Published:Updated:

வேளாண் சட்டங்கள்: ``மோடி கூறிய புதிய ஆய்வுக்குழுவில்தான் சூட்சுமம் உள்ளது!" - எச்சரிக்கும் மணியரசன்

``வேளாண்மை மற்றும் உழவர்கள் நலன் கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க, புதிய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளைப் பெற்று செயல்படுத்துவோம் என்று மோடி கூறினார். இந்த ஆய்வுக்குழுவில் மத்திய அரசின் விசுவாசிகள் இடம்பெறும் அபாயமிருக்கிறது."

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்புகள் நிலவியது. தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தைத் தொடர்ச்சியாக நடத்தினர். இப்போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக, நேற்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பில் சூட்சுமங்கள் அடங்கியிருப்பதாக பலரும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
`வேளாண் சட்டங்கள் வாபஸ்’ - தேசிய, மாநிலத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் போராட்டங்களை நடத்திய காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணப்பாளர் பெ.மணியரசன் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது, ``மத்திய அரசை இந்த அளவுக்கு நகர்த்திய பெருமை, சாதனை, ஓராண்டாக டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிக்கொண்டிருக்கும் உழவர் பெருந்தலைவர்களையும், உழவர்களையும் சாரும். மோடி அறிவிப்பின் ஆழம் – அகலம் – உறுதித்தன்மை ஆகியவற்றை ஆராயாமல், உடனே `வெற்றி! வெற்றி' என ஆராவாரம் செய்யாமல், உழவர் போராட்டக் குழுத் (Samyukt Kisan Morcha) தலைவர்கள் இந்த அறிவிப்பை நிதானமாக ஆய்வு செய்து சரியான முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அரசு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, அதன் தன்மையைப் பார்த்துவிட்டுத்தான் போராட்டத்தைக் கைவிடுவது பற்றி முடிவு செய்வோம் என்று உடனடியாக அறிவித்திருக்கிறார்கள்.

பகட்டில்லாத இந்தத் தெளிவும், உறுதியும் போராட்டக் குழுத் தலைவர்களுக்கு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இந்தப் பக்குவத்தை, பண்பை பல்வேறு உரிமைகளுக்குப் போராடும் முன்னணிச் செயல்வீரர்கள் முன்னெடுத்துக்காட்டாக மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடியின் அறிவிப்பில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. வேளாண்மை மற்றும் உழவர்கள் நலன் கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க, புதிய ஆய்வுக்குழு அமைக்கப்படும் என்றும், அதன் பரிந்துரைகளைப் பெற்று செயல்படுத்துவோம் என்றும் கூறியிருக்கிறார்.

இதில்தான் சூட்சுமம் இருக்கிறது. இந்த ஆய்வுக்குழுவில் மத்திய பா.ஜ.க அரசின் விசுவாசிகள் இடம்பெறும் அபாயமிருக்கிறது. மோடி அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் பரிந்துரையை அது வழங்கலாம். நம் நாக்கில் தேன் தடவும் சொற்களோடு இந்த மூன்று உழவர் ஒழிப்புச் சட்டங்களும் புதிய வடிவம் எடுக்கும் அபாயமிருக்கிறது. இதையெல்லாம் பகுப்பாய்வு செய்யக்கூடிய ஆற்றலும், போர்க் குணமும் உழவர் போராட்டக் குழுவுக்கு இருக்கிறது.

மோடியின் இந்தத் திடீர் அறிவிப்புக்குப் பின்னணியில் சில மாதங்களில் நடக்க இருக்கும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் இருக்கிறது. இப்போது அங்குள்ள பா.ஜ.க ஆட்சியின் மீது அவர்களின் வாக்குவங்கியாக இருந்த மக்களிடமே எதிர்ப்பும், பிணக்கும், பிளவும் ஏற்பட்டிருக்கின்றன. அவர்கள் வெளிப்படையாக உ.பி முதல்வர் யோகி ஆதித்தியநாத் அமைச்சரவையைச் சாடும் போக்குகளையும் பார்க்கிறோம்.

பெ.மனியரசன்
பெ.மனியரசன்

இந்த உழவர் போராட்டத்தில் உத்தரப்பிரதேச உழவர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்கள் டெல்லி முற்றுகைக்குத் தனி இடம் தேர்வு செய்து, உழவர் பெருந்தலைவர் ராகேஷ் திகாயத் தலைமையில் ஓராண்டாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால், உழவர் பெருமக்கள் மற்றும் ஜனநாயக ஆற்றல்களின் வாக்குகள் பா.ஜ.க-வுக்குக் கிடைக்க முடியாமல் போகும் சூழ்நிலை இருக்கிறது.

இந்தியாவிலேயே உத்தரப்பிரதேசம்தான் பெரிய மாநிலம். 80 மக்களவை உறுப்பினர்களைக் கொண்டது. இப்படிப்பட்ட உ.பி சட்டப்பேரவையில் இப்போது தோல்வி ஏற்பட்டால் இதன் தாக்கம் இந்தியா முழுவதும் இருக்கும். 2024-ல் நடக்கும் மக்களவைத் தேர்தலில் இது பாதிப்பை உண்டாக்கலாம். மூன்றாவது முறையாக பிரதமர் பதவியைப் பிடித்தே ஆக வேண்டுமென்று கங்கணம் கட்டி வேலை செய்துகொண்டிருக்கும் மோடி – அமித்சா குழுவினருக்கு இந்நிலைமை பற்றிக் கவலை ஏற்பட்டிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல், பஞ்சாபிலும் வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி பா.ஜ.க ஆட்சியை நிலைநாட்ட சீக்கியர்கள் மற்றும் உழவர்களின் வாக்குகள் தேவை. இந்த உத்திகளோடுதான், சீக்கிய மத குருவான குரு நானக்கின் பிறந்த நாளில் மூன்று வேளாண் சட்டங்களை நீக்கும் அறிவிப்பை மோடி வெளியிட்டிருக்கிறார். இந்த எச்சரிக்கைகளை உழவர் போராட்டக் குழு (SKM) நாமெல்லாம் சொல்வதற்கு முன்பே புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தது.

நம்முடைய தமிழ்நாட்டில் இந்த ஓராண்டுப் போராட்டத்தில், இங்குள்ள விவசாயிகள் சங்கங்கள் தொடர்ந்து உறுதிப்பட போராடி இருக்கின்றன. காவிரி உரிமை மீட்புக் குழுவும் தன்னால் இயன்ற அளவுக்கு இப்போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறது. நம்முடைய உழவர்களும், ஜனநாயக ஆற்றல்களும் டெல்லி முற்றுகைக்கே போய் நேரடியாகப் பங்கெடுத்திருக்கிறார்கள். எனவே, நாம் கூடுதல் எச்சரிக்கையோடு இதைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இக்கருத்துகளை முன்வைக்கிறோம்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்கள்: ``அரசு வாபஸ் பெற்றால் மட்டும் போதாது!" - ஆறுபாதி கல்யாணம்

உலகத்தில் முன்னெடுத்துக்காட்டு இல்லாத அளவுக்கு ஓராண்டாக லட்சக்கணக்கான உழவர்களையும், ஜனநாயக ஆற்றல்களையும் ஒருங்கிணைத்து டெல்லி முற்றுகைப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் போராட்டக் குழுவுக்கும், அதன் தலைவர்களுக்கும், பங்கெடுத்த விவசாயிகளுக்கும் நெஞ்சு நிறைந்த பாராட்டுகளை – வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தப் போராட்டத்தை வெகுமக்கள் அறப்போராட்டமாக நடத்தி, ஒத்துழையாமையைக் கடைப்பிடித்து, மத்திய அரசை இந்த மக்கள் உலுக்கி இருக்கிறார்கள். போராட்டக் குழு வன்முறை எதையும் கடைப்பிடிக்கவில்லை. மக்கள் பங்கெடுக்கும் அறப்போராட்டத்தின் ஆற்றலை நமக்கு மீண்டும் கற்றுத் தருவதாக இப்போராட்டம் அமைந்திருக்கிறது. போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் புகழ் வணக்கம் செலுத்துவோம்’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு