Published:Updated:

மேக்கேதாட்டூ அணை: `மத்திய அரசை நம்பி மட்டும் தமிழகம் இருந்துவிடக்கூடாது!' - எச்சரிக்கும் விவசாயிகள்

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

``மத்திய அமைச்சரின் வாக்குறுதிகள் எந்த அளவுக்கு காப்பாற்றப்படும் என்பது போகப் போகத்தான் தெரியும். தமிழக அரசு இதை மட்டுமே நம்பிக்கொண்டு இருந்துவிடக்கூடாது. சட்டப் போராட்டங்களிலும் தீவிரம் காட்ட வேண்டும்".

மேக்கேதாட்டூ அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே கடந்த சில நாள்களாகக் கடித யுத்தம் நடைபெற்று வருகிறது. `மேக்கேதாட்டூ அணை கட்ட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வராது' என எடியூரப்பா, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, `சாதகமான சூழல் இருப்பதால், மேக்கேதாட்டூ அணை கட்டியே தீருவோம்' என்றார். இது தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மத்திய அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது எனக் கேள்வி எழுந்தது.

இந்நிலையில்தான், மேக்கேதாட்டூ அணை விவகாரம் தொடர்பாக டில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ``உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற உத்தரவுகளின்படி, காவிரியில் எந்த பணியை மேற்கொண்டாலும் தமிழகத்தின் ஒப்புதலை பெற்றுதான் கர்நாடக அரசு செய்ய வேண்டும். ஆனால், எங்களிடம் ஒப்புதல் பெறாமலும், தகவல்கூட தெரிவிக்காமலும் மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடகம் அனுமதி பெற்றுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கை சரியான அணுகுமுறை அல்ல. அனுமதி அளித்தது தவறு என தெரிவித்தோம். அதற்கு அமைச்சர், `தமிழகத்தின் கருத்தை கேட்காமல் மேக்கேதாட்டூ திட்ட அறிக்கை தயாரித்துவிட்டாலே அணை கட்டிவிட முடியாது. இவ்வாறு பல திட்டஅறிக்கைகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தை கேட்காமல் எந்த அனுமதியும் வழங்கப்படாது' என்று உறுதி அளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
மேக்கேதாட்டூ அணை: கோபக்கார ஸ்டாலின்! கப்சிப் எடியூரப்பா! | The Imperfect Show 06/07/2021

மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாதம்தோறும் கர்நாடக அரசு வழங்க வேண்டிய தண்ணீர் வழங்கப்படவில்லை. 40 டி.எம்.சி-க்கு மேலாக வழங்க வேண்டிய நிலையில், இதுவரை 8 டி.எம்.சி கூட கிடைக்கவில்லை. எனவே, உடனே தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தோம். இதுகுறித்து கர்நாடகாவிடம் பேசுவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தின் அனுமதி பெறாமலே கர்நாடக அரசு, மார்க்கண்டேய நதியில் தன்னிச்சையாக அணை கட்டியுள்ளது. இந்த அணை தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்கும்படி மத்திய அரசுக்கு 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரையில் நடுவர் மன்றம் அமைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினோம். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நீண்ட காலமாகவே, முழுநேர தலைவர் இல்லை. மத்திய நீர்வள ஆணையர்தான் இதன் தலைவராக உள்ளார். இதனால், எங்கள் புகார்களைத் தெரிவிக்க முடியவில்லை எனத் தெரிவித்தோம். உடனே தலைவரை நியமிக்க ஏற்பாடு செய்வதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் உறுதி அளித்தார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா
கர்நாடக முதல்வர் எடியூரப்பா
மேக்கேதாட்டூ அணை: ஸ்டாலின் இதை ஏன் கடிதத்தில் சொல்லாமல் விட்டார்? - சுட்டிக்காட்டும் மூத்த பொறியாளர்

மேலும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில், காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புக்குத் தேவையான தொகையைத் தர வேண்டும். தாமிரபரணி-கருமேனியாறு இணைப்பு தொடர்பாகவும் கோரிக்கை விடுத்தோம். இதுகுறித்தும் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். மத்திய அமைச்சருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக உள்ளது’’ எனத் தெரிவித்தார். இது தொடர்பாகப் பேசும் டெல்டா விவசாயிகள், ``மத்திய அமைச்சரின் வாக்குறுதிகள் எந்தளவுக்கு காப்பாற்றப்படும் என்பது போகப் போகத்தான் தெரியும். தமிழக அரசு இதை மட்டுமே நம்பிக்கொண்டு இருந்துவிடக் கூடாது. சட்டப் போராட்டங்களிலும் தீவிரம் காட்டி, தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு