Published:Updated:

ஈரோடு: முன்னணி நிறுவனத்தில் வேலை; பார்ட்டைமாகக் கிழங்கு விவசாயம்! - அசத்தும் ஐ.டி இளைஞர்

வொர்க் ஃப்ரம் ஹோமில் வேலைபார்த்து வரும் சசிகாந்த், இரண்டரை ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டு அசத்தி வருகிறார்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா, ஈஞ்சம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகாந்த் (35). ஒரு சாதாரணாமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் பருவத்தில் பெற்றோருக்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதன்பிறகு கல்லூரிப் படிப்பு, சென்னையில் வேலை என விவசாயத்துக்கும், அவருக்குமான தொப்புள் கொடி உறவு அறுபட்டுப் போயிருக்கிறது. இந்தக் கொரோனா சூழலால் அவர் வேலைபார்த்து வந்த பிரபல ஐ.டி நிறுவனம் `வொர்க் ஃப்ரம் ஹோம்’ என வீட்டிலிருந்தே வேலை செய்யச் சொல்ல, சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், ஈஞ்சம்பள்ளி கிராமத்துக்கு வந்திருக்கிறார். அப்படி ஊருக்கு வந்தவர், வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் ஏன் விவசாயம் செய்யக்கூடாது? என வயிலில் இறங்கி, இரண்டரை ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டு அசத்தலாக விவசாயம் செய்து வருகிறார்.

சசிகாந்த்
சசிகாந்த்

இதுதெரிந்து ஈஞ்சம்பள்ளியில் உள்ள தோட்டத்தில் வைத்து சசிகாந்த்தை சந்தித்துப் பேசினோம். ``நான் எலெக்ட்ரிகல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன். நான் காதலிச்ச பொண்ணு, சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை செஞ்சாங்க. அவங்களுக்காகவே ஜாவா கத்துக்கிட்டு நானும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆனேன். ரெண்டு பேரும் சென்னையிலயே வேலை பார்த்து, கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிட்டோம். தீபாவளி, பொங்கல் மாதிரி ஏதாவது விசேஷம்னா மட்டும் ஊருக்கு வந்துட்டு போவோம். கொரோனாவால எங்க ஆஃபீஸ்ல `வொர்க் ஃப்ரம் ஹோம்’லயே வேலை செய்யச் சொல்லிட்டாங்க. அதனால ஊருக்கு வர வேண்டிய சூழல். பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு 10 ஏக்கர் விவசாய நிலங்கள் இருக்கு. அப்பாதான் எல்லாத்தையும் கவனிச்சிக்கிட்டு இருந்தாங்க. கடந்த 3 வருஷத்துக்கு முன்னாடி அப்பா இறந்துபோனதும், நிலத்துல எந்த விவசாயமும் செய்யாம சும்மா வச்சிருந்தோம். வொர்க் ஃப்ரம் ஹோம் போக மிச்ச நேரத்துல ஏன் விவசாயம் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. உடனே களத்துல இறங்கிட்டேன்” என உற்சாகமாக பேச்சை ஆரம்பித்தார்.

தொடர்ந்து பேசியவர், ``நான் காக்னிசன்ட்டில் புராஜெக்ட் மேனேஜராக இருக்கேன். எனக்கு கீழ சுமார் 40 பேர் வேலை செய்யுறாங்க. ஆனா, அதுல கிடைக்காத ஒரு மனதிருப்தி விவசாயம் செய்யுறப்ப எனக்கு கிடைச்சது. ஊருக்கு வந்த உடனேயே இரண்டரை ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு போட்டேன். இந்த நாலு மாசத்துல நல்லா தளதளன்னு செடி தழைஞ்சு வந்துருக்கு. எனக்கு மதியம் 1 மணியிலிருந்து நைட் 10 மணி வரைக்கும் வேலை. அதனால, காலையில எந்திரிச்சதும் வயலுக்குப் போயிடுவேன். வயலுக்கு தண்ணி விடுறது, மருந்தடிக்கிறதுன்னு எல்லாத்தையும் நானே பார்க்கிறேன். ஏதாவது சந்தேகம்னா பக்கத்துல உள்ள விவசாயிகளிடமும் நண்பர்களிடமும் அறிவுரை கேட்டு, அதன்படி நடந்துக்குறேன். இதுமட்டுமல்லாம 15 நாட்டுக் கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சிருக்கேன்”

சசிகாந்த்
சசிகாந்த்
WFH `ரிமோட்+' - சொந்த ஊரில் வேலை... ஐ.டி நிறுவனத்தின் புதிய திட்டம்!

``வாய்க்கால் அமைச்சு பாத்தி கட்டி இதுவரைக்கும் எங்க வயல்ல தண்ணி பாச்சிக்கிட்டு இருந்தோம். விரயமாகும் தண்ணீர் செலவைக் குறைப்பதோடு, கொஞ்சம் அப்டேட் பண்ணலாமேன்னு, இரண்டரை ஏக்கர் முழுக்க சொட்டுநீர்ப் பாசனமாக மாத்திட்டேன். இன்னும் 2 ஏக்கர்ல மரவள்ளிக்கிழங்கும், கொஞ்சம் தென்னை மரங்களையும் நடலாம்னு இருக்கேன். சென்னைல காலையில 8 மணிக்கு முன்னாடி எழுந்திருக்கும் பழக்கம் கிடையாது. ஆனா, இங்க வந்து 5 மணியைத் தாண்டி தூங்குனது இல்லை. பழக்க வழக்க முறையில் பெரும் மாற்றம் உண்டாகியிருக்கு. மறுபடியும் சென்னைக்கு போனாலும் சனி, ஞாயிறு ஊருக்கு வந்தே ஆகணும்னு பிளான் பண்ணியிருக்கேன். மாறிவரும் பருவகாலம், தண்ணீர் பற்றாக்குறை, கூலியாட்கள் பிரச்னைன்னு நிறைய சிக்கல்கள் இருக்கு. இல்லைன்னா முழுநேர விவசாயி ஆகிடுவேன். முழுசா இங்க இருந்தா 10 ஏக்கர்ல இறங்கி என்னால வேலை பார்க்க முடியும். அதுக்காக நிலத்தை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றார் உற்சாகமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு