாற்ற வேண்டும். சாதாரண முறையில சாகுபடி செய்யும்போது, மரத்தைக் காப்பாற்ற நாம்தான் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சணும். ஆனா, குழி தொழில்நுட்பம் மூலமா நடவு செய்யும்போது மழைநீர் குழிக்குள்ள போய்ப் பயிர் வாடாமல் காப்பாற்றும். இயல்பிலேயே முருங்கை அதிக வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர். அதனுடன் சில தொழில்நுட்பங்களைச் சேர்த்தால் போதும். இரண்டு, மூன்று மாதங்கள் பாசனம் இல்லாவிட்டாலும் மரம் வாடாமல் பசுமையாக நின்று மகசூல் கொடுக்கும்.

முருங்கைத் தோட்டம்
முருங்கைத் தோட்டம்

நடவு செய்ய குழி எடுக்கும்போது 5 அடி ஆழம், 4 அடி நீளம், 4 அடி அகலத்தில் ஆழமாகக் குழி எடுக்க வேண்டும். இவ்வளவு ஆழம் வேண்டும். இந்தக் குழிகள்தான் வறட்சியிலிருந்து முருங்கையைக் காக்கும் கவசம். இப்படி எடுக்கும்போது ஒரு ஏக்கருக்குத் தோராயமாக 80 முதல் 100 குழிகள்வரை எடுக்கலாம்.

ஆழகுழி நடவு

குழியெடுக்கும்போது, முதல் 3 அடி ஆழம் வரை எடுக்கும் மண்ணைக் குழியின் மேல் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு அடி ஆழத்தில் எடுக்கும் மண்ணைக் குழியின் கீழ் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். 5 அடி ஆழம் எடுத்தவுடன், மேல் மண்ணைக் குழியில் 3 அடி உயரம் கொட்டி நிரப்ப வேண்டும். அதற்கு மேல், தொழுவுரம், சாம்பல் கலந்த கலவையை ஒவ்வொரு குழியிலும் 1 அடி உயரத்துக்குக் கொட்ட வேண்டும். அதற்கு மேல், ஏற்கெனவே எடுத்து வைத்துள்ள அடி மண்ணை 1 அடி அளவுக்குக் குழிக்குள் தள்ள வேண்டும். இப்போது, குழியில் தண்ணீர் விட வேண்டும். மண், அரையடி ஆழத்துக்கு இறங்கும். ஒரு நாள் இடைவெளி விட்டு, 4 அடி குழியில், ஒரு முனையிலிருந்து அரையடி தள்ளி, கையால் குழியெடுத்து, முருங்கைக் கன்றை நடவு செய்ய வேண்டும். அதே குழியின் மறுமுனையில் இருந்தும் அரை அடி இடைவெளி விட்டு, மற்றொரு செடியை நட வேண்டும். ஆக, ஒரு குழியில் இரண்டு செடிகளை நட வேண்டும். இரண்டு செடிகளுக்கான இடைவெளி 3 அடி இருக்க வேண்டும்.

நடவு வயலைச் சுற்றி, 15 அடி இடைவெளியிலும், நிலத்துக்குள் 30 அடி இடைவெளியிலும் இதே முறையில் குழி எடுத்து நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழி அருகேயுள்ள கீழ் மண்ணை நீளமாகக் கரையாக அமைத்து விட வேண்டும். இப்படிச் செய்தால் மழைநீர் அந்தந்தப் பகுதியிலேயே தடுக்கப்படும். நடவு செய்தவுடன் பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம்வரை 3 நாள்களுக்கு ஒருமுறையும், 2-ம் மாதத்திலிருந்து வாரம் ஒருமுறையும், 3-ம் மாதத்திலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறையும் பாசனம் செய்தால் போதும். சொட்டுநீர் பாசனம் சிறந்தது” என்கிறார் அழகர்சாமி.

கவாத்து அவசியம்

முருங்கையில் ஆண்டுக்கு ஒருமுறை கவாத்து அவசியம். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது கவாத்துச் செய்ய வேண்டும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கவாத்து செய்தால் நல்லது. இதனால், காய்ப்புத் தன்மை அதிகரிப்பதுடன், காய்களின் தரமும் குறையாமல் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism