Published:Updated:

கரிசக்காட்டு நிலக்கடலைக்கு கிடைத்த அங்கீகாரம்!

கடலைமிட்டாய்
பிரீமியம் ஸ்டோரி
கடலைமிட்டாய்

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்குப் புவிசார் குறியீடு!

கரிசக்காட்டு நிலக்கடலைக்கு கிடைத்த அங்கீகாரம்!

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்குப் புவிசார் குறியீடு!

Published:Updated:
கடலைமிட்டாய்
பிரீமியம் ஸ்டோரி
கடலைமிட்டாய்

பெருமை

லகப் புகழ்பெற்ற ‘கோவில்பட்டி கடலைமிட்டாய்’க்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியிருப்பதால் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மட்டுமன்றி நிலக்கடலைச் சாகுபடி செய்யும் விவசாயிகளும் மகிழ்ந்துபோயிருக்கிறார்கள்.

‘மதுரை மல்லி’, ‘ஈரோடு மஞ்சள்’, ‘கொடைக்கானல் பூண்டு’, ‘நீலகிரி தேயிலை’, ‘சிறுமலை மலைவாழை’ என ஒவ்வோர் ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என்றாலே ’கடலைமிட்டாய்’தான் சட்டென நினைவுக்கு வரும். கோவில்பட்டியிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மானவாரிக் கரிசல் நிலத்தில் விளையும் நிலக்கடலையின் சுவையுடன், கலப்படமில்லாத கரும்பு வெல்லப்பாகு கலந்து செய்யப்படுவதுதான் இந்தக் கடலைமிட்டாய் பிரசித்தி பெற்றதற்கான காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரிசக்காட்டு நிலக்கடலைக்கு கிடைத்த அங்கீகாரம்!

கரிசல் மண்ணின் தன்மை, சிறப்புகள் குறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த முன்னோடி மானாவாரி விவசாயியும், ‘சாகித்ய அகாடமி விருது’பெற்ற எழுத்தாளருமான சோ.தர்மனிடம் பேசினோம், “ ‘கரிசல்’ என்ற சொல்லுக்கு ‘கறுப்பு நிறம்கொண்ட மானாவாரிப் புஞ்சைப் பிரதேசம்’ என்று எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பொருள் கூறுகிறார். தமிழ் இலக்கியத்தின் பாரம்பர்யமாகக் கரிசல் இலக்கியமே இருக்கிறது. இந்தக் கரிசல் இலக்கியம் கடின உழைப்புடன் தொடர்புடையது. ‘மணலுழுது வாழ்ந்தவனுமில்லை, மண்ணுழுது கெட்டவனுமில்லை’, ‘கள்ளி வேலியே வேலி, கரிசல் நிலமே நிலம்’ என்ற வரிகளின் மூலம் கரிசல் நிலத்தின் சிறப்பை உணரலாம்.

கரிசக்காட்டு நிலக்கடலைக்கு கிடைத்த அங்கீகாரம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை கரிசல்மண்தான் அதிக பரப்பளவில் பரவிக் கிடக்கிறது. தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் முழுமையாகவும், தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளும்தான் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது.

கரிசல் மண்ணுக்கான தண்ணீரைச் சேமித்துவைக்கும் தன்மையைப்போல வேறெந்த மண்ணுக்கும் கிடையாது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கட்டபொம்மன், ஊமைத்துரை படைகளிடம் போர் புரிந்த பிரிட்டிஷ் மேஜர் வேல்ஸ் 1790-ம் ஆண்டில் இந்தக் கரிசல் மண்ணைப் பற்றி எழுதிய பதிவில், ‘பசுவந்தனைப் பகுதியில் என் குதிரைப் படைகளை வழிநடத்தினேன். இரவில் பெய்த கனமழையை நான் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டேன். அதனால் அன்றைய பொழுது, ஈட்டிகள், வேல் கம்புகளைப் பயன்படுத்துவதற்குச் சாதகமாகவும், துப்பாக்கி, பீரங்கிகளைப் பயன்படுத்துவதற்குப் பாதகமாகவும் விடிந்தது. ஏனெனில், இரவு பெய்த கனமழையில் அந்தக் கரிசல் மண் நன்றாக ஊறி பஞ்சுபோலத் தண்ணீரை உறிஞ்சி வைத்துக் கொண்டது.

சோ.தர்மன், வரதராஜன், கார்த்தீஸ்வரன்
சோ.தர்மன், வரதராஜன், கார்த்தீஸ்வரன்

என் படை வீரர்களின் பூட்ஸ் கால்கள் முட்டு வரை பதிந்தன. ஆனால், ஊமைத்துரையின் படை வீரர்கள் வெறும் கால்களுடன் எங்கள் படையை எளிதாகத் தாக்கிச் சென்றார்கள். இது போன்று தண்ணீரைச் சேமித்து வைக்கும் வளமான மண்ணை நான் வேறெங்கும் கண்டதில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். வெள்ளைக்காரனே இந்த மண்ணின் தன்மையைப் பார்த்து வியந்துவிட்டான். மானாவாரி வெள்ளாமைதான் என்றாலும் மழை பெய்துவிட்டால், விதைத்து விட்டாலே வெள்ளாமை வீட்டுக்கு வந்துவிடும் என நம்பிக்கையுடன் விதைப்போம்” என்றார்.

கடலைமிட்டாய்
கடலைமிட்டாய்

கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மானாவாரியாக 5,000 ஏக்கர் பரப்பளவிலும், இறவைப் பாசனத்தில் 10,000 ஏக்கர் பரப்பளவிலும் நிலக்கடலைச் சாகுபடி செய்யப்படுகிறது. மழைநீர் நேரடியாகக் கிடைப்பதால், செம்மண் நிலக்கடலையைவிடக் கரிசல்மண் கடலைக்குத்தான் சுவை அதிகம். கோவில்பட்டி கடலைமிட்டாய் தயாரிப்புக்கு உற்பத்தியாளர்கள் அதிகம் விரும்புவது கரிசல்மண் கடலையைத்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மானாவாரி நிலக்கடலைச் சாகுபடியைப் பொறுத்தவரை இந்தப் பகுதிகளில் ஆடிப்பட்டத்தில்தான் கடலை விதைப்போம். ஆழ அகல சால், கோடை உழவும், செம்மறி ஆட்டுக்கிடையும்தான் முக்கியம். இறவைச் சாகுபடியைப் பொறுத்தவரை அடியுரத்தைவிடப் பூச்சி, நோய் மேலாண்மைதான் முக்கியம். வேர் இறங்கும் நேரத்தில் மண் அணைத்தால்தான் கடலைகள் திரட்சியாக இருக்கும். கோவில்பட்டி கடலைக்குப் பல பகுதிகளிலும் எப்போதும் தேவை உண்டு. தற்போது கடலைமிட்டாய்க்குப் புவிசார் குறியீடும் கிடைத்திருப்பதால், அதிக தேவையைக் கருத்தில்கொண்டு நிலக்கடலைச் சாகுபடியின் பரப்பளவும் அதிகரிக்கும்” என்றார்.

கடலைமிட்டாய்
கடலைமிட்டாய்
இது குறித்து கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரனிடம் பேசினோம், “கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் கரிசக்காட்டுக் கடலையும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தயார் செய்யப்படும் கரும்பு வெல்லமும், தாமிரபரணி தண்ணீரும்தான் கடலைமிட்டாயின் சுவைக்கு முக்கிய காரணங்கள்.

கரிசல்காட்டு கடலையை மட்டுமே பயன்படுத்துகிறோம். குடிசைத் தொழிலாக நடந்துவரும் 300-க்கும் மேற்பட்ட சிறு கம்பெனிகளில் 6,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடலைமிட்டாய்த் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். நீண்டநாள் இருப்பு வைக்கப்பட்ட கடலையுடன் கழிவுப்பாகு கலந்து, கலப்படம் செய்து, சரியான பக்குவமில்லாமல் `கோவில்பட்டி கடலைமிட்டாய்’ என்ற பெயரில் பல பகுதிகளில் தயார் செய்து விற்பனை செய்துவருகிறார்கள். இதனால் உண்மையான உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதனால்தான் கடந்த 2014-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்தோம்.

1940-ம் ஆண்டு முதல் கோவில்பட்டியில் கடலைமிட்டாய் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தோம். அப்போது முதன்முதலாகப் பொன்னம்பல நாடார் என்பவர்தான் தயாரித்தார்.

கரிசல் கடலை, தாமிரபரணி தண்ணீருடன் விறகு அடுப்பில் செய்வதுதான் சரியான பதத்துக்குக் காரணம். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது” என்றார், குரலில் பெருமை தொனிக்க!

உடலை உரமாக்கும் வேர்க்கடலை!

நிலக்கடலையின் மருத்துவ குணம் குறித்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் பேசினோம். “நிலக்கடலையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதைப் பச்சையாகச் சாப்பிட்டால் பேதி ஏற்படும் என்பதால், அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவது நல்லது. ஆனால், உடலில் சிறிது பித்தம் அதிகரிக்கும். அதைக் குறைக்க முற்காலங்களில் ஒரு துண்டு வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தனர். அதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட இனிப்புப் பண்டம்தான் கடலைமிட்டாய்.

கரிசக்காட்டு நிலக்கடலைக்கு கிடைத்த அங்கீகாரம்!

வெல்லத்துடன் ஏலம், சுக்கு ஆகியவற்றைச் சில உற்பத்தியாளர்கள் சேர்ப்பார்கள். தினமும் ஒரு கடலைமிட்டாய் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை கூடி வீரிய விருத்தியை உண்டாகும்.

சாப்பாடு சாப்பிட்டவுடன் கடலைமிட்டாய் சாப்பிடுவதால் நல்ல செரிமானம் ஏற்படும். வேர்க்கடலையைக் கஞ்சியாக்கி வாழைப்பழம், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகள் பலம் பெறுவார்கள். மாதவிடாய் காலத்தில் கடலைமிட்டாய் சாப்பிட்டால் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்” என்று ஆலோசனை வழங்கினார்.

கடலைமிட்டாய் தயாரிப்புக்கு ஏற்ற ரகம் எது?

டலைமிட்டாய்க்கு ஏற்ற கடலை ரகங்கள் குறித்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஸ்ரீதரிடம் பேசினோம். “தின்பண்டம் மற்றும் கடலைமிட்டாய் தயாரிப்புக்கு எண்ணெய்ச் சத்துகள் குறைவாக இருக்கும் நிலக்கடலை ரகங்கள்தான் ஏற்றவை. பெரும்பான்மையான விவசாயிகள் நாட்டுரக நிலக்கடலையைச் சாகுபடி செய்துவருகிறார்கள். அத்துடன், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட `விருத்தாசலம்-2’ (VRI-2) மற்றும் திண்டிவனம் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட `திண்டிவனம்-2’ (TMV-2) ஆகிய இரண்டு ரகங்களும் கடலைமிட்டய் தயார் செய்ய ஏற்றவை. இந்த ஆராய்ச்சி ரக கடலைப்பருப்பு பருமனாகவும், ஈரப்பதம் குறைவாகவும், அதிக இனிப்புச்சுவை கொண்டதாகவும் இருக்கும். இந்த இரண்டு ரகங்கள் விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இவற்றில் 30 முதல் 40 சதவிகிதம் மட்டுமே எண்ணெய்ச் சத்துகள் இருக்கும். இதே தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் `குஜராத்-7’ (G-7) ரக நிலக்கடலையும் விவசாயிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது” என்றார்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம்.

தொலைபேசி: 04147 250001.

முதல் முயற்சி எடுத்த ஆட்சியர்!

டலைமிட்டாய்க்குப் புவிசார் குறியீடு பெற முதல் முயற்சி எடுத்தவர் தற்போதைய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜய கார்த்திகேயன். அவரிடம் பேசினோம். “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நான் சப்-கலெக்டராகப் பணிபுரிந்தபோது கடலைமிட்டாயின் சிறப்புகள் குறித்துத் தெரிந்துகொண்டேன். பாரம்பர்யமும் சிறப்பும்மிக்க குடிசைத் தொழிலான கோவில்பட்டி கடலைமிட்டாய் பெயரில் பல பகுதிகளில் போலியாகத் தயாரித்து விற்பனை செய்துவருவதாகக் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் வேதனையுடன் கூறினார்கள்.

3.7.2014-ம் தேதி புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் கீழ் புவிசார் குறியீட்டுப் பதிவகத்தில் என் பெயரிலேயே விண்ணப்பித்தேன். ஆனால், ‘சங்கத்தின் மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும்’ என்று புவிசார் குறியீடு பதிவகம் அறிவுறுத்தியதால் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களை ஒருங்கிணைத்து, ‘கோவில்பட்டி வட்டார கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்’ என்ற சங்கத்தை உருவாக்கி, மறுசீரமைப்பு செய்து, கடந்த 2017-ம் ஆண்டில் சங்கத்தின் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டது.

கோவில்பட்டியிலிருந்து பணி மாறுதலாகி கோவை மாநகராட்சி ஆணையர், தற்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எனச் சென்றாலும் இது குறித்து சங்கத்தினர்களுடன் அவ்வப்போது விசாரித்து வந்தேன். தமிழகத்தில் ஏற்கெனவே 33 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்திருக்கும் நிலையில், தற்போது 34-வது பொருளாகக் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்குப் புவிசார் குறியீடு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் உற்சாகத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism