Published:Updated:

கம்பெனிக்கு போன கடன் பணம் கைக்கு வந்து சேராத டிராக்டர்!அதிர வைக்கும் லோன் மோசடி... விவசாயிகளே உஷார்

டிராக்டர்
பிரீமியம் ஸ்டோரி
டிராக்டர்

எச்சரிக்கை

கம்பெனிக்கு போன கடன் பணம் கைக்கு வந்து சேராத டிராக்டர்!அதிர வைக்கும் லோன் மோசடி... விவசாயிகளே உஷார்

எச்சரிக்கை

Published:Updated:
டிராக்டர்
பிரீமியம் ஸ்டோரி
டிராக்டர்

டிராக்டர் விற்பனையில் சில பகுதிகளில் மோசடி நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், நடுப்படுகையைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ், இந்த மோசடி மூலம் பாதிப்பட்டுள்ளார். தன்னைப்போல் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தோடு நம்மிடம் பேசினார். ‘‘தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலத்துல ‘டெல்டா ஏஜென்சி’ங்கற பேர்ல, டிராக்டர் விற்பனை செஞ்சுகிட்டு இருக்குறதா சொல்லி, விவேக் என்ற நபர் போன வருஷம் என்கிட்ட வந்தாரு. நான் ஒரு சப் டீலர்... எனக்கு மேல மெயின் டீலர், மன்னார்குடியில இருக்க ‘ஆதவன் ஏஜென்சி’னு சொன்னார். ஆறரை லட்சம் ரூபாய் விலையுள்ள டிராக்டரை, அதிரடி சலுகையா, 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்றோம். இதுக்கான வங்கிக் கடனுக்கு நாங்களே ஏற்பாடு செஞ்சு தர்றோம்’னு சொன்னார். இதுக்கு ஆசைப்பட்டு நானும் சரினு சொன்னேன்.

அடுத்த நாள், ‘ஹெச்.டி.எஃப்.சி’ பேங்க் ஆள்களை எங்க வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்தார். எனக்குக் கடன் கொடுக்குறதுக்கான தகுதிகளை எல்லாம் உறுதிப்படுத்தின பிறகு, ஆவணங்கள்ல கையெழுத்து வாங்கிக்கிட்டு, என்னோட ஆதார் கார்டு, வீட்டு வரி ரசீது, 4 காசோலைகள் (செக் ஸ்லீப்) எல்லாம் வாங்கிக்கிட்டு போனாங்க. ஒரு வாரம் கழிச்சு, என்னைத் தொடர்புகொண்ட விவேக், ‘பேங்க் லோன் சாங்ஷன் ஆயிடுச்சு. மன்னார்குடி மெயின் டீலரான ஆதவன் ஏஜென்சியோட வங்கிக் கணக்குக்குப் பணம் போயிடுச்சு. நீங்க சாலியமங்கலத்துக்கு வந்து டிராக்டரை எடுத்துக்கிட்டு போங்க’னு சொன்னார். நான் அங்க போனேன். ‘இதுதான் உங்களுக்கான டிராக்டர்’னு காட்டினார். டிராக்டர் மேல நிக்க வச்சு போட்டோ எடுத்துக்கிட்டார். ‘இன்னும் ஒரு வாரத்துல மெகா மேளா நடத்தி, டிராக்டரைக் கொடுக்குறோம்’னு சொன்னார். நானும் அதை நம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.

டிராக்டர்
டிராக்டர்

ஆனா, பல நாள்கள் ஆகியும் டிராக்டர் தரலை. நான் ரொம்பத் தொந்தரவு பண்ணினதும், வேறொரு புது டிராக்டரை என்கிட்ட கொடுத்து, ‘இது என்னோட சித்தப்பாவோடது. இது ரொம்ப காஸ்ட்லியானது. நீங்க என்னை நம்பாததால, இதைக் கொடுக்குறேன். இப்போதைக்கு ஓட்டிக்கிட்டு இருங்க. மெகா மேளாவுல உங்களோட டிராக்டரை நாங்க கொடுத்த பிறகு, இதைத் திருப்பிக் கொடுத்தால் போதும்’னு சொன்னார்.

நமக்கு ஒரு பிடிமானம் கிடைச்சதேனு நினைச்சு, அந்த டிராக்டரை ஓட்டிக்கிட்டு வந்துட்டேன். அடுத்த பத்து நாள்கள்ல எங்க வீட்டுக்குப் போலீஸ் வந்து நிக்கிது. ‘இது உங்க டிராக்டர் இல்லை. திருட்டு வண்டி. மன்னார்குடி ஆதவன் எஜென்சி உரிமையாளர், அம்மாப்பேட்டை காவல்நிலையத்துல புகார் கொடுத்திருக்கார். உடனடியாக ஒப்படைக்கணும்’னு சொன்னாங்க. எனக்குத் தர வேண்டிய டிராக்டரை பத்தி நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவங்க கேட்கல. டிராக்டரை எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. ஆதவன் ஏஜென்சி கலைச்செல்வனை நான் தொடர்புகொண்டு கேட்டப்ப, ‘உங்களுக்குத் தர வேண்டிய டிராக்டரை, சாலியமங்கலம் ‘சப் டீலர்’ விவேக் மூலம் ஏற்கெனவே கொடுத்துட்டேன். அது முடிஞ்சுபோன விஷயம். என்கிட்ட இருந்து விவேக் திருடிக்கிட்டுப்போன டிராக்டரைதான் இப்ப உங்ககிட்ட இருந்து மீட்டுருக்கேன்’னு சொல்லிட்டார்.

செல்வராஜ்
செல்வராஜ்

நான், அம்மாப்பேட்டை, மன்னார்குடி காவல் நிலையங்கள்ல எல்லாம் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கல. ‘டிராக்டர் லோனு’க்கான தவணைத் தொகையைக் கட்டச் சொல்லி வங்கி தரப்புல அழுத்தம் கொடுக்குறாங்க. இதுல இருந்து நான் எப்படி மீளப்போறேன்னு தெரியல. எனக்கு விற்பனை செஞ்ச டிராக்டர், யார்கிட்ட இருக்குனு தெரியலை. விலையைக் கொஞ்சம் குறைச்சு, வேற நபர்கிட்ட விவேக் வித்துருக்கலாம்னு சந்தேகப்படுறோம். இந்த மோசடியை விவேக் மட்டும் தனியா செய்யல; மெயின் டீலரான மன்னார் குடி ஆதவன் ஏஜென்சி உரிமையாளர் கலைச்செல் வனுக்கும் இதுல தொடர்பு இருக்கு. டிராக்டர் லோனுக் கான பணம், வங்கியில இருந்து அவருக்குத்தான் போயிருக்கு. ஆனா, எனக்கான டிராக்டரை மீட்டுக் கொடுக்க, அவர் எந்த முயற்சியுமே எடுக்கல. இதைப் பத்திக் கேட்டா, அலட்சியமா பதில் சொல்றார். என்னை மாதிரி இன்னும் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக் காங்க’’ என்றார்.

‘‘டிராக்டர் லோனுக்கான பணம், வங்கியில இருந்து அவருக்குத்தான் போயிருக்கு. ஆனா, எனக்கான டிராக்டரை மீட்டுக் கொடுக்க, அவர் எந்த முயற்சியுமே எடுக்கல.’’


விவசாயி செல்வராஜ் சொன்ன தைக் கேட்டு, அதிர்ச்சியான நாம் விசாரணையில் இறங்கினோம். முதலில், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் விற்பனைப் பிரிவு மேலாளர் சண்முகத்திடம் பேசினோம். ‘‘இதுல எங்க தரப்புல எந்தத் தவறும் நடக்கல. விவசாயி செல்வராஜூக்கு விற்பனை செய்யப்பட்ட டிராக்டரோட இன்ஜின் நம்பர், சேஸ் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரசீது அவர்கிட்ட, விவேக் டிராக்டர் ஒப்படைக்குற போட்டோ எல்லாம் எங்க கிட்ட வந்த பிறகும்கூட, விவசாயி செல்வா ராஜுக்கு நாங்க போன் பண்ணி, ‘டிராக்டரை வாங்கிட்டீங்களா’னு கேட்டோம். ‘வாங்கிட்டேன்’னு அவர் உறுதிப்படுத்தின பிறகுதான், அதுக்கான கடன் தொகையை, மன்னார்குடி ஆதவன் ஏஜேன்சிக்கு அனுப்பினோம்.

டிராக்டர் லோனைப் பொறுத்தவரைக்கும், இது விவசாயப் பயன் பாடுங்கறதுனால, டிராக்டரை விவசாயி கிட்ட கொடுத்துட்டு, அதுக்குப் பிறகு, பதிவு செய்றதுதான் வழக்கம். பல மாதங்களாகியும் பதிவு செய்யாததுனால சந்தேகப்பட்டு, செல்வராஜை அணுகிய போதுதான், அவர் ஏமாந்த விஷயமே எங்களுக்குத் தெரியும். கடந்த சில வருடங் களா, இது மாதிரியான மோசடிகள் நிறைய நடக்குது விவசாயிகள் கவனமா இருக்கணும்’’ என்றார்.

கலைச்செல்வன்
கலைச்செல்வன்


அடுத்ததாக, மன்னார்குடி ஆதவன் ஏஜென்சி கலைச்செல் வனிடம் பேசினோம். “எனக்கும் இந்த மோசடிக்கும் சம்பந்தமில்ல. செல்வராஜு க்குக் கொடுக்க வேண்டிய டிராக்டரை, விவேக் மூலம் கொடுத் துட்டேன். அதுக்குப் பிறகு, சாலியமங்கலத்துல மெகா மேளா நடத்தி, புது லோன் கொடுக்குறதுக்காக, அஞ்சு டிராக்டர்களை, அங்க முன்கூட்டியே அனுப்பி வச்சிருந்தேன். அதெல்லாம் விற்பனைச் செய்யப் படாத டிராக்டர்கள். அதையெல் லாம் திருட்டுத் தனமாக விற்பனை செஞ்சிட்டு, விவேக் தலைமறை வாகிட்டார். அதைக் காவல்துறை மூலம் மீட்டேன். அதுல ஒண்ணு தான் விவசாயி செல்வராஜ்கிட்ட இருந்த டிராக்டர். செல்வராஜுக்கு நான் விற்பனை செஞ்ச டிராக்டர் என்ன ஆனதுனு எனக்குத் தெரியாது’’ என்றார்.

விவேக் தரப்பில் நம்மிடம் பேசிய அவருடைய சித்தப்பா, ‘‘விவேக் ரொம்ப நல்ல பையன். அமைதியா இருப்பான். அவன் தப்பு செஞ்சிருப்பான்னு எங்களால நம்பவே முடியல. தலைமறைவா இருக்கிறது னால, உண்மை வெளிச்சத்துக்கு வராமலே இருக்கு. இதுல அவனுக்கு எந்தளவுக்குத் தொடர்பு இருக்கு. இதுல வேற யாருக்கெல்லாம் தொடர்பு இருக்குனு தெரியல’’ என்றார்.

விவேக்
விவேக்

அம்மாப்பேட்டை காவல்நிலைய குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர் முத்துக்குமார், ‘‘ஆதவன் ஏஜென்சிகிட்ட இருந்து திருட்டுப் போன டிராக்டர்களைக் கண்டுபிடிச்சு கொடுத்தோம். விவசாயி செல்வராஜ் புகார் தொடர்பாக, விசாரிக்கச் சொல்லி, எங்க மேலதிகாரிகள்கிட்ட இருந்து எந்த உத்தரவும் வரல’’ என அலட்சியமாகப் பதில் அளித்தார்.

இறுதியாக, தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ரவளி ப்ரியாவிடம் பேசினோம். ‘‘இந்தப் புகார் எந்த நிலையில இருக்குனு விசாரிச்சிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்குறேன்’’ என உறுதி யளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism