Published:Updated:

மழைநீரில் மூழ்கும் நெற்பயிர்கள்; இனி விவசாயிகள் செய்யவேண்டியவை என்ன? வழிகாட்டும் நிபுணர்கள்

மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்
News
மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்

தமிழ்நாட்டைப் போன்றே ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலும் நெல் பயிர்கள் மழைக்குப் பாதிக்கப்படுவது வழக்கம். அப்போதெல்லாம் ஆலோசனை வழங்கி நெல் வயல்களைக் காப்பாற்றி வருகிறது தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையம்.

Published:Updated:

மழைநீரில் மூழ்கும் நெற்பயிர்கள்; இனி விவசாயிகள் செய்யவேண்டியவை என்ன? வழிகாட்டும் நிபுணர்கள்

தமிழ்நாட்டைப் போன்றே ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலும் நெல் பயிர்கள் மழைக்குப் பாதிக்கப்படுவது வழக்கம். அப்போதெல்லாம் ஆலோசனை வழங்கி நெல் வயல்களைக் காப்பாற்றி வருகிறது தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையம்.

மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்
News
மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான மாவட்டங்களில் நெல் வயல்களில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஒவ்வொரு பருவமழையின்போதும் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. தமிழ்நாட்டைப் போன்றே ஆந்திரா, ஒடிசா மாநிலங்களிலும் நெல் பயிர்கள் மழைக்குப் பாதிக்கப்படுவது வழக்கம். அப்போதெல்லாம் ஆலோசனை வழங்கி நெல் வயல்களைக் காப்பாற்றி வருகிறது தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையம் (IIRR-Indian Institute of Rice Research).

ஆர்.எம்.சுந்தரம்
ஆர்.எம்.சுந்தரம்

இதன் இயக்குநர் ஆர்.எம்.சுந்தரத்திடம் பேசியபோது, ``பருவநிலை மாற்றத்தால் உலக அளவில் அதிக மழை பெய்யும்போது முதலில் பாதிக்கப்படுவது நெற்பயிர்கள்தான். உருவில் சிறியதான இந்தப் பயிர்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகின்றன. ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம், ஆந்திரா, கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பருவ மழையின்போது நெல் சாகுபடி அதிகம் பாதிக்கப்படுகிறது. அவ்வப்போது தமிழகமும் இந்த வரிசையில் இணைகிறது. அந்த வகையில் இந்தாண்டும் தமிழகத்தில் பெய்து வரும் பருவ மழையால் நெல் சாகுபடி செய்யும் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு சில விஷயங்களைத் தெரிந்து கொண்டால் இந்தப் பிரச்னையை எளிதாகக் கையாளலாம்.

முதலில் பருவநிலை மாற்றம் (அதிகபடியான மழை) நெல் சாகுபடியை எப்படிப் பாதிக்கிறது என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம் பருவமழையின்போது வரும் சவால்களைக் கையாளத் தெரிந்தால் மட்டுமே அக்டோபர், நவம்பர் மாதங்களில் நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும்.

ஸ்வர்ணா சப் 1 நெல் ரகம்
ஸ்வர்ணா சப் 1 நெல் ரகம்

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை கண்டிப்பாக வரும். அப்படி வரும் பட்சத்தில் மழைநீர் வயலில் தேங்க வாய்ப்புள்ளது. இப்படித் தேங்கும் மழைநீரை வெளியேற்ற வடிகால் வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வடிகால் வசதி இல்லாதவர்கள், அதற்கேற்ற வசதியை ஏற்படுத்திக்கொண்டு பயிர் சாகுபடியில் இறங்க வேண்டும்.

சி.ஆர்.1009 சப் 1 நெல் ரகம்
சி.ஆர்.1009 சப் 1 நெல் ரகம்

அதற்கடுத்து ரகம். எந்த நெல் ரகத்தைப் பயிர் செய்ய வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். மழை வெள்ளத்தைத் தாங்கி வளரும் இயல்புடைய நெல் ரகங்களை ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள தேசிய நெல் ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்வர்ணா சப்-1, சம்பா மசூரி சப்-1 மற்றும் சி.ஆர் தான் 501 ஆகிய ரகங்களைப் பயிர் செய்யலாம். குறிப்பாக, ஸ்வர்ணா சப் 1 ரகத்தை சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையமே அங்கீகரித்துள்ளது. எங்கள் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் டி.ஆர்.ஆர் தான் 50 என்ற ரகத்தை வெளியிட்டு உள்ளோம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் சி.ஆர்.1009 சப் 1 என்ற ரகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நெல் ரகங்களின் பயிர்கள் வயலில் 14 நாள்களுக்கு மழைநீர் தேங்கினாலும் பயிர்கள் பாதிக்கப்படாமல் தாக்குப்பிடிக்கும். மழை வெள்ளத்துக்கு எதிரான தன்மை கொண்ட ரகங்களைத் தேர்வு செய்துவிட்டாலே அதிக மழை பற்றிய கவலையைக் கடந்துவிடலாம்” என்றார்.

தற்போதைய மழைக்குப் பாதிக்கப்பட்ட நெல் வயல்
தற்போதைய மழைக்குப் பாதிக்கப்பட்ட நெல் வயல்

மழைநீர் புகுந்த நெல் வயல்களைக் கையாள்வது குறித்துப் பேசிய இந்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி முத்துராமன், ``நாற்று வயல்களோ, நெல் வயல்களோ எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு நெல் வயலைக் காய விட வேண்டும். இப்படி வயலைக் காயவிடும்போது மண்ணுக்குக் காற்றோட்டம் கிடைத்து, வேரின் வளர்ச்சி துரிதமாகும். இதனால் வேரழுகல் நோய்த் தடுக்கப்படும். மழைநீரை வடிக்க முடியாத வயல்களில் பூச்சித் தாக்குதலும், நோய்த் தாக்குதலும் வர வாய்ப்புள்ளது. எனவே, வெள்ள நீர் வடியாத வயல்களில் நோய்த் தாக்குதலுக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, வேப்பெண்ணெய், வேம்பு சார்ந்த இடுபொருள்களைப் பயன்படுத்தி இந்த நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.”

மண் பரிசோதனை குறித்துப் பேசிய விஞ்ஞானி பிரகாசம், ``மழைநீர் வடிந்தவுடன் மண்ணை பரிசோதனை செய்ய வேண்டும். இந்த நேரத்தில் மண்ணை சோதிக்க வேண்டுமா என்ற கேள்வி எழலாம். இந்த நேரத்தில் சோதனை செய்யும்போதுதான், மண்ணிலுள்ள சத்துகள் எவையெவை மழைநீரில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன, என்ன சத்துகள் பயிர்களுக்குத் தேவைப்படும் என்பதை அறிந்துகொள்ள முடியும். இந்த சோதனை அடுத்தடுத்த ஆண்டுகளில் பயிர் செய்யும்போது மழைநீரால் அடித்துச் செல்லப்படும் சத்துகள் எவையெவை என்பதை முன்கூட்டியே அறிய முடியும். மண் பரிசோதனை செய்ய முடியாதவர்கள் குழப்பம் அடையத் தேவையில்லை. பெரும்பாலும் நுண்ணுட்ட சத்து பற்றாக்குறைதான் இருக்கும். நுண்ணூட்ட உரங்களைக் கொடுத்து பயிர்களைக் காப்பாற்றலாம்.

மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்
மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்

சரி... இதையும் தாண்டி நெற்பயிர்கள் முழுவதுமாக மழைநீரால் பாதிக்கப்பட்டு அழுகிவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். கவலையே பட வேண்டாம். வயலையே முழுவதுமாக உழுது 110 நாள்களுக்குள் விளையக்கூடிய நெல் ரகங்களை நேரடி விதைப்பு முறையில் டிரம் சீடர் மூலம் விதைக்கலாம். தமிழ்நாட்டில் மழை வெள்ளத்துக்கு எதிர்ப்பு தன்மை கொண்ட ரகங்களைச் சாகுபடி செய்ய வேண்டுமென்றால் அருகிலுள்ள வேளாண்துறையை அணுகினால், அவர்கள் தருவித்து தருவார்கள். அதேபோன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் வெளியிட்டுள்ளது. அதை வாங்கி பயன்படுத்தலாம். இந்த விதைப்பு மூலம் 75 நாள்களில் கதிர்விடத் தொடங்கிவிடும். இதற்குத் தழை, சாம்பல், மணிச் சத்துகளை இலைவழித் தெளிப்பு முறையில் கொடுத்து சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்” என்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி `தேனாம்படுகை' பாஸ்கரன் பேசியபோது, ``ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒன்று அல்லது இரண்டு நாள்களில் பெய்து விடுகிறது. எனவே, விவசாயிகள் இதற்கேற்றவாறு நெல் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். குறுவைச் சாகுபடியை ஜூன் மாதத்தில் ஆரம்பித்து செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து விட வேண்டும். அதேபோல முன் சம்பா சாகுபடியை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிவிட வேண்டும். பின் சம்பா சாகுபடியை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிவிட வேண்டும். இப்படி செய்தால் நவம்பர் மாதத்தில் பெய்யும் கனமழையில் பயிர் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்துவிடும்.

'தேனாம்படுகை' பாஸ்கரன்
'தேனாம்படுகை' பாஸ்கரன்

அதாவது, கனமழை பெய்யும்போது ஒரு மாத பயிராக இருந்தால் மழைக்கு எளிதில் பாதிப்படையாது. மிக முக்கியமாக சம்பா சாகுபடி பயிர்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது. முன் சம்பா பட்டத்துக்கு தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச்சம்பபா, ஆற்காடு கிச்சிலிச் சம்பா, சீரகச் சம்பா ஆகிய ரகங்கள் ஏற்றவை. பின் சம்பா பட்டத்துக்கு நீண்ட நாள் வயதுடைய ரகங்கள் ஏற்றவை. அதாவது காட்டுயானம், ஒட்டடையான், மாப்பிள்ளைச் சம்பா, கறுப்புக் கவுனி உள்ளிட்ட ரகங்களைச் சாகுபடி செய்யலாம். குறுவைச் சாகுபடிக்கு ஒட்டு ரகங்கள் ஏற்றவை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்குப் மீன் அமிலம், பஞ்சகவ்யா, ரைசோபியம் போன்ற நுண்ணுயிர் உரங்களை இலைவழித் தெளிப்பாகக் கொடுத்து வந்தாலே போதும். நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்து விடலாம்” என்றார்.