Published:Updated:

வளிமண்டலச் சத்து, பூச்சி ஒழிப்பு, நுண்ணுயிர் வளம்... கோடை உழவில் இருக்கு இவ்வளவு நன்மை!

உழவு
உழவு

கோடைக்காலம் நெருங்கிவிட்டது. எனவே கோடை உழவு செய்வதற்கு விவசாயிகளை ஆயத்தப்படுத்துவதற்கான முன்னறிவிப்பு செய்கிறது இந்தக் கட்டுரை.

`கோடை உழவு கோடி நன்மை’, `சித்திரை மாச உழவு பத்தரை மாசத் தங்கம்’ என்பது நம் முன்னோர் வாக்கு. அதைப் பெரும்பாலான விவசாயிகள் நடைமுறைப்படுத்துவதில்லை. கோடை உழவு செய்வதால் நிலம் வளமாவதுடன், விதைப்பதெல்லாம் நன்றாக வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கும். கோடைக்காலம் நெருங்கிவிட்டது. எனவே கோடை உழவு செய்வதற்கு விவசாயிகளை ஆயத்தப்படுத்துவதற்கான முன்னறிவிப்பு செய்கிறது இந்தக் கட்டுரை.

செந்தூர்குமரன்
செந்தூர்குமரன்

கோடை உழவு பற்றிக் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் முனைவர் செந்தூர்குமரன் பசுமை விகடன் மூலம் பகிர்ந்துகொண்ட கருத்துகளின் மீள்பதிவு இங்கே இடம்பெறுகிறது.

``மழைக்காலத்தில் செய்யும் உழவைவிட, கோடைக்காலத்தில் செய்யும் உழவுதான் முக்கியமானது. மழைக்காலத்தில் போதுமான ஈரம் இருக்கும். அந்த ஈரத்தில் உழவு செய்யும்போது, மண்ணுக்குள் குளுமையான தன்மைதான் உருவாகும். ஆனால், கோடைக்காலத்தில் உழவு செய்யும்போது, வெப்பம், குளுமை இரண்டும் மண்ணுக்குக் கிடைக்கும். `இப்படி இரண்டும் கிடைக்கும்போதுதான் மண்ணின் கட்டுமானம் பலப்படும்’ என்கிறது அறிவியல். மண்ணைப் புரட்டிவிடும்போது, முதலில் மண் வெப்பமாகி, பிறகு குளிர வேண்டும். இதுதான் உழவியல் முறையின் அடிப்படை. கோடை உழவின் சூத்திரமும் அதுதான்.

கோடை உழவு செய்யும் முறை!

நிலத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவு, குறுக்கு வசத்திலிருக்க வேண்டும். இப்படி நான்கு உழவு செய்ய வேண்டும். குறுக்கு உழவு செய்யாமல் நேர்கோடாக உழவு செய்தால், மழை பெய்யும்போது மேட்டுப் பகுதியில் இருக்கும் சத்துகள் தாழ்வான பகுதிக்குப் போய்விடும். குறுக்கு உழவு இருந்தால் சத்துகள் ஆங்காங்கே தடுக்கப்படும்; மழைநீரும் பூமிக்குள் இறங்கும். கோடையில் இரண்டு மழை கிடைக்கும். முதல் மழையிலேயே உழவு செய்துவிட வேண்டும். அப்போதுதான் இரண்டாவது மழை நீரை மண்ணுக்குள் சேமிக்க முடியும்.

கோடை உழவு
கோடை உழவு

தரிசாக இருக்கும் நிலத்தில் கோடை வெப்பம் காரணமாக மண் சூடாகும். தோசைச் சட்டி அதிக சூடானால், தோசையில் ஆங்காங்கே ஓட்டை உருவாவதுபோல் சூரிய வெப்பத்தால் மண்ணின் மேற்பகுதியில் ஆங்காங்கே வெடிப்புகளும் ஓட்டைகளும் ஏற்படும். வெப்பம் அதிகமாக அதிகமாக மேல் மண்ணில் உள்ள ஈரப்பதமும் சத்துகளும் அந்த ஓட்டைகள் வழியே வெளியேறி ஆவியாகிவிடும். கோடை உழவு செய்தால், இந்த ஓட்டைகள் அடைக்கப்பட்டு, மண் பொலபொலப்பாகும். பயிர்களின் வேர் செல்லும் ஆழத்தில் ஈரம் காக்கப்படும். அதனால் கோடை உழவுக்கு அடுத்து சாகுபடி செய்யும் பயிர்களுக்குத் தேவையான சத்துகளையும் ஈரப்பதத்தையும் நிலைநிறுத்த முடியும்.

கோடை உழவு செய்யும் காலகட்டத்தில் இரவு நேரத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாகும். சூரிய வெப்பம் மறைந்த பிறகு, காற்றுவெளியில் வெப்பம் குறைந்த பிறகு காற்றில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜன், நைட்ரஜன் உள்ளிட்ட சத்துகள் பூமியை நோக்கி இறங்கும். அப்போது அந்தச் சத்துகளை மண் உள்வாங்கிக்கொள்ளும். உழவு இல்லாமல் மண் கட்டாந்தரையாக இருந்தால், காற்றிலுள்ள சத்துகள் மண்ணுக்குள் போக வாய்ப்பில்லாமல் போய்விடும். எனவே, பூமியைக் கிளறிவிட்டு, மண்ணைப் பொலபொலப்பாக்கி, காற்றிலுள்ள சத்துகளை மண்ணில் நிலைநிறுத்துவதுதான் கோடை உழவிலுள்ள அறிவியல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மண்ணைக் கிளறிவிட்டவுடன் மண்ணின் ஆழத்திலுள்ள சத்துகள் மேல் மண்ணுக்கு வருகின்றன. காற்றிலுள்ள சத்துகளும் உறிஞ்சப்பட்டு உள்ளே போகின்றன. இதனால் மண் ஊட்டமேற்றப்படுகிறது. அடுத்து, சாகுபடி செய்யும் பயிரில் நல்ல மகசூல் கிடைக்கிறது. உழவு செய்வதால் அங்கக கரிமச் சிதைவு நடக்கும். மண்ணில் இருக்கக்கூடிய கார்பன், நைட்ரஜன் எல்லாம் சிதைந்து பயிர் எடுக்கும் விதத்தில் சேகரமாகும். இதற்கு முன்பாகச் செய்த பயிர்களுக்குக் கொடுத்த இடுபொருள்களின் வேதியியல் தேக்கம், பூச்சிக்கொல்லிகளின் நச்சுகள், பயிர்கள் வெளியேற்றும் நச்சுகள் ஆகியவை பயிரின் அடிப்பகுதியில் அல்லது மண்ணில் இருக்கும். பல நிலங்களில் விதை முளைக்காமல் போக அந்த நச்சுகளும் ஒரு காரணம். ஆக, அந்த நச்சுகளை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம்தான் கோடை உழவு. மண்ணைக் கிளறிவிடும்போது வெப்பமும் குளுமையும் மாறி மாறி நிகழும் சூழலில், மேலே வரும் நச்சுகள் மேல் மண்ணின் தொடர்பைத் துண்டித்து, காற்றுவெளியில் கலந்துவிடும்.

விவசாயி
விவசாயி

பூச்சிகளைக் குறைக்கலாம்... களைகளை அழிக்கலாம்!

கடைசியாகப் பயிர் செய்த பயிரைத் தாக்கிய பல்வேறு பூச்சிகளின் புழுக்கள், முட்டைகள், கூட்டுப்புழுக்கள் அனைத்தும் மண்ணிலிருக்கும். கோடை உழவு செய்யும்போது, மண்கண்டம் புரட்டப்படும்போது அவை மேல்மண்ணுக்கு வரும். காலை அல்லது மாலை வேளையில்தான் உழவு செய்வோம். அப்போது கலப்பைக்குப் பின்னால் வரும் பறவைகள் அந்தப் புழு, பூச்சிகளை அழித்துவிடும்.

கடலைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் பெரிய பிரச்னையாக இருப்பது சிவப்புக் கம்பளிப்புழு. அதன் கூட்டுப்புழு அனைத்தும் மண்ணில் இருக்கும். கோடை உழவு செய்யும்போது அவை அழிந்துவிடும்.

வளிமண்டலச் சத்துகளையும் அறுவடை செய்யலாம்!

கோடை மழை வழக்கமான மழைபோல் இருக்காது. பொதுவாக, காற்றுவெளியில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருக்கும். நீண்ட காலத்துக்குப் பிறகு பெய்யும் முதல் மழையில் அந்தச் சத்துகள் கலந்து பூமிக்கு வரும். கோடை உழவு செய்துவைத்த மண்ணில் இந்தச் சத்துகளைச் சேமிக்க முடியும். கோடை மழையையும் நிறைவாக அறுவடை செய்யலாம். முதல் நாள் கிடைக்கும் மழையைப் பயன்படுத்தி உழவு செய்துவிட வேண்டும். தொடர்ந்து அடுத்தடுத்து கிடைக்கும் மழையில் வளிமண்டலத்திலிருந்து மழையோடு பூமியில் இறங்கும் சத்துகளை மண்ணில் சேமிக்கலாம்.

 மண்புழு
மண்புழு

கோடை உழவு செய்யாத நிலத்தில் மண்புழுக்கள் தங்காது!

மண்ணில் உள்ள சமையல்காரர்களான நுண்ணுயிர்களுக்குச் சிறந்த வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுக்கிறது கோடை உழவு. வேர்ப் பகுதியில் வாழக்கூடிய அத்தனை நுண்ணுயிர்களுக்கும் தேவையானவை கிடைத்துவிடும். கோடை உழவு, ஆழமான உழவு. உளிக்கலப்பை, சட்டிக்கலப்பை இவை இரண்டும்தான் கோடை உழவு செய்யும் கலப்பைகள். மழைக்காலத்தில் உழவு செய்யும்போது, ஈரப்பதம் இருப்பதால் சாதாரண உழவாக இருக்கும். கோடையில்தான் ஆழமாக உழ முடியும். ஒரு வயலில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கோடை உழவு செய்தால், அந்த நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். கோடை உழவே செய்யாத ஒரு நிலத்தில் டன் டன்னாக மண்புழு உரத்தைக் கொட்டினாலும் மண்புழுக்களைப் பார்க்க முடியாது.

அடுத்த கட்டுரைக்கு