பிரீமியம் ஸ்டோரி
மிழ்நாடு தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் அணித் தலைவருமான ‘புலியூர்’ நாகராஜன் கொரோனா தாக்குதலால் உயிரிழந்திருப்பது, பெரும்சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், புலியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயியான இவர், விவசாயிகள் தொடர்பான பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.

காவிரிப் பிரச்னை, விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களுக்குப் பயிர்க் காப்பீடு, நிவாரணம் கோருதல், விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கோருதல் உள்பட விவசாயிகள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்காகப் பலவிதமான போராட்டங்களை நடத்தியவர்.

கொரோனா ஊரடங்கின்போது, புலியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மலர் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பூக்களை விற்பனைச் செய்ய முடியாமல் தவித்தனர். அப்போது இவரது தொடர் முயற்சியால், தோட்டக்கலைத்துறை மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் மூலம் இப்பகுதி விவசாயிகளின் பூக்களைக் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி மலர் விவசாயிகள் நள்ளிரவில் தோட்டங்களில் பூ பறிக்கும்போது, இருளில் பாம்புகளால் பெரிய சிக்கலை சந்தித்தார்கள். அதைப் புலியூர் நாகராஜன், நம்மிடம் கவலையுடன் தெரிவித்ததார். உடனே அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சியர் சவுண்டையாவின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். பல லட்சம் ரூபாய் செலவில், ‘ஹெட் லைட்’ கள் வழங்கப்பட்டன.

புலியூர் நாகராஜன்
புலியூர் நாகராஜன்

விவசாயத் தொழில்நுட்பங்களிலும் நுட்பமான அனுபவம் பெற்றவர். வாழைச் சாகுபடியில் இவர் மேற்கொண்ட தனித்துவமான தொழில்நுட்பங்களையும், சிறுதானியச் சாகுபடி அனுபவங்களையும் கட்டுரையாகப் பதிவு செய்திருந்தோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜூன் 26-ம் தேதி, திருச்சி முக்கொம்பு அணையைப் பார்வையிட வந்தபோது, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆர்வமுடன் கலந்துகொண்ட புலியூர் நாகராஜன், விவசாயிகளின் சார்பில் பல கோரிக்கைகளை முன்வைத்தார். முதுகுவலியின் காரணமாக மறுநாள் தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோதுதான், கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஜூலை 2-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிரிழந்தார். விவசாயிகளுக்காக எப்போதும் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்த அந்தக் கணீர் குரல் ஓய்ந்தது. இது விவசாயிகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு