Published:Updated:

புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தை... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய விற்பனை!

ஆடு விற்பனை
ஆடு விற்பனை

இச்சந்தை புகழ் பெற்றது என்பதால், தூத்துக்குடி மட்டுமல்லாமல் நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்ல இங்கு வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இயங்கி வரும் ஆட்டுச்சந்தை தென் மாவட்டங்களில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு விரும்பும் இன ஆடுகள் திரட்சியான உடல் அமைப்புகளுடன் கிடைப்பது மட்டுமின்றி விற்பனையிலும் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் ஆடு விற்பனையாளர்கள், வியாபாரிகள் இங்கு கூடுவார்கள். தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, விளாத்திகுளம், எட்டயபுரம் ஆகிய தாலுகாக்களில் மழையை முழுமையாக நம்பிய மானாவாரி விவசாயத்தைதான் செய்து வருகிறார்கள். இதனால், ஆடு, மாடு வளர்ப்பையும் சேர்த்தே செய்து வருகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

விற்பனை செய்யப்பட்ட ஆடுகள்
விற்பனை செய்யப்பட்ட ஆடுகள்

இச்சந்தை புகழ் பெற்றது என்பதால், தூத்துக்குடி மட்டுமல்லாமல் நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்ல இங்கு வருகிறார்கள். வழக்கமான சந்தை நாள்களில் 1 கோடி வரையிலும், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகைக் கால நாள்களில் ரூ.4 கோடி முதல் 6 கோடி வரையிலும் விற்பனையாகிறது. இங்கு விற்பனையாவதில் வெள்ளாடுகளைவிட செம்மறியாடுகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

இந்நிலையில், வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான கரிநாளை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது. நடுத்தரமான சுமார் 7,000 ஆடுகள் வரை விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆட்டுக்குட்டி முதல் பெரிய ஆடுகள் வரை எடைகளுக்கு ஏற்ப ரூபாய் 3,000 முதல் 26,000 வரை ஆடுகள் விற்பனையாகின. சுமார் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக ஆட்டு வியாபாரிகள் கூறினர்.

ஆடுகள் வாங்குவதற்காக சந்தைக்கு வந்திருந்த வியாபாரிகளிடம் பேசினோம். ``நெல்லை மாவட்டம் மேலப்பாளையம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச்சந்தைகளில் கிடைக்காத இன ஆடுகள் இந்தச் சந்தையில் கிடைச்சுது.

எட்டயபுரம் ஆட்டுச்சந்தை
எட்டயபுரம் ஆட்டுச்சந்தை

நாட்டு இனங்களில் கன்னி, கொடி, கரும்போர், சிவலைப்போர் ஆடுகளும், செம்மறியாட்டு இனங்களில் செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, கீழக்கரிசல், மேக்கரிசல் ஆகிய ஆடுகளும், இதுதவிர, ராமநாதபுரம் வெள்ளை, சேலம் கருப்பு, கோயமுத்தூர் குரும்பை என வெளி மாவட்ட இன ஆடுகளின் வரத்தும் அதிகமா இருந்துச்சு” என்றனர்.

தற்போது, பறவைக் காய்ச்சல் அச்சத்தால் பொதுமக்கள் ஆட்டிறைச்சி பக்கம் திரும்பியுள்ளனர். இதனால், ஆடுகளின் விளையும் கடந்த சில வாரங்களைவிட சற்று உயர்ந்து காணப்பட்டது. ஆடுகள் விற்பனையைப் போலவே, ஆடுகள் வளர்ப்புக்குத் தேவையான கம்பு, அரிவாள் விற்பனையும் அதிகமாக நடந்தது.

அடுத்த கட்டுரைக்கு