Published:Updated:

`83 வகையான செடிகளை வீட்டுத்தோட்டத்திலேயே வளர்க்கலாம்; எப்படித் தெரியுமா?' - வழிகாட்டும் விவசாயி

Terrace Garden ( Aravind.M )

``உருளைக்கிழங்கை சில நாள்கள் விட்டால் அதிலிருந்து முளைக்கட்டி விடும். அதன் பிறகு, அதை நட்டு வளர்க்கலாம். தக்காளி போன்றவற்றுக்கு அதன் விதைகளைத் தூவினாலே போதும். தக்காளியை நன்கு பழுக்க விட்டாலே வெடித்து அதனுள்ளிருந்து விதைகள் விதைப்புக்குத் தயாராக இருக்கும்."

`83 வகையான செடிகளை வீட்டுத்தோட்டத்திலேயே வளர்க்கலாம்; எப்படித் தெரியுமா?' - வழிகாட்டும் விவசாயி

``உருளைக்கிழங்கை சில நாள்கள் விட்டால் அதிலிருந்து முளைக்கட்டி விடும். அதன் பிறகு, அதை நட்டு வளர்க்கலாம். தக்காளி போன்றவற்றுக்கு அதன் விதைகளைத் தூவினாலே போதும். தக்காளியை நன்கு பழுக்க விட்டாலே வெடித்து அதனுள்ளிருந்து விதைகள் விதைப்புக்குத் தயாராக இருக்கும்."

Published:Updated:
Terrace Garden ( Aravind.M )

உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இயற்கையாக விளைந்த பொருள்களை வாங்கி உண்ணும் விழிப்புணர்வு தற்போது பெருகி வருகிறது. வாய்ப்பிருப்பவர்கள் நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை வீட்டிலேயே இயற்கையாக விளைவிக்க முடியும். அதற்கு விவசாயம் சார்ந்த அறிவு வேண்டும் என்கிற தயக்கமே தேவையில்லை. வீட்டின் ஜன்னல் வழியாக வரும் சூரிய ஒளியைக் கொண்டே காய்கறிகளை விளைவிக்கலாம் என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள். வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சிகளை வழங்கி வரும் விவசாயி அல்லாடி மகாதேவன் இதுகுறித்து விரிவாகக் கூறுகிறார்.

அல்லாடி மகாதேவன்
அல்லாடி மகாதேவன்

``முகநூலில் `Grow Your Own Food’ என்கிற குழு மூலமாகத் தொடர்ச்சியாக வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் குறித்த பயிற்சிகளையும் விளக்கங்களையும் அளித்து வருகிறோம். 1.2 லட்சம் உறுப்பினர்கள் எங்கள் குழுவில் உள்ளனர். அவர்கள் அனைவரும் இயற்கை வழியில் வீட்டுத்தோட்டம் அமைத்து குறுவிவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராமம் என்றால் வீட்டையொட்டி இருக்கும் காலியான இடத்தில் தோட்டம் அமைக்கலாம். நகரங்களில் அப்பார்ட்மென்ட்களில் வசிப்பவர்களுக்கு மாடித்தோட்டம் உகந்தது. விவசாயத்தின் அடிப்படை, மண்ணில் விதையைத் தூவி நீர் விட்டால் வளரும்.

7 தொட்டிகள் வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் சமையலறையில் எஞ்சுகிற கழிவை ஒவ்வொரு தொட்டியாகப் போட்டு வர வேண்டும். இதை சுழற்சி முறையில் செய்து வந்தால் அந்தக் கழிவு உரமாக மாறிவிடும். அதில் மண்ணைக் கொட்டி விட்டால் செடி வளர ஆரம்பித்துவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாடு வளர்ப்பவர்களிடம் எரு வாங்கிக்கொண்டு அதை மண்ணோடு கலந்துகொண்டால் சத்து கிடைக்கும். அதைப் பயன்படுத்தினால் செடி நன்கு வளரும். இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரையில் பூச்சித்தாக்குதல் அவ்வளவாக இருக்காது. அப்படி பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால் காரம், வாடை இவையிரண்டும்தான் அவற்றுக்கான விரட்டி. ஆகவே, இஞ்சி - மிளகாய் - பூண்டு ஆகியவற்றை அரைத்து அவற்றைத் தெளித்தால் பூச்சித் தொந்தரவு இருக்காது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

83 விதமான செடி வகைகளை வீட்டிலேயே வளர்த்து விளைவிக்க முடியும். உருளைக்கிழங்கை சில நாள்கள் விட்டால் அதிலிருந்து முளைகட்டிவிடும். அதன் பிறகு, அதை நட்டு வளர்க்கலாம். தக்காளி போன்றவற்றுக்கு அதன் விதைகளைத் தூவினாலே போதும். தக்காளியை நன்கு பழுக்க விட்டாலே வெடித்து அதனுள்ளிருந்து விதைகள் விதைப்புக்குத் தயாராக இருக்கும். இது போன்று எளிதாக அனைத்தையும் விளைவிக்க முடியும்.

வீட்டில் சிறிய இடத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குகள் வைத்துச் செய்யலாம் அல்லது மாடியில் சிறிய தோட்டம் அமைக்கலாம். 2 - 3 சென்ட் அளவில் காலி இடம் இருக்கிறதென்றால் தாராளமாகப் பண்ணையே அமைக்கலாம்.

மூங்கிலால் ஆன ஸ்டாண்டு மூலம் பல அடுக்குகள் வைத்து பல்வேறு விதமான உணவுப் பொருள்களை விளைவிக்க முடியும். முழுமையாக விளைவிக்க வேண்டும் என்பதுகூட இல்லை. `மைக்ரோ க்ரீன் கான்செப்ட்' என்கிற ஒன்று தற்போது நடைமுறையில் இருக்கிறது. உதாரணத்துக்கு, பீட்ரூட் செடியை எடுத்துக்கொள்வோம். அதை முழுமையாக வளர்க்க வேண்டியதில்லை. அச்செடியிலிருந்து இலை வந்ததுமே அந்த இலையை வெட்டி எடுத்து விற்பனை செய்யலாம். பீட்ரூட் இலையை சாலட்டுக்காக வாங்கிக்கொள்கிறார்கள்.

Terrace Garden
Terrace Garden
Photo: Vikatan / Ashok kumar.D

விவசாயம்தான் செய்ய வேண்டும் என்றில்லை. விதை மற்றும் கன்று உற்பத்தி செய்தும் விற்கலாம். தக்காளி விதையை எடுத்துக்கொள்வோம். 20 விதைகள் கொண்ட ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்தக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் ஒரு தக்காளியில் குறைந்தபட்சம் 200 விதைகள் இருக்கும். ஒரு தக்காளியிலிருந்து பிரித்தெடுக்கும் விதைகளை 200 ரூபாய்க்கு விற்க முடியும். தக்காளியை நன்றாகப் பழுக்க விட்டு அது வெடித்த பிறகு, அதைக் கிள்ளி தண்ணீரில் போட்டால் விதை தனியாக வந்துவிடும். உருளைக்கிழங்கு முளைவிட்ட பிறகு விற்கலாம். இதுவும் நல்ல சிறுதொழிலாக இருக்கும். இதை இப்போது பலரும் செய்து சிறிய அளவிலான வருவாய் ஈட்டிக் கொண்டிருக்கின்றனர்.

எங்கள் முகநூல் குழுவில் வீட்டுத்தோட்டம்/ மாடித்தோட்டம் அமைப்பதற்கான அனைத்துக் கேள்விகள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. மேலும், விளைவித்த பொருள்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டால் அதை வாங்கிக் கொள்கிறவர்கள் முன் வருகிறார்கள். இது போன்ற சமூக வலைதளங்கள் மூலம் விற்கலாம். இல்லையென்றால் வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கேகூட விற்பனை செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளூர் பொருளாதாரம் மேம்படும்!

சாதாரணமாக நாம் சாப்பிடுகிற காய்கறிகள் விவசாயி களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அது நேரே ஒட்டன்சத்திரம் போய் அங்கிருந்து விலை தீர்மானிக்கப்பட்டு கோயம்பேடு சந்தைக்கு வந்து அங்கிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்கிறது. இதன் மூலம் விளைபொருள்கள் மூன்று நாள்கள் பயணத்துக்குப் பிறகே விற்பனைக்கு வருகின்றன. வீட்டுத்தோட்டத்தின் மூலம் விளைவிக்கும் பொருள்கள் பறித்த உடனேயே விற்பனைக்குச் சென்றுவிடும் என்பதால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும்.

முன்பெல்லாம் வீட்டின் பின்புறத்தில் சமையலறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரில் விளைந்த செடிகளிலிருந்து வந்த காய்கறிகளை சாப்பிட்டிருக்கிறோம். அவற்றை நாம் விளைவிக்கவில்லை, தானாக விளைந்தன. அப்படித்தான் இதை முறைப்படுத்துவது மட்டுமே நமது வேலை.

மாடித்தோட்டம் (file image)
மாடித்தோட்டம் (file image)

நல்ல உணவு மற்றும் வருவாய் ஈட்டுதல் தாண்டியும் வீட்டுத்தோட்டம்/ மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. இந்த விவசாயத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு மன அழுத்தம் குறையும். நிதானம் வரும். என்ன உரம் போட்டாலும் ஒவ்வொரு செடியும் அதற்கான காலத்தை எடுத்துக்கொண்டுதான் விளையும். அதுவரை பொறுமை காத்திருக்க வேண்டும். இதன் மூலம் பொறுமையாக இருக்கப் பழகுவோம். மனம் புத்துணர்ச்சி கொள்வதால் உளவியல் ரீதியான பிரச்னைகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆக, ஈடுபாடு உள்ளவர்கள் உடனே இத்தோட்டம் அமைக்கும் பணிகளில் இறங்கலாம்” என்கிறார் அல்லாடி மகாதேவன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism