பிரீமியம் ஸ்டோரி
‘உழவன் செயலி’, தமிழக வேளாண்துறையின் அனைத்துத் தகவல்களையும் உள்ளங்கையில் வைத்துக்கொள்ள விவசாயிகளுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

வேளாண்துறை தொடர்பான திட்டங்கள், மானிய விவரங்கள், வாடகை இயந்திரங்கள், இயற்கை இடுபொருள்கள், இயற்கை விவசாயம் என விவசாயத்தைப் பற்றி அறிந்துகொள்ள விவசாயிகளுக்குத் துணைபுரிகிறது.

வாங்க, விற்க வழிகாட்டும் உழவன் செயலி!

அந்த வரிசையில் இந்த கொரோனா காலத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை எளிதாக விற்கவும், வியாபாரிகள் வாங்கவும் ‘உழவன் இ-மார்க்கெட்’ என்ற பெயரில் ஓர் அம்சம் ‘உழவன் செயலி’யில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய வேளாண்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, “தமிழக அரசின் வேளாண் சார்ந்த திட்டங்கள், அறிவிப்புகள், பணிகள், வேளாண் அலுவலர்களின் தொடர்பு எண்கள், வானிலை, விதைகள் இருப்பு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், அணையின் நீர்மட்டம், சந்தை விலை நிலவரம் எனப் பல அம்சங்களோடு விவசாயிகளுக்கு உதவிவருகிறது வேளாண் துறையின் உழவன் செயலி.

உழவன் செயலி
உழவன் செயலி

இந்தச் செயலியில் தற்போது கொரோனா காலத்தில் விவசாயிகளின் விளை பொருள்களை விற்பனை செய்யும் வகையில், ‘உழவன் இ-மார்க்கெட்’ (உழவன் இ சந்தை) என்ற ஓர் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க இருக்கும் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள் உள்ளிட்ட விளைபொருள்களை இந்தச் செயலி வழியாக விற்கலாம். விளைபொருள்களை விற்கும் விவசாயிகள் தங்களுடைய பெயர், மாவட்டம், செல்போன் எண் கொடுத்தால் ஓ.டி.பி (OTP) எண் ஒன்று அனுப்பப்படும். அதைப் பதிவிட்டு உள்ளே சென்று விற்கப்படும் பொருள்களின் இருப்பு விவரங்களை மாவட்டவாரியாகப் பதிவிடலாம். வாங்குபவர்களும் உள்ளே சென்று மாவட்டவாரியாகப் பொருள்களின் இருப்பு விவரங்களை அறிந்து வாங்கிக்கொள்ளலாம்” என்றவர் நிறைவாக,

உழவன் செயலி
உழவன் செயலி

“வாங்குபவர் விற்பவர் இருவருக்குமிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துவது மட்டுமே இந்தச் செயலியின் நோக்கம். இதில் வேளாண்மைத்துறை வர்த்தகத் தகவல்கள், நிதி சார்ந்த எந்தவொரு தொடர்பையும் வைத்துக்கொள்ளாது. அதனால் விவசாயிகளும் வாங்குபவர்களும் விலையை நன்கு உறுதி செய்துகொண்டு பொருள்களை வாங்குவது, விற்பது ஆகியவற்றில் ஈடுபடலாம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாங்க, விற்க வழிகாட்டும் உழவன் செயலி!

செயலியைத் தரவிறக்கம் செய்ய : https://bit.ly/2HfRyLu கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து செயலியைத் தரவிறக்கம் செய்யலாம்.

“ஒரே நாள்ல விக்க முடிஞ்சுது!”

ழவன் இ மார்க்கெட் மூலம் பொருள்களை விற்பனை செய்திருக்கும் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த பொன்னாங்குப்பத்தைச் சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன் “உழவன் ஆப் மூலமா பொருள்களை விக்கலாம்னு தகவல் கிடைச்சுது. உடனே, `30 மூட்டை மணிலா இருக்கு’னு பதிவு செஞ்சேன். ஒரு வியாபாரி மூலமா ஒரு மூட்டை 2,500 ரூபாய்னு வித்தேன். இந்த கொரோனா காலத்துல எப்படி விக்கிறதுனு முழிச்சிக்கிட்டு இருந்தேன். அதுக்கு உழவன் ஆப் ரொம்பவே உதவிச்சு” என்றார். 

ரவிச்சந்திரன், ரவீந்திரகுமார்
ரவிச்சந்திரன், ரவீந்திரகுமார்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த விவசாயி ரவீந்திரகுமார், “என்கிட்ட 3,000 தேங்காய் இருந்துச்சு. உழவன் ஆப் மூலமா விக்க முடியும்னு தகவல் தெரிஞ்சுது. உடனே அதுல போட்டுவிட்டேன். போட்ட ஒரு நாள்ல வியாபாரி ஒருத்தர் ஒரு தேங்காய் 16 ரூபாய்னு வாங்கிக்கிட்டார். விலை குறைவுன்னாலும், இந்த கொரோனா நேரத்துல விக்க முடிஞ்சுதேனு ஒரு சந்தோஷம்” என்றார்.

ஜெ.லெவின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு