Published:Updated:

`கால்நடைத் தீவனமான சூப்பர் நேப்பியர் புல்லில் ரசாயனமா?' - உலவும் தகவல்கள்; உண்மை என்ன?

சூப்பர் நேப்பியர் புல்
சூப்பர் நேப்பியர் புல் ( படம்: நா.ராஜமுருகன் / விகடன் )

தாய்லாந்து கம்பெனி அறிமுகப்படுத்தியதுதான் இந்த நேப்பியர் புல் ரகம். இதுதொடர்பாக பரவிவரும் தகவல்களால் கால்நடை விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். என்ன பிரச்னை?

தமிழ்நாடு முழுக்க கால்நடை வளர்க்கும் விவசாயிகள், கடந்த சில வருடங்களாக சூப்பர் நேப்பியர் என்ற புல் ரகத்தை விரும்பி பயிரிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், `சூப்பர் நேப்பியர் புல்லில் ஆக்சாலிக் என்ற அமிலம் அதிகம் இருக்கிறது. இதனால், கால்நடைகளுக்கு இனப்பெருக்கம் உள்ளிட்டப் பிரச்னைகள் வருகிறது' என்று கிளம்பியிருக்கும் தகவல், விவசாயிகள் மத்தியில் அச்சத்தை விதைத்திருக்கிறது.

சூப்பர் நேப்பியர் புல்
சூப்பர் நேப்பியர் புல்
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

சூப்பர் நேப்பியர் புல்லை தீவனமாகக் கொடுத்து, மாடுகளை வளர்த்து வரும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயியான வெங்கடேஷ் பாபுவிடம் பேசினோம்.

``நேப்பியர் புல்லில் ஆக்சாலிக் ஆசிட் உள்ளது. நேப்பியர் புல்லில் மட்டுமல்ல, கம்பு நேப்பியர் ஹைபிரிட் புல் வகைகளான கோ - 1, கோ - 2, கோ - 3, கோ - 4 னு எல்லா வகை புல்வகைகளிலும் அந்த அமிலம் சிறிதளவு இருக்கிறது.

சூப்பர் நேப்பியர் கரணைகளை பயிரிட்டு முதல் அறுவடை முடிவடைந்த பிறகு, 45-லிருந்து 60 நாள்களில் அந்தப் புல்லை அறுத்து கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்க வேண்டும். ஆனால், 60 நாள்களைத் தாண்டிய புல்லை அறுத்து மாடுகளுக்கு உணவாகக் கொடுக்கும்போது, அதில் ஆக்சாலிக் ஆசிட் கன்டென்ட் அதிகமாகிவிடும். இதனால், மாட்டின் உடம்பில் உள்ள கால்சியம், சிதைஞ்சிரும்.

வெங்கடேஷ் பாபு
வெங்கடேஷ் பாபு
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

அதாவது, கால்சியம் ஆக்சலேட்டாக கன்வெர்ட் ஆகி, மாட்டின் சாணம் வழியாக வெளியே வந்துவிடும். இதனால், மாடுகளின் உடலில் கால்சியம், பாஸ்பரஸ் இன்பேலன்ஸ் பிரச்னை ஏற்படும். அதனால், எந்த தீவனத்தைக் கொடுத்தாலும் மாடுகளின் உடல் ஏத்துக்காமல் பிரச்னை வரும். அதேபோல், பால் உற்பத்தி குறைவு, பால் அடர்த்தி குறைவு, மலட்டுத்தன்மை போன்ற பல்வேறு பிரச்னைகளை மாடுகள் சந்திக்க நேரிடும். அதனால், நாள்கள் அதிகம் ஆன புல்லை மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பதை அறவே விவசாயிகள் தவிர்த்தால், இந்தப் பிரச்னை வராது" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கால்நடை மருத்துவர் மற்றும் கால்நடை உணவியல் நிபுணருமான ஞானசேகரிடம் பேசினோம்.

``எல்லா புல் வகைகளிலும் ஆக்சாலிட் ஆசிட் இருக்கிறது. இது சாதாரணப் பிரச்னைதான். விவசாயிகள் அச்சம்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை. இதனால், மாடுகளுக்கு தாது உப்புகள் பிரச்னை வரலாம். இந்த ஆக்சாலிட் ஆசிட் பிரச்னை அதிகமாகும்போது, தாது உப்புகளைத் தவிடு, புண்ணாக்கோடு கலந்து கொடுத்தால், அந்த பிரச்னை தீரும். அதன்பிறகு, மாடுகளுக்கு ஏற்படும் இனப்பெருக்கப் பிரச்னை வராது. தாது உப்புகள் ஒரு மாட்டுக்கு தர தினமும் ரூ. 3-தான் செலவாகும்.

ஞானசேகர்
ஞானசேகர்
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

முத்தின புல்லை போட்டால், பால் உற்பத்தி குறைகிறது, மாடுகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைகிறது, இனப்பெருக்கத் தன்மை குறைகிறது என்றெல்லாம் விவசாயிகளிடம் திடீரென அச்சம் ஏற்பட்டிருக்கிறது. முத்தின புல்லை உணவாகக் கொடுத்தால், மாடுகளுக்கு செரிமானப் பிரச்னை மட்டுமே ஏற்படும். ஆக்சாலிட் ஆசிட் பிரச்னை எல்லா புல்களைப் பயன்படுத்தும்போதும் வருவதுதான்" என்றார்.

இதுகுறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் (கே.வி.கே) பேராசிரியரும், தலைவருமான முனைவர் ந.அகிலாவிடம் பேசினோம்.

``தாய்லாந்து கம்பெனி அறிமுகப்படுத்தியதுதான் இந்த நேப்பியர் புல் ரகம். `இந்தப் புல் வளர்ந்தால், நன்றாக கிளை வெடித்து, அடர்த்தியாக வளர்கிறது. சுகர் கன்டென்ட் இதில் அதிகமாக உள்ளது. அதனால், மாடுகள் பால் அதிகம் கொடுக்கிறது'னு விவசாயிகளே விரும்பிதான், இந்தப் புல்லை அதிகம் வளர்க்க ஆரம்பிச்சாங்க. கடந்த மூன்று வருடமாக இதை எல்லோரும் அதிகமாக வளர்க்க ஆரம்பிச்சாங்க. ஆனால், இப்போது இப்படி ஒரு பிரச்னை இருப்பதாகச் சொல்கிறார்கள். கோ - 4, கோ - 5 னு கம்பெனி புல் வகைகளிலேயே அந்தப் பிரச்னை சிறிதளவு இருக்கிறது. முத்தின புல்லை வெட்டிப்போடும்போது, இது அதிகமாவதாகச் சிலர் சொல்றாங்க. 75 டு 90 நாள்களில் புல்லை அறுத்து மாடுகளுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொரு 45 நாள்களிலும் புல்லை அறுத்து கால்நடைகளுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், ஆக்சாலிட் ஆசிட் அதிமாகும் பிரச்னை கால்நடைகளுக்கு ஏற்படாது. ஆனால், விவசாயிகளால் இப்படி குறிப்பிட்ட நாள்களில் புல்லை விளைவித்து எடுப்பது என்பது நடைமுறை சாத்தியமில்லாத வக்‌ஷயம்.

அகிலா
அகிலா
படம்: நா.ராஜமுருகன் / விகடன்

அதனால், விவசாயிகள் ஆக்சாலிக் ஆசிட் பிரச்னை வரும்போது, நீர்த்த சுண்ணாம்பை கலந்த நீரை ஒருலிட்டர் அளவில் ஒரு மாட்டுக்கு கொடுக்கலாம். கால்சியம் டானிக்கும் கொடுக்கலாம். அதேபோல், முத்தின புல்லை உணவாகக் கொடுக்கும்போது, தண்டுப்பகுதியைக் கொடுக்கக் கூடாதுனு விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறோம். ஆனால், சூப்பர் நேப்பியரில் ஆக்சாலிக் ஆசிட் பிரச்னை அதிகம் இருக்கானு நாங்க ஆய்வு பண்ணிதான் சொல்ல முடியும். இதற்காக, சூப்பர் நேப்பியர், கோ - 4, கோ - 5 என்று மூன்று புல் ரகங்களையும் டிரையலுக்கு எடுத்திருக்கிறோம். ஆகஸ்ட் கடைசியில மழை சீஸன் வரும்போது, 5 விவசாயிகளிடம் கொடுத்து, இவற்றை வளர்க்கச் சொல்ல இருக்கிறோம். அதன்பிறகு, அந்தப் புல் ரகங்களை அறுத்து, லேப்ல டெஸ்ட்க்கு கொடுத்து, அதில் அமிலம் அதிக அளவில் இருக்கிறதா என்றெல்லாம் ஆய்வு செய்ய இருக்கிறோம். முழுமையான தகவல்களைச் சொல்ல, டிசம்பர் மாதமாகிவிடும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு