Published:Updated:

ஹெக்டேருக்கு 10,000 கிலோ..!பாரம்பர்ய நெல் விளைச்சல் போட்டியின் வெற்றியாளர்கள்!

போட்டியின் வெற்றியாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
போட்டியின் வெற்றியாளர்கள்

சாதனை

ஹெக்டேருக்கு 10,000 கிலோ..!பாரம்பர்ய நெல் விளைச்சல் போட்டியின் வெற்றியாளர்கள்!

சாதனை

Published:Updated:
போட்டியின் வெற்றியாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
போட்டியின் வெற்றியாளர்கள்

ற்போது நடைமுறையில் சாகுபடிக்காகப் பயன்படுத்தப்படும் நெல் ரகங்களில் அத்தியாவசிய சத்துகள் போதுமான அளவு கிடைக்காததால், மருத்துவக்குணம் நிறைந்த பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் பாரம்பர்ய நெல் விளைச்சல் போட்டி நடத்தப் படுகிறது. அதிக மகசூல் அடிப்படையில் ‘பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பர்ய நெல் பாதுகாவலர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. முதல் பரிசு 1,00,000 ரூபாய். இரண்டாம் பரிசு 75,000 ரூபாய். மூன்றாம் பரிசாக 50,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான பாரம்பர்ய நெல் விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி, கறுப்புக்கவுனி ரகம் சாகுபடி செய்து ஹெக்டேருக்கு 10,672.5 கிலோ மகசூல் எடுத்தார். அவருக்கு முதல் பரிசும், திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டாரம் களக்குடி கிராமத்தைச் சேர்ந்த பொன்னு புதியவன், வாசனை சீரகச்சம்பா ரகம் சாகுபடி செய்து ஹெக்டேருக்கு 10,200 கிலோ மகசூல் பெற்று இரண்டாம் பரிசும், திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரத்தைச் சேர்ந்த லெட்சுமி தேவி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா ரகத்தைச் சாகுபடி செய்து ஹெக்டேருக்கு 10,024.875 கிலோ மகசூல் பெற்று மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர். இந்த விருது மற்றும் பரிசுத் தொகையைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் வழங்கினார். பரிசு பெற்ற விவசாயிகளுடைய நேர்காணல் இங்கே இடம்பெறுகிறது.

பொன்னு புதியவன்
பொன்னு புதியவன்

பொன்னு புதியவன் - இரண்டாம் பரிசு

‘‘அடிப்படையில விவசாயக் குடும்பம். ‘ஐ.டி.ஐ மோட்டார் மெக்கானிக்’ முடிச்சுட்டு வெளிநாட்டுல வேல செஞ்சுட்டு இருந்த நான், திரும்ப வந்து இயற்கை விவசாயத்த கையில் எடுத்தேன்.

என்னோட தோட்டத்துக்குப் பக்கத்துல ஷேக் அப்துல்லாங்கிற விவசாயி இருக்கார். அவர்தான் நான் இயற்கை விவசாயத்தைக் கையில் எடுக்கக் காரணம். அவர்தான் பசுமை விகடனையும் அறிமுகப்படுத்தினார். சாகுபடிக்குத் தேர்ந்தெடுத்த நிலத்துல மூணு தடவ பலதானியம் விதைச்சு மடக்கி உழுதேன். மண்ணுல சத்து ஏறிடுச்சுன்னு எனக்கு நம்பிக்கை வந்த பிறகுதான் விவசாயத்தை ஆரம்பிச்சேன்.

முதல்ல மாப்பிளைச் சம்பா சாகுபடி செஞ்சேன். ஓரளவுதான் மகசூல் கிடைச்சது. திரும்பவும் மாப்பிளைச்சம்பா சாகுபடி செஞ்சேன். முதல் தடவையைவிட ரெண்டாவது தடவை நல்ல மகசூல் கிடைச்சது. தொடர்ந்து வெள்ளைப் பொன்னி, வாசனைச் சீரகச் சம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார் ரகத்தைச் சாகுபடி செஞ்சேன். விவசாயத்துக்கு அடிப்படையே மண்வளம்தான். ஒவ்வொரு வருஷமும் நெல் சாகுபடி செய்றதுக்கு முன்னால 5 நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, பலதானியம் விதைச்சு மடக்கி உழுது மண்ணை வளப்படுத்திடுவேன். மண் வளமானாலே மகசூல் தன்னாலக் குவிஞ்சிடும்’’ என்றவர், தனது சாகுபடி முறைகளைப் பகிர்ந்துகொண்டார். அவை பாடமாக இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

பொன்னு புதியவன்
பொன்னு புதியவன்

“13 நாள்களுக்குள் நாற்றங்காலிலிருந்து நாற்றை எடுத்து வயலில் நடவு செய்துவிட வேண்டும். நாற்றுக்கு நாற்று 1 அடி, வரிசைக்கு வரிசை 1 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 25-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து செறிவூட்டப்பட்ட அசோஸ் பைரில்லம் கரைசலைத் தண்ணீரில் கலந்து விட வேண்டும். 200 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ நாட்டுச்சர்க்கரையைத் தூளாக்கிப் போட்டு 4 நாள்கள்வரை வைத்திருக்க வேண்டும். தினமும் காலை, மாலையில் கலக்கி விட வேண்டும். இப்படிச் செய்தால் செறிவூட்டப் பட்ட கரைசலாக மாறிவிடும்.

பால் பிடிக்கும் நேரத்தில் 200 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் அசோஸ்பைரில்லம், 1 லிட்டர் பாஸ்போ பாக்டீரியா கலந்து ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரையைத் தூளாக்கிப் போட்டு 4 நாள்கள் வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட கரைசலா மாறிடும். அதைப் பாசன தண்ணீரில் கலந்து விட வேண்டும்.

பாரம்பர்ய ரகத்தைப் பொறுத்த வரையிலும் பெரிதாக இருக்காது. என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25-ம் நாளில் ஒரு ஏக்கருக்கு 3 முதல் 4 விளக்குப் பொறி வைக்க வேண்டும். மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணிவரைக்கும் விளக்குப் பொறி வயலில் இருக்க வேண்டும். 10 மணிக்கு மேல் நன்மை செய்யும் பூச்சிகள் வரும்’’ என்று பாடமெடுத்தவர், நிறைவாக, நான் மேலே சொன்ன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதுதான் நல்ல மகசூல் எடுத்ததற்கான வெற்றிச் சூத்திரம்” என்றார்.

அதிக ஊட்டம் தேவையில்லை!

லெட்சுமி தேவி – மூன்றாம் பரிசு

‘‘விவசாயத்துக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது. அப்பா, தலைமையாசிரியர். நான், ‘பி.எஸ்.என்.எல்’லில் வேலை பார்த்துக் கிட்டிருந்தேன். வேலைக்குப் பஸ்ல போகும் போதும் வரும்போதும் வயக்காடுகள்ல பச்சைப் போர்வை போத்தினது மாதிரி நெல் கதிருங்க அசைஞ்சாடிக்கிட்டு இருக்குறதையும், நாத்து வாசனையையும் பார்க்கும்போது நாமளும் விவசாயம் செய்யணும்னு மனசுக்குள்ள தோணும். அதிக வேலைப்பளு, உடல்நிலை காரணமா 2010-ம் வருஷம், வி.ஆர்.எஸ் வாங்கிட்டேன்.

லெட்சுமி தேவி
லெட்சுமி தேவி

அதைத்தொடர்ந்து, ‘நான் விவசாயம் செய்யப்போறேன்’னு வீட்ல சொன்னதும் சிரிச்சாங்க. அதைப்பத்தி கவலைப்படாம விவசாயம் செய்யணும்கிறதுல உறுதியா இருந்தேன். இயற்கை விவசாயம் செய்யுற யாரையும் எனக்குத் தெரியாது. ‘யூடியூப்’ மூலமாத்தான் இயற்கை விவசாயத் தைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். அதுலயே நம்மாழ்வார் ஐயாவோட உரைகள், இயற்கை விவசாயம் பத்தி தெரிஞ்சுகிட்டேன். பசுமை விகடனையும் வாசிக்க ஆரம்பிச்சேன்.

முதல்ல 40 சென்ட் நிலம் வாங்கி, படிப்படியா ஆறரை ஏக்கர் வரைக்கும் அந்த நிலத்தைச் சுத்தியே வாங்கினேன். அந்த நிலங்கள்ல தொழுவுரம், கனஜீவாமிர்தம் போட்டு ரெண்டு வருஷம் மண்ணை வளப்படுத்தினேன். பால்காரர்கிட்ட சொல்லி வச்சு 4 நாட்டு மாடுகளை வாங்கினேன். ‘அம்பை-16’ ரக நெல் சாகுபடி செஞ்சேன். சொல்லிக்கிற மாதிரி மகசூல் இல்ல. சரஸ்வதி மஹால் நூலகத்துல ஓலைச்சுவடிகள் பாதுகாப்புத் துறையில வேலை செஞ்ச பெருமாள் சார் மூலமா தஞ்சாவூர்ல ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, ஒரத்தநாட்டுல மாப்பிள்ளைச் சம்பா நெல் விதைகளை வாங்குனேன்.

அப்படியே ஒவ்வொரு ரகமா சேகரிக்க ஆரம்பிச்சேன். கொட்டாரச்சம்பா, காலாநமக், பால்குடவாழை, பனங்காட்டு குடவாழை, மிளகுச்சம்பா, பூங்கார், கருத்தக்கார், சித்திரைக் கார், கறுப்புக்கவுனி, ஒரிசா குட்டை, ஒரிசா நெட்டை, ஒரிசா மணிச்சம்பா, ரத்தசாலி, வாசனைச் சீரகச்சம்பா, செங்கல்பட்டு சிறுமணிச் சம்பானு 36 ரகங்களைச் சேகரிச்சேன். இந்த 36 ரகங்களையும் 2 ஏக்கர்ல விதைக்காகப் போட்டு எடுத்தேன். 500 கிராம் முதல் 2 கிலோ வரை விதை நெல் கிடைச்சது. அறுவடையில குறைந்தபட்சம் 20 கிலோ முதல் அதிகபட்சமா 50 கிலோ வரைக்கும் கிடைச்சது’’ என்றவர், தனது தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டார். பாடமாக இடம் பெறுகிறது.

‘‘பாரம்பர்ய நெல் சாகுபடியைப் பொறுத்த வரைக்கும் அகல உழவை விட ஆழமான உழவு ரொம்ப முக்கியம். 10 நாள்கள் இடைவெளியில் மூன்று உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவுக்கு முன்னால் ஏக்கருக்கு 200 கிலோ கனஜீவாமிர்தத்தைப் போட்டு உழவு செய்ய வேண்டும். 18 - 21 நாள்களுக்குள் நாற்றுகளை எடுத்து வயலில் நடவு செய்ய வேண்டும். என்னோட வெற்றிக்கு முக்கியக் காரணமே ஒற்றை நாற்று நடவு முறைதான். நாற்றுக்கு நாற்று, வரிசைக்கு வரிசை ஒன்றரை அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 15-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒரு தடவை 10 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் அமுதக்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். மூன்று முறை களை எடுக்க வேண்டும்.

25-ம் நாளிலிருந்து மாதம் ஒரு முறை 100 லிட்டர் பஞ்சகவ்யாவை பாசனத் தண்ணீரில் கலந்து விட வேண்டும். குருத்துப்பூச்சி தாக்குதல் இருந்தால், அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி பசுமாட்டுச் சிறுநீர், 150 மி.லி இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இதைத் தாண்டி வேறெதுவும் செய்யவில்லை’’ என்றார்.



தொடர்புக்கு,

மூர்த்தி - 97156 15851

பொன்னு புதியவன் - 89735 38508

லெட்சுமி தேவி - 94430 81066

முதல் பரிசு கறுப்புக்கவுனி!

கறுப்புக்கவுனி ரகம் சாகுபடி செய்து ஹெக்டேருக்கு 10,672.5 கிலோ மகசூல் எடுத்து முதலிடத்தைப் பிடித்த, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தியிடம் பேசினோம்.

மூர்த்தி
மூர்த்தி

“1998-ம் வருஷம் நம்மாழ்வார் ஐயாவை சந்திச்சேன். அப்போதான், இயற்கை விவசாயம் பத்தின புரிதல் ஏற்பட்டுச்சு. 2004-ம் வருஷத்துல இருந்து தீவிரமா இயற்கை விவசாயத்துல இறங்கினேன். எனக்குச் சொந்தமா 4 ஏக்கர் நிலமிருக்கு. இன்னும் 4 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குப் பிடிச்சு, மொத்தம் 8 ஏக்கர்ல விவசாயம் பண்றேன். நெல், கரும்பு, வாழை, சோளம், மரவள்ளினு பலவிதமான பயிர்களையும் வெள்ளாமை செய்றேன். கடந்த வருஷம் கறுப்புக்கவுனி சாகுபடி செய்தேன். என்னோட முயற்சியைப் பார்த்துட்டு, வேளாண்மைத்துறை அதிகாரிங்க தொடர்ந்து ஊக்கம் கொடுத்தாங்க. முதல்ல, நவதானியங்களை விதைச்சு, அதை வளரவிட்டு, மடக்கி உழுதேன். பிறகு, தரமான விதையைத் தேர்வு செஞ்சு, அதை இயற்கை முறையில் விதை நேர்த்தி பண்ணினேன். அதாவது, கோமியத்துல விதையை ஊறவச்சு, அதை அஞ்சு கட்டு புதினாவை அரைச்ச தண்ணியில ஊறவச்சு, அதுக்குப் பிறகு விதைச்சேன். இதனால், பூஞ்சணம் நோய் பிரச்னை வரலை. அடுத்து, நாத்து விட்ட பிறகு, அசோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனஸ் கலந்த கலைவையில நாத்துகளோட வேரை நனைச்சு, அதை ஒற்றை நாற்று முறையில் நடவு செஞ்சேன்.

நட்ட 7 நாள்கள் கழிச்சு, 10 நாள்கள் இடைவெளியில 3 தடவை கோனோவீடரை உருட்டினேன். அதன்பிறகு, பயிர் நல்லா தளைச்சு வர ஏதுவா, ஐந்திலைக் கரைசலை ஒரு தடவை தெளிச்சேன்.

வயல் சோதனை
வயல் சோதனை

தொடர்ந்து, பஞ்சகவ்யாவை ஒருமுறை பயிர்ல தெளிச்சேன். ரெண்டாவது மற்றும் மூணாவது முறை கோனாவீடர் உருட்டுறதுக்கு முன்னாடி வெர்மி கம்போஸ்ட், உயிர் உரங்களைத் தூவினேன். பூச்சித் தாக்காம இருக்க தலா அரைக்கிலோ இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை அரைச்சு, அதைத் தண்ணில கலந்து கிடைச்ச கரைசலைத் தெளிச்சேன். 4 நாள்களுக்கு ஒரு தடவை தண்ணீர் பாய்ச்சி, பாசனத்தைச் சிறப்பா செஞ்சேன். அதேபோல், எலிக்கட்டுப்பாடு, பூச்சிக் கட்டுப்பாட்டை திறம்பட செஞ்சேன். என்னோட நிலத்துக்கு ஒரு பக்கம் தென்னை அரணா இருக்கு. அதனால, மத்த மூணு பக்கமும் 6 அடி உயர குச்சிகளை ஊன்றி வச்சேன். அதுல ரெட்டைவால் குருவிகள் வந்து உட்கார்ந்து, பூச்சிகளைச் சாப்பிட்டு கட்டுப்படுத்துனுச்சு. இரவுகள்ல ஆந்தைகள் வந்து அமர்ந்து, எலிகளைக் கட்டுப்படுத்துனுச்சு. அதேபோல், தூர்மேலாண்மையையும் திறம்ப கையாண்டேன். தவிர, அறுவடைக்கு முன்பு கதிர் ஆய்வும் பண்ணினேன்.

ஒரு கதிர்ல 220 நெல்மணிகள் இருக்கணும். அதுதான் சராசரி. ஆனா, என் வயல்ல அதைவிட அதிகமா இருந்துச்சு. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடந்த அறுவடையின்போது, 5 அதிகாரிகள், 1 இயற்கை விவசாயினு வந்து வயலைப் பார்த்தாங்க. அதன் பிறகு அறுவடை செஞ்சேன். இதன் மூலமா ஹெக்டேருக்கு 10,672.5 கிலோ மகசூல் கிடைச்சது. ஏக்கருக்குனு பார்த்தா மொத்தமா 4,260 கிலோ மகசூல் கிடைச்சுச்சு. 1 மூட்டை 75 கிலோங்கற கணக்குல 56 மூட்டைகள் கிடைச்சது. இந்த அடிப்படையில வேளாண்மைத்துறை ஆணையர் எனக்கு முதல் பரிசு கிடைச்சதை அறிவிச்சார். விருதும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் கொடுத்தாங்க. கடந்த, 2019-ம் ஆண்டு ஒரு ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா பயிரிட்டு, 48 மூட்டைகள் மகசூல் எடுத்தேன். இப்போ, 56 மூட்டைகள் எடுத்திருக்கேன். எனக்குக் கிடைச்ச இந்த விருது, மத்த இயற்கை விவசாயிகளுக்கு பெரிய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும்” என்றார் மகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism