Published:Updated:

20 சென்ட், ரூ.26,500...! கரிசல் நிலத்தில் விளையும் காலிஃப்ளவர்!

காலிஃப்ளவர் தோட்டத்தில் ராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
காலிஃப்ளவர் தோட்டத்தில் ராமச்சந்திரன்

மகசூல்

20 சென்ட், ரூ.26,500...! கரிசல் நிலத்தில் விளையும் காலிஃப்ளவர்!

மகசூல்

Published:Updated:
காலிஃப்ளவர் தோட்டத்தில் ராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
காலிஃப்ளவர் தோட்டத்தில் ராமச்சந்திரன்

ங்கிலீஷ் காய்கறிகள்’ எனச் சொல்லப்படும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் ஆகியவை மலைப்பகுதிகளில் பரவலாகச் சாகுபடி செய்யப் படுகின்றன. சிலர் சமவெளிப் பகுதியிலும் சாகுபடி செய்து வருகிறார்கள். ஆனால், வானம் பார்த்த மானாவாரி நிலப்பகுதியை அதிகம் கொண்ட விருதுநகர் மாவட்டத்தில் முள்ளங்கி, முட்டைக்கோஸ் சாகுபடி செய்து அசத்தி வருகிறார் ராமச்சந்திரன் என்ற விவசாயி.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள மாந்தோப்புக் கிராமத்தில் உள்ளது ராமச் சந்திரனின் தோட்டம். டிராக்டர் மூலம் உழவடித்துக் கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம். மண்ணிலிருந்து பிடுங்கி தண்ணீரில் கழுவி, இரண்டு கேரட்டுகளைச் சாப்பிடக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார். “எங்க பரம்பரை தொழிலே விவசாயம்தான்யா. எங்க ஊர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் படிச்சேன். எங்க அப்பாரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர். பட்டாளத்துல இருந்து வந்த பிறகு, விவசாயத்தைப் பார்க்க ஆரம்பிச்சார். சுத்தியும் மானாவாரி விவசாயம்தான். கோடை உழவடிச்சு மழைக்காகக் காத்திருப்போம். பெய்யுற மழையைப் பொறுத்து அந்தப் பட்டத்துக்கு எந்தப் பயிரு ஒத்துவருமோ அதை விதைப்போம்.

மானாவாரி விவசாயம்தான் முக்கிய விவசாயம். அதே நேரம், வீட்டுக்குப் பின்னால கிணத்துத் தண்ணிய வெச்சு வீட்டுக்குத் தேவையான கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், புடல், பீர்க்கை, பாகல்னு காய்கறிகளைப் போடுவார். அந்தக் காய்கறி களைத்தான் வீட்டுச் சமையலுக்கு எடுத்துக்குவோம். நானும் அந்தக் காய்கறி களோட விதைகளை எடுத்துப் பள்ளிக் கூடத்துக்குள்ள இருக்கிற காலி இடத்துல விதைப்பேன். பள்ளிக்கூடத்துப் பக்கத்துல இருக்கத் தெலாக்கிணத்துலதான் ஊருல உள்ளவங்க குளிப்பாங்க. அந்தக் கிணத்துத் தண்ணிய பள்ளிக்கூடத்துப் பக்கம் திருப்பி விட்டு இந்தக் காய்கறிச் செடிகளுக்குத் தண்ணிய பாய்ச்சுவேன். நான் செய்றதைப் பார்த்துட்டு எங்கூடப் படிச்ச மூணு பயலுவ தண்ணிப் பாய்ச்ச வந்தாய்ங்க.

இத்தனை நாள்ல பூப்பூத்து, பிஞ்சிப் பிடிச்சு காய்காய்க்கும்னெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனா, எப்படியாவது காய்காய்க்க வெச்சிடணும்னு கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிட்டோம். நினைச்ச மாதிரியே காய் காய்ச்சித் தொங்குச்சு. வாத்தியாரு, டீச்சர்கள்லாம் ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. எங்க அப்பாரு மாந்தோப்பு ஊராட்சி மன்றத் தலைவராவும் இருந்தாரு. அதனால சுதந்திரநாளுக்குப் பள்ளிக்கூடத்துல கொடியேத்த வந்தவரு, காய் காய்ச்சுக் கிடக்குறதைப் பார்த்து வாத்தியார், டீச்சர்களைப் பாராட்டினாரு. ‘உங்க மகனும் மூணு பையன்மார்களும் சேர்ந்துதான் காய்கறிகளை விளைய வெச்சிருக்கானுவ’னு வாத்தியாருங்க சொல்லிட்டாங்க. அந்தக் கொடியேத்த நாள்ல எங்க நாலு பேருக்கும் ஒரு குயர் கோடுபோட்ட நோட்டு, பென்சில், ஸ்கேல், ரப்பர், கட்டர் எல்லாத்தையும் குச்சி டப்பாவுலப் போட்டுப் பரிசாக் கொடுத்தாங்க. அதுல உற்சாகமாகிட்டோம்.

வாரத்துக்கு ரெண்டு தடவை நாங்களே அந்தக் காய்கறிகளைப் பறிச்சு அசெம்ளியில மேஜை மேல வெச்சிருவோம். பீர்க்கங்காய் 10 பைசா, புடலங்காய் 15 பைசா, கீரைக்கட்டு 5 பைசா, மிளகாய் கூறு 10 பைசான்னு வித்து, அந்தக் காசை ஸ்கூலுக்கே கொடுத்திடுவோம். ஒருநாள் எங்க அப்பாவே நேர்ல வந்து எல்லாத்தையும் காசு கொடுத்து வீட்டுக்கு வாங்கிட்டு வந்தார். ஏர்மாடுல உழணும், தண்ணி பாய்ச்சணும்ங்கிற ஆசையில அஞ்சாம் கிளாஸுக்கு மேல ஸ்கூலுக்குப் போகலை. எல்லாரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ‘விவசாயத்தைதான் செய்வேன்’னு சொல்லிச் சாதனையா(உறுதியா) இருந்துட்டேன்.

தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன்
தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன்

தொடர்ந்து, அப்பாவோடு சேர்ந்தே விவசாய வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சேன். மலைப்பிரதேசப் பகுதிகள்ல விளையுற இங்கிலீஷ் காய்கறிகளைச் சமவெளிப் பகுதியிலயும் விளைய வைக்கலாம்னு பேப்பர்கள்ல படிச்சேன். நாமளும் வீட்டுக்குப் பின்னால முள்ளங்கி, பீட்ரூட்டை போட்டுப் பார்க்கலாமேன்னு சோதனை அடிப்படையில ஒரு சென்ட்ல போட்டேன். நல்லாவே வந்துச்சு. தொடர்ந்து, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேரட்டையும் போட்டுப் பார்த்தேன். ஆரம்பத்துல ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிச்சுதான் விளைய வச்சேன். இப்போ 6 வருஷமாத்தான் முழுமையான இயற்கை முறையில விளைய வெச்சிட்டு இருக்கேன். 8 ஏக்கர்ல மானாவாரியா மக்காசோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, மிளகாய்தான் என்னோட முக்கியப் பயிரு. வீட்டுப் பின்னால இருக்க 80 சென்ட் நிலத்தை 20 சென்ட் கணக்குல 4 பாகமா பிரிச்சு சுழற்சி முறையில காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பீட்ரூட், முள்ளங்கி, கேரட் சாகுபடி செஞ்சுட்டு வர்றேன். இங்கே சாகுபடி செய்யுறது எல்லாம் வீரிய விதைகள்தான். இதை எல்லா பட்டத்திலயும் சாகுபடி செய்ய லாம். இருந்தாலும் ஆவணியில இருந்து பங்குனி வரைக்கும் வளர்ற காய்கறிகளோட வளர்ச்சி நல்லா இருக்கும். மத்தபடி தண்ணி வசதி இருந்தா எல்லா மாதங்கள்லயும் சாகுபடி செய்யலாம்” என்றவர், அந்தப் பாத்திகளுக்குள் நம்மை அழைத்துச் சென்று ஒவ்வொரு காயையும் காட்டினார்.

‘‘வீட்டுப்பின்னால இருக்க 80 சென்ட் நிலத்தை 20 சென்ட் கணக்குல 4 பாகமா பிரிச்சு சுழற்சி முறையில காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், பீட்ரூட், முள்ளங்கி, கேரட் சாகுபடி செஞ்சுட்டு வர்றேன்.’’

இறுதியாக வருமானம் குறித்துப் பேசியவர், “முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பீட்ரூட் தலா 5 சென்ட், கேரட் 4 சென்ட், முள்ளங்கி ஒரு சென்ட் இடத்தி லயும் இருக்குது. 10 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்வேன். 4 அறுவடையிலயும் சேர்த்து சராசரியா 200 கிலோ கேரட், 250 கிலோ பீட்ரூட், 200 கிலோ முள்ளங்கி, 600 முட்டைக்கோஸ், 600 காலிஃப்ளவர் கிடைக்குது. இதுல, வீட்டுத்தேவை, உறவினர்கள் தேவைக்குப் போக 100 கிலோ கேரட், 150 கிலோ பீட்ரூட், 100 கிலோ முள்ளங்கி, 500 முட்டைக் கோஸ், 500 காலிஃப்ளவரை விற்பனை செய்யுறேன். கேரட், பீட்ரூட் கிலோ ரூ.20-க்கும், முள்ளங்கி ரூ.15-க்கும் முட்டைக் கோஸ், காலிஃப்ளவர் ஒரு எண்ணம் ரூ.20-க்கும் விற்பனை செய்றேன். சந்தையில விற்கிற விலையப் பத்தியெல்லாம் நான் கவலைப்படல. என்கிட்ட ஒரே விலைதான். 10 நாளுக்கு ஒரு முறைதான் அறுவடைங்கிறதுனால, அறுவடை செய்யுற நாளை எதிர்பார்த்து ஊரு மக்க காத்திருப்பாக. அறுவடை நாள்ல என் தோட்டமே சந்தைக்கடை மாதிரிதான் இருக்கும்.

100 கிலோ கேரட் விற்பனை மூலமா ரூ.2,000-ம், 150 கிலோ பீட்ரூட் மூலமா ரூ.3,000-ம், 100 கிலோ முள்ளங்கி மூலமா ரூ.1,500-ம், 500 எண்ணம் காலிஃப்ளவர், 500 எண்ணம் முட்டைக்கோஸ் மூலமா ரூ.20,000-னு மொத்தம் 26,500 வருமானமாக் கிடைக்குது. இதுல, பராமரிப்புச் செலவுகள்னு பார்த்தா ரூ.4,000 வரைக்கும் ஆகும். மீதமுள்ள ரூ.22,500 லாபம்தான். அதிக செலவில்லாம, தனியா எதுவும் மெனக்கெடாம கிடைக்குற இந்த வருமானம் எனக்குச் சந்தோஷம்தான். எங்க ஊருக்காரங்க நஞ்சில்லாத காய்கறிகளைச் சாப்பிடணுங்கிற ஆத்ம திருப்தியும் ரெட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்குது” என்றார் மகிழ்ச்சி பொங்க.


தொடர்புக்கு,
ராமச்சந்திரன்,
செல்போன்: 99446 76515.

காலிஃப்ளவர்
காலிஃப்ளவர்

இப்படித்தான் இயற்கைக் காய்கறிச் சாகுபடி!

20 சென்ட்டில் 5 வகைக் காய்கறிகள் சாகுபடி செய்வது குறித்து ராமச்சந்திரன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

சாகுபடிக்காகத் தேர்வு செய்துள்ள நிலத்தில் 10 நாள்கள் இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவின்போது 2 டன் மட்கிய தொழுவுரத்தைத் தூவிவிட்டு உழவு செய்ய வேண்டும். உழவுப் பணியைத் தொடங்கும்போதே நாற்றங்கால் தயாரிப்பையும் தொடங்க வேண்டும். ஒரு சென்ட் பரப்பில் நாற்றங்கால் தயார் செய்து அதில், 100 கிராம் கேரட் விதை, 50 கிராம் முள்ளங்கி, 200 கிராம் பீட்ரூட், 200 கிராம் முட்டைக்கோஸ், 200 கிராம் காலிஃப்ளவர் விதைகளை விதைக்க வேண்டும்.

40 முதல் 45 நாள்கள்வரை நாற்றங்காலில் இருக்க வேண்டும். பிறகு, நடவுக்கு முன்பாகப் பஞ்சகவ்யாவில் வேர்ப்பகுதியை மூழ்கச் செய்து நிலத்தில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்ததிலிருந்து 20 மற்றும் 40-ம் நாளில் என இரண்டு முறை களை எடுக்க வேண்டும். இரண்டாவது களையெடுப்புக்குப் பிறகு, சிறிது மட்கிய தொழுவுரத்தைத் தூவலாம்.

காலிஃப்ளவருடன்
காலிஃப்ளவருடன்

30-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து தெளித்து வர வேண்டும். 40-ம் நாளுக்குப் பிறகு 10 நாள்களுக்கு ஒருமுறை வேப்பங்கொட்டைக்கரைசல் (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) மற்றும் சூடோமோனஸ் கரைசல் (10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் சூடோமோனஸ்) தெளிக்க வேண்டும். வேப்பங்கொட்டைக் கரைசலால் இலைச்சுருட்டுத் தாக்குதலையும், சூடோமோனஸ் கரைசலால் இலைப்புள்ளி நோயையும் கட்டுப்படுத்தலாம். முள்ளங்கி 45 முதல் 50-ம் நாளிலும், பீட்ரூட் 60 முதல் 65-ம் நாளிலும், கேரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் 85 முதல் 90 நாளிலும் அறுவடைக்கு வரும்.