Published:Updated:

ஏக்கருக்கு ரூ.7,50,000... மேட்டுப் பாத்தியில் வாழைச் சாகுபடி..!

வாழைத்தோட்டத்தில் சண்முகசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
வாழைத்தோட்டத்தில் சண்முகசுந்தரம்

தொழில்நுட்பம்

ஏக்கருக்கு ரூ.7,50,000... மேட்டுப் பாத்தியில் வாழைச் சாகுபடி..!

தொழில்நுட்பம்

Published:Updated:
வாழைத்தோட்டத்தில் சண்முகசுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
வாழைத்தோட்டத்தில் சண்முகசுந்தரம்

சூறைக்காற்று சுழற்றி அடித்தாலோ, சுற்றிலும் வெள்ள நீர் தேங்கினாலோ வாழையை நட்ட விவசாயிக்கு கண்ணீர்தான் மிச்சமாகும். அப்படிப் பார்த்துப் பார்த்து கவனமாக வளர்க்க வேண்டிய பணப்பயிர் வாழை. இந்நிலையில், ‘வாழை வனம் ஒன்றை வளர்த்து வச்சிருக்கேன். எந்தச் செலவும் இல்லாம தன்னால வாழை தழைத்து நிக்குது. வருமானமும் உறுதியா சொல்லி அடிக்குது!’ என நம்பிக்கையாகப் பேசுகிறார் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகசுந்தரம்.

மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட ஒரு மாலை வேளையில் ஈரோடு மாவட்டம், நல்லாக்கவுண்டன்பாளையத்தில் உள்ள சண்முகசுந்தரத்தின் தோட்டத்துக்குக் கிளம்பினோம். ஆடுகள், கதிர் தூக்கிச் செல்லும் பெண்மணி, ஏர் சுமந்து செல்லும் ஆணின் சிற்பங்களுடன் வடிவமைக்கப் பட்டிருந்த ‘துளசிமணி மெமோரியல் கார்டன்’ இயற்கை வாசத்துடன் நம்மை வரவேற்றது. 65 வயதிலும் ஓர் அதிகாரியைப் போல ‘டக்-இன்’ செய்யப்பட்ட உடையுடன் காட்சியளித்த சண்முகசுந்தரம் முதல் பார்வையிலேயே ஆச்சர்யப்படுத்தினார். சூடான ஒரு தேநீரை சுவைத்துவிட்டு காலாற நடந்தபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார்.

வாழைத்தோட்டத்தில் சண்முகசுந்தரம்
வாழைத்தோட்டத்தில் சண்முகசுந்தரம்

“ஈரோடு மாவட்டம், சித்தோடுக்கு பக்கத்துல நடுப்பாளையம்தான் என்னோட சொந்த ஊர். பி.யு.சி வரைதான் படிப்பு. ‘பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ என்னோட பிரதானத் தொழில். அதுபோக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில ஆலோசகரா இருந்துருக்கேன். இயற்கையாகவே எதைப் பார்த்தாலும் அதைத் துருவித்துருவி பார்ப்பேன். அதுல நாம ஏதாவது வித்தியாச மாக செய்ய முடியுமான்னு யோசிப்பேன். அப்படித்தான், ‘சீலிங் டைல்ஸ்’ என்கிற புது தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிச்சேன். அதன் மூலம் இந்தியாவுல அழிஞ்சுகிட்டு இருக்க ஓவியங்களை வீட்டு ‘சீலிங்’ல ‘டைல்ஸ்’ல கொண்டு வந்தேன். அதுக்காக 2015-ம் வருஷம் டெல்லியில மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்கிட்டயிருந்து ‘ஜெம் ஆஃப் இந்தியா’ என்ற விருதை வாங்குனேன்.

வாழைத்தோட்டம்
வாழைத்தோட்டம்

திடீர்னு உடல்நலக்குறைவு ஏற்பட கட்டுமானத் தொழிலை அப்படியே விட்டுட்டு, இப்ப இருக்க 11 ஏக்கர் நிலத்தை மேம்படுத்த ஆரம்பிச்சேன். எங்களை வளர்த்து ஆளாக்கியது எங்களோட அண்ணன் துளசிமணிதான். ‘ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நாம, அதை விட்டுட்டு எல்லாம் வெவ்வேறு தொழிலுக்குப் போயிட்டோம். நாம இயற்கை முறையில் விவசாயம் செய்யணும்’னு அவரு சொல்லிக் கிட்டே இருப்பாரு. எதிர்பாராதவிதமாக அவர் இறந்துட்டாரு. அவரோட கனவை நினைவாக்கணும்னுதான், இந்தத் தோட்டத் துக்கு ‘துளசிமணி மெமோரியல் கார்டன்’னு பெயரை வச்சு செயல்பட்டுக்கிட்டு இருக்கேன். பாரம்பர்ய விவசாயக் குடும்பத்தில இருந்து வந்திருந்தாலும், வித்தியாசமான தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி விவசாயம் செய்யணும்னு நினைச்சேன். அப்படித்தான் இந்த ‘வாழை வனத்துக்கான’ ஆரம்பப்புள்ளி உண்டாச்சு” என்று முன்னுரைக் கொடுத்தவர், வாழை வனத்தைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மண் குவியல்
மண் குவியல்

“இந்த வாழை வனத்தை ஒருநாள்ல உருவாக்கிடல. இதுக்காக 6 வருஷம் போராடி யிருக்கேன். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, சாத்தியப்படுத்தி இருக்கேன். இது, வழக்க மான வாழைச் சாகுபடியைப்போல இல்லாம, மேட்டுப்பாத்தியில் வட்டப்பாத்தி அமைச்சு செஞ்சிருக்கேன். இதுக்கு வழக்கமான வாழைச் சாகுபடிக்குத் தேவைப்படுற தண்ணியில மூணுல ஒரு பங்கே போதுமானது. அதுமட்டுமல்லாம, பஞ்சகவ்யா, மீன் அமிலம், தேமோர் கரைசல், பத்திலைக் கரைசல்னு எதையுமே நான் பயன்படுத்தல.

ஒருங்கிணைந்த பண்ணையம் மூலமா ஆடு, கோழி, வாத்துக் கழிவுகளை வெச்சு, மீன் வளர்க்கிறேன். அது மூலமா கிடைக்குற நல்லா உரமேற்றப்பட்ட மீனோட கழிவுநீரை வெச்சே, முழு சாகுபடியையும் செய்றேன். அப்படி சோதனை முயற்சியில ரெண்டரை ஏக்கர் ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி மாதிரி யான ரகங்களை வளர்த்து, அருமையான வாழை வனத்தை உருவாக்கியிருக்கேன். மகசூலும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கிடைக்குது’’ என ஆச்சர்யமூட்டியவர் மேட்டுப்பாத்தி முறை வாழைச் சாகுபடி பற்றி விளக்கினார்.

வாழைப்பாடம்
வாழைப்பாடம்

வாழை வனம்

“வழக்கமாக வாழைச் சாகுபடியில் அறுவடை முடிஞ்சதும், அந்த மரத்தை வெட்டிட்டு புதுசா ஒரு வாழைக்கன்றை நட்டு அடுத்த சாகுபடிக்குத் தயாராவாங்க. ஆனா, இந்த முறையில ஒரு தடவை வாழைக் கன்றை நடவு செஞ்சா வாழ்நாள் முழுக்க அறுவடை செய்யலாம். ஒவ்வொரு வாழை மரத்திலிருந்தும் பக்கவாட்டில வளரும் வாழை மரங்களை முறையாகப் பராமரிப்பு செய்யணும்.

ஒவ்வொரு வாழை மரமும் குறைஞ்சது 20 அடி உயரத்துக்கு நல்லா நெருக்கமாகத் தழைத்து வளரும். இதனால ஓர் அசலான வனத்தைப்போல வெயில் அதிகமாக தரையில விழாது. அதனால களைச் செடிகள் வளர்றதும் குறைவாத்தான் இருக்கு. சில களைகள் வளர்ந்தாகூட, அதை வாத்து சாப்பிட்ருது. மழைக் காடுகள்ல எப்படி நீர் ஆவியாதல் நடக்குமோ, ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகமாக இருக்குமோ அது எல்லோமே இந்த வாழை வனத்துலயும் நடக்குது. ஒரு மலைக் காடு உருவாக 25-30 வருஷம் ஆகும். ஆனா, இந்த வாழை வனம் ஒரே வருஷத்துல தயாராகிடும்.

இதுல பராமரிப்புன்னா, குழாய்ல பாசன தண்ணி நல்லா போகுதான்னு பார்க்குறது மட்டும்தான். அடுத்து நேரடியா அறுவடை தான். மத்தபடி பராமரிப்புன்னு ஒரு இலையைக்கூட தொட மாட்டோம். ஒரு வாழை மரத்துல இருந்து தார் வெட்டி எடுக்கும்போது, அந்த மரத்தோட கிளை களை துண்டு துண்டா வெட்டி மரத்துக்குக் கீழேயே போட்ருவோம். தண்டில் இருக்கிற சத்துகளைப் பக்கத்தில வளர்ற வாழை எடுத்துக்கிறதுக்காக, அதை வெட்டாம அப்படியே விட்டுடுவோம். 2 மாசத்துல மிச்சமிருக்க வாழை மரத் தண்டும் மட்கி கீழே விழுந்துடும்.

இந்த மேட்டுப்பாத்தி முறையில மழை பெஞ்சாலும் பெருசா தண்ணி தேங்கி நிக்காது. அதுமட்டுமல்லாம, நான் ஒரே மண் குவியல்ல எல்லா வகையான வாழை வகைகளையும் கலந்துதான் வச்சிருக்கேன். எல்லாம் சிறப்பா வளருது. இந்த வாழை வனத்திலிருந்து வாழைத்தண்டு கிடைக்காது. வாழை நார் எடுக்க முடியாது. பூ, பழம் மட்டும்தான் கிடைக்கும்” என்றவர் நிறைவாக,

மீன் கழிவு நீர் உரம்
மீன் கழிவு நீர் உரம்


‘‘வாழையில இந்த முயற்சிகள எடுக்கிறதுக்கு உறுதுணையா இருந்தவரு மைராடா கேவிகே ஒருங்கிணைப்பாளர் அழகேசன். என்னோட இந்தப் புதுமையான வாழைச் சாகுபடி முறையை பத்தி தெரிஞ்சுக்க விவசாயிகள், கல்லூரி மாணவர்கள் பலரும் வர்றாங்க. சமீப காலமாக வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை என் தோட்டத்துக்கு வர்றவங்களுக்கு, இந்த வாழைச் சாகுபடி குறித்து வகுப்பு எடுக்கிறேன். ஆர்வமாக இருக்கவங்களுக்கு அவங்களோட தோட்டத்துக்கு நேரடியாக போய் இலவசமாக ஆலோசனை சொல்லிக்கிட்டு இருக்கேன். எல்லாருக்கும் நானே சொல்லிக் கொடுக்க முடியாது. என்கிட்ட கத்துக்கிட்டவங்க மத்தவங் களுக்கும் இலவசமாக சொல்லிக் கொடுக் கணும். அப்படிச் செஞ்சா இதை 2 வருஷத்துல தமிழ்நாடு முழுக்க கொண்டு போயிடலாம்.

இதுவரைக்கும் 35 விவசாயிகளை ஒன்றிணைத்து செயல்பட்டுக்கொண்டு இருக்கேன். 100 விவசாயிகள் சேர்ந்ததும் இதற்கென ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, அதன்மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிச்சு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணணும்” என்றார்.


தொடர்புக்கு, சண்முகசுந்தரம்,

செல்போன்: 94432 29098

இப்படித்தான் வாழைச் சாகுபடி

மேட்டுப்பாத்தி முறையில் வாழை நடவுசெய்யும் முறை குறித்து சண்முகசுந்தரம் சொன்னவை இங்கே பாடமாக...

வாழையை நடுவதற்கு முன்பு நிலத்தை 4 - 5 முறை நன்கு உழவு ஓட்டி, மண்ணை பொலபொலவென மாற்றிக்கொள்ள வேண்டும். உழவு ஓட்டிய நிலத்தில் ஜேசிபி விட்டு மண் குவியல்களை உருவாக்க வேண்டும். இந்த மண் குவியல்களானது 10 அடி விட்டம், இரண்டரை அடி உயரமுள்ளதாக இருக்க வேண்டும். மண் குவியலின் மேல்பகுதி 8 அடி விட்டம் உடையதாக இருக்க வேண்டும். இந்த மண் குவியலின் மையப்பகுதியில் சொட்டுநீர் குழாய்களை அமைக்க வேண்டும். ஒரு மண் குவியலின் மையத்திலிருந்து இன்னொரு மண் குவியலின் மையப்பகுதிக்கு 15 அடி இடைவெளி இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் ஒரு ஏக்கருக்கு 250 மண் குவியல்கள் கிடைக்கும். மண் குவியலின் மையப்பகுதியில் இருந்து திசைக்கு ஒன்று என்ற கணக்கில் 4 வாழைக் கன்றுகளை நட வேண்டும். அந்த வகையில் ஒரு ஏக்கரிலுள்ள 250 மண் குவியல்களுக்கு தலா 4 வாழைக்கன்றுகள் என, மொத்தம் 1,000 வாழைக் கன்றுகள் தேவைப்படும்.

மண் குவியல்
மண் குவியல்

வாழைக்கன்றை நடவு செய்ததிலிருந்து 3 மாதங்கள் வரை 2 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு வாரம் 2 தடவை தண்ணீர் கொடுக்கலாம். மழைக்காலங்களில் தேவையைப் பொறுத்து தண்ணீர் கொடுத்தால் போதுமானது. இதில், இயற்கை உரங்களுக்கு பதிலாகவும், தண்ணீருக்குப் பதிலாகவும் வெறுமனே உரமேற்றப்பட்ட மீன்கழிவு நீரை மட்டுமே பயன்படுத்தலாம் (இவர் அப்படித்தான் பயன்படுத்தி வருகிறார்).

7-ம் மாதம், வாழைப் பூ வைக்கும்போது, மண் குவியலின் மையத்தில் சிமென்ட் கம்பத்தை நட வேண்டும். இந்தக் கம்பத்தில் வாழை மரத்தை இழுத்துக் கட்டுவதன் மூலம், எவ்வளவு காற்று அடித்தாலும் வாழை மரம் சாய்ந்து விழாது. (இந்த சிமென்ட் கம்பங்களை வெளியே வாங்கினால் செலவு அதிகமாக இருப்பதோடு, தரம் குறைவானதாக இருக்கும். கொஞ்சம் முயற்சி செய்தால், நாமே, அச்சு மூலம் தரமான சிமென்ட் கம்பத்தைத் தயார் செய்து கொள்ளலாம். ஒரு கம்பத்துக்கு 300 ரூபாய்தான் செலவாகும்.). முதல் தடவை நிலத்தை உழவு ஓட்டி, மேட்டுப்பாத்தி கட்டி, வாழையை நட்ட பிறகு, இயற்கை உரம் போடுவது மற்றும் களையெடுப்பது போன்ற எந்த வேலையும் செய்யத் தேவையில்லை. வெறுமனே உரமேற்றப்பட்ட மீன்கழிவு நீரே போதுமானது.

முதல் ஆண்டு 10-11-வது மாதத்தில் அறுவடை செய்யலாம். அடுத்த ஆண்டு முதல் பக்கக் கன்றுகள் மூலம் 4 மாதங்களுக்கு ஓர் அறுவடை என, ஆண்டுக்கு 3 அறுவடைகளைச் செய்யலாம். இந்த முறையில் சாகுபடி செய்யும்போது, இலைக்கருகல் நோயோ, தண்டு துளைப்பான் பிரச்னையோ வருவதில்லை.

அட்டவணை
அட்டவணை

மகசூல் கணக்கு

மகசூல் குறித்து சண்முகசுந்தரம் சொன்னவை இங்கே இடம் பெறுகின்றன...

வாழை நட்ட முதல் ஆண்டு 10-11-ம் மாதத்தில் ஓர் அறுவடை மட்டுமே கிடைக்கும். அப்படிப் பார்த்தால் ஒரு ஏக்கரில் நடப்பட்ட 1,000 மரங்களில் இருந்து 1,000 தார் கிடைக்கும். ஒரு தார் குறைந்தது 15 கிலோ எடை கொண்டதாக இருந்தால்கூட, 1,000 தாரில் இருந்து 15,000 கிலோ வாழை கிடைக்கும். இன்றைய தேதியில் ஒரு கிலோ வாழை சராசரியாக 20 ரூபாய்க்கு விலை போகிறது. ஆக, முதலாமாண்டு ஒரு ஏக்கரில் விளைந்த 15,000 கிலோ வாழைக்கு 3,00,000 வருமானம் கிடைக்கும்.

இரண்டாம் ஆண்டிலிருந்து 4 மாதத்துக்கு ஓர் அறுவடை என ஆண்டுக்கு 3 அறுவடை செய்யலாம். அப்படிப் பார்த்தால் ஓர் அறுவடைக்கு 1,000 தார்கள் என ஆண்டுக்கு 3,000 தார் கிடைக்கும். ஒரு தார் சராசரியாக 15 கிலோ எடை கொண்டதாக இருந்தால்கூட, 3,000 தாரில் இருந்து 45,000 கிலோ வாழை கிடைக்கும். ஒரு கிலோ வாழை சராசரியாக 20 ரூபாய் என வைத்துக்கொண்டால்கூட, 45,000 கிலோ வாழைக்கு 9,00,000 வருமானம் கிடைக்கும்.

லாபம்

முதல் ஆண்டு வாழையில் இருந்து கிடைக்கும் வருமானம் 3 லட்சம். ஆனால், முதல் ஆண்டு வாழைக்கான ஆரம்பகட்ட நடவு செலவுகள் மற்றும் ஒரு வேலையாள் ஆண்டு சம்பளம் மொத்தம் 3,25,000 ரூபாய். ஆக, முதல் ஆண்டு லாபம் என எதுவும் கிடைக்காது.

இரண்டாம் ஆண்டு முதல் 9,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இரண்டாம் ஆண்டிலிருந்து வாழை உற்பத்திக்கென எந்த செலவுமே செய்யத் தேவையில்லை. ஒரு வேலையாளின் ஆண்டு சம்பளமான ரூ.1,50,000 தான் செலவாகும். ஆக, இரண்டாம் ஆண்டிலிருந்து மொத்த வருமானம் 9,00,000 ரூபாயில் வேலையாளின் சம்பளம் ரூ.1,50,000 போக, 7,50,000 கையில் நிற்கும். நான் இரண்டரை ஏக்கரில் வாழை பயிரிட்டு இருப்பதால், எல்லா செலவும் போக ஆண்டுக்கு ரூ.18,75,000 கையில் நிற்கிறது.

கோழிகள்
கோழிகள்

செறிவூட்டப்பட்ட மீன் கழிவு நீர் உரம்

‘‘வாழை வனத்துக்குத் தேவையான உரத்தை ஒருங்கிணைந்த பண்ணையம் மூலமாக, குறிப்பாக மீன்களின் கழிவு நீரைச் செறிவூட்டி அதன் மூலமாகவே உருவாக்குறேன். அதுக்காக 10 அடி அகலம், 100 அடி நீளம், 6 அடி ஆழத்துல ஒரு பெரிய சிமென்ட் தொட்டியைக் கட்டியிருக்கிறேன். அதுல 50 கிராம் எடையுள்ள ‘ரூப்சந்த்’ மீனை 1,500 எண்ணிக்கையில விட்டிருக்கிறேன். இந்த மீன்களுக்கு உணவளிக்க, 100 அடி நீளமுள்ள மீன்தொட்டி மேல, 30 அடிக்கு ஒரு கொட்டகையை அமைச்சிருக்கேன். கொட்டகை உயரம் 7 அடி. அந்த 30 அடி கொட்டகையை 3 பாகமா பிரிச்சு வாத்து, கோழி, ஆடுகளை விட்டிருக்கிறேன். கொட்டகையின் கீழ்ப் பகுதி சல்லடையாக இருக்கும். அதனால, கோழி, வாத்து, ஆடுகளோட கழிவுகள் நேரடியாக மீன் தொட்டியில விழுந்திடும். இதைத் தவிர, நாங்க மீன்களுக்கு எந்த உணவையும் கொடுக்குறதில்ல. பகல்ல, சூரிய ஒளி மூலமாவே ஆக்ஸிஜன் உற்பத்தி நடந்துடும். இரவுல மீன் தொட்டிக்குள் போர்வெல் வாட்டரை விடுவோம். அது மூலம், ஆக்ஸிஜன் கிடைச்சிடும்.

இப்படி இந்தத் தொட்டியில் கிடைக்குற ‘அம்மோனியா’ கலந்த மீனினுடைய கழிவு நீரை, ‘அனோரபிக் லகூன்’ என்கிற மண்ணால் வெட்டப்பட்ட ஒரு குழிக்குள்ள விடுறோம். அந்தக் குழியில ஆக்ஸிஜன் கொடுக்காம அதிக அளவுல பாக்டீரியாக்கள் வளர்க்கப்படுது. ஆக்ஸிஜன் இல்லாத பாக்டீரியா ஏதாவது ஒரு பிடிமானத்திலதான் வளரும். அதுக்காக தொட்டியில 2 டன் அளவுக்கு தேங்காய் சிரட்டையை கொட்டியிருக்கிறோம்.

மீன் கழிவு நீர் உரம்
மீன் கழிவு நீர் உரம்

‘அம்மோனியா’ கலந்த மீனினுடைய கழிவு நீரானது, இந்த ‘அனோரபிக் லகூன்’குள்ள போகும்போது, அதிலிருக்குற பாக்டீரியாக்கள் அம்மோனியாவை முழுசா சாப்பிட்டு, அதை ‘நைட்ரைட்’டாக மாத்திடும். அந்த அம்மோனியம் நைட்ரைட்டை இன்னொரு மண் தொட்டிக்குள்ள விட்டு, அங்க 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் கொடுப்போம். இதில் பாக்டீரியாவை அதிகமாக்க தினமும் தலா கால் கிலோ சர்க்கரை, கால் கிலோ துவரம் பருப்பு குறுணையை அரைச்சுப் போடுவோம். அப்படி இந்தத் தொட்டியில தழை, மணி, சாம்பல் (NPK) சத்துக்கள் உருவாகுது.கடைசியில சேமிப்புக் கிணற்றுக்கு போய்ச் சேரும். அங்கிருந்து குழாய் மூலமா ‘பம்ப்’ பண்ணி, வாழைக்குக் கொடுக்கிறோம். இந்த செறிவூட்டப்பட்ட மீனுடைய கழிவுநீரை வாழைக்கு மட்டுமல்லாம, எல்லாவிதமான பயிர்களுக்கும் கொடுக்கலாம். இந்த உரம் தயாரிக்கும் அமைப்புக்கு 2,69,000 ரூபாய் செலவு ஆகும். மீன், ஆடு, கோழி மூலமும் வருமானம் கிடைக்கும். அது வாழைக்கான ஊக்கத்தொகை’’ என்கிறார் சண்முகசுந்தரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism