Published:Updated:

`தமிழ்நாட்டில் வேளாண்மை அதிகரிக்க கூட்டுப் பண்ணையம்தான் வழி!' - ஆலோசனை சொல்லும் விவசாயி

விவசாய நிலம்
விவசாய நிலம்

வேளாண்மையைக் கூட்டுப் பண்ணையமாக மாற்றி நில உரிமையாளர்களை பங்குதாரர் ஆக்கி, புதுமை வேளாண் புரட்சியைக் கொண்டுவர நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான், வேளாண்மை சீரும் சிறப்புமாக நடைபெறும்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கும், இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கும், புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக அரசு தாக்கல் செய்த முதல் வேளாண் பட்ஜெட். இதனால், வரும் காலங்களில் இத்தகையை தனி பட்ஜெட் மூலம், விவசாயத்துக்கான முக்கியத்துவம் கிடைக்கும் என்று சிலர் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், `வெறும் வேளாண் பட்ஜெட் மட்டும் போதாது. விவசாயம் செய்யும் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார்கள். சொந்த நிலம் வைத்திருப்பவர்களின் பெரும்பாலானோர் விவசாயம் செய்வதில்லை. அவர்களின் நிலங்களில் விவசாயம் செய்யும், விவசாயிகள், பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அதனால், அரசு நினைப்பதுபோல், விவசாயத்தில் பெரிய அளவில் மாற்றம் வர வேண்டும் என்றால், வேளாண்மையைக் கூட்டுப் பண்ணையமாக மாற்ற வேண்டும்' என்று விவசாய சங்க பிரதிநிதிகள் புது ஆலோசனை சொல்கிறார்கள்.

விவசாய நிலம்
விவசாய நிலம்
``ஒரு கோடி பனை விதைகளை இலவசமாக கொடுக்கப்போறேன்!" - கரூர் மனிதரின் `பட்ஜெட்' தாண்டிய திட்டம்

இதுகுறித்து, நம்மிடம் பேசிய காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர், மகாதானபுரம் ராஜாராம், ``வேளாண்மை, கால்நடைகள், பண்ணையில் வளர்க்கப்படும் மீன்கள், முசுக்கொட்டையில் உருவாகும் பட்டு வளர்ச்சி அனைத்தையும் இணைத்து, 2021 - 2022-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 75 வது சுதந்திர தின விழா உரையில், பாரத பிரதமர் மோடி சிறு, குறு விவசாயிகளின் நலனைப் பற்றிப் பேசினார். அப்போது `குடும்பத்தில் பாகப்பிரிவினை நடக்கும்போது விவசாய நிலங்கள் சுருங்கிவிடும் சூழல் ஏற்படுகிறது. நாட்டில் 80 சதவிகித விவசாயிகளிடம் 2 ஹெக்டேருக்கும் குறைவாகவே நிலம் உள்ளது' என்று பேசினார். ஆனால், அந்த 80 சதவிகித விவசாயிகளின் பெயரில் முழுமையாக நில உரிமை பட்டா இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.

நிலத்தின் உரிமையாளர் இறந்தால், அவரின் ஆண் வாரிசுகளுக்கு மட்டும் நில உரிமை கூட்டுப் பட்டாவாக மாற்றப்பட்டது. அவர்களும் விவசாயிகளாக இருந்தனர். அவர்களின் மகள்கள் திருமணமாகி, வெளியூர் சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு நில உரிமை அளித்தால், பயிர் சாகுபடி செய்ய முடியாது. அதனால், அவர்களுக்கு தங்கள் சக்திக்கேற்ப சீர்வரிசை செய்து திருமணம் செய்யும் நிலை இருந்து வருகிறது. திருமணமான அந்தப் பெண்களுக்கு கணவரின் நில உரிமைதான் குடும்பச் சொத்தாக இருக்கும். ஆனால், கலைஞர் முதல்வராக இருந்தபோது, `பெண்களுக்கு நில உரிமையில் சமபங்கு கொடுக்க வேண்டும்' என்று சட்டம் இயற்றினார். அதனால், பெண்களால் புகுந்த வீடுகள் உள்ள கிராமத்தில் இருந்து, நிலம் உள்ள பிறந்த கிராமத்துக்கு போய்வந்து சாகுபடி உரிமை பெற முடியவில்லை.

ராஜாராம்
ராஜாராம்

அதேபோல், தந்தை இறந்ததும் வாரிசு சர்டிஃபிகேட் வாங்கினால், சகோதரிகளின் பெயரிலும் கூட்டுப் பட்டா வரும் என்று சகோதரர்கள் பட்டா மாறுதல் செய்யாமலேயே நிலத்தில் சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டது. அதேநேரம், இறந்த தந்தை பெயரிலேயே நில உரிமை தொடர்ந்ததால், விவசாயக் கடன், மானியம், அரசு உதவி, பிரதமர் விவசாயிகளுக்கு அறிவித்துள்ள ரூ. 2000 திட்டம் என எதுவும் பெற முடியவில்லை. அதேநேரம், சகோதரிகளுக்கு தெரியாமல் சகோதரர்கள் நிலத்தை தாங்களாகப் பிரித்துக்கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கிறது.

இன்னொருபக்கம், கிராம மக்கள் கல்வியில் முன்னேறிய காரணத்தால், சகோதர்களில் ஒருவர் அல்லது இருவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றனர். அவர்களின் குழந்தைகள் மேலும் படித்து, வெளியூரியிலோ, வெளிநாட்டிலோ தங்கும் நிலை ஏற்பட்டது. அதனால், அவர்கள் கிராமங்களில் உள்ள தங்கள் நிலங்களில் நேரடியாக விவசாயம் செய்வதில்லை. ஆனால், அவர்களின் குடும்ப நபர்கள் பெயரில் பட்டா மட்டும் உள்ளது. இதனால், பெரும்பாலானோர் குத்தகைக்கோ, ஒத்திக்கோ நிலத்தை கிராமங்களில் உள்ள விவசாயக் கூலிகளிடம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது, அந்த நிலத்தில் பாடுபடும் விவசாயிகள் பெயரில் பட்டா இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி, தமிழ்நாட்டில் உள்ள 60 சதவிகிதம் விவசாய நிலங்களில் இந்த நிலை தொடர்கிறது. சகோதரிகளின் குடும்ப உறுப்பினர்களால் தற்போது நிலத்தில் சாகுபடி செய்பவர் பல தொல்லைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. அடுத்து, பரம்பரை நிலமில்லாமல் நிலத்தை வாங்கியவர் பெயருக்கு நிலம் பட்டா மாற்றப்படவில்லை. கம்ப்யூட்டரில் நில உரிமையாளர் பெயர்கள் தப்பும் தவறுமாகப் பிழையாக இருக்கிறது. இப்படி, தமிழகத்தில் 60 சதவிகிதம் நிலங்களில் முழு உரிமை உள்ளவர்கள் பெயர் இல்லை. இதைச் சீர்செய்ய முந்தைய அரசுகள் செய்த முயற்சிகள் முழுமை பெறவில்லை. இப்படி, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு பேர்களின் பெயர்களில் சொத்து உரிமை இல்லை என்பதை பிரதமர் மோடியே கூறியுள்ளார். அதனால், தற்போது நிலத்தை சாகுபடி செய்பவர்களுக்கு நில உரிமை கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.

விவசாய நிலம்
விவசாய நிலம்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: இந்த 20 முக்கிய விஷயங்களை கவனிச்சீங்களா?

இதற்கான சாத்தியத்தை அறிஞர்கள் அமர்ந்து பேசி வடிவமைக்க வேண்டும். நடைமுறை சாத்தியப் படுத்த வேண்டும். இந்தத் தலைமுறையில் நில உரிமைகள் வாரிசுகள் அடிப்படையில், மேலும் அதிக கூட்டுப் பட்டாவாகவும் மாறிவிடும். உழுபவனுக்கே உரிமையில்லாத நிலமாக ஆகிவிடும். இந்த வகையில், வேளாண்மையைக் கூட்டுப் பண்ணையமாக மாற்றி நில உரிமையாளர்களை பங்குதாரர் ஆக்கி, புதுமை வேளாண் புரட்சியைக் கொண்டு வர நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான், வேளாண்மை சீரும் சிறப்புமாக நடைபெறும். வருங்காலத்தில் விவசாயம் வெற்றிகரமான, லாபம் தரக்கூடிய தொழிலாக மாறும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு