Published:Updated:

சம்பா நெல் கொள்முதல்: `இணையதளத்தில் முன்பதிவு என்பது சாத்தியமில்லை!' - விளக்கும் விவசாயி

நெல் கொள்முதல்
News
நெல் கொள்முதல்

தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில், சம்பா பருவ நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நெ, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுரை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா பட்டத்தில் பத்து லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளார்கள். இவை தை பொங்கல் தருணத்தில் அறுவடைக்கு வரவுள்ளது. இந்நிலையில்தான் தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில், சம்பா பருவ நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நெல்
நெல்

இவர் தனது அறிவிப்பில், ``நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது சம்பா பருவ நெல்லை விற்பனை செய்ய, இதற்கான இணையதளத்தில் உள்ள சம்பா கொள்முதல் பருவம் 2022-ன் கீழ் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், சாகுபடி செய்துள்ள நிலத்தின் புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்து, நெல் கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை, முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும். இந்த இணையதளம் மூலம் நடப்பு ஆண்டு ஏற்கனவே குறுவை பருவத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம், நெல் விற்பனை செய்ய, 32,740 விவசாயிகள் முன்பதிவு செய்திருந்தார்கள். எனவே எதிர்வரும் சம்பா பருவம் 2022-க்கு ஆன்லைன் பதிவு முறையில் முன்பதிவு செய்து, விவசாயிகள் தங்களது கிராமத்திற்கு அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதற்கு தேவையான பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட வருவாய் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விவசாயிகள் விவரங்களை பதிவேற்றம் செய்யும்போது, அளிக்கக்கூடிய செல்போன் நம்பருக்கு, குறுஞ்செய்தி மூலம் ஒரு தகவல் வரும். நெல் கொள்முதல் செய்யப்படும் நாள், நேரம், கொள்முதல் நிலையத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும்.

சுகுமாறன்
சுகுமாறன்

விவசாயிகள் தங்களது செல்போன் எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் குறித்த காலத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தில் தங்களது நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறலாம். இந்த இணையவழி முன்பதிவு திட்டத்திற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி சுகுமாறன், ``சம்பா நெல் கொள்முதலுக்கு இப்பவே இணையதளத்துல முன்பதிவு செய்ங்கனு சொல்றது, அறிவியல்பூர்வமாகவும் சாத்தியமில்லை... அறிவுப்பூர்வமாகவும் சாத்தியமில்லை. விவசாயம்ங்கறது இயற்கையை சார்ந்தது. அதுவும் இந்த வருசம் தொடர் கனமழையில் சம்பா நெற்பயிர்கள் சிக்கி பாதிக்கப்பட்டு, மறுபடியும் உயிர் பிழைக்க வச்சிருக்கோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது எப்ப அறுவடைக்கு வரும்னு முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. இந்த வருசம் மட்டுமல்ல எப்பவுமே நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்றது சாத்தியப்படாது. அதுமட்டுமல்ல இ-சேவை மையங்கள்ல இதுவுக்கு வேற தனியா செலவு செய்ய வேண்டியதிருக்கும். பயிர் இன்சூரன்ஸூக்கு ப்ரீமியம் கட்ட ஏக்கருக்கு 100 - 200 ரூபாய் வரைக்கும் பணம் வாங்கினாங்க. பதிவேற்றம் செய்றதுல சர்வர் பிரச்னையாலும் பின்னடைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும். நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் முன்பதிவை எந்த விதத்துலயும் விவசாயிகளால் ஏத்துக்கவே முடியாது, அறுவடை நேரத்துல, ஆள் பிரச்னை, மிஷின் கிடைக்காதது, குடும்பச் சூழல், இயற்கை இடர்பாடுகள் இதுமாதிரி இன்னும் பல காரணங்களால், நெல் அறுவடை முன்ன பின்ன மாறும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே, முன்பதிவு பதிவேடு ஆவணம் இருக்கு, கொள்முதல் நிலையத்து நெல்லை கொண்டு போயி கொட்டியதுமே அதை பதிவு செஞ்சிக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி வரிசை முறையில் கொள்முதல் செஞ்சிக்கலாம். பல வாரங்களுக்கு முன்பே நெல் அறுவடையையும் நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு போற தேதியையும் கணிக்க வாய்ப்பே இல்லை; விருப்பப்பட்ட விவசாயிகள் மட்டும் முன்பதிவு செஞ்சிக்கலாம்னு ஒரு வாதம் முன் வைக்கப்பட வாய்ப்பிருக்கு, இதுவும் ஏற்புடையதல்ல, முன்பதிவு செய்யாத விவசாயிகளை புறக்கணிப்பாங்க. இதுல முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம். இந்த திட்டத்தையே முழுமையாக கைவிடணும்’’ என வலியுறுத்தினார்.