Published:Updated:

1 லட்சம் முட்டைகோஸ் பயிர்கள்... அறுவடைக்கு உதவி கேட்கும் ஈரோடு விவசாயி! #corona

ஈரோடு விவசாயி கண்ணையன்
ஈரோடு விவசாயி கண்ணையன்

3.5 ஏக்கர் வயலில், நான் கண்ணுங்கருத்துமாக விளைவித்த முட்டைகோஸ், தற்போது அறுவடை செய்யப்படாததால் மிகுந்த மனவருத்தத்தில் செய்வதறியாது இருந்தேன். இந்த நிலையில்தான் ஆனந்த் மஹேந்திரா உதவும் குணமுடையவர் என்று அறிந்து அவருக்கு ட்வீட் செய்தேன்.

தமிழக எல்லையை ஒட்டிய கர்நாடகப்பகுதியில் விவசாயம் செய்யும் ஈரோடு விவசாயி கண்ணையன் சுப்ரமணியன் என்பவர், தனது 3.5 ஏக்கர் நிலத்தில் முட்டைகோஸ் பயிரிட்டுள்ளார். முட்டைகோஸ்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளன. இந்த நிலையில், தற்போது லாக் டௌன் காரணமாக எந்த வியாபாரியும் அதை வாங்கிச்செல்ல வரவில்லையெனத் தெரிகிறது.

எனவே அவரது நிலையைப் பலருக்கும் தெரிவித்து அதன்மூலம் எப்படியாவது அறுவடை செய்துவிட நினைத்தவர், தனது தோட்டத்தை வீடியோ எடுத்து, அதில் தனது நிலை குறித்துப் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் கணக்கில் பதிவேற்றி, எனது முட்டைகோஸ் பயிர்களை அறுவடை செய்ய, ஏதேனும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையோடு தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா மற்றும் ரத்தன் டாட்டாவுக்கும் இணைப்பு கொடுத்துள்ளார்.

தான் வெளியிட்டுள்ள வீடியோவில், முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ள தனது தோட்டத்தைக் காட்டியபடியே, "தோழர்களே வணக்கம். இது எனது முட்டைகோஸ் தோட்டம். சுமார் ஒரு லட்சம் முட்டைகோஸ் பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கு. 4 லட்சம் ரூபாய்க்குமேல செலவாகியிருக்கிறது. கர்நாடகா எல்லையில் என்னோட தோட்டம் இருக்கு. கொரோனா லாக் டௌனால வியாபாரிகளே வரவில்லை. அறுவடை பண்ண முடியுமான்னே தெரியல" என்று கண்ணையன் சுப்ரமணியன் பேசியிருக்கிறார். இந்த ட்வீட்டைக் கவனித்த ஆனந்த் மஹேந்திரா, இதனை புனேயிலுள்ள 'மேரா கிஷான்' அமைப்புக்கு டேக் செய்து, இந்த முட்டைகோஸ்களை வாங்கி உதவ முடியுமா என்றும் கேட்டுள்ளார்.

ஈரோடு விவசாயி கண்ணையன்
ஈரோடு விவசாயி கண்ணையன்
vikatan

இதுதொடர்பாக விவசாயி கண்ணையன் சுப்ரமணியனைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். ``எனது ஊர் ஈரோடுதான். என் வயல் மட்டும் தமிழக எல்லையிலிருந்து 2 கிலோமீட்டர் கர்நாடகப் பகுதிக்குள் சாம்ராஜ் நகர் மாவட்டம், தாளவாடிக்கு அருகே உள்ளது. 3.5 ஏக்கர் வயலில், நான் கண்ணுங்கருத்துமாக விளைவித்த முட்டைகோஸ், தற்போது அறுவடை செய்யப்படாததால் மிகுந்த மனவருத்தத்தில் செய்வதறியாது இருந்தேன். இந்த நிலையில்தான் ஆனந்த் மஹேந்திரா உதவும் குணமுடையவர் என்று அறிந்து அவருக்கு ட்வீட் செய்தேன். எனது ட்வீட்டுக்குத் தொழிலதிபர் ஆனந்த மஹேந்திராவின் தரப்பிலிருந்து என்னோடு பேசி விசாரித்தார்கள். எனது நிலையைக்கூறி, குறைந்தபட்ச விலைக்கு இதனை அறுவடை செய்து வாங்கிக்கொள்ள முடியுமா எனக் கேட்டேன். ஆனால் அவர்கள், கொரோனாவுக்கான மருத்துவப்பொருள்கள் தயாரிப்பு, மாஸ்க் தயாரிப்பு போன்றவற்றுக்குத்தான் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். உங்களுடைய பயிரை நாங்கள் வாங்க இயலாது என்று விளக்கினார்கள்.

இந்நிலையில், கர்நாடகாவைச்சேர்ந்த பாஜக எம்.பி தேதஸ்வி சூர்யாவுக்கு இந்த தகவல் கிடைத்திருக்கிறது. அவரது அலுவலகத்திலிருந்து தொடர்புகொண்டும் பேசினார்கள். முதலில் அனைத்து முட்டைகோஸ்களையும் வாங்கிக்கொள்வதாகக் கூறினார்கள். பின்னர், அவ்வளவும் விற்பனை செய்ய முடியுமா என்பது சந்தேகம் எனக்கூறி, ஒரு லோடு மட்டும் முதலில் வாங்கிக்கொள்கிறோம் என்றார்கள். எனவே அவர்கள் முழுவதும் வாங்குவது சந்தேகம் என்றே நினைக்கிறேன். நம் தமிழக அரசே எனது முட்டைகோஸ்களை அம்மா உணவகத்துக்காக வாங்கிக்கொள்ளலாம். எனக்கு குறைந்தபட்சம், விவசாயத்துக்குச் செலவழித்த தொகை கிடைத்தால்கூட போதும். லாபத்தைக்கூட எதிர்பார்க்கவில்லை" என்றார் வருத்தத்துடன்.

இன்றைய இக்கட்டான சூழலில், நம்முடைய ஈரோடு விவசாயிக்கு இயன்றவர்கள் கரம் கொடுத்து உதவலாம். இவருடைய விளைச்சலை வாங்கி உதவ முன்வருபவர்கள், கண்ணையன் சுப்ரமணியனைத் தொடர்புகொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு