Published:Updated:

கால்நடைக் கழிவுகளை உரமாக்கும் அமைப்பு!

சக்திவேல்
பிரீமியம் ஸ்டோரி
சக்திவேல்

கழனிக்காட்டு விஞ்ஞானிகள்-7

கால்நடைக் கழிவுகளை உரமாக்கும் அமைப்பு!

கழனிக்காட்டு விஞ்ஞானிகள்-7

Published:Updated:
சக்திவேல்
பிரீமியம் ஸ்டோரி
சக்திவேல்

ழனிக்காட்டு விஞ்ஞானிகள் பகுதிக்குக் கிடைத்து வரும் விவசாயிகள் ஆதரவும் வரவேற்பும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாராவாரம் வட இந்திய விவசாய விஞ்ஞானிகள் பற்றியே எழுதி வருகிறீர்கள். தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட விஞ்ஞானிகள் யாரும் உங்கள் கண்ணில் படவில்லையா? என்று வாசகர்கள் பலரும் என்னைக் கேள்வியால் துளைத்து எடுக்கத் தொடங்கிவிட்டனர். அதனால் இந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சக்திவேல் என்ற நம் தமிழகத்தைச் சேர்ந்த கழனிக்காட்டு விஞ்ஞானியைப் பற்றிச் சொல்லப் போகிறேன்.

விவசாயம் என்பது வெறும் உணவு உற்பத்திக்காக மட்டும் செய்யக்கூடிய ஒரு தொழில் அல்ல... ஆத்மார்த்தமாக ஆர்வத்தோடு செய்யக்கூடிய ஒரு உன்னதமான பணி. விவசாயிகள், கண்டுபிடிப்பாளர்களாகவும் விவசாயத்தில் புதுப்புது உத்திகளைஅறிமுகப்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். ‘பரந்துபட்ட பார்வை விவசாயிகளுக்கு வேண்டும்’ என்று நான் பல இடங்களிலும் கூறி வருகிறேன்.

நம்முடைய விவசாயிகளுக்கு விவசாயத்தில் ஏற்படும் பிரச்னைகள், சிக்கல்கள் ஆகியவற்றுக்கான தீர்வுகளை அவர்கள் தேடிப்போகும்போது புதிய உத்திகளும், கண்டுபிடிப்புகளும் பிறக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு விவசாயிதான் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.ஆர்.சக்திவேல். இவர் இயற்கை உரங்களுக்கான மிகச்சிறந்த வடிகட்டியைக் கண்டுபிடித்திருக்கிறார்.

சாண உரக்கலவை அமைப்பு
சாண உரக்கலவை அமைப்பு

கால்நடைக் கழிவுகளை (சாணம், ஆட்டுப்புழுக்கை) சேகரித்து, பாசனத் தண்ணீர் கொட்டும் இடத்தில் ஒரு வடிப்பானில் (பில்ட்ரேஷன்) கொட்டிவிடுகிறார். அவை தண்ணீருடன் கலந்து, வடிகட்டப்பட்டு இயற்கை உரமாகக் கிடைக்கிறது. இந்த இயற்கை உரத்தைக் கரும்பு வயலுக்கு நேரடியாகப் பாய்ச்சுகிறார்.

வடிப்பானில் (பில்ட்ரேஷன் யூனிட்) நான்கு விதமான அறைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக வடிகட்டப்படுகின்றன. அப்படி வடிகட்டப்பட்ட இயற்கை உரம், சொட்டுநீர்ப் பாசனக் குழாயின் வழியாக வயலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இயற்கை விவசாயம் செய்பவர்கள் மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை போன்றவற்றைச் சேகரித்து வாய்க்கால் தண்ணீரிலேயே கொட்டிவிடுவார்கள். அவை தண்ணீரோடு கலந்து வயல்களுக்குச் சென்று பயிர்கள் வளர உதவுகிறது. இது வழக்கமாக எல்லாரும் செய்யக்கூடிய ஒருமுறை. ஆனால், சக்திவேல் வித்தியாசமாக, சாணம், ஆட்டுப் புழுக்கை போன்ற இயற்கை உரங்களைத் தண்ணீரில் நேரடியாகக் கலக்காமல், வடிகட்டிச் சொட்டு நீர்ப் பாசனத்தின் வழியாகப் பயிர்களுக்குத் தருகிறார். இதனால் வழக்கமாகக் கிடைக்கும் பலனைவிடக் கூடுதல் பலன்கள் கிடைக் கின்றன.

நாட்டு மாடுகளுடன்
நாட்டு மாடுகளுடன்

‘‘கடைகளில் விற்கப்படும் யூரியா, டி.ஏ.பி-யை வாங்கி பயன்படுத்தித் தொடர்ந்து மண்ணை மலடாக்க எனக்கு ஆர்வம் இல்லை. அதனால் இயற்கை உரத்தைக் கொண்டு எப்படிப் பெரும் பலனை அடைய முடியும் என்பதற்கான வழிமுறையைத் தேடும்போது இந்த யோசனை பிறந்தது.

இந்த அமைப்பை ஏற்படுத்திவிட்டால், உரக் கடைகளில் விற்கப்படும் உரத்தை வாங்கிப் பயிர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இப்போது பெரும்பாலான விவசாயிகளிடம் மாடுகள் இருக்கின்றன. அந்த மாட்டுச் சாணத்தை, இந்த முறையில் விவசாயத்துக்குப் பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

கிராமங்களில் இப்போது வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இந்த அமைப்பை நிலத்தில் அமைத்துவிட்டால், கூலி ஆள்கள் தேவை யில்லை. விவசாயி ஒருவரே போதும், கால்நடைக் கழிவுகளைக் கொட்டி, இந்தக் கருவியை இயக்கலாம்’’ என்பவர், ‘‘இந்த இயற்கை உரத்தைப் பயன்படுத்திக் கரும்புச் சாகுபடி செய்தபோது, முதல் முறை 60 டன் கரும்பு கிடைத்தது. அதே நிலத்தில் இரண்டாவது முறை 63 டன் கரும்பு கிடைத்த தாகவும், அடுத்த முறை இதைவிடக் கூடுதலாகவும் கிடைக்கும். தொடர்ந்து இயற்கை உரம் மண்ணில் செலுத்துவதால் மண் நல்ல பதத்துக்கு வந்து மகசூல் அதிகமாகக் கிடைக்கிறது’’ என்று கூறுகிறார்.

சாண உரக்கலவை அமைப்பு
சாண உரக்கலவை அமைப்பு

இவரது அமைப்பைப் பற்றி அறிந்த மதுரை, திண்டுக்கல், தர்மபுரி விவசாயிகள் பலர் இவரோடு தொடர்புகொண்டு அமைப்பைப் பெற்று விவசாயம் செய்து வருகிறார்கள். ‘‘என் யுக்தியை, மற்ற விவசாயிகள், தங்களின் நிலங்களில் செயல்படுத்தி, அதில் வெற்றி கிடைத்து, என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டுவது மிகப்பெரிய விருது கிடைத்தது போன்ற மகிழ்வைத் தருகின்றது. இதைக் கண்டுபிடிக்கும்போது இந்த அமைப்பு எனக்கு மட்டும்தான் பயன்படும் என்று நினைத்தேன்.

ஆனால், இன்று இந்தியா முழுவதும் பல விவசாயிகள் இதைப் பயன்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முறையை இந்தியா முழுவதும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். இந்திய விவசாயத்தின் எதிர்காலம் இயற்கை விவசாயத்தில்தான் இருக்கிறது என்பதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

சாண உரக்கலவை அமைப்பு
சாண உரக்கலவை அமைப்பு


இயற்கை விவசாயத்தை நோக்கிப் பலரும் வந்துகொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’’ என்கிறார் சக்திவேல்.

இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கோபிசெட்டிபாளையத்தில் இருக்கும் மைராடா குழுவைச் சேர்ந்த சோப்பு சோமு. அவர் மூலமாகத்தான் இவர் எனக்கு அறிமுகமானார். சக்திவேல், இயற்கை விவசாய ஆர்வலராகத் தன் பங்களிப்பை விவசாயச் சமூகத்துக்குச் செய்திருக்கிறார். எல்லோரும் இயற்கை உரத்தைப் பயன்படுத்தினாலும் இவர் அதை ஒரு வடிகட்டுதல் மூலமாக, அந்த இயற்கை உரம் பரவலாக நிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்குமாறு செய்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இப்படிப்பட்ட விவசாயிகளைப் பார்க்கும்போதுதான், ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற அந்தப் பாடல் வரிகள் மனதில் வந்து போகின்றன.

விவசாயிகள் தங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலும்போது, தன் முயற்சியாக இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் கிடைக் கின்றன. இதையே, விஞ்ஞானிகள் ஒரு ‘ராக்கெட் தொழில்நுட்பம்’ போல் பாமரர்களுக்குப் புரியாத விதமாக ‘ஃபார்முலா’க்களில் அவற்றை அடைத்து விடுகிறார்கள். விவசாயிகளின் கண்டுபிடிப்பு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள்கூட புரிந்துகொள்ளும் விதமாக அமைந்து விடுகிறது.

இப்படிப்பட்ட விவசாயிகள்தான் இந்திய விவசாயத்தை இயற்கை விவசாயத்தை,உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கிறார்கள் இப்படிப்பட்டவர்களை நாம் அறிந்து கொள்வது நமக்குப் பெருமை சேர்க்கும்.

தொடர்புக்கு,
சக்திவேல்,
கெட்டவாடி, ஈரோடு மாவட்டம்.
செல்போன்: 94863 16041

- கண்டுபிடிப்போம்

எம்.ஜே.பிரபு
எம்.ஜே.பிரபு

இது எப்படி செயல்படுகிறது

கால்நடைக் கழிவுகளை உரமாக்கும் அமைப்பு குறித்து சக்திவேல் சொல்லிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இதில் நான்கு அறைகள் இருக்கின்றன. முதல் அறையில் மாட்டின் சிறுநீரும், சாணமும் சேகரிக்கப்படுகிறது. செடி, செத்தைகள் இருந்தால் அதை எடுத்துவிட வேண்டும். பிறகு சாணம், மாட்டுச் சிறுநீரில் நன்றாகக் கரையும் வகையில் கம்பு கொண்டு கலக்க வேண்டும். இதிலிருந்து வெளியேறும் சாணக்கரைசல் கலவை இரண்டாம் அறைக்குள் செல்லும். அங்கு இரண்டு, மூன்று நாள்கள் சேகரிக்கப்படும். இப்படிச் சேகரிக்கும்போது சாணம், சிறுநீர் கலந்த நீர் மேலே தேங்கும். அடியில் தங்கும் சிலரியை பயோ காஸ் தயாரிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலே தேங்கும் நீரை மூன்றாம் அறைக்குள் அனுப்ப வேண்டும். அங்கு தேவையான அளவு வெல்லம் கலந்துவிட வேண்டும். நொதித்தல் நடைபெற்று நன்கு ஊட்டமான கரைசலாக மாறும். அதன் பிறகு, நான்காவது அறைக்குள் இந்தக் கரைசலை அனுப்ப வேண்டும்.

சாண உரக்கலவை அமைப்பு
சாண உரக்கலவை அமைப்பு

அங்கு கரைசலின் அளவுக்குத் தகுந்த மாதிரி தண்ணீர் கலக்க வேண்டும். பிறகு சொட்டுநீர்ப் பாசன அமைப்புகளின் வழியாகப் பயிர்களுக்கு நேரடியாகப் பாய்ச்சலாம். இதைப் பயிர்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் இந்த அமைப்பைக் கண்டுபிடித்தேன். இதை அமைப்பதற்கு சாகுபடி செய்யும் நிலத்தின் அளவைப் பொறுத்தும், தயார் செய்யும் இடுபொருள்களின் அளவைப் பொறுத்தும் தொகை அமையும். குறைந்தபட்சம் 50,000 ரூபாய் செலவாகும். இந்த அமைப்பில் தொட்டிகள், டிரம்கள் என அவரவர் வசதிக்கு ஏற்ப பயன்படுத்தலாம். இந்த முறையில் ஏக்கருக்கு 30,000 ரூபாய் வரையில் இயற்கை இடுபொருள்கள் கொடுக்கும் செலவை மிச்சப்படுத்த முடியும்.

தாமரைச்செல்வி
தாமரைச்செல்வி

பிரச்னையில்லாம

இடுபொருள் கொடுக்கலாம்

சாண உரக்கலவை அமைப்பு கொண்டு பாசனம் செய்து வரும் ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்த தாமரைச்செல்வியுடன் பேசியபோது, “எங்களுக்கு 13 ஏக்கர் நிலமிருக்கு. அதுக்கு இடுபொருள் கொடுக்க இந்த அமைப்பை அமைச்சிருக்கோம். கொட்டகையில இருந்து மாட்டோட சிறுநீர் நேரடியா வந்து தொட்டியில விழுற மாதிரி செஞ்சிருக்கோம். அதுல சாணத்தைக் கலக்கி விட்டுடுறோம். பிறகு அடியில தங்குற சாணத்தை பயோ காஸ் தயாரிக்கவும் பயன்படுத்திக்கிறோம். தொட்டியில் இருந்து தயாராகும் கரைசலை பாசனத்தண்ணீர் வழியாக் கலந்து பாசனம் செய்றோம். மண்ணுக்குத் தேவையான உரம் இதுமூலமா சென்றடையுது. இதை அமைக்கிறதுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் ஆச்சு. நாங்க அமைச்சு 5 வருஷங்களுக்கு மேலாயிடுச்சு. எந்தப் பிரச்னையில்லாம இடுபொருள் கொடுத்துட்டு வர்றோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism