Published:Updated:

பாரம்பர்ய நெல் ரகங்களில் கறுப்பு கவுனி மட்டும்தான் சிறந்ததா? - விடை சொன்ன தஞ்சை நெல் திருவிழா

தஞ்சை நெல் திருவிழா
தஞ்சை நெல் திருவிழா

கறுப்புக் கவுனியை மட்டுமே அதிக பரப்பில் சாகுபடி செய்யச் சொல்லி, இயற்கை விவசாயிகளிடம் வணிக நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. இது மிகவும் தவறான போக்கு.

தமிழ்நாட்டில் பாரம்பர்ய நெல் ரகங்களின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

தற்சமயம் இயற்கை விவசாயத்தில் ஈடுபடக்கூடியவர்கள் மாப்பிள்ளை சம்பா, கறுப்புக் கவுனி, குள்ளக்கார், பூங்கார், இலுப்பை பூ சம்பா, சிகப்புக் கவுனி, தங்க சம்பா உள்ளிட்ட இன்னும் பல வகையான நெல் ரகங்களை உற்பத்தி செய்கிறார்கள். இவற்றில் சத்துகள் நிறைந்திருப்பதால், மக்களிடையே இவற்றுக்கு வரவேற்பு கூடிக்கொண்டே வருகிறது. குறிப்பாக அண்மைக்காலத்தில், கறுப்புக் கவுனி குறித்து அதிகம் பேசப்படுகிறது. நேற்று தஞ்சையில் நடைபெற்ற நெல் திருவிழாவிலும் இது தொடர்பாக விவாதம் கிளம்பியது.

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இயற்கை வேளாண்மையின் மூலம் நஞ்சில்லா உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடும் `கிரியேட்- நமது நெல்லை காப்போம்' மற்றும் `பசுமை விகடன்' இணைந்து நடத்திய நெல் திருவிழா செப்டம்பர் 6-ம் தேதி தஞ்சாவூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாரம்பர்ய நெல் ரகங்களில் கறுப்பு கவுனி மட்டும்தான் சிறந்ததா? - விடை சொன்ன தஞ்சை நெல் திருவிழா

திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் உதயகுமார், இயற்கை விவசாயத்தில் நுண்ணுயிர்களின் அவசியம் குறித்து பசுமை விகடனில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலான, `லாபத்தைப் பெருக்கும் நுண்ணுயிர்கள்’ நூல் வெளியிடூம் இதில் நடைபெற்றது. இந்நூலை, கால்நடை மூலிகை மருத்துவர் டாக்டர் புண்ணியமூர்த்தி வெளியிட, மருத்துவர் ராதிகா மைக்கேல் உள்ளிட்டவர்கள் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய `நமது நெல்லை காப்போம்' அமைப்பின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் அன்புச்செல்வன், ``தமிழ்நாட்டில் பாரம்பர்ய நெல் ரகங்கள் மற்றும் இயற்கை விவசாயம் வளர்ச்சி அடைந்ததற்கு பசுமை விகடனின் பங்களிப்பு மகத்தானது. நம்மாழ்வாரின் கனவும் நனவாகிக்கொண்டிருக்கிறது’’ என்றார்.

முன்னோடி இயற்கை விவசாயி மற்றும் இயற்கை மருத்துவருமான கோ.சித்தர், ``மனித உடலுக்கு ஊட்டச்சத்துகளும் தாது உப்புகளும் மிகவும் அவசியம். பாரம்பர்ய நெல் ரகங்களின் அரிசியில் இவை நிறைந்திருக்கிறது. ஆனால், இந்த அரிசி பட்டை தீட்டப்படாமல் இருந்தால்தான் இவை முழுமையாகக் கிடைக்கும். ஆனால், பாரம்பர்ய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளில் பலர், இதன் மகத்துவத்தை உணராமல் பட்டை தீட்டிவிடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்" என்றவர், மேலும் பேசும்போது, ``பாரம்பர்ய நெல் ரகங்களிலேயே, கறுப்புக் கவுனியில் மட்டும்தான் அதிக சத்துகள் நிறைந்திருப்பதாகவும், இதில் மட்டும்தான் மருத்துவ குணம் அதிகம் என்ற ஒரு கருத்து திட்டமிட்டே பரப்பப்படுகிறது. சூப்பர் மால்களிலும் டிபார்மென்ட் ஸ்டோர்களிலும் கறுப்புக் கவுனி ஒரு கிலோ 200 - 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நூல் வெளியீடு
நூல் வெளியீடு
கோவையிலிருந்து இடம் மாற்றப்படும் விதை & அங்ககச் சான்றளிப்புத்துறை; விவசாயிகளுக்குப் பாதிப்பா?

இது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது. கறுப்புக் கவுனியை மட்டுமே அதிக பரப்பில் சாகுபடி செய்யச் சொல்லி, இயற்கை விவசாயிகளிடம் வணிக நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. இது மிகவும் தவறான போக்கு. இதே நிலை நீடித்தால் மற்ற நெல் ரகங்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். காலப்போக்கில் அவை காணாமல் போகும். யதார்த்த உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பாரம்பர்ய நெல் ரகங்கள் அனைத்துமே சத்துகள் நிறைந்தவைதான்; மருத்துவ குணங்கள் நிறைந்தவைதான். ஊருக்கு ஊர், மண்ணின் தன்மைக்கு ஏற்ப, குறிப்பாக அங்குள்ள நுண்ணுயிர்களின் தன்மைக்கு ஏற்ப, அங்கு விளைவிக்கப்படும் பாரம்பர்ய நெல் ரகங்களின் சத்துகள் மற்றும் மருத்துவ குணங்களின் அளவு மாறுபடும். நிலத்தில் கிடைக்கும் தாவர மற்றும் விலங்கு கழிவுகளின் தன்மையைப் பொறுத்து, நுண்ணுயிர்களும் ஊருக்கு ஊர் வேறுபடும். மற்ற நெல் ரகங்களைப் போல், கறுப்புக் கவுனியும் சிறப்பானது. கறுப்புக் கவுனி மட்டுமே சிறப்பானது எனச் சொல்லக் கூடாது’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கால்நடை மூலிகை மருத்துவர் புண்ணியமூர்த்தி, ``தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் உட்பட உலகில் உள்ள மொத்த உயிர் நிறை எடையில் 80 சதவிகிதம் நுண்ணுயிர்கள்தான் வியாபித்திருக்கின்றன. தாவரங்கள், கால்நடைகள், மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு, நுண்ணுயிர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். இதை அழிக்க முற்பட்டால், மிகவும் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். நுண்ணுயிர்களோடு இயைந்து வாழ இயற்கை விவசாயம் உறுதுணையாக உள்ளது’’ என்றார்.

நுண்ணுயிரியல் துறை விஞ்ஞானி முனைவர் உதயகுமார், ``மனித உயிர்களை எப்படி மிகவும் பாதுகாப்பாக எச்சரிக்கையாக அக்கறையாக அணுகுகிறோமோ, அதுபோல்தான் நுண்ணுயிர்களையும் நாம் அணுக வேண்டும். நுண்ணுயிர்களுக்கு தீங்கு செய்யக்கூடிய எந்த ஒரு ரசாயனத்தையும் நிலங்களில் நாம் பயன்படுத்தக் கூடாது. மனிதர்களுக்கு உணவு, உறைவிடம் எந்தளவுக்கு முக்கியமோ அதுபோல், நுண்ணுயிர்களுக்கும் அவசியம். தாவரக் கழிவுகள் மற்றும் விலங்குக் கழிவுகளை நாம் அவற்றுக்கு உணவாக வழங்க வேண்டும். நிழல்தான் அதற்கு உறைவிடம்’’ என்றார்.

கோ.சித்தர்
கோ.சித்தர்
நடிகை சுஹாசினியின் மாடித்தோட்டம் | Actress Suhasini Terrace garden

பூச்சியியல் வல்லுநரான பூச்சி செல்வம், ``பயிர்களை பாதிக்கக்கூடிய பூச்சிகளைக் கட்டுப்படுத்த, வேப்பங்கொட்டை கரைசல் மிகவும் சிறந்தது. கடைகளில் வேப்பம்புண்ணாக்கு, வேப்ப எண்ணெய் வாங்கி பயன்படுத்துவதை இயன்ற வரை தவிர்க்க வேண்டும். பெரும்பாலும், அவை கலப்படமாக உள்ளது. நீங்களே வேப்பங்கொட்டையைச் சேகரித்து தூளாக்கி பயன்படுத்தினால் கண்கூடாகப் பலன் கிடைக்கும். சிலந்தியும் குளவியும் பயிர்களுக்கு அதிகமாக நன்மை செய்யக்கூடியது. பயிர்களுக்கு தீமை செய்யக்கூடி பூச்சிகளை சிலந்தியும் குளவியும் அழித்துவிடும். அவற்றை ஈர்க்க தாவரங்களை நிலத்தின் வரப்போரத்தில் வளர்த்தெடுக்க வேண்டும்’’ என்றார்.

தஞ்சையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ராதிகா மைக்கேல், ``பாரம்பர்ய நெல் ரகங்களின் மகத்துவத்தைப் பலரும் நெகிழ்ந்து பேசுகிறார்கள். எனக்கும் இதில் ஆர்வமாக உள்ளது. என்னிடம் மருத்துவம் பார்க்க வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இவற்றைக் கொடுத்து, இதனால் ஏற்படும் பலன்களை ஆவணப்படுத்தப் போகிறேன். சில நாள்களுக்கு முன்பு இயற்கை விவசாய நெல்லி தோட்டத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு கிலோ 32 ரூபாய்னு தனது நெல்லியை வியாபாரிகளிடம் விற்பனை செய்வதாகவும். போக்குவரத்து செலவு போக, கிலோவுக்கு 20 ரூபாய் வருமானம் கிடைப்பதாக அந்த இயற்கை விவசாயி என்னிடம் சொன்னார். இதை மதிப்புக்கூட்டி டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் ஒரு கிலோ 92 ரூபாய் என விற்பனை செய்கிறார்கள். இயற்கை விவசாயிகள் மதிப்புக்கூட்டலிலும் ஆர்வம் காட்டினால். பல மடங்கு கூடுதல் லாபம் பார்க்கலாம்’’ என்றார்.

பாரம்பர்ய நெல் ரகங்களில் கறுப்பு கவுனி மட்டும்தான் சிறந்ததா? - விடை சொன்ன தஞ்சை நெல் திருவிழா
நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரி; சாமர்த்தியமாக சிக்கவைத்த விவசாயிகள்!

இவ்விழாவில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு, பாரம்பர்ய நெல் தலா 2 கிலோ அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இரவு உணவாக, கறுப்புக் கவுனி பாயசம், முடக்கத்தான் மூலிகை மற்றும் கருங்குறுவை அரிசி கலந்த தோசை, பலதானிய சப்பாத்தி, கருங்குறுவை இட்லி வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ராஜராஜன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிமொழியன் மற்றும் கிரியேட் அமைப்பின் நிர்வாகிகள் துரைசிங்கம், டாக்டர் ரகுநாதன், வரதராஜன் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு