Published:Updated:

பெட்ரோ கெமிக்கல் மண்டலம்: அச்சத்தில் 50,000 குடும்பங்கள்; போராட்டத்துக்கு ஆயத்தமாகும் விவசாயிகள்!

``பொதுமக்கள் மத்தியில் பாதிப்பு குறித்து எடுத்துரைப்பதற்காக நவம்பர் 13-ம் தேதி சம்பந்தப்பட்ட கிராமங்களில் மக்கள் சந்திப்பு பிரசார பயணங்களை மேற்கொள்ள இருக்கிறோம். விவசாயிகள் தி.மு.க மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து உள்ளனர். அதற்கான நம்பிக்கையோடு செயல்பட அரசு முன் வர வேண்டும்."

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் விவசாய பூமி என்பதால், இதைப் பாதுகாக்கும் வகையில், இந்தப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டமியற்றப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் முரணாகச் செயல்படும் விதமாக, தற்போது, தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு தற்போது, ஓர் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 விவசாயம்
விவசாயம்
நாகையில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை: இது நியாயமா முதல்வரே?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ-கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அடங்கிய தொகுப்பை உருவாக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்காக இந்த ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய 50 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெட்ரோ-கெமிக்கல் மண்டலம் அறிவிப்பாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பர் 16-ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறும் எனத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், ``காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மீத்தேன் திட்டத்துக்கு 2011-ம் ஆண்டு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி லிமிடெட் என்கிற தனியார் நிறுவனத்தோடு அன்றைய துணை முதலமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இத்திட்டம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் இதை எதிர்த்து 10 ஆண்டுக்காலமாக விவசாயிகள், பொதுமக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளோம்.

பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை
பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை

10 ஆண்டுக்காலம் தொடர் போராட்டத்தால் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் எடுக்கிற பணிகளிலிருந்து ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கடந்த 2020-ம் ஆண்டு அறிவித்ததையடுத்து விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினத்தையொட்டி இருக்கிற நரிமணம் சி.பி.சி.எல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் என்ற பெயரில் முட்டம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம், நரிமணம், பனங்குடி ஆகிய கிராமங்களில் விளை நிலங்களை விவசாயிகள் ஒப்புதலின்றி அச்சுறுத்தி கையகப்படுத்த தமிழக அரசு முயன்று வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது திருமருகல் ஒன்றியத்தில் பெரும்பகுதியான கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டு டெண்டர் கோரியுள்ளது. இந்த அறிவிப்பால் 50,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகள், விளை நிலங்களை இழந்து வாழ்வாதாரத்தைக் கைவிட்டு அகதிகளாக வெளியேறி வெளியூர்களில் தஞ்சமடையும் பேராபத்து ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு உடனடியாக இந்த திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற நவம்பர் 16-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உ ண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

 விவசாயிகள் ஆலோசனை
விவசாயிகள் ஆலோசனை
``முல்லைப்பெரியாறு குறித்து பேச ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு உரிமை இல்லை!" - அணை ஆய்வுக்குப்பின் துரைமுருகன்

பொதுமக்கள் மத்தியில் பாதிப்பு குறித்து எடுத்துரைப்பதற்காக நவம்பர் 13-ம் தேதி சம்பந்தப்பட்ட கிராமங்களில் மக்கள் சந்திப்பு பிரசார பயணங்களை மேற்கொள்ள இருக்கிறோம். விவசாயிகள் தி.மு.க மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். அதற்கான நம்பிக்கையோடு செயல்பட தமிழக அரசு முன் வர வேண்டும். 10 ஆண்டுக்காலம் போராடி உரிமைகளை மீட்டு எடுத்திருக்கிறோம். இந்நிலையில் மீண்டும் பெட்ரோகெமிக்கல் மண்டலம் என்ற பெயரில் விவசாயிகளை புதைகுழிக்குள் தள்ளுவதை அனுமதிக்க மாட்டோம். இதை அனுமதித்தால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை வரையிலும் பேரழிவு திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் நடவடிக்கை தொடரும். டெல்டாவில் இனியும் அனுமதிக்க முடியாது. இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு