நாட்டு நடப்பு
Published:Updated:

கருவிகள் விற்பனை, செக்கு எண்ணெய் தயாரிப்பு, பெட்ரோல் பங்க்...

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
News
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

வெற்றிநடை போடும் விவசாய சூப்பர் மார்க்கெட்!

விற்பனை

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஒன்றாகச் சேர்ந்து வேளாண்மை சார்ந்த தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்களை நடத்தி இவற்றின் மூலம் லாபம் ஈட்டுவதே உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் முதன்மை நோக்கமாகும். இந்நிலையில்தான் ஈரோட்டில் கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வரும் துல்லிய பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. உன்னதம் அங்காடி என்ற பெயரில் பல கிளைகளைக் கொண்ட சூப்பர் மார்க்கெட், தேங்காய் மதிப்புக்கூட்டும் மையம், வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருள் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க் எனப் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது இந்நிறுனம்.

செக்கு எண்ணெய் தயாரிப்பு
செக்கு எண்ணெய் தயாரிப்பு

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் இந்நிறுவனத்தில் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்து வந்த பாதையையும், இதன் செயல்பாடுகளையும் நம்மிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார், இந்நிறுவனத்தின் திட்ட அலுவலரும் தோட்டக்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான முனைவர் வடிவேல். “2008-ம் வருஷம் அக்டோபர் மாசம் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். பயிர் உற்பத்தியில மட்டுமே கவனம் செலுத்திக்கிட்டு இருக்குற விவசாயிங்களை ஒருங்கிணைச்சு, சந்தை சார்ந்த வேளாண்மைக்கு தயார்படுத்தணுங்கற நோக்கத்தோடுதான் இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப் பட்டுச்சு. 50 விவசாயிகள் ஒண்ணு சேர்ந்து, ஆளுக்கு 10,000 ரூபாய் வீதம் மொத்தம் 5 லட்ச ரூபாய் முதலீட்டுல இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். முதற்கட்டமா, விவசாயத்துக்குத் தேவையான இடுபொருள்களைத் தரமாவும், நியாயமான விலையிலயும் விற்பனை செய்யணும்கிற நோக்கத்தோடு, சிவகிரியில 10-க்கு 10 அளவுல ஒரு சின்ன கடையை வாடகைக்குப் புடிச்சு, உரக்கடை தொடங்கினோம். விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறணும்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, பெரும்பாலான விவசாயிங்க கிட்ட இதுல ஒரு தயக்கம் இருந்துகிட்டு இருக்கு. இதை வியாபாரிங்கதான் நல்லா பயன்படுத்திக்கிறாங்க. இதனால, விவசாயிகள் ரசாயான இடுபொருள் களுக்காகச் செலவு பண்ற பணம், விவசாயிகளுக்கே வந்து சேரட்டும்கிற எண்ணத்தோடதான் உரக்கடையைத் தொடங்கினோம். அந்தக் கடையோட வர்த்தகம் படிப் படியா வளர்ச்சி அடைஞ்சிக்கிட்டே இருந்துச்சு. அந்த உரக்கடையோட இப்போதைய மூலதன மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்.

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்க்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்ல ‘கிஷான் சேவா கேந்திரா’ங்கற பேர்ல ஒரு சிறப்புத் திட்டம் அறிவிச்சாங்க. அந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, 50 லட்சம் ரூபாய் முதலீட்டுல பெட்ரோல் பங்க் ஆரம்பிச்சோம். உழவர் உற்பத்தி யாளர் நிறுவனம் பெட்ரோல் பங்க் நடத்துறது சரியா’ங்கற கேள்வி எழும். விவசாயிகள் உட்பட எல்லாருமே இருசக்கர, நாலு சக்கர வாகனங்கள் பயன்படுத்துறாங்க. அதுமட்டுமல்லாம... விவசாயக் கருவிகளை இயக்குறதுக்கு டீசல் தவிர்க்க முடியாததா இருக்கு. பெரும்பாலும் விவசாயத்துக்குத் தொடர்பே இல்லாதவங்கதான் பெட்ரோல் பங்க் நடத்தி வருமானம் பார்த்துக்கிட்டு இருக்காங்க. இதுக்கு விவசாயிங்க செலவு பண்ற பணம், விவசாயிகள் நடத்தக்கூடிய நிறுவனத் துக்குக் கிடைக்குறதுல எந்தத் தவறும் இல்லை. பெட்ரோல் பங்க் மூலமா, எங்களோட துல்லிய பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு நிறைவான வருமான வந்துகிட்டு இருக்கு.

கருவிகள் விற்பனை
கருவிகள் விற்பனை
இடுபொருள் விற்பனை
இடுபொருள் விற்பனை

ஆதார நிறுவனமாக மாறினோம்

2013-ம் வருஷம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கக்கூடிய ஆதார நிறுவனமா, எங்களோட நிறுவனம் வளர்ச்சி அடைஞ்சது. உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தை எப்படி ஆரம்பிக் கணும், அதுக்கு என்னென்ன விதி முறைகள் இருக்கு, அதை எப்படிச் சட்டபூர்வமா பதிவு செய்யணும், பொதுக்குழுவை எப்படிக் கூட்டணும், வரவு - செலவு கணக்கு விவரங்கள் எப்படிச் சமர்ப்பிக்கணும், வணிக நிறுவனங்களை எப்படி வெற்றிகரமா உருவாக்கணும்னு சொல்லிக் கொடுத்து வழிகாட்ட, தமிழ்நாட்டுல 12 ஆதார நிறுவனங்கள் இருக்கு. அதுல எங்களோட நிறுவனமும் ஒண்ணு. நாங்க இது வரைக்கும் 105 இடங்கள்ல உழவர் உற்பத் தியாளர் நிறுவனங்களை உருவாக்கி யிருக்கிறோம். இந்த வருஷம் 20 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க இருக்கிறோம்.

எங்களோட கம்பெனிக்குனு நிரந்தமா ஒரு சொந்த இடத்தை வாங்கணும்னு முடிவு செஞ்சு, சிவகிரியில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கினோம். அங்க விதை உற்பத்தி மையம் நடத்திக் கிட்டு இருக்கோம். அதுக்கு தமிழக அரசுகிட்ட இருந்து 60 லட்சம் ரூபாய் மானியம் கிடைச்சது.

இடுபொருள் விற்பனையகம்
இடுபொருள் விற்பனையகம்
இடுபொருள் விற்பனை
இடுபொருள் விற்பனை

உன்னதம் உழவர் அங்காடி

பாரம்பர்ய முறையில தயார் செய்யப் படுற உணவுப் பொருள்களுக்கு இப்ப மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்குற துனால, உன்னதம் உழவர் அங்காடிங்கற பேர்ல ஒரு கடையை ஆரம்பிச்சோம். சுத்தமான மரச்செக்கு எண்ணெய், கல் திருவையில் அரைக்கப்பட்ட மசாலாப் பொடிகள், இயற்கை முறையில விளை விக்கப்பட்ட தானியங்கள் உட்பட எல்லாமே இங்க கிடைக்கும். ஒரு சூப்பர் மார்க்கெட்ல இருக்கக்கூடிய அனைத்தையும் எங்களோட உன்னதம் உழவர் அங்காடியில் வச்சிருக்கோம். உன்னதம் உழவர் அங்காடி, ஒரு சூப்பர் மார்க்கெட் அளவுக்கு வளர்ச்சி அடைஞ்சு, பரபரப்பா வியாபாரம் நடந்துகிட்டு இருக்கு.

வணிக விருத்திக்காகத் தமிழக வேளாண் வணிகத்துறை சார்புல எங்களோட நிறுவனத் துக்கு 30 லட்ச ரூபாய் மானியம் கொடுத்தாங்க. இந்தப் பகுதியில தென்னை விவசாயம் அதிகம். அதனால, தென்னையில மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்ய லாம்னு திட்டமிட்டு, அதுக்காக ஒரு ஏக்கர் நிலம் வாங்கினோம். அந்த இடத்துல தேங்காய் மதிப்புக்கூட்டும் மையம் ஆரம்பிச்சு, விர்ஜின் தேங்காய் எண்ணெய் தயாரிச்சு விற்பனை செஞ்சுகிட்டு இருக்கோம்.

இப்படிப் பல வகைகள்லயும் எங்களோட நிறுவனம் வருமானம் ஈட்டிக்கிட்டு இருக்கு. பதினாலு வருஷத்துக்கு முன்னாடி, 50 விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஈரோடு துல்லிய பண்ணை உற்பத்தியாளர் நிறுவனத்துல இப்ப 600 பேர் பங்குதாரர்களா இருக்காங்க’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சூப்பர் மார்க்கெட்
சூப்பர் மார்க்கெட்
சூப்பர் மார்க்கெட்
சூப்பர் மார்க்கெட்

உன்னதம் அங்காடிக்கு பிற இடங்களிலும் கிளைகள் உண்டு

உன்னதம் அங்காடியை நிர்வகித்து வரும் ஈஸ்வரமூர்த்தி, “தரமான மரச்செக்கு எண்ணெயைக் கொடுக்கணும்கிற எண்ணத்துலதான் சிவகிரி வேலாயுதசுவாமி கோயில் பக்கத்துல 2016-ம் வருஷம் ‘உன்னதம் அங்காடி’யை ஆரம்பிச்சோம். எண்ணெய் ஆட்டுறதுக்குத் தேவையான நிலக்கடலை, எள், தேங்காய்.. இதையெல்லாம் சுற்றுவட்டாரப் பகுதிகள்ல உள்ள விவசாயிகள்கிட்ட இருந்துதான் பெரும்பாலும் வாங்குறோம். கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா மரச்செக்குகள் அமைச்சிருக்கோம். இன்னைய தேதியில ஒரு லிட்டர் கடலை எண்ணெய் ரூ.250, நல்லெண்ணெய் ரூ.360, தேங்காய் எண்ணெய் ரூ.250-ங்குற விலையில் கொடுத்துக்கிட்டு இருக்கோம். மூலப்பொருள்களோட விலையைப் பொறுத்து, அப்பப்போ விலையில கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். எங்களோட மரச்செக்கு எண்ணெய்... பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர்னு பல பகுதிகளுக்கு அனுப்பப்படுது. கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையிலயும், ஈரோட்லயும் எங்களோட உன்னதம் அங்காடியின் கிளைகள் இருக்கு.

எண்ணெய் வாங்குறதுக்காக எங்க கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளருங்க, ‘சமையலுக்குத் தேவையான எல்லாப் பொருள்களுமே தரமா இங்கேயே கிடைச்சா வசதியா இருக்கும்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான் எங்களோட உன்னதம் அங்காடியை ஒரு சூப்பர் மார்க்கெட்டா மேம்படுத்தினோம். பழங்கால முறைப்படி கல்திருவையைப் பயன்படுத்தி... சிக்கன் வறுவல் மசாலா, சிக்கன் குழம்பு மசாலா, மட்டன் வறுவல் மசாலா, சாம்பார் பொடி, இட்லிப் பொடி, ரசப் பொடி, காரக்குழம்பு பொடி, மிளகு சாதப் பொடி, கடுகு சாதப் பொடி, மல்லித்தூள், மிளகாய்த்தூள்னு இன்னும் ஏகப்பட்ட பொருள்களை உற்பத்தி செஞ்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம்.

13 வகையான பயிர்கள்ல விளைஞ்ச விளைபொருள்களைப் பயன்படுத்திச் சத்துமாவு, குங்குமம், விபூதி, அரப்புத்தூள், நாட்டுச் சர்க்கரை, நெய் உட்பட இன்னும் ஏராளமான பொருள்களைத் தயார் செஞ்சு, எங்களோட சூப்பர் மார்க்கெட்ல விற்பனை செய்றோம்.

எங்களோட தொடர்புல உள்ள மற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்கிட்ட இருந்து கருப்பட்டி, கம்பு, கேழ்வரகு, சோளம், கருப்பரிசி, சிவப்பரிசி, மாப்பிள்ளைச் சம்பா, அவல், தேன், மிளகாய், மல்லி, சிறுதானிய பிஸ்கெட், பருப்பு வகைகள் கொள்முதல் செஞ்சு விற்பனை செய்றோம். இதுபோக வழக்கமான சூப்பர் மார்கெட்கள்ல இருக்கக்கூடிய அனைத்து விதமான பொருள்களையும் நாங்க விற்பனை செய்றோம்” என்றார்.

மதிப்புக்கூட்டும் மையம்
மதிப்புக்கூட்டும் மையம்
மதிப்புக்கூட்டும் மையம்
மதிப்புக்கூட்டும் மையம்

தேங்காய் மதிப்புக்கூட்டும் மையம்

‘‘ஈரோடு துல்லிய பண்ணை உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தேங்காய் மதிப்புக்கூட்டல் மையம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாத தென்னந்தோட்டங்களிலிருந்துதான் தேங்காய் கொள்முதல் செய்கின்றனர். தோட்டத்தில் அறுவடை முடிந்த 48 மணி நேரத்துக்கு உள்ளாகவே, தேங்காயை மதிப்புக்கூட்டல் மையத்துக்குக் கொண்டு வந்துவிடுகின்றனர். முதலில் மட்டை உரிக்கப்பட்ட தேங்காயை ஒரு மெஷினில் போட்டு, தேங்காயினுடைய ஓட்டை மட்டும் நீக்குகிறார்கள். அடுத்ததாக உடையாமல் உருண்டையாக இருக்கும் தேங்காய் பருப்பை, டெஸ்டா பீலர் எனப்படும் மெஷினுள் செலுத்தி, தேங்காய் பருப்பின் மேல் உள்ள பழுப்பு நிறத் தோலை (கோகனட் டெஸ்டா) தனியே சீவி எடுக்கின்றனர்.

தேங்காய் பருப்பின் வெளிப்புறத்தில் உள்ள தோலை (டெஸ்டா) பிஸ்கெட் மற்றும் ஹேர் ஆயில் தயாரிக்கும் நிறுவனங்கள் வாங்கிக் கொள்வதாக, துல்லிய பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்த டெஸ்டாவிலிருந்து நாங்களும் ஹேர் ஆயில் தயாரிக்கிறோம். இதில் சாதாரணத் தேங்காய் எண்ணெயைவிட 4 மடங்கு வைட்டமின் இ அதிகமாக இருக்கும். இது கூந்தலுடைய வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

விற்பனை
விற்பனை

தேங்காய் பருப்பின் மேல் உள்ள டெஸ்டாவை சீவியெடுத்த பிறகு, தேங்காய் கொப்பரையை வெட்டி அதில் தேங்காய் தண்ணீரை எடுக்கின்றனர். அது வினிகர் பயன்பாட்டுக்காக அனுப்பப்படுகிறது. இரண்டாக உடைபட்ட தேங்காய் கொப்பரை ஒரு மெஷின் மூலம், சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்படுகின்றன. இவை தண்ணீரில் நன்கு கழுவப்பட்டு, ஒரு மெஷின் மூலம் துருவலாக மாற்றப்படுகிறது. இவை நுகர்வோர்களின் தேவையைப் பொறுத்து ஈரப்பதமுள்ள துருவலாகவும் விற்பனை செய்யப்படுகிறது. நவீன இயந்திரங்களின் உதவியோடு உலர் தேங்காய் பவுடராக மதிப்புக் கூட்டப்பட்டும் விற்பனை செய்யப்படுகிறது. உலர் தேங்காய் பவுடராக மாற்றப்படுவதன் மூலம், அதை மாதக்கணக்கில் இருப்பு வைத்துகூட பயன்படுத்த முடியும்... கெட்டுப்போகாது. தேங்காய் பவுடரை ஹைட்ராலிக் பிரஷர் கொடுத்து, வெர்ஜின் தேங்காய் எண்ணெயாகவும் தயாரிக்கின்றனர். ஒரு கிலோ தேங்காய் துருவலில் இருந்து 100 கிராம் எண்ணெய்தான் கிடைக்கும். இப்படித் தயாரிக்கும் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கின்றனர். தேங்காய் எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட பிறகு, எஞ்சியுள்ள தேங்காய் சக்கையை... பிஸ்கெட் மற்றும் பேக்கரி வகைத் தயாரிப்புகளுக்காக வாங்கிச் செல்கிறார்கள்’’ எனத் தெரிவித்தனர், துல்லிய பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள்.

சூப்பர் மார்க்கெட்
சூப்பர் மார்க்கெட்
இடுபொருள் விற்பனை
இடுபொருள் விற்பனை

8 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்!

நம்மிடம் பேசிய ஈரோடு துல்லிய பண்ணை உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான ஜெயச் சந்திரன், “2012-ம் வருஷம் பெட்ரோல் பங்க் திறந்தோம். வழக்கமான பெட்ரோல் பங்க்கள்ல எரிபொருள்களைத் தாண்டி, வேற எந்த ஒரு பொருளையும் வச்சு விற்பனை செய்ய அனுமதி கிடையாது. ஆனா, எங்களோட பெட்ரோல் பங்க்ல அப்படியில்லை. விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து விதமான சேவைகளையும் செய்ய அனுமதி வாங்கி யிருக்கோம். டிராக்டர்கள், விவசாய இயந்திரங்களை இயக்குறதுக்குத் தேவை யான டீசல் வாங்குறதுக்காக நிறைய விவசாயிங்க எங்களோட பெட்ரோல் பங்குக்கு வர்றாங்க. விவசாயத்துக்குத் தேவையான இடுபொருள்கள், பாசனத் துக்குத் தேவையான குழாய்கள், ஆழ்துளைக் கிணறுகளுக்குத் தேவையான மோட்டார்கள் உட்பட எல்லாமே இங்க விற்பனை செய்றோம். ஆரம்பத்துல காய்கறிகளைக்கூட எங்க பங்க்ல வச்சு வியாபாரம் செஞ்சோம். இந்தப் பகுதியில காய்கறி சாகுபடி ரொம்பக் குறைவு. அதனால விற்பனைக்குத் தேவையான காய்கறிகள் தொடர்ச்சியா கிடைக்காததுனால அதைக் கைவிட்டுட்டோம்.

வடிவேல், ஈஸ்வரமூர்த்தி, ஜெயச்சந்திரன், ராமலிங்கம்
வடிவேல், ஈஸ்வரமூர்த்தி, ஜெயச்சந்திரன், ராமலிங்கம்

எங்களோட பெட்ரோல் பங்க்ல வருஷத்துக்கு 7-8 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடக்குது. இப்படிப் பல தொழில்கள்ல இருந்தும் வருமானம் கிடைக்குறதுனாலதான் எங்களோட உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சிறப்பாக இயங்க முடியுது” என்றார்.

காசுக்காகத் தலையில கட்டுறதில்லை

வேளாண் இடுபொருள் விற்பனை நிலையத்தை நிர்வகித்து வரும் ராமலிங்கம், “இங்க தரமான இடுபொருள்களை மட்டும்தான் விற்பனை செய்றோம். பயிர்களுக்கு என்ன தேவையோ அதைத் தவிர காசுக்காகக் கூடுதலாக எந்த மருந்தையும் விவசாயிங்க தலையில கட்டுறதில்லை. சந்தையில புதுசா வரக்கூடிய எந்தவொரு இடுபொருளையுமே நாங்க உடனே வெளி விவசாயிகள்கிட்ட விற்பனை செஞ்சிட மாட்டோம். எங்களோட நிறுவனத்துல முக்கியப் பொறுப்புகள்ல உள்ள விவசாயிகளோட நிலத்துல, சோதனை ஓட்டமா கொஞ்சம் பயன்படுத்திப் பார்த்துகிட்டு, அதுல நல்ல முடிவு வந்தா மட்டும்தான் அதைக் கடையில விற்பனைக்கு வைப்போம். உரங்கள் மட்டுமல்லாம பவர் வீடர், டிரம் சீடர், ஸ்பிரேயர், சொட்டு நீர் பாசனத்துக்கான சாதனங்கள்னு விவசாயத்துக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் இங்க விற்பனை செய்றோம். மற்ற கடைகளைவிட எங்ககிட்ட விலை குறைவா இருக்கும்’’ என்றார்.

மதிப்புக் கூட்டும் மையம்
மதிப்புக் கூட்டும் மையம்

விதை உற்பத்தி மையம்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆதார நெல் விதைகளை வாங்கி வந்து, விவசாயிகளிடம் கொடுத்து தரமான விதைநெல் உற்பத்தி செய்கின்றனர். இங்கு விற்பனை செய்யப்படும் விதைநெல் நன்கு முளைப்புத்திறன் கொண்டவை. விதைச் சான்று பெற்று இவற்றை விற்பனை செய்கிறார்கள்.