Published:Updated:

̀விதைத்து ஒருமுறை, அறுவடையோ 30 முறை!' - புளியங்குடி கரும்பு விவசாயியின் வியப்பூட்டும் மகசூல்

கரும்பு அறுவடையில் அந்தோணிசாமி மற்றும் அதிகாரிகள்

`இயற்கை விவசாயம்’ என்பது சிறிய நிலப்பரப்பிலும், சிறிய பண்ணைகளிலும்தான் சாத்தியப்படும் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், பெரிய அளவு நிலப்பரப்பிலும் இயற்கை விவசாயம் சாத்தியப்படும் என நிரூபித்துக் காட்டியவர் புளியங்குடி அந்தோணிசாமி.

̀விதைத்து ஒருமுறை, அறுவடையோ 30 முறை!' - புளியங்குடி கரும்பு விவசாயியின் வியப்பூட்டும் மகசூல்

`இயற்கை விவசாயம்’ என்பது சிறிய நிலப்பரப்பிலும், சிறிய பண்ணைகளிலும்தான் சாத்தியப்படும் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், பெரிய அளவு நிலப்பரப்பிலும் இயற்கை விவசாயம் சாத்தியப்படும் என நிரூபித்துக் காட்டியவர் புளியங்குடி அந்தோணிசாமி.

Published:Updated:
கரும்பு அறுவடையில் அந்தோணிசாமி மற்றும் அதிகாரிகள்

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. `முன்னோடி இயற்கை விவசாயி’யான இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். `இயற்கை விவசாயம்’ என்பது சிறிய நிலப்பரப்பிலும், சிறிய பண்ணைகளிலும்தான் சாத்தியப்படும் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், பெரிய அளவு நிலப்பரப்பிலும் இயற்கை விவசாயம் சாத்தியப்படும் என நிரூபித்துக் காட்டியவர் புளியங்குடி அந்தோணிசாமி. நெல், எலுமிச்சை, கரும்பு... எனப் பல்வேறு பயிர்களிலும் ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்பாடில்லாமல் ஆச்சர்யப்படத்தக்க வகையில் மகசூலைப் பெற்றுள்ளார். இவர் பின்பற்றும் நுட்பமே பசுந்தாள் உரங்களை தொடர்ந்து மண்ணில் சேர்த்து மட்கவைப்பதுதான்.

கரும்பு அறுவடை
கரும்பு அறுவடை

``மண்ணு வளமா இருந்தாப் போதும்யா மகசூலு குவியலாக் கிடைக்கும்”னு அடிக்கடிச் சொல்லி வருவார். சில விவசாயிகள் தங்களின் அனுபவத்தை வைத்தே புதுப்புது ரகங்களை உருவாக்கி விடுவதுண்டு. இத்தகைய ரகங்களுக்கு முன்பாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ரகங்கள் ஈடுகொடுக்க முடியாமல் போவதுமுண்டு. அந்த வகையில் அந்தோணிசாமி கண்டுபிடித்த புதிய ரக `எலுமிச்சை’, இரண்டாவது ஆண்டில் இருந்தே நிறைவான மகசூலை அள்ளித்தருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால், தென்மாவட்ட விவசாயிகள் இந்த ரகத்தைப் பரவலாகச் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ரகத்தைக் கண்டுபிடித்ததுக்காக 2004-ம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவரான அப்துல்கலாமிடம், `சிருஷ்டி சல்மான்’ விருது பெற்றுள்ளார். பெயர் வைக்காத அந்த எலுமிச்சை ரகம்தான் அவருக்குப் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. எலுமிச்சை சாகுபடியில் ஜொலிப்பதைப் போலவே தற்போது கரும்பிலும் சாதனை படைத்துள்ளார். கரும்பில் 30வது மறுதாம்பு அறுவடையில் ஒரு ஏக்கருக்கு 90 டன் கரும்பு அறுவடை செய்து புதிய சாதனை படைத்துள்ளார். இயற்கை முறையிலான கரும்பு (கோ-86032) மறுதாம்புவின் 30-வது அறுவடை நாளில், அறுவடை மகசூலை ஆய்வு செய்திட தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜூக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அளவைப் பணியில் வேளாண் அதிகாரிகள்
அளவைப் பணியில் வேளாண் அதிகாரிகள்

ஆட்சியர் வேறொரு அலுவல் பணியால் சென்றுவிட்டதால் வர இயலவில்லை. தென்காசி மாவட்ட வேளாண் துணை இயக்குநர் நல்லமுத்துராஜா, வாசுதேவநல்லூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் இளஞ்செழியன், துணை வேளாண் அலுவலர் வைத்திலிங்கம், உதவி வேளாண் அலுவலர் பார்வதி, மதுரை சேவா அமைப்பைச் சேர்ந்த விவேகானந்தன் மற்றும் முன்னோடி விவசாயிகள் ஆகியோர் வந்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைவரின் முன்பாக ஒரு சென்ட் பரப்பளவில் கரும்பு அறுவடை செய்யப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் கட்டுகளாகக் கட்டப்பட்டு அருகிலுள்ள எடை நிலையத்தில் வேளாண் அதிகாரிகளின் முன்பாக எடைபார்க்கப்பட்டது. சரியாக 900 கிலோ எடை இருந்தது. ஒரு ஏக்கருக்கு 90 டன் கரும்பு (90,000 கிலோ) எனக் கணக்கீடு செய்யப்பட்டது.

இது குறித்து முன்னோடி இயற்கை விவசாயி அந்தோணிசாமியிடம் பேசினோம். ``1991-ல் வச்ச கரும்புக்கணுவுல மறுதாம்புல 30-வது வருஷமா இந்த வருஷம் அறுவடை செஞ்சிருக்கேன்.

கரும்பு அறுவடை
கரும்பு அறுவடை

இந்த அறுவடையில 90 டன் கிடைச்சுருக்கு. முதல் வருஷம் அறுவடையில் கிடைச்ச 17 டன், இந்த 30-வது வருஷம் 90 டன்னா கூடியிருக்குன்னா, அதுக்கு முக்கியக் காரணமே என்னோட மண் வளம்தான். உடம்பு நல்லா இருந்தாத்தானே எந்த வேலையும் செய்ய முடியும். அதே போல, மண்ணு நல்லா இருந்தாலே போதும் மகசூலு குவியும். ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தி இதே கரும்பை சாகுபடி செஞ்சா முதல் வருஷம் 40 டன் வரைகூட கிடைக்கும்.

ரெண்டாவது வருஷம் அதுல பாதியா குறைஞ்சுடும். அதுவே, மூணாவது வருஷம் ஒண்ணுமில்லாமப் போயிடுது. ஆனா, இயற்கை முறை விவசாயத்துல ஒவ்வொரு வருஷமும் மண்ணோட வளம் கூடிக்கிட்டே இருக்குது. கரும்புத்தூருல தக்கைப்பூண்டை விதைச்சு பூத்த நிலையில மடக்கி வச்சும், உரிச்ச கரும்புத்தோகையையும் மண்ணுக்குள்ள மடக்கி வச்சாலே போதும்.

கூடவே, கொஞ்சம் கடலைப் பிண்ணாக்கைத் தூவிவிட்டு, ஜீவாமிர்தத்தையும் தெளிச்சு விட்டாலே போதும் மண்ணு வளமாயிடும். முதல்முறை மட்டும்தான் ஓரளவு செலவாகும். மறுதாம்புல ஒவ்வொரு வருஷமும் பராமரிப்புச் செலவு பாதியாயிடும். தோட்டத்துக்கு வெளியில உள்ள வெப்பநிலைக்கும், கரும்புத் தோட்டக்குள்ள உள்ள வெப்பநிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

கரும்பு அறுவடைப் பணி
கரும்பு அறுவடைப் பணி

சுக்ரோஸின் அளவும் இந்தக் கரும்புல அதிகமா இருக்குது. விவசாயி விவசாயியா மட்டும் இருக்கக்கூடாது மதிப்புக்கூட்டுபவராகவும், விற்பனையாளராவும் மாறணும்னு நம்மாழ்வார் சொன்னதுபோல, அறுவடை செஞ்ச கரும்பிலிருந்து சாறெடுத்து நாட்டுச்சர்க்கரைத் தூளாகவும், உருண்டை வெல்லமாகவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யுறேன். என்னைப்போல இயற்கை விவசாயத்துல மறுதாம்புல தொடர் மகசூல் எடுக்கணும்னா மண்ணை வளப்படுத்தினா மட்டும் போதும்.

வேளாண் பல்கலைக்கழகமே ஒரு ஏக்கருக்கு கரும்பு சாகுபடியில் அதிகபட்சமாக 40 முதல் 45 டன் வரைதான் கிடைக்கும் எனக் கூறியுள்ளது. ஆனா, நான் அதுல ரெண்டு மடங்கு எடுத்திருக்கேன். இதுக்குக் காரணம் என்னோட மண் வளம்தான்” என்றார் சந்தோஷம் பொங்க.

தென்காசி மாவட்ட வேளாண் துணை இயக்குநர் நல்லமுத்துராஜா, ``புளியங்குடி’ன்னு ஊரு பேரைச் சொன்னாலே இயற்கை முறையில் விவசாயம் செஞ்சுட்டு வர்ற முதுபெரும் விவசாயி அந்தோணிசாமியைத்தான் அடையாளமாச் சொல்றாங்க. அவரோட `நெல்’, `எலுமிச்சை’, `கரும்பு’த் தோட்டங்களைப் பார்வையிட்டோம். `இது 30-வது மறுதாம்புக் கரும்பு’ என, அந்தோணிசாமி காட்டிய கரும்புகளைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

அறுவடை செய்த கரும்புகள்
அறுவடை செய்த கரும்புகள்

அதிகாரிகள் முன்னிலையில், ஒரு சென்ட் பரப்பளவுக்கு அளவீடு செய்து, அதிலுள்ள கரும்புகளை அறுவடை செய்து எடை போட்டுப் பார்த்ததில் 900 கிலோ இருந்தது. இதையே ஒரு ஏக்கருக்கு எனக் கணக்கிட்டால் 90 டன் ஆகிறது. எனது அனுபவத்தில் ஒரு ஏக்கரில் இத்தனை டன் மகசூல் எடுத்த விவசாயியைப் பார்த்ததில்லை. இதற்கு அவர்கூறும் இயற்கை விவசாய முறையும், மண்ணின் வளமுமே காரணமாக இருக்கலாம்” என்றனர்.

இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் எடுத்த முன்னோடி விவசாயி அந்தோணிசாமிக்கு பல விவசாயிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism