Published:Updated:

பக்ரீத்: களைகட்டிய ஆட்டுச் சந்தை; ரூ.4 கோடிக்கு விற்பனை; மகிழ்ச்சியில் வியாபாரிகள்!

ஆடு வாங்கிச் செல்லும் வியாபாரி
ஆடு வாங்கிச் செல்லும் வியாபாரி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த ஆண்டு ரூ.4 கோடிக்கு விற்பனையானதால் விவசாயிகள், ஆட்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டத்தின், எட்டயபுரம் ஆட்டுச்சந்தையும் ஒன்று. சனிக்கிழமைதோறும் இயங்கி வருகிறது இந்த ஆட்டுச்சந்தை. இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, ஒட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்களில் மழையை மட்டுமே நம்பிய மானாவாரி விவசாயமே நடைபெற்று வருகிறது. இதனால், இங்குள்ள மானாவாரி விவசாயிகள், விவசாயத்துடன் உப தொழிலாக ஆடு வளர்ப்பையும் மேற்கொண்டு வருகிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எட்டயபுரம் ஆட்டுச்சந்தைதான் முக்கிய விற்பனை மையம்.

எட்டயபுரம் ஆட்டுச்சந்தை
எட்டயபுரம் ஆட்டுச்சந்தை
இறைத்தூதரின் தியாகங்களை நினைவூட்டும் பக்ரீத் பெருநாள்! #Bakrid

கன்னி, கொடி, செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, வெம்பூர் பொட்டுப்போர், பட்டினம், கச்சைக்கட்டி, மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, சேலம் கறுப்பு, கோயமுத்தூர் குரும்பை என விரும்பும் இன ஆடுகள் திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமல்லாமல் விற்பனையிலும் நல்ல லாபம் கிடைக்கிறது என்பதால்தான் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, கோவை, சிவகங்கை, சென்னை, நெல்லை எனப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும் பொது மக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம்.

இங்கு விற்பனையாவதில் வெள்ளாடுகளைவிட செம்மறியாடுகளின் எண்ணிக்கைதான் அதிகம். வாரம்தோறும் சராசரியாக 1,000 முதல் 2,000 ஆடுகள் வரை விற்பனையாகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகை நாள்களில் விற்பனையாகும் ஆடுகளின் எண்ணிக்கை நான்கு மடங்காகும். ஆட்டின் எடையைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் அதிகபட்சமாக ரூ.50,000-க்கும் மேல் வரை விற்பனையாகிறது. வாரம்தோறும் ரூ.2 கோடி வரையிலும் பண்டிகை நாள்களில் ரூ.3 முதல் ரூ.5 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெறுகிறது.

ஆட்டுச்சந்தையில் ஆடு விற்பனை
ஆட்டுச்சந்தையில் ஆடு விற்பனை

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டு இருந்த ஆட்டுச்சந்தை, கடந்த வாரம் மீண்டும் திறக்கப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, எட்டயபுரம் ஆட்டுச்சந்தை மீண்டும் வழக்கமான சூழலில் களைகட்டியுள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 4,000-க்கும் மேலான கிடாய் ஆடுகள் உட்பட 6,000 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. குறைந்தபட்சம் ரூ.8,000 முதல் அதிகபட்சமாக ரூ.60,000 வரை கிடாய் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.

ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகளிடம் பேசினோம், ``கொரோனா ஊரடங்கால் ஒரு வருஷத்துக்கும் மேலாக, எந்த ஆட்டுச்சந்தையும் சரிவர நடைபெறல. அதனால், ஆடுகளோட வளர்ச்சி அதிகமாக இருந்தது. சாதாரணமாக 15 கிலோ முதல் 40 கிலோ வரையிலான ஆடுகளும், ஆளின் இடுப்புளவு உயரமுள்ள கிடாரி ஆடுகளும்தான் அதிகமாக விற்பனைக்கு வந்து இருந்தன. ரெண்டு வருஷத்துக்கு முன்னால பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இதே ஆட்டுச்சந்தையில், ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள்
விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள்

இந்த வருஷம் சற்றுக் குறைவுதான் என்றாலும், கொரோனா ஊரடங்குக்குப் பின்னர், மீண்டும் பழைய நிலைக்கு விற்பனை தொடங்கியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. ஒரே நாளில் ஆட்டு விற்பனையில எங்களுக்கு நல்ல விலை கிடைச்சிருக்கு. இந்த மாசம் ஆடி மாசம் என்பதால் தென் மாவட்டங்களில் பல கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதில் நேர்த்திக்கடன்களை செலுத்திட ஆடுகள் அதிக அளவு விற்பனையாகும்” என்றனர்.

ஆடுகள் வாங்கிச் செல்ல வந்த மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி, ``அருப்புக்கோட்டை, மேலப்பாளையம், திருமங்கலம் பகுதிகள்ல உள்ள ஆட்டுச்சந்தையில கிடைக்காத சில இன ஆடுகள் இந்தச் சந்தையில கிடைச்சது. செம்மறி ஆட்டு இனங்கள்ல செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, கச்சகட்டி கிழக்கரிசல், மேலக்கரிசல் ஆகிய இனங்கள் அதிக எண்ணிக்கையில இருந்துச்சு.

ஆட்டுச்சந்தையில் கூடியுள்ள வியாபாரிகள்
ஆட்டுச்சந்தையில் கூடியுள்ள வியாபாரிகள்
Vikatan

விலை சற்று அதிகம் என்றாலும், விலைக்கேத்த ஆடுகளும், அவற்றின் உடலும் திரட்சியா இருந்துச்சு. ஆடி மாசம் பொறந்ததுனால, `கறுப்பு’ இன ஆடுகளுக்கு கடுமையான கிராக்கியா இருந்துச்சு. சுத்தக் கறுப்பு ஆடுகளை என்ன விலை கொடுத்துனாலும் வாங்கிட்டுப் போக வியாபாரிகள் தயாரா இருந்தாங்க. பல மாசத்துக்குப் பிறகு ஆட்டுச்சந்தை முழுக்க ஆடுகளையும், ஆட்டு வியாபாரிகளையும் பார்க்குறதுக்கு மனசுக்கு சந்தோஷமா இருக்கு” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு