Published:Updated:

பனங்கிழங்கு உற்பத்தி, கரும்பு ஜூஸ், கருப்பட்டி விற்பனை... ஈரோடு இளைஞரின் `விவசாயி' அவதாரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 பனங்கிழங்கு விற்பனை
பனங்கிழங்கு விற்பனை ( படம்: விகடன் / நா.ராஜமுருகன் )

தன் வாழ்வின் முன்கதை சுருக்கம் சொல்லி, நம்பிக்கையாக தம்ஸ் அப் காட்டி பேசுகிறார் கிருஷ்ணன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``பூர்வீகத் தொழில் விவசாயம்தான்னாலும், அதுல எங்கப்பா பட்ட கஷ்டத்தை சின்ன வயசில் இருந்து பார்த்ததால், விவசாயம் மேல ஆர்வமில்லாமதான் வளர்ந்தேன். எல்லா இளைஞர்களையும் போல நானும், `நல்ல படிப்பு, கைநிறைய வேலை'னு நினைச்சுதான், குடும்ப கஷ்டத்தையும் மீறி, எம்.சி.ஏ வரை படிச்சேன். தனியார் நகைக் கடன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மாசம் 20,000 வரை சம்பளம் வாங்கினேன்.

பனங்கிழங்கு உற்பத்தி
பனங்கிழங்கு உற்பத்தி
படம்: விகடன் / நா.ராஜமுருகன்

ஆனா, அதிக வேலைப்பளு, டார்க்கெட், மனஉளைச்சல், உடல், மன பிரச்னைகள்னு பல தொல்லைகளை அனுபவிச்சேன். `இப்படியே போனா சிக்கலாயிரும்'னு ஒரு நொடியில முடிவு பண்ணி, அந்த வேலையை விட்டேன். இப்போ, பனங்கிழங்கு உற்பத்தி மற்றும் விற்பனை, கரும்பு ஜூஸ் கடை, பனங்கருப்பட்டி விற்பனை என்று மாசம் ரூ. 40,000 வரை சம்பாதிக்கிறேன். மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்கிறேன்" என்று தன் வாழ்வின் முன்கதை சுருக்கம் சொல்லி, நம்பிக்கையாக தம்ஸ் அப் காட்டி பேசுகிறார் கிருஷ்ணன்.

கிருஷ்ணன், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகில் உள்ள சிவகிரி தெப்பபாளையத்தைச் சேர்ந்தவர். எம்.சி.ஏ பட்டதாரியான இவர், பனங்கிழங்கை உற்பத்தி செய்து, அதை விற்பனை செய்து வருகிறார். கரூர் மாவட்டம், சத்திரம் அருகே உள்ள ராசம்மாள் மேல்நிலைப்பள்ளி அருகில், சாலை ஓரமாகப் பனங்கிழங்குகளை அடுக்கி வைத்து, விற்பனை செய்துவருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

 பனங்கிழங்குடன் கிருஷ்ணன்
பனங்கிழங்குடன் கிருஷ்ணன்
படம்: விகடன் / நா.ராஜமுருகன்

``படிக்கிற காலத்துல விவசாயத்தையே வெறுத்தேன். ஆனா, அதே விவசாயத்தில்தான் இப்போ கால் பதிக்க வேண்டிய சூழல். இதை விதி என்பதா, காலத்தின் கணக்கு என்பதா என்று இனம்காண முடியவில்லை. ஆனா, இப்போ மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை வாழ முடியுது. ஏழ்மையான குடும்பம் என்னுடையது. சொந்தமா 4 ஏக்கர் நிலமிருக்கு. ஆனா, அதுல 3 ஏக்கர் மானாவாரி பூமி. பெருசா எந்த விவசாயமும் அதுல பண்ண முடியாது. மீதியுள்ள ஒரு ஏக்கர் நிலத்தில்தான் ஆத்துப் பாசனத்தில் வெள்ளாமை பண்ண முடியும். அதுல, கடுமையா அப்பா உழைச்சுதான், என்னையும், என்னோட அக்காவையும் படிக்க வச்சார். `குடும்ப வறுமையை நல்ல படிப்பு, வேலை மூலமாதான் மாத்த முடியும்'னு அப்பா அடிக்கடி சொல்வதை நினைச்சு, நல்லா படிச்சேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2011-ம் ஆண்டு, எம்.சி.ஏ படிச்சு முடிச்சேன். உடனே, தனியார் நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் ரூ.12,000 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். ஆரம்பத்துல அந்த வேலை புடிச்சுச்சு. ஆனா, போகப் போக 24 மணி நேரமும் என்னை அந்த வேலையே ஆக்கிரமிச்சுட்டு. பலமுறை, வாரத்துல 7 நாளும் வேலை பார்க்க வேண்டிய அளவுக்கு அந்த வேலை அதிக பாரத்தைக் கொடுத்துச்சு. இந்த நிலையிலதான், 2012-ம் ஆண்டு எனக்கு திருமணம் ஆணுச்சு. ஆனா, இந்த வேலையால குடும்பத்தைச் சரியா கவனிக்க முடியலை. இதனால், உடம்புக்கு முடியாம இருந்த எங்கப்பாவை என்னாலகூட இருந்து சிகிச்சைக்கு அழைச்சுக்கிட்டுப் போக முடியலை.

பனங்கிழங்கு உற்பத்தி
பனங்கிழங்கு உற்பத்தி
படம்: விகடன் / நா.ராஜமுருகன்
உயிர்வேலி, தடுப்பணை, உணவு பழக்காடு... `ஒருங்கிணைந்த பண்ணை' முயற்சியில் கரூர் இன்ஜினீயர்

இதனால், 2016-ம் ஆண்டு வேலையை ரிசைன் பண்ணினேன். அப்போ, மாசம் ரூ. 20,000 சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். `வேலையை விட்டுட்டு வருமானத்துக்கு என்ன பண்ணப் போற?'னு எல்லோரும் பயமுறுத்துனாங்க. ஆனா, `இந்த வேலையாலதான் அப்பாவுக்கு சரியா வைத்தியம் பண்ண முடியலை. இந்த வேலையால எனக்கும் பல பிரச்னைகள். அப்பாவை கூட இருந்து கவனிக்கிறதுதான் இப்போ முக்கியம்'னு சொல்லி, என் முடிவுல உறுதியா இருந்தேன்.

முதல்ல எனக்கும் என்ன பண்றதுன்னு புரியலை. வேலைக்குப் போய்கிட்டு இருந்த சமயத்துலேயே, செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் சர்வீஸ் பண்றதை பார்ட் டைமா பண்ணிக்கிட்டு இருந்தேன். அதனால், வேலையை விட்டதும், ஒரு வருஷம் அந்த செல்போன் சர்வீஸ் பண்ற வேலையைப் பார்த்தேன். முதல் சில மாதங்கள் வருமானம் வரலை. போகப்போக, மாசம் ரூ. 25,000 வரை வருமானம் கிடைச்சுச்சு. அப்பாவை நல்லா கவனிச்சுக்கிட்டாலும், அவர் 2017-ம் வருடம் இறந்துபோயிட்டார். இதனால், எங்க ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் பேரிடி. குடும்ப பாரத்தை நான் சுமக்க வேண்டிய சூழல்.

கிருஷ்ணனின் ஜூஸ் கடை
கிருஷ்ணனின் ஜூஸ் கடை
படம்: விகடன் / நா.ராஜமுருகன்

இந்த நிலையில்தான், கூடுதல் வருமானத்துக்காக 2017-ம் அம்மன்கோயில் பக்கத்துல கரும்பு ஜூஸ், பனங்கருப்பட்டி விற்பனை செய்யும் கடையை ஆரம்பிச்சேன். நம்பியூரில் இருந்து பனங்கருப்பட்டியை வாங்கி வந்து, விற்பனை செஞ்சேன். ஜூஸ் போட தேவையான ஆலைக்கரும்பை முள்ளாம்பரப்பு பகுதியில் இருந்து வாங்க ஆரம்பிச்சேன். முதல் ஒருமாசம் தொழில் பிக்கப் ஆக தள்ளாடுனுச்சு. ஆனா, அதன்பிறகு தொழில் பிக்கப் ஆச்சு. அதனால், செல்போன், லேப்டாப் சர்வீஸ் பண்ற தொழிலை குறைச்சுக்கிட்டேன். கடையில் கவனம் செலுத்தினேன். நம்பிக்கை கொடுக்கிற அளவுக்கான வருமானம் வரத்தொடங்குச்சு. கொங்கு மாவட்டப் பகுதிகளில் பனங்கிழங்குக்கு நல வரவேற்பு இருப்பதை உணர்ந்தேன்.

2017 ஜூலை மாதமே என்னோட 25 சென்ட் நிலத்தில், பனங்கிழங்கு உற்பத்தி செய்ய ஆரம்பிச்சேன். மூணு மாசத்தில் இருந்து வருமானம் தர ஆரம்பிச்சுச்சு. ஜூஸ் கடையை மனைவி சுதாமணி கவனத்தில் விட்டுட்டு, நான் கரூர் மாவட்டத்தில் வந்து பனங்கிழங்கு விற்பனை செய்யத் தொடங்கினேன். வருஷத்துல இரண்டு மாசம்தான் பனங்கிழங்கு அறுவடை செய்ய முடியும். தொடந்து அடுத்தடுத்த வருஷமும் பனங்கிழங்கு உற்பத்தி செஞ்சு, விற்பனை செஞ்சேன். ஜூஸ் போட கரும்பை, மூணு நாளைக்கு ஒருதடவை கிலோ ரூ. 7-க்கு, 300 கிலோ வரை வாங்கிட்டு வருவேன். அதேபோல், பனங்கருப்பட்டியை கிலோ ரூ. 240-க்கு வாங்கிட்டு வர்றேன்.

பனங்கிழங்கு விற்பனை
பனங்கிழங்கு விற்பனை
படம்: விகடன் / நா.ராஜமுருகன்

நான் அதை கிலோ ரூ. 300-ல் இருந்து டிமாண்டை பொறுத்து, ரூ. 350 வரை விலை வச்சு விற்கிறேன். இயற்கை வாழ்வியலில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வந்திருப்பதால், ஆர்வமா வாங்குறாங்க. அதேபோல், ஒரு கிளாஸ் ஜூஸை, ரூ. 10-க்கு விற்பனை செய்றேன். பனங்கிழங்கை பொறுத்தமட்டில், வருஷத்துக்கு 50,000 கிழங்குகள் வரை உற்பத்தி செஞ்சு, விற்கிறேன்.

இதைத்தவிர, பனங்கிழங்கு உற்பத்தி செய்ய பயன்படுத்துற 25 சென்ட் நிலம்போக, ஒரு ஏக்கர் நிலத்தில் மீதியுள்ள இடத்தில் சீஸனுக்கு தகுந்த முறையில், நெல், எள், உளுந்து, கடலைனு பயிர் செய்றேன். இப்போ, செல்போன் சர்வீஸ் பண்ற தொழிலை நிறுத்திட்டேன். இதுல மட்டுமே கவனம் செலுத்துறேன். இதனால், மாசம் எனக்கு எல்லா செலவும்போக, ரூ. 40,000 வரை வருமானம் கிடைக்குது. கோயமுத்தூர் மாவட்டத்தில் பனங்கிழங்குக்கு நல்ல கிராக்கி இருக்கு. அதனால், வர்ற போகத்தில் இருந்து, ஒரு ஏக்கர் நிலத்தில் பனங்கிழங்கை உற்பத்தி செஞ்சு, மொத்த வியாபாரம் பார்க்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். ஜூஸ் கடையையும் விரிவுப்படுத்த இருக்கிறேன்.

பனங்கிழங்கு உற்பத்தி
பனங்கிழங்கு உற்பத்தி
படம்: விகடன் / நா.ராஜமுருகன்

இதனால், அப்போது என்னோட வருமானம் இன்னும் அதிகமாகும். வீட்டைச் சுத்தி வேலை, இயற்கையான சூழல்ல வாழ்க்கை, நிறைவான வருமானம்னு இப்போதுதான் நான் விருப்பமான வாழ்க்கையையே வாழ ஆரம்பிச்சுருக்கேன். இயற்கை சார்ந்து இன்னும் என்னென்ன வகையில் இயங்கலாம், எப்படி அதை வருமானமாக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கிறேன். இயற்கை வாழ்வியலிலும், இயற்கை சம்பந்தமான உணவு பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையிலும் நிச்சயம் ஓர் உச்சம் தொடுவேன்" என்றார் உறுதியான வார்த்தைகளில்!

வாழ்த்துகள் பிரதர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு