சமூகம்
Published:Updated:

“விற்க வழியில்லை... வீணாகும் விளைபொருள்கள்!”

விளைபொருள்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
விளைபொருள்கள்

கதறும் விவசாயிகள்... கண்டுகொள்ளாத அரசு

‘‘போலீஸ் பந்தோபஸ்து, வயதுவாரியாக நேரக் கட்டுப்பாடு... என கொரோனா கொடூரத்துக்கு மத்தியிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து மது விற்பனை செய்வதற்கு ஆர்வம்காட்டும் அரசு, அதில் கொஞ்சமேனும் விளைபொருள்களை விற்பனை செய்வதற்குக் காட்டியிருக்கலாமே!’’ - தமிழக விவசாயிகள் ஆதங்கம் இது.

எத்தனை நாள்கள் வீட்டில் முடங்கி இருக்கச் சொன்னாலும் இருக்கலாம்... ஆனால், உணவுப் பொருள்கள் வேண்டுமே! அதற்காக இந்த இக்கட்டான நேரத்திலும், அக்னி வெயிலில் வயலில் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். ஊரடங்கு காலத்தில் வயல்களில் வேலை செய்ய கூலி ஆள்கள் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், குடும்பத்தினருடன் வயலில் உழைக்கின்றனர் விவசாயிகள். இதையெல்லாம்கூட விவசாயிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களை நிலைகுலையவைப்பது, விற்பனைதான். விவசாய விளைபொருள்களை விற்பனை செய்ய உதவுவதற்காக அரசு சார்பில் மாவட்டவாரியாக செல்போன் எண்களைக் கொடுத்திருந்தாலும், அவை விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு உதவவில்லை.

அழுகிய வாழை... கருகும் இலைகள்!

தமிழகத்தில் 84,600 ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது விற்பனை செய்ய முடியாமல் வாழைமரங்கள், இலைகள், பழங்கள் வயலிலேயே கருகிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் சுமார் 60,000 ஹெக்டேரில் நெல், சுமார் 9,000 ஹெக்டேரில் வாழை, 3,000 ஏக்கரில் வெங்காயம் மற்றும் பூ வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் விளைந்து அறுவடைக்கு தயார்நிலையில் இருந்தபோதுதான், ஊரடங்கு உத்தரவு வெளியானது. அதனால் விற்பனை செய்யவதில் பெரும்சிக்கல் உருவாகிவிட்டது.

இதுகுறித்துப் பேசிய குழுமணி விவசாயி பிரசன்னா, ‘‘கால்நடைகளுக்கு தீவனம்கூட வாங்க முடியலை. இங்கு வாழை அதிகம் விளையுது. அதிகளவு விளைஞ்ச நேந்திரம் வாழையை கேரளா, பெங்களூருக்கு அனுப்பிட்டு இருந்தோம். ஊரடங்கு உத்தரவால, அறுவடை செஞ்ச வாழையை அனுப்ப முடியலை. அதனால அறுவடை செய்யாத வாழைகள் வயல்லயே அழுகிக்கிட்டு இருக்கு. தினமும் ஹோட்டல்களுக்கு வாழை இலை அனுப்பிவைப்போம். இப்ப அதுக்கும் வழியில்லை. இலையெல்லாம் சருகாகிப்போகுது. அதே நிலைதான் நெல்லுக்கும். கொள்முதல் செய்றதுல பல குளறுபடிகள் இருக்குது’’ என்றார் வேதனையுடன்.

திருச்சி மட்டுமல்ல ஈரோடு, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் அதிக நஷ்டத்தைச் சந்தித்துவருகிறார்கள்.

“விற்க வழியில்லை... வீணாகும் விளைபொருள்கள்!”

‘‘காய்கறிகளுக்கு விலையில்லை...’’

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ், ‘‘எனக்கு மூணு ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கரில் தக்காளி, ஒரு ஏக்கரில் கத்திரி பயிரிட்டோம். ஒரு நாள்விட்டு ஒரு நாள் கத்திரியும் தக்காளியும் பறிச்சு, மினிடோர் வண்டில ஏத்தி தாரமங்கலம் மார்க்கெட்டுக்குக் கொண்டுபோய் மொத்த வியாபாரிங்ககிட்ட விற்பனை செய்வேன். ஊரடங்கால் காய் பறிக்க ஆளுங்க வர்றதில்லை. போக்குவரத்துத் தடையால மினிடோரும் வர்றதில்லை.

இதனால குடும்பத்தோடு வயல்ல இறங்கி காய்களைப் பறிச்சு, டூவீலர்ல மார்க்கெட்டுக்குக் கொண்டுபோறேன். அங்க போனா, விலை கிடைக்கிறதில்லை. ஒரு கூடை கத்திரிக்காயை 50 ரூபாய்க்கும், ஒரு கூடை தக்காளியை 100 ரூபாய்க்கும் கொடுத்துட்டு வந்தேன். அதுக்குமேல அறுவடை செய்யவே மனசு இல்லை. இந்த ஊரடங்கால எனக்கு மட்டும் 50,000 ரூபா நஷ்டம். இதே நிலைமையிலதான் பெரும்பாலான விவசாயிகள் இருக்காங்க’’ என்றார் வருத்தமாக.

விளைபொருள்கள்
விளைபொருள்கள்

கண்ணீரில் மிளகாய் விவசாயிகள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத் துக்கு நிகராக உள்ளது, மிளகாய் விவசாயம். மூன்று ஆண்டுகால வறட்சிக்குப் பிறகு, கடந்த ஆண்டுதான் மழை பெய்து நெல் விளைச்சல் அதிகமானது. அவற்றை அறுவடை செய்து விற்பனை செய்வதற்கு முன்னரே கொரோனா பாதிப்பு வந்துவிட்டது. இதனால் விளைந்த நெல்லை விற்க முடியவில்லை. இதனால், கோடை உழவுக்கான விவசாயப் பணிகளைத் தொடங்க வழியில்லை. மிளகாய் விளைச்சல் அதிகமாக இருந்தும், விற்பனை செய்ய முடியவில்லை. இதனால், மிளகாய் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

“விற்க வழியில்லை... வீணாகும் விளைபொருள்கள்!”

தர்ப்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தர்ப்பூசணி விவசாயிகள் அதிகளவு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஊரடங்கு தொடங்கிய பத்து நாள்களில் அறுவடைக்குக் காத்திருந்த தர்ப்பூசணிகள் வயலிலேயே வெடித்து அழுகிப்போயின. அதுபோல் வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட கொடிவகை பழப் பயிர்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 14,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தர்ப்பூசணிக்கு இழப்பீடு வழங்க, மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

பிரசன்னா - வெங்கடேஷ்
பிரசன்னா - வெங்கடேஷ்

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்!

காஞ்சிபுரம் பகுதியில் மழை காரணமாக உலர் களங்களில் சேமித்துவைக்கப்பட்ட ஆயிரக்கணக் கான நெல் மூட்டைகள் நனைந்தன. ‘கோணிப்பை பற்றாக்குறை மற்றும் போதிய அளவு நேரடி கொள்முதல் நிலையங்கள் இல்லாததும்தான் நெல் மூட்டைகள் மழையில் நனைய காரணம்’ என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டன. தற்போது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மொத்தம் 75 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் காஞ்சிபுரத்தில் மட்டும் 36 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. மூன்று நாள்களுக்கு ஒரு முறை கோணிப்பைகள் மீண்டும் திரும்பக் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளைபொருள்கள்
விளைபொருள்கள்

பலாதான் வாழ்வாதாரம்!

‘தானே’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போதுதான் மீண்ட கடலூர் பலா விவசாயி களுக்கு, அடுத்த இடியாக இறங்கியிருக்கிறது கொரோனா. இது தொடர்பாகப் பேசிய மாம்பழப்பட்டு விவசாயி கணபதி, ‘‘இந்த வருஷம் நல்ல விளைச்சல் இருந்ததால எல்லாத்தையும் வித்துடலாம்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, இப்ப பழத்தைக் கேட்கக்கூட ஆள் இல்லாமப் போயிடுச்சு. புள்ளைங்க படிப்பு, கல்யாணம், சடங்கு எல்லாத்துக்குமே பலா வருமானத்தைத்தான் நம்பியிருப்போம்.

பண்ருட்டியைச் சுற்றியிருக்கும் சுமார் 100 கிராமங்களுக்கு, பலாதான் வாழ்வாதாரம். 2012-ம் வருஷம் வீசின ‘தானே’ புயல்ல நிறைய பலா மரங்கள் வேரோடு சாஞ்சிடுச்சு. மிச்சம் இருந்த மரங்கள் மறு துளிர்விட்டு, கடந்த ரெண்டு வருஷமாத்தான் காய்க்கத் தொடங்குச்சு. ‘தானே’ புயலுக்கு முன்னால என்ன காய்ப்பு இருந்துச்சோ அது போன வருஷத்துல இருந்துதான் எங்களுக்குக் கிடைச்சது. வழக்கமா, சுமார் 12-13 கிலோ அளவுள்ள ஒரு பழத்தை 300 முதல் 350 ரூபாய் வரை விற்போம். ஆனா, இந்தமுறை விற்க முடியாம வந்த விலைக்கே கொடுத்துடுறோம்’’ என்றார் வருத்தமாக.

தமிழகம் முழுவதும் இதுதான் நிலை. விளைவிக்கப்பட்ட பொருள்கள் நுகர்வோரைச் சென்றடையாமல் ஒருபுறம் வீணாகிக்கொண்டிருக் கின்றன. இன்னொருபுறம், காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருள்கள் நுகர்வோருக்குக் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. விளைபொருள்களை விற்க முடியாததும், உரிய விலை கிடைக்காததும் அடுத்தடுத்த விவசாயப் பணிகளை பாதிக்கும். எனவே, வரும் மாதங்களில் உற்பத்தி குறைந்து, உணவுப்பொருள்கள் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

‘‘இந்த ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் திறப்பதில் காட்டிய அக்கறையில் கால் பங்கு அக்கறை காட்டியிருந்தாலும் விளைபொருள்களை சுலபமாகச் சந்தைப்படுத்தியிருக்கலாம். ‘பக்கத்து மாநிலத்தில் டாஸ்மாக் திறக்கிறார்கள். அதனால் நாங்களும் திறக்கிறோம்’ என்று சொல்லும் தமிழக அரசு, விளைபொருள்கள் அறுவடையில் பஞ்சாப் காட்டிய புயல் வேகத்தை ஏன் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை?’’ என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

‘நான் ஒரு விவசாயி’ என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், விளைபொருள்களை விற்பனை செய்வதில் உள்ள சிக்கலை சரிசெய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு இருக்காது!