Published:Updated:

`இத்தனை நாள் ஒத்துழைத்த இயற்கை அன்னை.. இனி?!'- பொங்கல் மறுநாள் நாகை விவசாயிகளுக்கு நேர்ந்த சோகம்

அறுவடை பாதிப்பு
அறுவடை பாதிப்பு

கடந்த பல ஆண்டுகளாக சம்பா பயிர்கள் வறட்சியால் கருகி அல்லது வெள்ளத்தால் அழிந்த நிலை மாறி இந்தாண்டு எல்லாப் பகுதிகளிலும் விளைச்சல் நன்றாக இருந்ததால், இந்த ஆண்டு பொங்கலை அனைவருமே மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

இந்த ஆண்டு சாகுபடி செய்த சம்பா நெற்பயிர்கள் அமோக விளைச்சல் தந்ததால் சந்தோசமடைந்த விவசாயிகள், பொங்கல் முடிந்து அறுவடை செய்யத் தயாராக இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த திடீர் மழையால் விளைச்சல் எல்லாம் சாய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

அறுவடை பாதிப்பு
அறுவடை பாதிப்பு

டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்ய ஆரம்பித்த நாள் முதல் அவ்வப்போது விவசாயத்திற்கு தேவையான மழை பொழிந்தது. மேட்டூர் அணையிலிருந்தும் காவிரியிலிருந்தும் சரியான அளவில் எல்லாப் பகுதிகளுக்கும் நீர் வந்து சேர்ந்தது. இதனால் தண்ணீர்ப் பிரச்னையின்றி விவசாயத்தை மிகச் சிறப்பாகவே செய்திருந்தனர். கழனி எங்கும் கதிர் முற்றி சாய்ந்து அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது.

கடந்த பல ஆண்டுகளாக சம்பா பயிர்கள் வறட்சியால் கருகி அல்லது வெள்ளத்தால் அழிந்த நிலை மாறி இந்தாண்டு எல்லாப் பகுதிகளிலும் விளைச்சல் நன்றாக இருந்ததால், இந்த ஆண்டு பொங்கலை அனைவருமே மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். பொங்கல் முடிந்து அறுவடைக்குத் தயாரான நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த திடீர் கனமழையால் நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் கிடப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விவசாயி கபிலன்
விவசாயி கபிலன்

இதுபற்றி நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த நல்லாடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கபிலனிடம் பேசினோம். "விதை விட்ட நாள் முதல், நடவு செய்து களை எடுத்து உரங்கள் போட்ட எல்லா நேரத்திலும் பயிர்களுக்குத் தேவையான மழை பொழிந்தது. அதுபோல் காவிரி நீரால் ஆறு, குளம், வாய்க்கால் எல்லாம் நீர் நிறைந்து வயல்வெளியைப் பார்க்கவே மனசு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பொங்கல் நாளில் அறுவடைக்குத் தயாராகி விட்டது என்றாலும் அறுவடை இயந்திரங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் விடுமுறையில் சென்று விட்டதால், நேற்று அறுவடை செய்யலாம் என நாள் குறித்து இருந்தேன்.

ஆனால் எதிர்பாராத வகையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த திடீர் மழையால் விளைச்சல் சாய்ந்து தண்ணீரில் கிடக்கிறது. 4 ஏக்கரில் ரூபாய்.60,000 செலவு செய்த சாகுபடி கைக்கு எட்டாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன். இத்தனை நாள் விவசாயத்திற்கு ஒத்துழைத்த இயற்கை அன்னை, மகசூல் கைக்கு வரும் வேலையில் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். என்ன நடக்குமோ தெரியவில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு