Published:Updated:

`ஒரு பிரச்னையும் தீரவில்லை... இதில் காவிரி காப்பாளர் பட்டம் வேறா?' - கொதிக்கும் டெல்டா விவசாயிகள்

எடப்பாடி பழனிசாமி

டெல்டாவின் எதார்த்தம் அறியாமல், தமிழக ஆளுநரும் தனது பதவிக்குரிய மாண்பை மறந்து, இவ்வாறு பொய்யாகப் புகழலாமா என டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

`ஒரு பிரச்னையும் தீரவில்லை... இதில் காவிரி காப்பாளர் பட்டம் வேறா?' - கொதிக்கும் டெல்டா விவசாயிகள்

டெல்டாவின் எதார்த்தம் அறியாமல், தமிழக ஆளுநரும் தனது பதவிக்குரிய மாண்பை மறந்து, இவ்வாறு பொய்யாகப் புகழலாமா என டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ``டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றியதால், காவிரி காப்பாளர் என்ற பட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் பொருத்தமானவர்’’ எனப் புகழாரம் சூட்டினார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காவிரி பிரச்னைக்கு இன்னும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை. எண்ணெய்-எரிவாயு நிறுவனங்களின் செயல்பாடுகளால் இப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

காவிரி
காவிரி

ஆனால், இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், ஆளுங்கட்சியினர், இங்குள்ள ஒரு சில விவசாய சங்கங்களைத் தூண்டி விட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி காப்பாளர் என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார்கள். டெல்டாவின் எதார்த்தம் அறியாமல், தமிழக ஆளுநரும், தனது பதவிக்குரிய மாண்பை மறந்து, இவ்வாறு பொய்யாகப் புகழலாமா என டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக காவிரி பிரச்னை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு சட்டப்படியும் மரபுபடியும் தர வேண்டிய பங்கு நீரை கொடுக்க கர்நாடகம் மறுத்து வருகிறது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி, கெயில் உள்ளிட்ட எண்ணெய்-எரிவாயு நிறுவனங்களின் செயல்பாடுகளால், கடந்த 30 ஆண்டுகளாக டெல்டா விவசாயிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள்.

இந்த அவலங்களுக்கு இடையிலும் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், காவிரியைத் தொடர்பு படுத்தி நம் ஆட்சியாளர் களுக்கு பட்டம் சூட்டுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 1996-2001-ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு காவிரி கொண்டான் பட்டம் சூட்டப்பட்டது. 2011-2016 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பொன்னியின் செல்வி பட்டம் சூட்டப்பட்டது. கடந்த ஆண்டு தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, காவிரி காப்பாளர் பட்டம் சூட்டப்பட்டது.

கல்லணை அருகே மணல் குவாரி
கல்லணை அருகே மணல் குவாரி

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், ``காவிரி காப்பாளர் என்ற பட்டம், டெல்டாவில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் சேர்ந்து வழங்கிய பட்டம் அல்ல. ஒரு சிலர் தங்களது தனிப்பட்ட ஆதாயத்துக்காகவும் விருப்பத்தின் காரணமாகவும் தமிழக முதல்வருக்கு இந்தப் பட்டத்தை சூட்டி மகிழ்ந்தார்கள். இதை டெல்டா விவசாயிகள் வழங்கிய பட்டமாக எடுத்து கொள்ளக் கூடாது. வழக்கமாக ஆளுநர்கள் தங்களது உரையின் போது, அந்தந்த மாநில அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்போகும் திட்டங்கள் குறித்துதான் பேசுவார்கள். ஆனால், தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவிக்குரிய மாண்பை மறந்து, அ.தி.மு.க அமைச்சர் போல், முதல்வரை புகழ்ந்துள்ளார். அதுவும் காவிரி காப்பாளர் எனப் புகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாது’’ எனத் தெரிவித்தார்.

தஞ்சையைச் சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகி வெ.ஜீவக்குமார்

``காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமியற்ற வேண்டும் என்பது காவிரி டெல்டா மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். தொடர் போராட்டங் களுக்குப் பிறகு, கண்துடைப்புக்காக, மேம்போக்காக இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பல மாதங்களாகியும்கூட, இதற்கான விதிமுறைகளை உருவாக்க, தமிழக முதல்வர் ஆர்வம் காட்டவில்லை. காவிரி டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்திருந்தேன். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை எனத் தமிழக அரசு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் காரணமாகவே, இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனாலும்கூட இப்போது டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி-யின் செயல்பாடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக, தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே தீபாம்பாள்புரம் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெட்ரோலிய பொருள்கள் சார்ந்த தொழிற்சாலைகள் நிறைய உருவாகியுள்ளன.

காவிரி நீர்
காவிரி நீர்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எனச் சொல்வதைவிட பாதுகாக்கப்பட்ட பெட்ரோலிய மண்டலம் எனச் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய பங்கு நீரை, இதுவரை எடப்பாடி பழனிசாமி கேட்டுப் பெறவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அவலம் தொடர்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நீண்டகாலமாக நிரந்தர தலைவர் நியமிக்கப்படவில்லை. ஆய்வுக்கூட்டமும் முறையாக நடைபெறவில்லை. கல்லணைக்கு அருகிலேயே மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுவதால், பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததோடு, கல்லணை கட்டுமானத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கோ, காவிரி காப்பாளர் பட்டம் சூட்டி மகிழ்கிறார்கள்’’ எனக் கொந்தளித்தார்.