Published:Updated:

``பணத்தைத் தரலைன்னா எனக்கு வேற வழியில்ல!" - உற்பத்தியாளர் நிறுவனத்தால் துயரத்தில் விவசாயி

விவசாயி ராஜகோபால்
விவசாயி ராஜகோபால்

தூத்துக்குடியில் கொள்முதல் செய்த உளுந்துக்கு ரூ. 22 லட்சம் பணம் தரமால் மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர் கம்பெனி காலதாமதம் செய்ததால் விவசாயி, தற்கொலை செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் மானாவாரி சாகுபடி நடந்து வருகிறது. மானாவாரி விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு கோவில்பட்டியில் மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த விவசாயிகளிடம் இருந்து விளைபொருள்களைக் கொள்முதல் செய்து, அவர்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வது, விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, தரமான விவசாய இடுபொருட்கள் கிடைக்கச் செய்வது போன்ற நடவடிக்கைகளை இந்த உற்பத்தியாளர் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இதன் நிர்வாக மேலாளராக சுப்புராஜ் என்பவரும், இயக்குநர்களாக கந்தசாமி, நவநீதன், ராமமூர்த்தி உள்ளிட்ட சிலரும் இருக்கின்றனர்.

விவசாயி ராஜகோபால்
விவசாயி ராஜகோபால்

விவசாயிகளின் கூட்டு முயற்சியாக இணைந்து செயல்படும் இந்த அமைப்பின் வளர்ச்சிக்காக தமிழக அரசு, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக ரூ.60 லட்சம் வரை நிதி உதவி செய்துள்ளது. இந்த உதவியைப் பெற்று உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்களைத் தரம் பிரித்து விற்பனை செய்யவதற்கான இயந்திரங்கள் மற்றும் கட்டடங்கள் கோவில்பட்டி அருகேயுள்ள சித்திரம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளன.

கடம்பூர் அருகேயுள்ள மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குருசாமி மற்றும் அவரது மகன் ராஜகோபால் இருவரும் மானாவாரியாக விவசாயம் செய்து வருவது மட்டுமின்றி, அப்பகுதி விவசாயிகளிடம் இருந்து உளுந்து, பாசி ஆகியவற்றைக் கொள்முதல் செய்து `மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட்’ நிறுவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஆண்டு அக்டோபார் மாதம் வரை ரூ.42 லட்சம் மதிப்பிலான உளுந்தை விற்பனை செய்துள்ளனர். இதில், ரூ.20 லட்சம் வரை பல்வேறு கட்டங்களாக உற்பத்தியாளர் கம்பெனி பணம் வழங்கியுள்ளது. மீதி ரூ.22 லட்சம் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கோட்டாட்ச்சியரிடம் மனு அளித்த காங்கிரஸார்
கோட்டாட்ச்சியரிடம் மனு அளித்த காங்கிரஸார்
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்; வீடியோ மூலம் அம்பலப்படுத்திய விவசாயி; ஊழியர் சஸ்பெண்ட்!

இது குறித்து பலமுறை குருசாமி மற்றும் அவரது மகன் ராஜகோபால் இருவரும் மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனியின் இயக்குநர் கந்தசாமியிடம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தராமல் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில், குருசாமியும் அவரது மகன் ராஜகோபால் இருவரும் தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்த உளுந்திற்கான பணத்தை திருப்பிக் கொடுக்கவிலை. இதற்கிடையில், விவசாயிகளும் உளுந்துக்கு பணம் தர வலியுறுத்தி இருவருக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் மனமுடைந்து குருசாமி கடந்த மே மாதம் உயிரிழந்து விட்டார். தந்தை இறந்து விட, தற்போது அவரது மகன் ராஜகோபால் தங்களின் பணத்தினை கேட்டு நடையாக நடந்து வருகிறார். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி ராஜகோபாலிடம் பேசினோம்.

``எங்க பகுதி விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வது வழக்கம். மொத்த வியாபாரிகளும் 2 மாசத்துல பணத்தினை திரும்பக் கொடுத்து விடுவார்கள். இந்த சூழ்நிலையிலதான், கோவில்பட்டியில உள்ள மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனியின் நிர்வாகிகள் எங்களிடம் உளுந்து கொள்முதல் செய்ய விரும்புவதாச் சொன்னாங்க. விவசாயிகள் ஒருங்கிணைந்து சங்கம் அமைச்சு செயல்படுவதனால, ரூ.42 லட்சத்திற்கு உளுந்து மூட்டைகளை விற்பனை செய்திருந்தோம், பல கட்டமாக ரூ.20 லட்சம் வரை கொடுத்தாங்க. ஆனால், மீதித் தொகை ரூ.22 லட்சத்தை தரமால் இழுத்தடிச்சுட்டு வர்றாங்க.

உயிரிழந்த குருசாமி, அவரது மகன் ராஜகோபால்
உயிரிழந்த குருசாமி, அவரது மகன் ராஜகோபால்

இவங்க பணம் கொடுத்தால்தான், நாங்க கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு பணம் தர முடியும். பணத்தினை கேட்டு அலைஞ்ச அலைச்சல், மன உளைச்சலால அப்பா ரெண்டு மாசத்துக்கு முன்னால இறந்துட்டாங்க. நிர்வாக மேலாளர் சுப்புராஜை கேட்டால் இயக்குநர் கந்தசாமியை கேட்கச் சொல்கிறார். தினமும் வந்து பல மணி நேரம் காத்திருந்தும் ஏமாற்றம்தான் மிச்சம். மீதமுள்ள பணத்தை தரலேன்னா அந்த உற்பத்தியாளர் கம்பெனி முன்னால தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை” என்றார் மன வேதனையுடன்.

இதற்கிடையில் மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தினர் விவசாயி ராஜகோபாலுக்கு பணம் தராமல் இருப்பதைக் கண்டித்தும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியின் மாவட்ட துனைத் தலைவர் அய்யலுச்சாமி தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு உளுந்தினை தலையில் சுமந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிக்கு ஆதரவாக காங்கிரஸார் போராட்டம்
விவசாயிக்கு ஆதரவாக காங்கிரஸார் போராட்டம்
`வங்கி கொஞ்சம் கருணை காட்டியிருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார்!' -உயிரிழந்த விவசாயி; கதறும் உறவினர்

தொடர்ந்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணணிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் கூறியுள்ளார். இப்பிரச்சினை தொடர்பாக அந்த நிறுவனத்தின் தரப்பில் பேசினோம்.

``உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் விற்பனை செய்ததில் எதிர்பார்த்த தொகை வரவில்லை. அதனால்தான், விவசாயி ராஜகோபாலுக்கு பணம் தர முடியவில்லை. கம்பெனியின் நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில்கூட ராஜகோபாலுக்கு வழங்க வேண்டிய பணம் தொடர்பா பேசியிருக்கோம். சீக்கிரமே அவருக்கு மீதித்தொகையை கொடுத்திடுவோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு