Published:Updated:

`நெற்பயிரில் யானை கொம்பன் தாக்குதல்... வேதனையில் விவசாயிகள்!' - வழிகாட்டும் வல்லுநர்

இதனை எளிய முறையில் எப்படிக் கட்டுப்படுத்தலாம் என இயற்கை விவசாய வல்லுநரான தேனாம்படுகை பாஸ்கரனிடம் கேட்டோம்.

நெற்பயிரில் யானைகொம்பன்
நெற்பயிரில் யானைகொம்பன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிரில், யானைகொம்பன் பூச்சித்தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இதன் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு, மகசூல் இழப்பு ஏற்படக்கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.

நெற்பயிரில் யானைகொம்பன்
நெற்பயிரில் யானைகொம்பன்

இதனால் இப்பகுதி விவசாயிகள்பெரும் மன உளைச்சல் அடைந்திருக்கிறார்கள். இதனை எளிய முறையில்எப்படி கட்டுப்படுத்தலாம் என வழிகாட்டுகிறார் இயற்கை விவசாய வல்லுநர் தேனாம்படுகை பாஸ்கரன்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிரில் கடந்த சில நாள்களாக, யானைகொம்பன் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகளிடம் பேசியபோது, ``இலைகள்ல உள்ள சாறை உறிஞ்சி சாப்பிட்டுடுது. இதனால் இலைகள் சருகு மாதிரி மாறிடுது. தண்டுப்பகுதியை துளைச்சிக்கிட்டு உள்ளாரப் போயி முட்டை வச்சிடுது.

இயற்கை விவசாய வல்லுநர் பாஸ்கரன்
இயற்கை விவசாய வல்லுநர் பாஸ்கரன்

அதுல இருந்து புழுக்கள் உருவாகி, ஒட்டுமொத்த பயிரையும் நாசப்படுத்திடும். இதனை உடனடியாக கட்டுப்படுத்தலைனா, பயிரோட வளர்ச்சி பாதிக்கப்பட்டு, அறுவடை சமயத்துல, 30-40 சதவீதம் மகசூல் குறைஞ்சி, பொருளாதார இழப்பு ஏற்படும்” என வேதனையோடு சொன்னார்கள்.

இதனை எளிய முறையில் எப்படி கட்டுப்படுத்தலாம் என இயற்கை விவசாய வல்லுநரான தேனாம்படுகை பாஸ்கரனிடம் கேட்டோம். ``நடவு செஞ்சதுல இருந்து 30 அல்லது 40 நாள் வயதுக்கு உட்பட்ட இளம் பயிர்ல இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கு. தூர் கட்டி, சுணை உருவான நெற்பயிர்கள்ல யானைகொம்பன் தாக்குதல் ஏற்படாது. தொடர்ச்சியா மழை பெய்ததோடு மட்டுமல்லாம, கடந்த 10 நாள்களுக்கும் மேலாக, வானம் முடி, மப்பும் மந்தாரமுமாக இருந்ததுனாலதான், இளம் பயிர்ல, யானைகொம்பன் தாக்குதல் அதிகரிச்சிருக்கு. இதை கட்டுப்படுத்த, ரசாயன பூச்சிக்கொல்லிதெளிச்சோம்னா, யானைகொம்பன் பூச்சிகள் சாகுறதோடு மட்டுமல்லாமல், சிலந்தி, பொறிவண்டு மாதிரியான நன்மை செய்யும் பூச்சிகளும் செத்துடும்.

"செலவு குறைவு, மகசூல் அதிகம்!" - விவசாயம் மற்றும் மாடித்தோட்டத்திற்கேற்ற 'குழித்தட்டு நாற்றங்கால்'

தவளை, நண்டு உள்ளிட்ட உயிரினங்களும் இறந்துடும். இதனால் எதிர்வரும் நாள்கள்ல தீமை செய்யும் பூச்சிகள் அதிகளவுல வர ஆரம்பிச்சிடும். இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். யானைகொம்பன்பூச்சிகளை இயற்கை முறையில கட்டுப்படுறதுதான் சிறந்த வழி. நெல் வயல்ல, லேசா தண்ணீர் கட்டி, ஏக்கருக்கு 5-10 கிலோ வேப்பம்புண்ணாக்கு தூளை கரைச்சி விடணும். 1 லிட்டர் வேப்பெண்ணெய்ல, 25 கிராம் காதி சோப்பை கரைச்சி, மறுநாள் பார்த்தோம்னா, பால் மாதிரி பொங்கயிருக்கும். இதுல இருந்து ஏக்கருக்கு 250 மில்லி வீதம் கரைசல் எடுத்து, 80 லிட்டர் தண்ணீர்ல கலந்து, பயிர்கள்ல மேல தெளிக்கணும். 4-5 அடி உயரத்துல பறவை தாங்கிகள் அமைக்கணும். ஏக்கருக்கு 10-20 இடங்கள்ல தென்மட்டையை தலைகீழா சொருகி வச்சாலே போதும். குருவிகள் உள்ளிட்ட பறவைகள் வந்து, யானைகொம்பன் பூச்சிகளை சாப்பிட்டுடும். முட்டை, புழுக்களையும்அழிச்சிடும்” என்றார்.