Published:Updated:

`பயிர் இழப்பீடு விவரங்களை இணையத்தில் வெளியிடவேண்டும்!' - விவசாய ஆர்வலரின் கோரிக்கை

பயிர்
News
பயிர்

``நிவர், புரெவி புயல் மற்றும் மார்கழி மாதம் பெய்த எதிர்பாராத தொடர் கனமழையால், பயிர்கள் பாதிக்கப்பட்டு, கடுமையான மகசூல் இழப்பு ஏற்பட்டது. மிகவும் மோசமான நஷ்டம் ஏற்பட்டதால், விவசாயிகள் நிலைகுலைந்துப் போனார்கள்."

கடந்த ஆண்டுக்கான சம்பா பருவ பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார். இதன்மூலம் 6 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 1,597 கோடி ரூபாய் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசும் டெல்டா விவசாயிகள், பயிர் இன்ஷுரன்ஸ் இழப்பீட்டு தொகை வழங்குவதில் எந்தவித ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது என வலியுறுத்துகிறார்கள்.

விவசாயம்
விவசாயம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில் பல லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொண்டார்கள். நிவர், புரெவி புயல் மற்றும் மார்கழி மாதம் பெய்த எதிர்பாராத தொடர் கனமழையால், பயிர்கள் பாதிக்கப்பட்டு, கடுமையான மகசூல் இழப்பு ஏற்பட்டது. மிகவும் மோசமான நஷ்டம் ஏற்பட்டதால், விவசாயிகள் நிலைகுலைந்துப் போனார்கள். தங்களுக்கு ஏற்பட்ட வாழ்வாதார இழப்பை ஓரளவுக்கு ஈடு செய்ய, பயிர் இன்ஷுரன்ஸ் இழப்பீட்டு தொகை உடனடியாக கிடைத்துவிடும் என மிகுந்த நம்பிக்கை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் பத்து மாத இழுத்தடிப்புக்குப் பிறகு தற்போதுதான் பயிர் இன்ஷுரன்ஸ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நசுவினி ஆறு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வீரசேனன், ``பயிர் இன்ஷுரன்ஸ் இழப்பீட்டு தொகை வழங்குவதில் எந்தவித ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது.

இதில் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம். எந்தெந்த வருவாய் கிராமத்தில் எத்தனை சதவீதம் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப அந்தந்த வருவாய் கிராமங்களுக்கு எவ்வளவு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது என்பதை துல்லியமான புள்ளிவிவரங்களுடன் கூடிய பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும். கடந்த காலங்களில் பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீடு வழங்குவதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றன. வறட்சி, வெள்ளம் போன்வற்றால், பெருமளவு மகசூல் இழப்பைச் சந்தித்த பல விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காமல் போனது. ஆனால் அரசியல் செல்வாக்கு பெற்ற நபர்கள், பயிர் இன்ஷூரன்ஸ் திட்டத்தைக் குறுக்கு வழியில் பயன்படுத்தி லாபம் அடைந்தார்கள். இதனாலும்கூட உண்மையான பாதிப்பைச் சந்தித்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காமல் போய்விடுகிறது.

விவசாயி வீரசேனன்
விவசாயி வீரசேனன்

அனைத்து விவசாயிகளும் எளிமையாக தெரிந்து கொள்ள, அந்தந்த கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில் மக்களின் பார்வையில் படும் வகையில் இந்த பட்டியலை ஒட்ட வேண்டும்.

இதுபோல் செய்தால்தான் இதில் எந்த முறைகேடும் நடைபெறாது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நேர்மையாக இழப்பீடு வழங்கப்படுவதை இதன் மூலம்தான் உறுதி செய்ய முடியும். கடந்த ஆண்டு நிவர், புரெவி புயல் மற்றும் பருவம் தவறிப் பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் மழைநீரில் சாய்ந்து, விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்தார்கள்.

இதனை உறுதி செய்த பிறகுதான், தமிழகம் முழுவதும் பேரிடர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்து தமிழக அரசு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது. அந்த அடிப்படையில் பார்த்தால் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இன்ஷுரன்ஸ் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.