Published:Updated:

`அது கார்ப்பரேட்களுக்கே உதவியது!' - நீக்கப்பட்ட ஒப்பந்த பண்ணை தொழில் சட்டம்; விவசாயிகள் மகிழ்ச்சி

Farmer (Representational Image)
Farmer (Representational Image) ( AP Photo / Rajesh Kumar Singh )

``இந்தச் சட்டத்தின் கீழ் விவசாயி ஒப்பந்தம் போடும்போது கம்பெனி சொல்லும் விதைகளைத்தான் வாங்க வேண்டும். கம்பெனி சொல்லும் உரங்களைத்தான் விவசாயிகள் வாங்க வேண்டி இருந்தது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரும்பு, பருத்தி, மூலிகை பயிர்கள் சாகுபடி, கறிக்கோழி உற்பத்தி போன்றவை பல ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒப்பந்த சாகுபடியில் பங்கு பெறும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க சட்டம் இல்லை என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை தொழில் மற்றும் சேவைகள் சட்டம் - 2019-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், நேற்று இந்தச் சட்டத்தை நீக்கி மசோதா நிறைவேற்றியுள்ளது தமிழக அரசு. இதோடு வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) என்கிற சட்டத்தில் திருத்தமும் கொண்டு வந்துள்ளது.

நெல்
நெல்
7-வது நாளாக மாணவர்கள் போராட்டம்; பாடப்பிரிவிலிருந்து பட்டுப்புழுவியல் துறை நீக்கப்பட்டது ஏன்?

ஒப்பந்த பண்ணை தொழில் சட்ட நீக்கத்துக்கு அதிமுக சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ``ஒப்பந்த சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளின் நலன் காக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நெல் உள்ளிட்ட 110 விளைபொருள்களை நியாயமான விலைக்கு விற்க இந்தச் சட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டது. அதனால் இந்த சட்ட நீக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என அதிமுக கேட்டு கொண்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையினரிடம் பேசியபோது, ``மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள பாதக அம்சங்கள் இந்தச் சட்டத்திலும் உள்ளன. அதன் காரணமாகவே இது நீக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் விவசாயி ஒப்பந்தம் போடும்போது கம்பெனி சொல்லும் விதைகளைத்தான் வாங்க வேண்டும். கம்பெனி சொல்லும் உரங்களையும், அது சொல்லும் பிராண்டைத்தான் விவசாயிகள் வாங்க வேண்டி இருந்தது. இன்னொன்று ஒப்பந்தம் போடும்போது சொல்லும் விலையை விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. விளையும் விளைபொருள்களின் தரத்தைக் காட்டி கொள்முதல் செய்யாமல் இருப்பதும் நடந்து வந்தது. மொத்தத்தில் இந்தச் சட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கிறதே ஒழிய விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை.

விவசாயம்
விவசாயம்

அதனாலேயே இந்த சட்டம் நீக்கப்படுகிறது. இனி, பழைய சட்ட நடைமுறையே தொடரும். அதேபோன்று வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் சட்டத்தில் மார்க்கெட் கமிட்டிகளுக்கு அதிமுக ஆட்சியில் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. அதை நியமிப்பதற்கான சட்டத்திருத்தம் தற்போதைய தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி மார்க்கெட் கமிட்டிகள் சரியாக இயங்கும்" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து ஒப்பந்த பண்ணையத்தில் ஈடுபட்டு வரும் சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த விவசாயி ஜெயக்குமாரிடம் பேசியபோது, ``இந்தச் சட்ட நீக்கத்தை 100 சதவிகிதம் வரவேற்கிறோம். ஏனென்றால் விவசாயிகள் கம்பெனிகளுடன் போடும் ஒப்பந்தத்தை அரசால் முழுமையாக கண்காணிக்க முடிவதில்லை.

விவசாயி ஜெயக்குமார்
விவசாயி ஜெயக்குமார்

ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் அரசால், அதை நம்மால் கண்காணிக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும். இப்போது நானே கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறேன். தரமற்ற குஞ்சுகளையும், தீவனத்தையும் கொடுத்துவிட்டு தரமான கோழிகளை உற்பத்தி செய்து கொடுங்கள் என்று கேட்கின்றன நிறுவனங்கள். இதேபோல சாகுபடியிலும் தரமற்ற விதைகள், இடுபொருள்களை கொடுத்துவிட்டு தரமான பொருளை கேட்கின்றன. அப்படியே தரமான பொருளை உற்பத்தி செய்து கொடுத்தாலும் கம்பெனிகள் விற்கும் விலையில் பாதியைக்கூட விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. இப்படி கம்பெனிகளுக்கு சாதகமாக இருக்கும் இந்த சட்டத்தை நீக்கியது சரியே. அதேபோன்று 3 வேளாண் சட்டங்களையும் நீக்க வேண்டும். தமிழக அரசு இந்த சட்டத்தை நீக்கியதோடு, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் அறிக்கையை நடைமுறைபடுத்த வேண்டும்.

வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம்: விவசாயிகளிடம் 'ஸ்கோர்' செய்த கட்சிகள் எவை?

உற்பத்தி செலவோடு 50 சதவிகித விலை வைத்து கொடுத்தால் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். இந்த கம்பெனிகளை நம்பியிருக்க வேண்டியதில்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு