Election bannerElection banner
Published:Updated:

மும்முனை மின்சாரம்: தேர்தலுக்குப் பின் காற்றில் பறந்த எடப்பாடி வாக்குறுதி... கொதிக்கும் விவசாயிகள்!

போர்வெல்
போர்வெல்

குறிப்பாக தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் போர்வெல்லை நம்பி சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படாததால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது கோடை நெல் சாகுபடி படுவேகமாக நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்திருந்தார். இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. ஆனால் தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இரவு 12 மணி முதல் மறுநாள் பகல் 12 மணிவரை வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரம் கடந்த ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து 24 மணி நேரம் வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற கேள்வி இருந்து வந்தது. ஒரு சில பகுதிகளில் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நாள் வரை 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பன்னிரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

போர்வெல்
போர்வெல்

குறிப்பாக தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் போர்வெல்லை நம்பி சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படாததால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவசாயிகள் சிலர், ``தேர்தல்ல விவசாயிகளோட வாக்குகளை ஈர்க்குறதுக்காகத்தான் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்னு ஆளுங்கட்சி தரப்பில் வாக்குறுதி கொடுத்திருக்காங்க. இது ஒரு ஏமாற்று வேலை. நாங்க ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டோம். அதுமாதிரியே ஆயிடுச்சு. இப்ப 12 மணி நேரம்தான் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் கிடைக்குது. இதுவும் பாத்தீங்கனா, ரொம்ப லோ வோல்டேஜ். இந்த மாதிரி இருக்கறப்ப நாங்க எப்படி மோட்டார் போட்டு தண்ணீர் பாய்ச்ச முடியும்? காயில் தீஞ்சு போயிடும். இதனால பயிருக்கு தண்ணீர் பாய்ச்சிறது பெரும்பாடாக இருக்கு. கடந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிறைய விளைச்சல் கிடைச்சும்கூட கொள்முதல் நிலையங்களில் நெல்லை ஒழுங்கா, உரிய நேரத்துல கொள்முதல் பண்ணலை. அதனால விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். சம்பா, தாளடி பட்டத்துல நிவர், புரெவி புயல்கள், மார்கழி மாதம் பருவம் தவறி பெய்த மழையாலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. விவசாயிகளுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி. சரி, போனது போகட்டும்... கோடை நெல் சாகுபடி செஞ்சாவது, ஓரளவுக்கு வருமானம் பார்க்கலாம்னு நினைச்சுகிட்டு இருந்தோம். ஆனா இப்ப நிலவக்கூடிய மின் தட்டுப்பாட்டை பார்த்தால் ரொம்ப கவலையா இருக்கு.’’ எனத் தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளரும் திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயியுமான சுகுமாறன், ``எங்களோட திருவையாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏப்ரல் 1-ம் தேதி அன்னைக்கு மட்டும்தான் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் கிடைத்தது. அதற்குப் பிறகு 17 மணி நேரம், 15 மணி நேரம் 10 மணி நேரம்னு குறைஞ்சிக்கிட்டே வந்துச்சு. விவசாயத்துக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்னு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னதை நம்பி இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் பலர் கோடை நெல் சாகுபடிக்காக, நாற்று தயார் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. இப்பவே இந்த அளவுக்கு மின்தட்டுப்பாடு இருக்குனா, அடுத்த மாசம் எல்லாம் கடுமையான கோடை நிலவுறப்ப, நிலைமை என்ன ஆகுமோ தெரியல. எதை நம்பி நாற்று நடவு செய்ய முடியும்?

Farmer
Farmer

திருவையாறு மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் சாகுபடி மட்டும் இல்லாமல் வாழை, வெற்றிலை கொடிக்கால், காய்கறிகள், கருணைக் கிழங்குனு பலவிதமான பயிர்கள் சுமார் 50,000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருக்கு. இது எல்லாத்துக்குமே இப்போதைக்கு ஆழ்துளைக் கிணறு மூலம்தான் தண்ணீர் பாய்ச்சியாகணும். இப்ப மின்சாரம் சரியான நேரத்துக்கு கிடைக்காததால் விவசாயிகள் திண்டாடிக்கிட்டு இருக்கோம்.

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி இது மாதிரியான பகுதிகளில் போர்வெல் அதிகம். அந்தப் பகுதி விவசாயிகள் கோடை நெல் சாகுபடிக்காக நாற்று தயார் செய்து நடவும் செஞ்சுட்டாங்க மும்முனை மின்சாரம் ஒழுங்கா கிடைக்காததனால் எப்படி பயிரை காப்பாற்றப் போறோமோனு விவசாயிகள் ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இது சம்பந்தமா மின்சார வாரிய அதிகாரிகள்ட்ட, `24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்னு தமிழக அரசு அரசாணை போட்டு இருக்கு; ஆனா நீங்க அதை பின்பற்றாமல் இருக்கீங்களே?'னு கேட்டோம். `எங்க மேலதிகாரி என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கோம்'னு சொல்றாங்க.

Farmer
Farmer
AP / Channi Anand
மும்முனை மின்சாரம்: `தேர்தல் வரைக்கான நாடகமா எடப்பாடி?' - கேள்வியெழுப்பும் விவசாயிகள்

இதுக்கான உண்மையான காரணம் எங்களுக்கு நல்லாவே தெரியும். தமிழ்நாடு மின் மிகை மாநிலம்னு நம் ஆட்சியாளர்கள் வெளியில் பெருமை அடிச்சிக்கிறாங்க. ஆனால் மின்சார உற்பத்தி போதிய அளவில் இங்கே இல்லைங்கறதுதான் யதார்த்த உண்மை. மின் விநியோகத்திற்கான சாதனமும் தரமான நிலையில் தயார் நிலையில் இல்லை. 24 மணி நேர, மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான தகுதியோ, தரமோ இங்கே உள்ள மின்சாதனங்களுக்கு இல்லை. ஊழல் முறைகேட்டாலும் அலட்சியத்தாலும் மின்சாரக் கட்டமைப்பு ரொம்ப மோசமான நிலையில் இருக்கு. இதனால்தான் தற்போதைய அதிமுக அரசு தன்னோட வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் இருக்கு. ஆனால் இதனால் பாதிக்கப்படுவது என்னவோ விவசாயிகள்தான்’’ எனத் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு