Published:Updated:

துண்டு துண்டாக வெட்டினாலும் உயிர்த்தெழ முடியும்; மனிதனுக்கு மண்புழு சொல்லும் ரகசியம்..!

மண்புழு

ஆன்டிபயாட்டிக் கொடுத்து உடலில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொன்றால் வெட்டப்பட்ட தலையை மண்புழுவால் மீண்டும் வளர்க்க முடியவில்லை. காரணம் மண்புழுவின் உடலில் ஸ்டெம் செல்களின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்து விடுகிறது.

துண்டு துண்டாக வெட்டினாலும் உயிர்த்தெழ முடியும்; மனிதனுக்கு மண்புழு சொல்லும் ரகசியம்..!

ஆன்டிபயாட்டிக் கொடுத்து உடலில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொன்றால் வெட்டப்பட்ட தலையை மண்புழுவால் மீண்டும் வளர்க்க முடியவில்லை. காரணம் மண்புழுவின் உடலில் ஸ்டெம் செல்களின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்து விடுகிறது.

Published:Updated:
மண்புழு

குற்றாலம் அருகே மேற்கு மலைத்தொடரில் குளுமையான ஆர்ப்பரிக்கும் அருவிகள் நிறையவுள்ளன. திருநெல்வேலி கோடை வெயிலுக்கும் வெப்பத்திற்கும் இவை இதமானவை. அங்கே இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் நிறைய உண்டு. இந்த அட்டைகளைச் சமாளிக்க ஒரு சிறு குப்பியில் சமையல் உப்புத் தூளை எடுத்துச் செல்லுவது வழக்கம். உடலில் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும் அட்டையை உருவி எடுப்பது அவ்வளவு எளிதல்ல. அட்டைமேல் ஒரு துளி உப்புத் தூளைத் தூவினால் அட்டை உடல் சிதறி இறந்துவிடும். இதைப் பார்க்க நமக்கு உப்பில் அட்டைக் கரைவது போல் தோன்றும். ஆமாங்க...தண்ணீரில் உப்புக் கரைவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அட்டைமேல் உப்பை வைத்தால் அட்டைக் கரைந்து இரத்தமாக ஓடுவதைக் காணலாம்! மண்புழு மேல் உப்பு பட்டாலும் மண்புழுவுக்கும் இதே கதிதான்! யூரியாவும் நம் சமையல் உப்பு மாதிரிதான். உடல் மேல் நேரடியாக யூரியா பட்டால் மண்புழு உடல் சிதறி இறந்துவிடும்.

மண்புழு உரம்
மண்புழு உரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு மூவாயிரத்து முன்னூறு கோடி கிலோ (3300,00,00,000 ) யூரியா பயன்படுத்தப்படுகிறது. இது தவிர இன்னும் ஏராளமான இரசாயன உப்புக்கள் உரங்களாக மண்ணில் கொட்டப்படுகிறது. இந்த இரசாயன காலத்தில் பூமியில் மண்புழுவின் வாழ்க்கை ஒரு பெரிய சவால்தான். மண்புழு மண்ணுடன் சேர்த்து மக்கிய இலைதழைகள், தாவரங்கள், மாடு மற்றும் யானை போன்ற விலங்குகளின் எச்சங்களைத்தான் உண்டு வாழ்கிறது. இன்றைய சூழ்நிலையில் மண்ணில் பிளாஸ்டிக் போன்ற விஷத் தன்மையுள்ள பொருட்களுக்குப் பஞ்சமில்லை. இதை எல்லாம் சமாளித்துத்தான் மண்புழு உயிர் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளது.

ஓரிடத்திலிருந்து தப்பிக்க மண்புழுவால் வேகமாக ஓடவும் முடியாது. நச்சு கலந்த உணவு என்று அறிந்தே சாப்பிட வேண்டிய சூழலும் மண்புழுவுக்கு உண்டு. மண்புழு உணவோடு நச்சைச் சாப்பிட்டாலும் பிழைத்துக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. காரணம் மண்புழுவால் உடலுக்குள் வந்து சேரும் நச்சு பொருளைக் கண்டறிய முடிகிறது. பின் நச்சை பிரித்து வால் பகுதியில் சேர்க்கிறது. பின்னர் நச்சு நிறைந்துள்ள வாலை கழட்டிவிட்டுவிடுகிறது. அதாவது எதிரிகளிடமிருந்து தப்பிக்கப் பல்லி வாலைக் கழட்டிவிடுவது போல மண்புழு நச்சு நிறைந்துள்ள வாலை கழட்டிவிட்டுவிடுகிறது! பின்னர் இழந்த வாலை மீண்டும் வளர்த்துக் கொள்கிறது. மண்புழுவின் இந்த பண்பை 2013ல் உறுதிப்படுத்தினோம். இந்த கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி ஒரு வேதிப் பொருளின் நச்சுத்தன்மையை பத்து நிமிடத்தில் கண்டறியலாம். மேலும் உணவில் நச்சு கலந்துள்ளதா என கண்டறியவும் வாய்ப்புள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பூமியில் வகை வகையாக மூவாயிரத்துக்கும் மேலான மண்புழு இனங்கள் வாழ்கின்றன. இவற்றில் ஒன்றுதான் ஆப்பிரிக்க மண்புழு யூட்ரிலஸ் யூஜீனியா (Eudrilus eugeniae) ஆகும். இந்த மண்புழுவை வளர்ப்பது எளிது. நம் நாட்டில் இதனைக் கொண்டுதான் ஏராளமாக மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த அற்புதமான உயிரி விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படுகிறது. மண்புழுக்கள் ஆண் மற்றும் பெண்ணின் பண்புகளைக் கொண்ட அர்த்தநாரீஸ்வரர் எனலாம். ஆனாலும் இனப்பெருக்கத்திற்காக இரண்டு மண்புழுக்கள் இணைகின்றன. ஒரு மண்புழு தான் உற்பத்தி செய்த விந்தணுவை தன் கருமுட்டையுடன் இணையவிடுவதில்லை. தன் கருமுட்டையை வேறு மண்புழுவால் உற்பத்தி செய்யப்பட்ட விந்தணுவுடனே இணைய அனுமதிக்கிறது.

மண்புழு
மண்புழு

கதிரியக்கங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் நச்சு வேதிப்பொருட்கள் இருக்கும் மண்ணில் வாழும் மண்புழுவின் விந்தணு நீந்தும் தன்மையையிழக்கிறது. நீந்த முடியாத விந்தணுவால் கருமுட்டையுடன் இணைந்து எதிர்கால சந்ததியை உருவாக்க முடியாது. இதனை கண்டறிந்தபோது மண்புழுவின் நிலையே மனிதனின் நிலையும் என எண்ணத்தோன்றியது. காரணம் தமிழகத்திலும் ஆங்காங்கே செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்து வருவதைப் பார்த்திருப்பீர்கள். நீந்த முடியாத விந்தணு உருவாதலால் ஒரு நன்மையுமுள்ளது. காரணம் நச்சு நிறைந்த சூழலில் விந்தணுவின் மரபணு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைந்தால் மரபணு குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

மண்வெட்டி மற்றும் டிராக்டர் கொண்டு மண்ணை விவசாயத்திற்காகச் சீர் செய்யும்போதும், பறவை இரைக்காக மண்புழுவைக் கொத்தி சாப்பிடும்போதும், மண்ணில் வாழும் மண்புழுவின் உடல் துண்டிக்கப்படும். இரு துண்டுகளாக வெட்டப்பட்டாலும் மண்புழு தங்கள் இழந்த உடல் உறுப்புக்களை மீண்டும் வளர்த்துக் கொள்ளும் சக்தி படைத்தது. இந்தப் பண்பை மறுவளர்ச்சி (Regeneration) என அழைக்கிறோம்.

இரயில் போல் மண்புழுவின் உடல் அறை அறையாக இருக்கும். இந்த மண்புழு சுமார் 250 அறைகளைக் கொண்டது. இதில் 13லிருந்து 18ஆம் அறைகள் சற்று வெளிர் நிறத்தில் தடித்திருக்கும். இந்தப் பகுதியை கிளைடெல்லம் என அழைப்பார்கள். மண்புழுவின் மறுவளர்ச்சிக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பொருட்கள் இங்குதான் உள்ளது எனக் கண்டறிந்தோம்.‌ எங்கு வெட்டினாலும் உயிர்த்தெழும் ஆப்ரிக்க மண்புழு இந்த கிளைட்டெல்லப் பகுதியை வெட்டினால் இறந்துவிடும். அப்படி என்னதான் இந்த கிளைட்டெல்லத்திற்குள் இருக்கிறது? இந்த கேள்விகளுக்குப் பதில் அறிய நிறைய ஆராய்ச்சிகள் செய்தோம்.

ஒன்றிலிருந்து 12-வது அறை வரை எதில் வெட்டினாலும் துண்டிக்கப்பட்டத் தலை பகுதி இறந்துவிடும். தலையில்லா முண்டம் இருபத்திரண்டு தினத்தில் தலையை மீண்டும் வளர்த்துக் கொள்ளும். அதேமாதிரி 19-வது அறை முதல் வால் நுனிவரை எதில் வெட்டினாலும் தலைப்பகுதி உயிர் வாழ்ந்து வாலை மீண்டும் வளர்த்துக் கொள்ளும். ஆனால் துண்டிக்கப்பட்ட வால் இறந்துவிடும். துண்டிக்கப்பட்ட வால் பகுதியின் இறப்புக்கான காரணம் சுவையானது.

மண்புழு
மண்புழு

வெட்டப்பட்ட வால் பகுதியில் தலை வளர்வதற்குப் பதில் வாலே வளர்கிறது. இதனால் இந்த மண்புழுவிற்குத் தலை வளர வேண்டிய இடத்தில் வால் வளர்ந்துவிடுகிறது. வாய் இல்லாமல் இந்த மண்புழுவால் சாப்பிட முடியவில்லை. எனவே இது பட்டினி கிடந்து மடிகிறது! அதாவது வெட்டப்பட்ட இடத்தில் எதை வளர்க்க வேண்டும் என்ற தகவலும் கிளைடெல்லத்தில் தான் உள்ளது. மண்புழுவின் மூன்றாவது அறையில் மூளை உள்ளது. ஏழாவது அறையிலிருந்து 11வது அறைக்குள் ஐந்து ஜோடி இதயங்கள் உள்ளன. ஆனால் கிளைட்டெல்லத்தை வெட்டிப் பார்த்தால் கண்ணுக்குத் தெரியும்படி சிறப்பாக ஒன்றும் இல்லை!

வெட்டப்பட்ட தலையை மீண்டும் வளர்க்க மண்புழுவிற்கு அதன் தோல்தான் பெரிதும் உதவுகிறது. தோல்தான் மண்புழுவில் உள்ள உறுப்புகளில் மிகப் பெரியது. நாம் மூக்கினால் காற்றை உள்ளிழுத்து நுரையீரலால் சுவாசிக்கிறோம். ஆனால் மண்புழு தன் தோலால்தான் சுவாசிக்கிறது. மேலும் தோல் சுருங்கி விரிவதால் மண்புழு ஊர்ந்து செல்ல முடிகிறது. இந்த தோல் மூன்று வகையான செல்களால் ஆனது. அவை வெளிப்புற செல்கள் (epithelial cells), மத்திய உருளை செல்கள் மற்றும் மூன்றாவதாக நீண்ட தசை செல்களாகும்.

நம் உடலில் இரத்தம் மற்றும் நிணநீர் என இரு திரவ ஓட்டம் உள்ளது. மண்புழுவில் இரத்தம் மற்றும் சீலோம்நீர் (celomic fluid) என இரண்டு திரவ ஓட்டங்கள் உண்டு. தலைத் துண்டாக வெட்டப்பட்ட மண்புழு முதலில் இரத்தம் மற்றும் சீலோம்நீர் இழப்பை நிறுத்தவேண்டும். தோலின் நீண்டதசைசெல்கள் ஒரு விரித்து வைத்த சேலை போன்று நீளமாக இருக்கும். தலை வெட்டப்பட்டவுடன் இந்த செல்கள் மடித்து இஸ்திரி போட்ட சேலையைப் போல் தன் உருவத்தைச் சுருக்கிக் கொள்ளும். இதனால் வெட்டப்பட்ட பகுதி பணப்பையில் உள்ள ஜிப் போலச் சுருக்கி உடனே இரத்தம் மற்றும் சிலோம்நீர் இழப்பை நிறுத்துகிறது. பின்னர் வெட்டுக்காயத்தை ஆற்றத் தோலின் வெளிப்புற அடுக்கில் உள்ள செல்கள் வேகமாக பல்கிப் பெருகுகிறது. இதனால் சில மணித்துளிகளில் வெட்டுக்காயத்தை மண்புழுவால் முற்றிலும் ஆற்றிக் கொள்ள முடிகிறது.

அடுத்து மூன்றாவது அடுக்கில் இருக்கும் நீண்ட தசை செல்கள் தலையை மறுபடியும் வளர்க்க உதவுகிறது. தலை வெட்டப்பட்ட நேரத்தில் மண்புழுவிற்கு நீண்ட தசை செல்கள் நிறையத் தேவைப்படுகிறது.

அதற்காகவே மண்புழு எப்போதும் கிளைட்டெல்லத்தில் இந்த செல்களை அதிகமாகச் சுமந்த வண்ணம் உள்ளது. மேலும் கிளைட்டெல்லத்தில் ஸ்டெம் செல்கள் என்ற ஒருவகை சக்தி வாய்ந்த செல்களும் அதிகமுள்ளது. பொதுவாக ஒரு செல் இரண்டாகப் பிரியும் போது தன்னை மாதிரியே மற்றொரு செல்லை உண்டு பண்ணும். ஆனால் இந்த ஸ்டெம் செல்கள் பிரிந்தால் ஒரே மாதிரியான இரண்டு ஸ்டெம் செல்களை உருவாக்கவும் முடியும்; தேவைப்பட்டால் இரு வேறு விதமான செல்களை உருவாக்கவும் முடியும். இந்த செல்கள் கிளைடெல்லத்திலிருந்து வெட்டுப்பட்ட இடத்தினை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறது. பின்னர் அங்கே இழந்த பல உறுப்புக்களை மறு உருவாக்கம் செய்கிறது. அதனால்தான் கிளைட்டெல்லம் இந்த மண்புழுவிற்கு உயிர்த்தெழத் தேவைப்படுகிறது.

Eudril eugeniae
Eudril eugeniae

பொதுவாக செல்கள் நிறமற்றவை. நம் உடலில் இரத்த சிவப்பணு மற்றும் தோலில் உள்ள கருப்பு நிற செல்களைத் தவிரப் பிற செல்களுக்கு நிறம் எதுவும் கிடையாது. இரத்தத்தில் உள்ள சிவப்பு நிற பொருளை கீமோகுளோபின் (Haemoglobin) என அழைக்கிறோம். தோலில் உள்ள கருப்பு நிற பொருள் மெலனின் (melanin) ஆகும். இந்த இரண்டு நிறமிகளும் நம் உடலில் இல்லை என்றால் நம் உடல் முற்றிலும் ஒளி ஊடுருவும் தன்மை வாய்ந்ததாக மாறிவிடும். இதனால் நாம் யார் கண்ணுக்கும் தெரியமாட்டோம்! ஆனால் 2012ல் மண்புழுவில் ஒளிரும் தன்மையுடைய செல்களைக் கண்டறிந்தோம் பின்னர் இவை ஸ்டெம் செல்கள் எனவும், இந்த செல்களின் ஒளிரும் தன்மைக்கு வைட்டமின் B2 தான் காரணம் எனக் கண்டறிந்தோம்.

இந்த வைட்டமின் B2 தலை வெட்டப்பட்ட மண்புழுவின் உடலில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. பாக்டீரியா, பூஞ்சைகள் மற்றும் தாவரங்கள் மட்டுமே இந்த வைட்டமினை உற்பத்தி செய்கின்றன. மற்ற எந்த உயிரினங்களாலும் இந்த வைட்டமினை உற்பத்தி செய்ய முடியாது! இந்த நிலையில் தலை வெட்டப்பட்ட மண்புழுவின் உடலில் எப்படி வைட்டமின் B2 அதிகம் உற்பத்தியாகிறது என்பது விந்தையாகயிருந்தது.

இதனை கண்டறிய மண்புழுவின் தலைப் பகுதியை இதயத்துடன் சேர்த்து வெட்டினோம். இருந்தாலும் மண்புழு சாகவில்லை. தலையில்லாமல் மண்புழுவால் சாப்பிட முடியாது. ஒரு வாரக் காலத்திற்கு இந்த பட்டினி தொடரும். இந்த நேரத்தில் மண்புழுவின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிரிகளுக்கும் சாப்பாடு கிடைக்காது. அதனால் நுண்ணுயிரிகள் தங்களை முடக்கி சாப்பாடு வரும்வரை காத்திருக்க ஆரம்பிக்கும். இந்த வேளையில் அந்த நுண்ணுயிரிகள் தங்களின் எதிர்கால பயன்பாட்டிற்காக நிறைய வைட்டமின் B2 வை உற்பத்திசெய்கின்றது. இந்த வைட்டமினை மண்புழு உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. பின்னர் அதிக அளவில் இந்த வைட்டமினை ஸ்டெம் செல்களுக்குள் கொண்டு சேர்க்கிறது. இந்த வைட்டமின் B2 புற ஊதா கதிரால் பல வண்ணங்களில் ஒளிரும் பண்புடையது. அதனால்தான் மண்புழுவின் ஸ்டெம் செல்கள் ஒளிர்கின்றன. இந்த செல்கள் துண்டிக்கப்பட்ட தலையை மீண்டும் வளர்க்கப் பெரிதும் உதவுகின்றன. இந்த பட்டினி காலத்தில் மண்புழுக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றன.

வெட்டப்பட்ட தலை வளரத் தேவையான வளர்ச்சியைத் தூண்டும் புரதங்களை கிளைடெல்லமே கொடுத்து உதவுகிறது. மேலும் தலை வெட்டப்பட்ட நிலையில் கடும் பட்டினியில் இருக்கும் மண்புழு விரைவில் வாய் மற்றும் பிற உறுப்புக்களை உருவாக்க வேண்டும். புற்றுநோய் செல்கள் வேகமாக வளர்வது போல் வெட்டப்பட்ட மண்புழுவின் செல்களும் மிகவும் வேகமாக வளர்கிறது. புற்றுநோய் செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஒரு குறிக்கோளற்று வளர்கிறது. இழந்த தலையை உருவாக்கக் கட்டுக்கோப்பாகவும் அதே நேரத்தில் வேகமாகவும் செல்கள் வளர்ந்து இழந்த உறுப்புக்களை மண்புழு உருவாக்கிக் கொள்கின்றன. அதாவது புற்றுநோய் கட்டுப்பாடில்லா செல் பிரிதலின் விளைவு. இழந்த உறுப்பை உருவாக்குதல் கட்டுப்பாடான செல் பிரிதலின் விளைவு. இவ்வளவுதான் இரண்டுக்கும் இடையேயான முக்கிய வித்தியாசம்.

ஒருவழியாக ஏழாவது நாளில் மண்புழு தனது வாயை உருவாக்கி முடித்துச் சாப்பிடத் தொடங்குகிறது. அதேவேளையில் மண்புழு தன் தலையில் மூளையையும் திரும்ப வளர்த்துவிடுகிறது. மூளையைத் திரும்பப் பெற்ற மண்புழு தன் கூட்டத்துடன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிக்கிறது. இதனைப் பார்க்கும் போது மண்புழு திட்டமிட்டே தன் வயிற்றுப் பகுதியில் தனக்கு வேண்டிய நுண்ணுயிரிகளுக்கு உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து வளர்த்து வருவது போல் தெரிகிறது.

மண்புழு உரம் உற்பத்தி பார்வையிடல்
மண்புழு உரம் உற்பத்தி பார்வையிடல்

ஆன்டிபயாட்டிக் கொடுத்து உடலில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொன்றால் வெட்டப்பட்ட தலையை மண்புழுவால் மீண்டும் வளர்க்க முடியவில்லை. காரணம் மண்புழுவின் உடலில் ஸ்டெம் செல்களின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்து விடுகிறது. அதனால் வெட்டப்பட்ட மண்புழுக்கள் இறந்து விடுகின்றன. இந்த சோதனை நமக்கு உணர்த்துவது என்னவென்றால் புண்ணை ஆற்ற மற்றும் சேதமான உறுப்புக்களை மீண்டும் உருவாக்கக் குடல் வாழ் நுண்ணுயிரிகள் பெரிதும் உதவுகின்றன என்பதுதான். நாமும் தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் சாப்பிடுவதை நிறுத்துவது நம் நீண்டகால உடல் நலத்திற்கு நல்லது.

மண்புழுவிற்குக் கண்கள் கிடையாது என்பது நம்பிக்கை. ஆனால் இவை வெளுத்து வாங்கும் வெயிலில் வெளியே தலைகாட்டாது. மாறாக இரவில் வெளியே உலாவும். கண்கள் இல்லாமல் எப்படி இவற்றால் ஒளியைக் கண்டறிந்து தவிர்க்க முடிகிறது என்பது விந்தை.

2022ல் இந்த மண்புழுவின் முழு மரபணுத் தொகுப்பையும் (Whole genome) ஆவணப்படுத்தினோம். இந்த மரபணு ஆராய்ச்சியில் அரஸ்டின் (arrestin) என்ற ஒரு புரதத்தின் உற்பத்தி தகவலைத் தாங்கியிருக்கும் ஒரு மரபணு எங்கள் கவனத்தை ஈர்த்தது. காரணம் இந்த அரஸ்டின் புரதம் நம் கண்களில் மட்டுமே உற்பத்தியாகும். இந்த அரஸ்டின் புரதம் வேலை பார்க்கவில்லை என்றால் நமக்குக் கண் தெரியாது.

அப்படி என்றால் அரஸ்டின் மண்புழுவிலும் பார்வை சார்ந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என எண்ணினோம். இதனை உறுதி செய்ய, அரஸ்டின் புரதம் மண்புழுவில் எந்த இடத்தில் உற்பத்தியாகின்றது எனக் கண்டறியச் சோதனைகள் செய்தோம். இந்த சோதனையின் முடிவு எங்களை வியப்புக்கு உள்ளாக்கியது. காரணம் மண்புழுவின் வெளிப்புறத் தோலில் வட்டவடிவத்தில் இரண்டு பொட்டு போன்று இந்த அரஸ்டின் உற்பத்தியாகிறது எனக் கண்டறிந்தோம். மண்புழுக்களுக்கும் கால்கள் உண்டு. இவை சீட்டே (setae) என அழைக்கப்படுகிறது. இவை ஒரு அறையில் பக்கவாட்டுப் பகுதியில் தலா இரண்டு ஜோடியும், வயிற்றுப் பகுதியில் இரண்டு ஜோடியும் என மொத்தம் எட்டுக் கால்கள் உள்ளன. பக்கவாட்டுப் பகுதியில் உள்ள இரண்டு ஜோடி கால்களைச் சுற்றிதான் இந்த பொட்டு வடிவான இரண்டு கண்கள் உள்ளன. மேலும் இந்த கண்கள் நம் கண்களைப் போல் பல கோணத்தில் திசுக்களை வளைத்து, சுருக்கி மற்றும் விரித்துப் பார்க்கும் படி அமைந்திருக்கிறது!

இந்த மண்புழுவின் உடல் சுமார் 250 அறைகளாலானது என அறிவோம். ஒரு அறையில் இரண்டு கண்கள் உள்ளன. ஆகவே மொத்தத்தில் ஒரு மண்புழு தலை முதல் வால் வரை 500 கண்களைக் கொண்டுள்ளதைக் காணும் போது வியப்பாக இருந்தது!

அரஸ்டின் புரத உற்பத்தியைத் தடுத்து நிறுத்தினால் இந்த மண்புழுவால் ஒளியை உணரமுடியவில்லை! ஆக, அரஸ்டின் நம் உடலில் செய்யும் அதே வேலையைத்தான் மண்புழுவின் உடலிலும் செய்கிறது. மேலும் நம் கண்கள் போல் மண்புழுவால் உருவத்தை மற்றும் வண்ணங்களைப் பார்க்க முடியாது. மண்புழுவின் கண்கள் ஒளியை மட்டுமே உணர பயன்படுகிறது.

வெட்டப்பட்ட மண்புழுவின் உடலில் உற்பத்திய புதிய மரமணு தகவலகளைக் (messanger RNA) கண்டறிந்தோம். மற்றும் இந்த ஆராய்ச்சியில் வெட்டப்பட்ட மண்புழு உயிர்த்தெழ எத்தனை மரபணுக்கள் தேவைப்படுகிறது. மறுவளர்ச்சி எப்படி நடக்கிறது என்ற தகவல்கள் ஓரளவுக்கு கைகூடின. இதன் அடிப்படையில் மண்புழு உயிர்த்தெழுதலில் சில மரபணுக்களின் பங்கை கண்டறியவும் முடிந்தது. இது மாதிரி நிறைய மரபணு ஆராய்ச்சி செய்தால் மண்புழு உயிர்தெழுதலின் ரகசியத்தை கண்டறிந்துவிடலாம்.

கட்டுரையாளர்:  பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்
கட்டுரையாளர்: பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்

நமக்கும் இந்த மறுவளர்ச்சி திறன் உள்ளது. உதாரணமாகப் பல துண்டுகளாக வெட்டப்பட்ட நம் கல்லீரல் மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால் இதயமோ அல்லது மூளையோ சேதமடைந்தால் இவை மீண்டும் வளர்ந்து தன்னை சரி செய்ய முடியாது. மண்புழுவின் துணை கொண்டு இந்த மறுவளர்ச்சித் திறனின் சூட்சமத்தை நன்கு அறிய முடிந்தால் மனிதர்களுக்கு வரும் அனேக நோய்களை குணப்படுத்த வழிமுறைகள் உருவாகும். இதனை மறுஉருவாக்க மருத்துவம் (Regenerative medicine) என அழைக்கப்படுகிறது. இந்த சிறந்த மருத்துவம் எதிர்காலத்தில் நமக்கு கட்டாயம் கிடைக்கும்.

மண்புழுவிற்கு வறட்சி ஒரு முக்கிய எதிரி. உலக வெப்பமயமாதலால் வறட்சி அதிகரித்துவருகிறது. மேலும் விவசாய நிலம் மட்டுமின்றி பூமியில் மண்ணில் நச்சு வேதிப்பொருட்கள் அதிகரித்துவருகிறது. மண்புழு இந்த அதீத மறுவளர்ச்சி சக்தியைக் கொண்டுள்ளதாலேயே இவற்றால் இன்றளவும் பூமியில் நிலைத்துவாழ முடிகிறது.

- பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,

திருநெல்வேலி.