Published:Updated:

அக்ரி கவுன்சில்: மீண்டும் கறுப்புச் சட்டம்; வலைவீசும் அதிகாரிகள்; விழித்துக்கொள்வாரா ஸ்டாலின்?!

விவசாயம்
விவசாயம்

அனுபவத்தின் அடிப்படையில் ஒரு விவசாயி, பிற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி, அதில் ஏதேனும் பின்னடைவுகள் ஏற்பட்டால், அந்த விவசாயிக்கு மூன்று ஆண்டுகள் சிறை என்பது உள்ளிட்ட பல்வேறு ஷரத்துகளுடன் அச்சுறுத்தலை உருவாக்கியது அந்தச் சட்டம்.

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அநியாயக் கூட்டணி போட்டால்... நாடு என்னவாகும்? அதன் எதிர்விளைவாகத் திரும்பிய பக்கமெல்லாம் ஊழல், ஊதாரித்தனம் என்று நாளுக்கு நாள் நாடு சின்னபின்னமாகிக் கொண்டே இருக்கிறது. கடந்த 75 ஆண்டு காலமாக இதைத்தான் சுதந்திர இந்தியா பெரும்பாலும் அனுபவித்துக் கொண்டே இருக்கிறது. `இதிலிருந்து விடுதலை அடையும் நாள் எந்நாளோ' என்கிற ஏக்கம் தொடர்ந்தபடியே இருக்கிறது.

அதேசமயம், அந்த `அநியாயக் கூட்டணி'யானது நாள்தோறும் புதிதுபுதிதாக எதையாவது தோண்டியெடுத்து ஊதாரித்தனம் செய்வதற்கும், ஊழல் செய்வதற்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இந்த வகையில், இயற்கை விவசாயம் என்கிற வாடையே தமிழகத்தில் இருக்கக்கூடாது என்கிற கெட்ட நோக்கத்தோடு, கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டு, பெரும் எதிர்ப்பின் காரணமாக தூக்கிவீசப்பட்ட தமிழ்நாடு வேளாண் மன்ற சட்டம் என்ற ஒன்றை, மீண்டும் தூசு தட்ட ஆரம்பித்திருப்பதாகச் செய்திகள் றெக்கைக் கட்டுகின்றன. இது விவசாயிகளிடையே, குறிப்பாக இயற்கை விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மெள்ள பரவி, கொந்தளிப்பைக் கூட்ட ஆரம்பித்துள்ளது.

Farmer (Representational Image)
Farmer (Representational Image)
AP Photo / Rajesh Kumar Singh
தமிழக விவசாயிகள் தலைநிமிர ஸ்டாலின் செய்ய வேண்டியவை என்னென்ன? பட்டியலிடும் செயற்பாட்டாளர்!

1960-களில் பசுமைப் புரட்சி என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரசாயன விவசாயத்தைப் பரப்புவதற்காக கோடி கோடியாக பணத்தைக் கொட்டின வெளிநாட்டு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மற்றும் விதை நிறுவனங்கள். இந்தப் பணத்தில் மஞ்சள்குளித்த அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினர், செலவு மிகமிகக்குறைந்த இயற்கை விவசாயம் இங்கே தழைத்துவிட்டால், எதிர்காலத்தில் தங்கள் ஊழல் சந்ததிகளுக்கு ஆபத்தாகிவிடும் என்று திட்டமிட்டே... இயற்கை விவசாயத்தை அழித்தனர். 1990-க்குப் பிறகு மக்களின் பார்வை மீண்டும் இயற்கை விவசாயம் மீது படிய ஆரம்பித்து, 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் வேகமெடுத்தது. பதறிப்போன ரசாயன லாபி, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கூட்டணியோடு சத்தமில்லாமல் `தமிழ்நாடு வேளாண் மன்ற சட்டம்' என்பதை உருவாக்கியது. இதை அப்படியே வழிமொழிந்தது 2006-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தி.மு.க.

இச்சட்டத்தின்படி வேளாண் கவுன்சில் உருவாக்கப்பட்டு, அதில் பதிவு செய்து கொண்ட வேளாண் பட்டதாரிகள் மட்டுமே, விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகள் சொல்ல வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் ஒரு விவசாயி, பிற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி, அதில் ஏதேனும் பின்னடைவுகள் ஏற்பட்டால், அந்த விவசாயிக்கு மூன்று ஆண்டுகள் சிறை என்பது உள்ளிட்ட பல்வேறு ஷரத்துகளுடன் அச்சுறுத்தலை உருவாக்கியது அந்தச் சட்டம்.

விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டவர்கள், வேளாண்மையில் ஆர்வம் கொண்டவர்கள், இயற்கை விவசாயத்தை நேசிப்பவர்கள் தொழில்நுட்ப ரீதியில் ஊடகங்களில் எழுதுவதோ, பேசுவதோ குற்றம் என்றும் மிரட்டியது அந்த வேளாண் மன்ற சட்டம். ஆகமொத்தத்தில், வேளாண் பட்டதாரிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள் மட்டுமே விவசாயம் பற்றி பேச வேண்டும் மற்றவர்கள் வாய்ப்பூட்டுப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டத்தின் சாராம்சமாக இருந்தது.

இச்சட்டத்தின் மூலமாக விவசாயிகளின் கடன்தொல்லைக்குத் தீர்வு; அவர்களின் இடுபொருள் செலவுக்கு நல்வழி என அவர்களின் நாற்பது ஆண்டுக்கால துன்பங்களுக்குத் துளிகூட நன்மை ஏதுமில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.

ஆகக்கூடி, இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இயற்கை விவசாயிகளுக்கும், அது சார்ந்து இயங்கும் பாதிப்புகள் ஏற்படும் என ஆரம்ப நிலையிலியே பசுமை விகடன் எச்சரித்தது. அது தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்பு உணர்வு கட்டுரைகளை வெளியிட்டது. `இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் உள்ளிட்ட பலரும் இச்சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினார்கள். அதன் விளைவாக வேளான் மன்ற சட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ஆனால், சட்டத்தை வாபஸ் பெறும் வரை ஓயமாட்டோம் என்று நம்மாழ்வார் உள்ளிட்டோர் களத்தில் சுழன்றபடி இருந்தனர்.

இந்த விஷயத்தைக் கையில் எடுத்த அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெ. ஜெயலலிதா, சட்டத்தை முழுமையாக வாபஸ் பெறவேண்டும் என்று குரல் கொடுத்தார். அடுத்து, 2011-ல் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கவே, முதலமைச்சராக அமர்ந்த ஜெயலலிதா, சட்டத்தை வாபஸ்பெற்றார். இந்நிலையில், பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் ஏறியிருக்கும் நிலையில்தான், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய அநியாயக் கூட்டணி, வேளாண் மன்றச் சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் மீண்டும் இறங்கியிருப்பதாகச் சந்தேகம் கிளம்பியுள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 8-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. வேளாண்மைத்துறை சீரமைப்பு என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்துக்கு முன்னோடி விவசாயிகளோ, விவசாயிகள் சங்க நிர்வாகிகளோ அழைக்கப்படவில்லை என்பது, அந்தச் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது (இதே தேதியில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளுக்காக விவசாயிகளுடனான கலந்துரையாடலுக்கு சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தனிக்கதை).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் இளங்கீரன், ``தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளுக்கு தன்னால் இயன்ற வரை நல்லது செய்ய நினைக்கிறார். இப்போதுகூட, `விவசாயிகள்தான் பலன் பெறும் இடத்தில் உள்ளனர். விவசாய பட்ஜெட் அவர்களுக்குத்தான். எனவே, அந்த விவசாயிகளின் கருத்துகளைக் கேட்காமல் விவசாய பட்ஜெட்டை தயாரிக்கக்கூடாது' என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால், சுயநலமிக்க அதிகாரிகளோ, விவசாயிகளுக்கு தீங்கு இழைக்கக்கூடிய சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயிகள் நலத்துறையை மறுசீரமைப்பு செய்யும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கொடுக்க விவசாயிகள் எப்போதுமே தயாராக உள்ளோம். ஆனால், இதற்கான ஆலோசனை கூட்டத்துக்கு விவசாயிகளை ஏன் அழைக்கவில்லை என்பதுதான் எங்களைச் சந்தேகத்திலும் அச்சத்திலும் ஆழ்த்துகிறது.

இளங்கீரன்
இளங்கீரன்

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நபர்களில் பலரும் வாட்ஸ்அப் குழுக்களாக மட்டும் செயல்பட்டு வரும் வலைதளப் புலிகள். படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், வேளாண்மைத் தொழில் செய்து பழகியவர்கள் அல்லர். பெரும்பான்மையானோர் ஓய்வுபெற்ற வேளாண்மைத் துறை அதிகாரிகள். இவர்களின் நோக்கம், வேளாண்மைப் பட்டதாரிகளுக்கு அரசு அங்கீகாரமாக, அக்ரி கவுன்சில் (AGRI COUNCIL) அமைக்கப் பெற்று, இதன் மூலம் இந்த சில ஆயிரம் நபர்களின் குடும்பங்கள் பயனடைய முயல்கிறார்கள் என்பது கடந்த கால செயல்பாடுகளின் மூலம் அறிய வருகிறோம்.
கோடிக்கணக்கில் இருக்கும் விவசாயிகளுக்காக வேளாண்மைத் துறையா அல்லது ஒரு சில ஆயிரம் விவசாயப் பட்டதாரிகளின் சுயநலனுக்காக இந்தத் துறையா என்பதை முதலமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

வேளாண்மைத் துறையைச் சீராய்வு செய்யும்போது, விவசாயிகளின் நலனில் அக்கறையை முன்னிறுத்தி, வேளாண்மைப் பட்டதாரிகள் அதிகார மையமாகக் கோலோச்சவே இந்த கவுன்சில் வழிவகை செய்யும். விவசாயிகள் தங்களது நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில், விவசாய இடுப்பொருள்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அக்ரி கவுன்சில் நடைமுறைக்கு வந்துவிட்டால், விவசாயிகள் சுதந்திரமாக செயல்பட முடியாது.

ஒருகுறிப்பிட்ட இடுப்பொருளை வாங்க வேண்டுமென்றால், அக்ரி கவுன்சிலில் அனுமதி கடிதம் வாங்கி வர சொல்வார்கள். அக்ரி கவுனிசிலில் இடம்பெற்றுள்ளவர்கள், ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுவார்கள், இதில் லஞ்ச, லாவண்யம், ஊழல்கள் தலைவிரித்தாடும். விவசாயிகளின் நலனைவிட, வேளாண் பட்டதாரிகள் மற்றும் வேளாண் அதிகாரிகளின் சுயநலன் கோலோச்சும்.

குறிப்பாகப் பாரம்பர்ய அறிவு அடிப்படையில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இயற்கை விவசாயம் கடுமையாக ஒடுக்கப்படும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி விவசாயம்தான் தழைத்தோங்கும். இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள், கொடிய ரசாயன நச்சுத்தன்மை வாய்ந்த உணவுப்பொருள்களை உட்கொள்ளக்கூடிய மக்கள், பலவிதமான நோய்களுக்கு ஆளாக நேரிடும்'' என எச்சரிக்கும் இளங்கீரன்,
``இந்த விஷயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய கவனத்தைச் செலுத்தவேண்டும். ஏற்கெனவே, இதே விஷயத்தில்தான் அன்றை முதல்வர் கருணாநிதியை ஏமாற்றி சட்டம் போடவைத்தார்கள்.

MK Stalin
MK Stalin
விவசாயிகளை கொத்தடிமைகளாக்குகிறதா `அக்ரிஸ்டேக்'; பில்கேட்ஸின் புதிய திட்டம் என்ன?

மீண்டும் அப்படியொரு அவப்பெயர் தி.மு.க-வுக்கு வந்துவிடக்கூடாது. விவசாயிகளின் கருத்துகளை அறியாமல், விவசாயம் சார்ந்த எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என்கிற நல்லெண்ணத்துடன் செயல்படும் முதல்வர் ஸ்டாலின், அதன்படியே அதிகாரிகளும் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதேசமயம், இந்த வேளாண் மன்ற சட்டம் பற்றிப் பேசும் சில அதிகாரிகள், ``இது நல்லதொரு சட்டம்தான். மருத்துவக் கவுன்சில் போல, இது அக்ரி கவுன்சில் அவ்வளவுதான். ஆனால், தேவையில்லாமல், இயற்கை விவசாயத்துக்கு எதிரான ஷரத்துகளுடன் அது கொண்டுவரப்பட்டதுதான் துரதிர்ஷ்டம்'' என்றதோடு, ``மீண்டும் அப்படியொரு சட்டம் வருவதற்கான சூழல் இப்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை'' என்றும் சொன்னார்கள்.

அலோபதி மருத்துவம் வந்த பிறகு, அதை நோக்கியேதான் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இயங்கியது. சலுகைகளும் வாரி வாரி இறைக்கப்பட்டன. துரத்தி அடிக்கப்பட்ட நம்முடைய நாட்டுமருத்துவமான சித்தமருத்துவம், இன்றளவிலும்கூட அந்தப் பாதிப்பிலிருந்து மீளமுடியவில்லை.
அதேபோலத்தான், ரசாயன விவசாயம் வந்தபிறகு, காணாமல் அடிக்கப்பட்ட இயற்கை விவசாயம், இப்போதுதான் மெள்ள மீண்டும் தழைக்க ஆரம்பித்துள்ளது. அதன் வேரில் வெந்நீர் ஊற்றும் முயற்சிக்கு முதலமைச்சர் துணைபோய்விடக் கூடாது என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு!

அடுத்த கட்டுரைக்கு