Published:Updated:

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு... விவசாயத்தில் கலக்கும் `இன்ஜினீயரிங்' சகோதரர்கள்!

ஆட்டுக் கொட்டகையில் சந்தோஷ் குமார்
News
ஆட்டுக் கொட்டகையில் சந்தோஷ் குமார்

"லாபத்தைத் தொடர்ந்து எங்க பண்ணையிலயே முதலீடு செய்றோம். அதனால துல்லியமான கணக்கு சொல்ல முடியாட்டியும், நிறைவான வருமானம் எங்களுக்குக் கிடைக்குது. விவசாயம்னா என்னன்னே தெரியாம வந்து, இன்னைக்கு நிறைய அனுபங்களைக் கத்துகிட்டோம்."

''கிடைச்ச வேலையைவிட, பிடிச்ச வேலையைப் பார்க்கிறதுலதான் மனசுக்கு திருப்தி இருக்கு. இன்ஜினீயரிங் படிச்சுட்டு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஒன்பது ஏக்கர்ல இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சோம். இந்த 5 வருஷத்துல, அது 40 ஏக்கர் அளவுல வளர்ந்திருக்குது'' என்கிறார்கள் சந்தோஷ் குமார், கெளரி சங்கர் சகோதரர்கள். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அப்பம்பட்டு கிராமத்தில் பரந்து விரிந்துள்ளது, இந்த ஒருங்கிணைந்த இயற்கை விவசாயப் பண்ணை.

சந்தோஷ் குமார், தம்பி கெளரி சங்கர்
சந்தோஷ் குமார், தம்பி கெளரி சங்கர்

விவசாயம் சார்ந்த முன் அனுபவமும் இல்லாதவர்கள். கள அனுபவத்தின் மூலமாகவே படிப்படியாக முன்னேறி வருகிறார்கள். தங்களுக்கான எதிர்காலப் பாதையை இயற்கை வாழ்வியல் வழியில் திட்டமிட்டுள்ளனர். விவசாயத்துடன் ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு என ஒருங்கிணைந்த பண்ணையும் விசாலமாகக் காட்சியளிக்கிறது. ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல பணியாளர்கள் இருக்கிறார்கள். கோழிகளுக்குத் தீவனம் போட்டுக்கொண்டிருந்த சந்தோஷ் குமார், உற்சாகமாக பேசத் தொடங்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

''எங்களுக்குப் பெற்றோர் இல்லை. சின்ன வயசுல இருந்து இப்போவரை பாட்டிதான் எங்களை வளர்க்கிறாங்க. மாமாக்கள்தான் எங்களை இன்ஜினீயரிங் படிப்புவரை படிக்க வெச்சாங்க. வக்கீல், இன்ஜினீயர், டாக்டர்னு உறவினர்கள்ல பலரும் நல்ல நிலையில் இருக்காங்க. ஆனா, குடும்பப் பாரம்பர்ய தொழிலை யாருமே தொடரலை.

மாடுகளுக்குத் தீவனமிடும் சந்தோஷ் குமார்
மாடுகளுக்குத் தீவனமிடும் சந்தோஷ் குமார்

சின்ன வயசுல இருந்தே எனக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்துச்சு. இன்ஜினீயரிங் முடிச்ச சமயத்துல முதுகு வீக்கத்தால பிரச்னை ஏற்பட்டுச்சு. காலேஜ் கேம்பஸ்ல எனக்கு வேலை கிடைச்சது. உடல் பாதிப்புனால வேலைக்குப் போக முடியலை. மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு பாட்டி வீட்டுலயே சில மாதங்கள் ஓய்வில் இருந்தேன். மாமா ஒருத்தர் மஸ்கட்ல வேலை செய்றார். அவருக்கு இயற்கை விவசாயத்துல அதிக ஆர்வம். வெளிநாட்டில் வேலை செய்றதால அவருக்கு விவசாயம் செய்றதுக்கான சூழல் அமையலை. இந்த நிலையில, உடல்நிலை சரியாகி வேலைக்குப் போகலாம்னு நான் தயாரான நேரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘வேலைக்காக வந்த இந்த நாட்டில் நல்ல உணவு, வசிப்பிடம் இல்லாம சிரமப்படுறேன். உனக்கும் அந்த நிலை வேண்டாம். நம்ம கிராமத்துலயே வேலை செய்றது உன் உடல்நலனுக்கு நல்லது. நான் எல்லா வகையிலயும் உதவி பண்றேன். நம்ம ஊர்லயே நீ இயற்கை விவசாயம் செய்’னு சொன்னார், மஸ்கட்ல வேலை செய்யும் மாமா. எனக்கும் விவசாயம் செய்றதில் ஆர்வம் இருந்துச்சு. ஆனா, எந்த அனுபவமும் இல்லை. மஸ்கட் மாமா பண உதவி செய்தார். வக்கீலாக இருக்கும் இன்னொரு மாமா நிலம் வாங்க உதவினார். சில விவசாயிகளைச் சந்திச்சு அனுபவங்களைக் கத்துகிட்டேன்” என்கிற சந்தோஷ் குமார், 2015-ம் ஆண்டு ஒன்பது ஏக்கரில் விவசாய வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பமே ஏமாற்றம்தான்! அந்தச் சூழலிலிருந்து சாமர்த்தியமாக மீண்டு வந்திருக்கிறார்.

கோழிப் பண்ணை
கோழிப் பண்ணை

“முதல்ல நிலத்தின் வரப்பைச் சுத்தி தென்னை, சவுக்கு மரங்களை நட்டேன். பல மாதம் ஆகியும் மரங்கள் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல வளரலை. அதேசமயம், மரங்கள் வாடாம பசுமையாகவே இருந்துச்சு. விவசாய அதிகாரிகளை வரவெச்சு சோதனை செஞ்சு பார்த்தேன். முன்பு அந்த நிலத்துல விவசாயம் செஞ்சவங்க அதிகமான ரசாயன உரங்களைப் பயன்படுத்தினதால நிலத்துல ஒன்றரை அடிக்குக் கீழ சுண்ணாம்புத் திட்டுமாதிரி மண் இறுகிப்போயிருப்பது தெரிஞ்சது. ‘இயற்கை உரங்கள் போட்டு நிலத்தைத் தொடர்ச்சியா உழுதுகிட்டே இருங்க அல்லது வேர் ஆழமா போகாத நெல் உட்பட சில வகை பயிர்களை மட்டும் பயிரிடலாம்’னு வேளாண் அதிகாரிகள் சொன்னாங்க.

அதன்படி குறிப்பிட்ட நிலத்துல மட்டும் நெல் பயிரிட்டோம். ஓரளவுக்கு நல்ல மகசூல் கிடைச்சுது. ஆனா, நிலத்தை முழுமையா இயற்கைத் தன்மைக்கு மாத்திட்டு, வேறு பயிர்களைச் சாகுபடி செய்யலாம்னு முடிவெடுத்தேன். இப்படி, ஆரம்பகட்ட விவசாய வேலைகளை எல்லாம் சரிசெய்ய ரெண்டு வருஷம் ஆகிடுச்சு. அந்த நேரம் இன்ஜினீயரிங் படிப்பை முடிச்ச என் தம்பியும் என்னுடன் விவசாய வேலைகளில் இறங்கிட்டான். பிறகு சில முறை நெல் பயிரிட்டோம். எங்க பண்ணை வருமானத்துலயும், மாமா உதவியிலும் சுத்தியிருக்கிற சில நிலங்களையும் வாங்கினோம். இருக்கிற நிலத்துல கால்நடைகளை வளர்க்கலாம்னு படிப்படியா கோழி, ஆடு, நாட்டு மாடுகளை வாங்க ஆரம்பிச்சோம்” என்று கூறும் சந்தோஷ் குமார், கால்நடை வளர்ப்பு குறித்துப் பேசினார்.

இந்தச் சகோதரர்கள், 40 ஏக்கர் நிலம் வைத்துள்ளனர். அதில், கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களை இயற்கை முறையில் விளைவிக்கின்றனர். தவிர, ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றையும் வளர்த்துவருகின்றனர்.

“ஆடுகளைப் பரண் அமைச்சுதான் வளர்க்கிறோம். படிப்படியா ஆடுகளோட எண்ணிக்கையை விரிவுபடுத்தினோம். விற்பனையும் நல்லாவே இருந்துச்சு. தலைச்சேரி, செம்மறி ஆடு, கொடி ஆடுகள்னு மூணு ரகத்துலயும் 300 உருப்படிகளை வெச்சிருந்தோம். அவை பெரும்பாலும் விற்பனை நிலைக்கு வந்துட்டதால, லாக்டெளனுக்கு முன்னாடி 150 ஆடுகளை வித்துட்டோம். இப்ப லாக்டெளன்லயும் விற்பனை நடக்குது. உயிருடன் எடை கிலோ 375 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். சில ஆடுகளை வெச்சுட்டு மற்றதையெல்லாம் வித்துட்டு புது பேட்ஜ் அமைக்கலாம்னு இருக்கோம். ஆடு விற்பனை மூலமா 5,00,000 ரூபாய் வருமானம் கிடைச்சது.

ஆரம்பத்துல 12 மாடுகள் வாங்கினோம். எங்க கிராமத்துல பல வீடுகள்லயும் சொந்தமா மாடுகள் வளர்க்கறாங்க. அதனால உள்ளூர்ல பால் விற்பனை செய்றது சவால்தான். சமீபத்துலதான் 25 மாடுகளை விற்பனை செஞ்சோம். இப்ப சிந்து கிராஸ், ரெட் சிந்தி இனங்கள்ல 62 கறவை மாடுகள் வெச்சிருக்கோம். தினமும் வீட்டுத் தேவைக்கும், ஆடுகளுக்கு கொடுக்கிறது போக மீதமிருக்கும் 150 லிட்டர் பாலை சொசைட்டிக்குக் கொடுத்துடுறோம். தினசரி சராசரியா 3,000 ரூபாய் கிடைக்கும்.

மீன் குட்டையில் சந்தோஷ் குமார்
மீன் குட்டையில் சந்தோஷ் குமார்

சென்னை மாதிரியான பெரிய நகரங்கள்ல பால் விற்பனை செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். ஆனா, அதுக்கு வேலையாட்கள் கூடுதலா தேவைப்படுறாங்க. அதுதான் விவசாயத்துல பெரிய சவால். நம்பகமான, ஆர்வமுள்ள வேலையாட்கள் கிடைக்கிறதில்லை. விவசாயம், கால்நடை வளர்ப்பு உட்பட, எல்லா வேலைகளையும் நானும் தம்பியும்தான் பார்த்துக்கிறோம். அதனால நாங்க எப்பயுமே நிலத்துல இருந்தே ஆகணும். அதனால நேரடியா பால் விற்பனை செய்ய முடியலை. நெய், சீஸ்னு மதிப்புக்கூட்டல் செஞ்சு விற்பனை செய்யுற யோசனைகள் இருக்கு. கொரோனா லாக்டெளன் முடிஞ்சதும் அதுக்கான முயற்சிகளை எடுக்கப்போறோம்.

250 கைராலி ரக நாட்டுக் கோழிகளை வெச்சிருந்தோம். இந்த ரக கோழி அதிக முட்டையிடும். முட்டை விற்பனைக்காகவே இந்தக் கோழிகளை வளர்த்தோம். ஒரு முட்டை 10 ரூபாய்க்குக் கொடுக்கிறோம். இப்போ, முட்டையுடன் கோழிகளையும் விற்பனை செய்றோம். சராசரியா தினமும் 800 ரூபாய் வருமானம் கிடைக்கும். லாக்டெளனுக்குப் பிறகு புது பேட்ஜ் கோழிகளை வளர்க்கத் திட்டமிட்டிருக்கோம். நிலத்தைச் சுத்தியும் வேலி அமைச்சிருக்கோம். தினமும் ஏரிக்கரையில் மேய்ச்சலுக்குக் கூட்டிட்டுப்போறது தவிர, எங்க நிலத்துக்குள்ளும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவோம். கோழிகளும் திறந்த வெளியிலதான் வளருதுங்க.

ஆடுகளுக்கு பரண் அமைக்க மணல் திட்டு அமைச்சோம். அதுக்காக மண் எடுத்த குழியை, மழைநீர் சேமிப்புக் குட்டையா வெச்சிருந்தோம். அது 150*75*7 அடி பரப்புல இருக்கு. சில மாசத்துக்கு முன்னாடி பெய்த மழையில அந்தக் குட்டையில முக்கால்வாசி அளவுக்குத் தண்ணி இருந்துச்சு. ரோகு கெண்டை ரகத்துல ஆயிரம் மீன் குச்சுகளை வாங்கி, லாக்டெளனுக்கு முன்புதான் குளத்துல விட்டோம். வாரத்துல ஒருமுறை மீன் குட்டையில் ரெண்டடி அளவுக்கு தண்ணியை எடுத்து வயலுக்குப் பாய்ச்சிடுவோம். பிறகு, குட்டையில புதுத் தண்ணி விட்டுடுவோம். இன்னும் ரெண்டு மாசத்துக்குப் பிறகுதான் மீன்களை விற்பனை செய்ய முடியும். தவிடு, மாட்டுச்சாணத்தைத்தான் மீன்களுக்குத் தீவனமா கொடுக்கிறோம். சோதனை முயற்சியாகத்தான் இந்த மீன் பண்ணையை அமைச்சோம். மீன்களை விற்பனை செய்த பிறகுதான் வரவு செலவுகளைக் கணக்கிட முடியும்” என்ற சந்தோஷ் குமார்...

“கால்நடை வளர்ப்பில் இறங்கிய பிறகு நேரப் பற்றாக்குறை மற்றும் ஆட்கள் பற்றாக்குறை அதிகமாச்சு. எனவே, பயிர் சாகுபடியில கவனம் செலுத்த முடியலை. ஆனாலும், கோ 4, வேலி மசால், குதிரை மசால், சூப்பர் நேப்பியர் உட்பட கால்நடை தீவனப் பயிர்களை 10 ஏக்கர்ல பயிரிட்டிருக்கோம். அதுக்கு, பஞ்சகவ்யா கரைசலுடன், சாண உரங்களையும் பாசனத் தண்ணியில கலந்து விட்டுடுவோம். முழுக்கவே கிணத்துப் பாசனம்தான். கிணத்துல தண்ணி இருந்துட்டே இருக்கிறதால தண்ணிப் பிரச்னை இல்லை.

ஆட்டுக் கொட்டகை
ஆட்டுக் கொட்டகை

சில வேலையாட்கள் பண்ணையிலயே குடும்பமா தங்கியிருக்காங்க. ஆனாலும், ஆட்கள் பற்றாக்குறை எப்போதும் உண்டு. தம்பி இப்போ சென்னை போயிருக்கான். அவனுக்கு 25 வயசுதான் ஆகுது. ஆடு, மாடு, கோழிகளையெல்லாம் வாங்கிட்டு வர்ற பொறுப்பு தம்பியுடையது. விற்பனை பருவத்துக்கு வந்ததும் விற்கிறது என் பொறுப்பு. விவசாயம் பத்தி எந்த அனுபவமும் இல்லாத நாங்க, சில வருஷத்துலயே இதுதொடர்பான நிறைய விஷயங்களைக் கத்துகிட்டோம்.

மொத்தம் 40 ஏக்கர் நிலத்தையும், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு எல்லாத்தையும் நானும் தம்பியும்தான் கவனிச்சுக்கிறோம். இதுக்கே நேரம் சரியா இருக்கு. லாக்டெளன்ல வழக்கமான வேலையாட்கள் சரியா வர்றதில்லை. எனவே, எங்க ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தர் நிலத்துல எப்போதும் இருக்கணும். அதனால புதிய முயற்சிகளைச் செய்றதும், விற்பனை வாய்ப்புகளை அதிகப்படுத்துறதும் சவாலா இருக்கு” என்பவர் இயற்கை விவசாய வாழ்வியல் முறையால் கிடைத்த நன்மைகள் குறித்துப் பேசுகிறார்.

ஆட்டுக் கொட்டகையில் சந்தோஷ் குமார்
ஆட்டுக் கொட்டகையில் சந்தோஷ் குமார்

“உடல்நிலை சரியில்லாமதான் விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். இங்க நிம்மதியான வாழ்க்கை முறை, நல்ல தண்ணி, காத்து, உணவுனு எல்லாமே ஆரோக்கியமானதா கிடைக்குது. காலேஜ் படிக்கும்போது ஆஸ்துமா பிரச்னைக்கு இன்ஹேலர் பயன்படுத்துவேன். இப்போ அதுக்கான அவசியம் ஏற்படலை. நிம்மதியா சுவாசிக்க முடியுது.

இன்ஜினீயரிங் முடிச்சுட்டு வேலைக்குப் போயிருந்தா கிடைக்கும் வருமானத்தைவிட இப்போ எனக்கும் தம்பிக்கும் நல்ல வருமானம் கிடைக்குது. லாபத்தைத் தொடர்ந்து எங்க பண்ணையிலயே முதலீடு செய்றோம். அதனால துல்லியமான கணக்கு சொல்ல முடியாட்டியும், நிறைவான வருமானம் எங்களுக்குக் கிடைக்குது. விவசாயம்னா என்னன்னே தெரியாம வந்து, இன்னைக்கு நிறைய அனுபங்களைக் கத்துகிட்டோம். இதன்மூலம் வருங்காலங்களில் சரியான முறையில் இயற்கை விவசாயம் செய்ய நிறைய நம்பிக்கை கிடைச்சிருக்கு. எங்க திட்டமிடல் எல்லாத்தையும் செயல்படுத்தி வெற்றிபெறும் முனைப்புடன் இருக்கோம்” என்றார் நம்பிக்கையுடன்.