Published:Updated:

நெல் கொள்முதல் விலை: `தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒண்ணு; இப்போ செய்றது ஒண்ணு!' - விவசாயிகள் ஏமாற்றம்

``சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், அனைத்து இடங்களிலும் இந்த வாக்குறுதிகளை வழங்கிப் பேசினார்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டில் ,நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ``நெல் விவசாயிகளின் நலன் கருதி, நெல்லுக்கான கொள்முதல் விலை, சாதாரண ரகத்திற்கு குவிண்டாலுக்கு 2,015 ரூபாயும், சன்ன ரக நெல் ரகம் குவிண்டாலுக்கு 2,060 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும். இதனால் தமிழக அரசுக்கு வரும் நிதியாண்டில் 99.38 கோடி ரூபாய் செலவாகும். ஆக மொத்தம் நெல்லுக்கான குறைந்தபட்சம் ஆதரவு விலைக்காக 319.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வு அறிவிப்பு குறித்து நெற்களஞ்சிய பூமியான காவிரி டெல்டா விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்றும், இந்த அறிவிப்புகள் இவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ள அவர்களிடம் பேசினோம்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்
`இதைச் செய்யாமல் ரேசன் கடைகளில் கருப்பட்டி விற்பனை சாத்தியமில்லை!' - கருப்பட்டி உற்பத்தியாளர்கள்

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன் இது குறித்து பேசியபோது, ``கேரள அரசு, அம்மாநில விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2950 ரூபாய் கொள்முதல் விலை தருகிறது. சத்தீஸ்கர் அரசு, அங்குள்ள விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு 2750 ரூபாய் விலை வழங்குகிறது. ஆனால் தமிழ்நாட்டில் சன்னரக நெல்லுக்கு 1958 ரூபாயும், சாதாரண நெல்லுக்கு 1918 ரூபாயும் தான் விலை வழங்கப்பட்டது. ஒரு குவிண்டாலுக்கு 3,000 ரூபாய் வழங்கினால்தான் கட்டுப்படியாகும் என இங்குள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தோம்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்சம் 2500 ரூபாய் விலை வழங்குவோம்' என அறிவித்தது. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், அனைத்து இடங்களிலும் இந்த வாக்குறுதிகளைப் பற்றி பேசினார். திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் கொள்முதல் விலை கிடைக்கும் என பெரும் நம்பிக்கையோடு இருந்தோம்.

சுகுமாறன்
சுகுமாறன்

ஆனால் தற்போதைய பட்ஜெட் அறிவிப்பில், வரும் ஆண்டுக்கு சாதாரண ரகத்திற்கு குவிண்டாலுக்கு 2,015 ரூபாயாகவும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,060 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் அறிவித்துள்ளனர். இது விவசாயிகளை மிகவும் ஏமாற்றுத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு குறைவான விலை அறிவிப்புதான் வரும் என்று யாரும் நினைத்துகூடப் பார்க்கவில்லை. அதாவது ஒரு குவிண்டாலுக்கு சுமார் நூறு ரூபாய் மட்டுமே விலையை உயர்த்தியுள்ளனர். இது எப்படி விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும்.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, டீசல், வேலையாள்கள் சம்பளம் என எல்லாமே உயர்ந்து, உற்பத்திச்செலவும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதுமட்டுமல்லாமல், உற்பத்தி செய்த நெல்லை, கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுபோனால், அங்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கிறார்கள்.

`₹4,000 எனச் சொன்னார்கள்; ஆனால், ₹2,900-தான் அறிவித்திருக்கிறார்கள்!' - வேதனையில் கரும்பு விவசாயிகள்

இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய கொள்முதல் விலையானது, உற்பத்தி செலவுக்குக்கூட ஈடாகாது. தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே தற்போதுதான் முதல் முறை வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்து, இதுதான் முதல் பட்ஜெட். விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி மனம் குளிர வைக்கும் அளவுக்கு அறிவிப்பு இருக்கும் என்று நினைத்த எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான்’’ என ஆதங்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு