Published:Updated:

``டி.கே.எம்-9 நெல் கொள்முதலை நிறுத்தாதீங்க; மாறாக இப்படி செய்யுங்க!" - அரசுக்கு விவசாயி கோரிக்கை

நெல் வயல்

பொதுமக்கள் இந்த ரக நெல்லை விரும்பாததாலும், பொது விநியோக திட்டத்தில் இதனை விநியோகிக்க முடியாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

``டி.கே.எம்-9 நெல் கொள்முதலை நிறுத்தாதீங்க; மாறாக இப்படி செய்யுங்க!" - அரசுக்கு விவசாயி கோரிக்கை

பொதுமக்கள் இந்த ரக நெல்லை விரும்பாததாலும், பொது விநியோக திட்டத்தில் இதனை விநியோகிக்க முடியாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Published:Updated:
நெல் வயல்

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் டி.கே.எம்-9 ரக நெல்லை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதை கைவிடுவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த ரக நெல்லை விரும்பாததாலும், பொது விநியோக திட்டத்தில் இதனை விநியோகிக்க முடியாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நெல்
நெல்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பில், ``தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், டி.கே.எம். 9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை நெல்லை அரவை செய்து பெறப்படும் அரிசி, சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருக்கும். இந்த வகை அரிசியை, பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் வாங்க விரும்புவதில்லை. இந்த ரக நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களும் கூட, இந்த அரிசியைப் பயன்படுத்த விரும்புவதில்லை. எனவே, பொது விநியோகத் திட்டத்தில், டி.கே.எம்.9 ரக அரசி விநியோகத்தை தவிர்க்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் 2022-23-ம் ஆண்டு பருவம் முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், டி.கே.எம்.9 ரக நெல்லை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதைக் கைவிட அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் தற்போது சந்தையில் புழக்கத்தில் உள்ள, பிற சன்ன ரக நெல் வகைகளை, சாகுபடி செய்து பயன்பெறவும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் குறுவை பட்டத்தில் டி.கே.எம்-9 ரக நெல் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த நெல் ரகத்தை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வந்தார்கள். காரணம் குறுவை பட்டத்தில் மற்ற நெல் ரகங்களை காட்டிலும் டி.கே.எம்-9 ரக நெல் அதிகளவு விளைச்சல் கொடுக்கக்கூடியது. மற்ற நெல் ரகங்கள் போலவே இதுவும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டது.

காலப்போக்கில் இதில் பிரச்னை தலைத் தூக்கத் துவங்கியது. இந்த நெல் ரகத்தின் அரிசி, மோட்டாவாகவும் சிகப்பு நிறத்திலும் இருப்பதால், பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இந்த அரிசியை வாங்க பொதுமக்கள் விரும்பவில்லை. இதன் காரணமாக, 2016-11-ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் டி,கே.எம்-9 ரக நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இதனை சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதனை அறுவடை செய்து விற்க முடியாமல் தவித்தபோது, அவர்களுக்காக பசுமை விகடன் களத்தில் இறங்கியது.

நெல்
நெல்

அப்போதைய தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பல முறை பேசி, வாதாடி, அந்த ஆண்டு, டி.கே.எம்-9 ரக நெல்லை கொள்முதல் செய்ய வைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் குறுவை பட்டம் தொடங்குவதற்கு முன்பே, டி.கே.எம்-9 ரக நெல்லை விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டாம் என அரசு அறிவித்தது. மற்ற நெல் ரகங்களைவிட இது அதிக விளைச்சல் கொடுக்கக்கூடிய நெல் ரகமாக இருந்தும் கூட, வேறு வழியில்லாமல் பெரும்பாலான விவசாயிகள், மிகுந்த வேதனையுடன் இதனை கைவிட்டார்கள். ஆனாலும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், மயிலாடுதுறை மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறைய விவசாயிகள் இதனை தொடர்ச்சியாக சாகுபடி செய்து வந்தார்கள். தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் இந்த நெல் ரகம் சாகுபடி செய்யப்பட்டது. அந்த விவசாயிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கவில்லை. தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்தார்கள். இந்த நெல் ரக அரிசியை, கேரள மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதால், அங்கு அனுப்பப்பட்டு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பிரச்னையின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, டி.கே.எம்-9 ரக நெல்லை கேரளா கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்தார்கள். விவசாயிகளின் தொடர் வலியுறுத்தலால், அப்போதைய அதிமுக அரசு, டி.கே.எம்-9 ரக நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய செய்ய நடவடிக்கை எடுத்ததால் விவசாயிகள் நிம்மதி அடைந்தார்கள். தற்போது மீண்டும் இதில் பிரச்னை எழுந்துள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருவாரூர் மாவட்டம் அரித்துவாராமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சசிகுமார், ``இந்த நெல் ரகம், உப்புத்தன்மையுள்ள களிமண் நிலங்களுக்கு மிகவும் ஏற்றது. 40-45 மூட்டை மகசூல் கிடைக்கும். தண்டுப்பகுதி நல்லா உறுதியா இருக்குறதுனால, மழை, வெள்ளத்துல கூட தாக்குப்புடிச்சி வளரும். வறட்சியையும் தாங்கி வளரும். இதுமாதிரியான மண் வாகுல உள்ள நிலங்கள்ல வேற நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சா குறைவான மகசூல்தான் கிடைக்கும். விவசாயிகள் தங்களோட மண்ணுக்கு ஏற்ற ரகத்தைதான் சாகுபடி செய்ய முடியும்.

சசிகுமார்
சசிகுமார்

அதை கை விடுங்கனு சொல்றது நியாயமில்லை. தமிழ்நாட்டு மக்கள் இதை விரும்பலைனாலும், கேரள மக்களும் இப்பவும் இதை சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. தமிழக அரசு இந்த நெல் ரகத்தை இங்க கொள்முதல் செஞ்சி, கேரளாவுல பொது விநியோக திட்டத்துல விநியோகம் செய்ய மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கணும். வட இந்தியாவுல சாகுபடி செய்ற கோதுமையை தமிழ்நாட்டுல பொதுவிநியோக திட்டத்துல கொடுக்குறாங்க. அதே மாதிரி டி.கே.எம்.-9 ரக நெல்லை, கேரளாவுல கொடுக்குறது சாத்தியமானதுதான். அரசாங்கம் கொள்முதல் செஞ்சாதான், தனியார் வியாபாரிகள்ட்ட இந்த நெல் ரகத்துக்கு ஓரளவுக்காவது நியாயமான விலை கிடைக்கும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism