Published:Updated:

`₹50 மட்டும் உயர்த்தினால் எங்கள் வருமானம் எப்படி இரட்டிப்பாகும்?' - கொதிக்கும் கரும்பு விவசாயிகள்

கரும்பு
கரும்பு

``கொரோனா காலத்திலும்கூட இந்தியாவில் அபரிமிதமாக சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்க்கரை ஆலை அதிபர்கள் பெரும் லாபம் பார்த்துள்ளார்கள்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2021-22-ம் ஆண்டுக்கான கரும்பு கொள்முதல் விலையாக ரூ.2,900-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2020-21-ம் ஆண்டுக்கு 2,850 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், வெறும் 50 ரூபாய் மட்டுமே தற்போது உயர்த்தப்பட்டிருப்பது நியாயமற்றது என விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

கரும்பு
கரும்பு
ஒரு முறை நடவு... 30 ஆண்டுகள் அறுவடை! - ஒரு ஏக்கரில் 90 டன் மகசூல்...  ரூ.5,60,000 வருமானம்...

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``கரும்புக்கு மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள கொள்முதல் விலை என்பது, விவசாயிகளை வஞ்சிக்கக்கூடியதாக உள்ளது. இது சர்க்கரை ஆலை அதிபர்களுக்கு சேவை செய்யக்கூடிய அறிவிப்பாகும். கடந்த ஆண்டு கரும்புக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையாக டன்னுக்கு ரூ.2,850 என அறிவிக்கப்பட்டது. தற்போது, இதைவிட ரூ.50 மட்டுமே உயர்த்தி டன்னுக்கு ரூ.2,900 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திலும்கூட இந்தியாவில் அபரிமிதமாக சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சர்க்கரை ஆலை அதிபர்கள் பெரும் லாபம் பார்த்துள்ளார்கள். மத்திய அரசுக்கு அந்நிய செலாவணி மற்றும் கலால் வரி மூலம் ஏராளமாக வருமானம் கிடைத்துள்ளது. கரும்பு விவசாயிகளின் கடும் உழைப்பால்தான் இது கிடைத்துள்ளது. ஆனால், உழைத்த விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. விவசாயிகளின் நலனைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாமல், மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு ரூ.50 மட்டுமே விலை உயர்த்தியுள்ளது. மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை பல முறை உயர்த்தியுள்ளது. இடுபொருள்களின் விலை, விவசாய தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட யோசிக்காமல், ஒரு டன் கரும்புக்கு 50 ரூபாய் மட்டுமே விலையை உயர்த்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த அறிவிப்பின் மூலம் 2021 அக்டோபர் 1-ம் தேதி முதல் 2022 செப்டம்பர் 30-ம் தேதி வரை கரும்புக்கு கொள்முதல் விலையாக 2,900 ரூபாய் வழங்கப்படும். இந்த விலையும் 10 சதவிகிதம் பிழிதிறன் கொண்ட கரும்புக்கு மட்டுமே கிடைக்கும்.

சுந்தர விமலநாதன்
சுந்தர விமலநாதன்

இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு 9 சதவிகித பிழிதிறன் மட்டுமே இருப்பதால், அதன் அடிப்படையில் டன்னுக்கு ரூ.2,750 மட்டுமே விலை கிடைக்கும். 2021-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார். ஆனால், அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றாதது குறித்து கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. 2021-ம் ஆண்டு நிறைவுபெறப் போகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி இருந்தால், ஒரு டன் கரும்புக்கு தற்போது 4,000 ரூபாய் விலை வழங்கி இருக்க வேண்டும்.

`₹4,000 எனச் சொன்னார்கள்; ஆனால், ₹2,900-தான் அறிவித்திருக்கிறார்கள்!' - வேதனையில் கரும்பு விவசாயிகள்

சர்க்கரை ஆலைகள் நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லி, மத்திய அரசாங்கம், வட்டி இல்லாத கடன்களாகப் பல ஆயிரம் கோடியை சர்க்கரை ஆலைகளுக்கு வாரி வழங்குகிறது. ஆனால், விவசாயிகளுக்கு நியாயமான லாபகரமான விலை அறிவிக்க மறுக்கிறது’’ என ஆதங்கத்தோடு தெரிவித்தவர், ``பஞ்சாப் மாநில அரசு, அங்குள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக 3,600 ரூபாய் விலை அறிவித்துள்ளது. அவர்களுக்கு இருக்கும் துணிச்சல், விவசாயிகளின் மீதான நல்லெண்ணம் ஏன் பிரதமர் மோடிக்கு இல்லை?’’ எனக் கொந்தளித்தார்.

அன்பான வாசகரே, விகடன் குறித்து உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு தெரிஞ்சுக்க சின்னதா ஒரு கேம் விளையாடலாமா? இந்த Quiz-ஐ attend பண்ணுங்க! https://www.vikatan.com/foundersday-web#

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு