Published:Updated:

ரூ.2 லட்சத்துக்கு விற்பனையான `பன்னூர்' செம்மறியாடு; இதன் சிறப்புகள் இதுதான்!

பன்னூர் செம்மறியாடுகள்

கடந்த முறை ஹல்லிக்கர் மாடுகளை அழைத்து வந்தேன்; தற்போது கால்நடைகளுக்குத் தோல் கட்டி நோய் பரவி வருவதால், கடந்த ஆண்டை போல அல்லாமல், இந்த முறை மாடுகளைத் தவிர்த்து, ஆடுகளைக் கொண்டு வரத் தீர்மானித்தேன்...

ரூ.2 லட்சத்துக்கு விற்பனையான `பன்னூர்' செம்மறியாடு; இதன் சிறப்புகள் இதுதான்!

கடந்த முறை ஹல்லிக்கர் மாடுகளை அழைத்து வந்தேன்; தற்போது கால்நடைகளுக்குத் தோல் கட்டி நோய் பரவி வருவதால், கடந்த ஆண்டை போல அல்லாமல், இந்த முறை மாடுகளைத் தவிர்த்து, ஆடுகளைக் கொண்டு வரத் தீர்மானித்தேன்...

Published:Updated:
பன்னூர் செம்மறியாடுகள்

பெங்களூரில் நடைபெற்ற கிரிஷி மேளாவில் (krishi Melas), 5 வயதான பன்னூர் இன ஆடு ஒன்று (Bannur sheep) 2.01 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிரிஷி மேளாக்களில், வேளாண் கருவிகள் முதல் விவசாய விளைபொருள்கள் வரை விற்க விவசாயிகள் கூடுவதுண்டு. 3 நாள்கள் நடைபெறும் இந்நிகழ்வில் மாநிலம் முழுவதுமுள்ள விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்வர்.

கிரிஷி மேளாவில்
கிரிஷி மேளாவில்

இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற க்ரிஷி மேளாவின் முதல் நாளில், போரே கவுடா (Boregowda) என்ற விவசாயி ஆட்டுக் குட்டிகளோடு 22 ஆடுகளைக் கொண்டு வந்திருந்தார். அதில்  5 வயதான பன்னூர் செம்மறி ஆட்டை 2.01 லட்ச ரூபாய்க்கு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிஷ் கவுடா என்பவர் வாங்கியுள்ளார்.

இந்த வகை செம்மறி ஆடுகள் அழிந்து வரும் இனமாகக் கருதப்படுவதால், இந்த விலைக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. அதோடு மாண்டியா மாவட்டத்தில் மட்டுமே 2,500 பன்னூர் இன செம்மறி ஆடுகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

இது குறித்துக் கூறிய போரே கவுடா, ``என்னிடம் இதே இனத்தைச் சேர்ந்த சில ஆடுகள் உள்ளன. நான் பன்னூர் வகை ஆட்டை இனப்பெருக்கத்துக்காகக் கொண்டு வந்தேன். ஏனெனில், இதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

கடந்த முறை கர்நாடக மாநில நாட்டு மாடான ஹல்லிக்கர் மாடுகளை காட்சிப்படுத்தினேன். தற்போது கால்நடைகளுக்குத் தோல் கட்டி நோய் பரவி வருவதால், இந்த முறை மாடுகளைத் தவிர்த்து, ஆடுகளைக் கொண்டு வரத் தீர்மானித்தேன். 

பன்னூர் செம்மறியாடுகள்
பன்னூர் செம்மறியாடுகள்

இந்த பன்னூர் ரக ஆட்டினத்தில் ஏழு துணை வகைகள் உண்டு. இவை அனைத்தும் அழிந்து போகக்கூடிய சூழலில் உள்ளன. கடந்த 10 முதல் 15 வருடங்களாக என்னுடைய கிராமத்தில் பன்னூர் ஆடுகளை வளர்த்து வருகிறேன்.

சுமார் 50 ஆடுகள் வரை என்னிடம் உள்ளன. இவற்றுக்கு அதீத கவனிப்பு தேவை. பன்னூர் இன ஆட்டிறைச்சி ருசி மிகுந்தது. இதைச் சாப்பிடுவதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. ஆனால், பன்னூர் ஆட்டிறைச்சி என்று கூறி போலி இறைச்சியை விற்பனை செய்யும் கடைகளும் இப்போது பெருகிவிட்டது’’ என்று  கூறியுள்ளார்.

பன்னூர் செம்மறியாடுகள்
பன்னூர் செம்மறியாடுகள்

பன்னூர் ஆடுகளின் பூர்வீகம் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம். இந்த ரக ஆடுகளின் அதிகபட்ச உயரமே இரண்டரை அடிதான். ரோமம் அடர்த்தியா இருக்கும். பெங்களூரு, மாண்டியாவைச் சுற்றி நடைபெறும் கால்நடைக் கண்காட்சிகளில் இந்த ஆடுகளைக் காட்சிப்படுத்துகிறார்கள் விவசாயிகள். ரூ.50,000, ரூ.1 லட்சம் எனப் பரிசுகளைத் தட்டி செல்லும் ஆடுகளும் உண்டு.

அந்த வகையில் இந்த ஆடு அதிகபட்சமா 2 லட்சம் ஏலம் போயிருக்கிறது. நிலவியல் ரீதியாகத் தமிழகத்தின் எல்லை பகுதிகளான ஓசூர் பகுதியிலும் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் வெள்ளை நிறத்திலும், கழுத்து பகுதியில் செந்நிறத்திலும் என இரண்டு வகைகளில் காணப்படுகின்றன. இறைச்சி வெளுப்பாக இருக்கும். செம்மறியாட்டு இறைச்சிதான் மட்டன் பிரியாணியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.