Published:Updated:

ஊக்கத்தொகையிலும் சாதனை... கொள்முதலிலும் சாதனை…

விவசாயிகளின் இதயத்தில் இடம்பிடித்த சத்தீஸ்கர் முதலமைச்சர்!

பிரீமியம் ஸ்டோரி

பாராட்டு

விவசாயிகள் என்னதான் கடுமையாக உழைத்தாலும் அவர்களது பொருளாதார நிலை மகிழ்ச்சிக்குரியதாக இருப்பதில்லை. காரணம் விளைபொருள்களுக்கு, உரிய விலை கிடைப்பதில்லை என்பதுதான். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக, 2004-ம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குழு, இந்தியா முழுவதும் ஆய்வுகள் மேற்கொண்டது.

தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு 
இனிப்பு வழங்கும் விவசாயிகள்....
தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு இனிப்பு வழங்கும் விவசாயிகள்....

அந்தக் குழு, வேளாண் விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவோடுக் கூடுதலாக 50 சதவிகித லாபம் சேர்த்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசு இதுநாள் வரை அந்தப் பரிந்துரையைச் செயல்படுத்தவில்லை. இதற்காக, விவசாயிகள் தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை. மாநில அரசுகள் வழங்கக்கூடிய ஊக்கத்தொகையும்கூடப் பெயரளவுக்கு ஒரு சம்பிரதாயமாகத்தான் இருந்து வருகிறது. இந்நிலையில்தான் சத்தீஸ்கர் மாநில அரசு, அங்குள்ள நெல் விவசாயிகளுக்குக் குவிண்டாலுக்கு 750 ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்துச் சாதனை படைத்துள்ளது.

பூபேஸ் போகல்
பூபேஸ் போகல்

இதற்காகச் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஸ் போகலுக்குப் பாராட்டு தெரிவித்து, தஞ்சாவூர் விவசாயிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றபோது, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள், செய்வதறியாது திகைத்துப் போனார்கள். அதற்கும் காரணம் உண்டு. என்னவென்றால், சத்தீஸ்கர் மாநில முதல்வரைப் பாராட்டுவது மட்டுமே விவசாயிகளின் நோக்கமல்ல. அதைச் சாக்காக வைத்து, தமிழக அரசின் தலையில் ஒரு குட்டு வைப்பதற்காகவும்தான் அந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

“இந்தியாவில் இதுவரை வேறு எந்த ஒரு மாநில முதலமைச்சரும் செய்யாத சாதனையை நிகழ்த்தி விவசாயிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ் போகல். நெல்லுக்கு ஊக்கத்தொகையாக 750 ரூபாய் வழங்கியதோடு, மிகவும் குறுகிய நாள்களில் அதிகளவிலான நெல்லைக் கொள்முதல் செய்துள்ளது அந்த மாநில அரசு. இதைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பின்பற்ற வேண்டும்” என்கிறார்கள் விவசாயிகள்.

அந்த மாநில அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. இலக்கைவிடக் கூடுதலாகக் கொள்முதல் செய்த நெல்லை, வெளிச்சந்தையில் விற்பனை செய்துள்ளது. சத்தீஸ்கர் மாநில கூட்டுறவு விற்பனை இணையத்தின் முதுநிலை மேலாண் இயக்குநர் தமிழகத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர்தான், பணியாற்றுகிறார்.

இதைக் குறித்துப் பேசிய தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன், “நெல்லுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை. ஆனால் மத்திய, மாநில அரசுகள் செவி சாய்ப்பதே இல்லை.

விமலநாதன்
விமலநாதன்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலுக்கு முன், ‘தன்னை வெற்றிபெறச் செய்தால், நெல்லுக்கு நியாயமான ஊக்கத்தொகை வழங்கப்படும்’ என்று வாக்குறுதி அளித்திருந்தார், போகல். அவர் வெற்றி பெற்றதும் சொன்னதைச் செய்து காட்டியிருக்கிறார். 2018-19-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ஆதரவு விலையான 1,750 ரூபாயுடன், ஊக்கத்தொகையாக, குவிண்டாலுக்கு 750 ரூபாய் சேர்த்து வழங்கி நெல்லைக் கொள்முதல் செய்திருக்கிறது, அந்த மாநில அரசு.

இவ்வளவு அதிக தொகையை இதுவரை எந்த மாநிலமும் வழங்கியதில்லை. தமிழ்நாட்டில், 1977-78-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு குவிண்டாலுக்கு நூறு ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட அதிகபட்ச தொகை அதுதான். 2018-19-ம் ஆண்டு தமிழக அரசு வெறும் 70 ரூபாய் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கியுள்ளது.

நெல் கொள்முதல் அளவிலும் தமிழ்நாடு அரசு மிகவும் பின்தங்கியுள்ளது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகத்துக்கும் சேர்த்து மொத்தம் 18-19 லட்சம் டன் அளவுதான் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழக அரசின் அலட்சியத்தால் தனியார் வியாபாரிகளைத் தான் விவசாயிகள் நாட வேண்டியுள்ளது.

ஆனால், சின்னஞ்சிறு மாநிலமான சத்தீஸ்கரில் ஒரே போகத்தில் 80.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அங்கு மத்திய அரசு 68 லட்சம் டன்தான் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த மாநில அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. இலக்கைவிடக் கூடுதலாகக் கொள்முதல் செய்த நெல்லை, வெளிச்சந்தையில் விற்பனை செய்துள்ளது.

சத்தீஸ்கர் மாநில கூட்டுறவு விற்பனை இணையத்தின் முதுநிலை மேலாண் இயக்குநர் தமிழகத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர்தான் பணியாற்றுகிறார். அவரது சிறப்பான செயல்பாடுகள்தான் இதற்கெல்லாம் காரணம் என அங்குள்ள விவசாயிகள் நெகிழ்கிறார்கள். நாம் பெருமைப்பட வேண்டும். அதேசமயம் தமிழக அரசும் இதைப் பின்பற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு