Published:Updated:

நெல் கொள்முதல் ஆன்லைன் முன்பதிவு: `நடைமுறைக்கு உதவாத முறை இது!' - கொதிக்கும் விவசாயிகள்

``இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் ஆங்கிலம் எழுத படிக்க தெரியாதவர்கள். அதுவும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்பது சாத்தியம் இல்லாதது. இதற்காக மற்றவர்களை சார்ந்திருக்க முடியாது’’.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லை, தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய பல நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த காலதாமதத்தால் விவசாயிகள் பல வகைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். காலதாமதத்தைத் தவிர்க்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் ஆன்லைன் முன்பதிவு மூலம் நெல் கொள்முதல் செய்யக்கூடிய புதிய முறையைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிமுகம் செய்கிறது. இது விவசாயிகளை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமல் , இத்திட்டத்தில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆராயாமல் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவும், இத்திட்டம் தங்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்: `நவீன உலர்த்துவான்கள், நடமாடும் கொள்முதல் நிலையங்கள் வேண்டும்!’- விவசாயிகள் கோரிக்கை

ஆன்லைன் முன்பதிவு திட்டம் தொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

``விவசாயிகள் எளிதில் பதிவு செய்து கொண்டு தங்களது நெல்லை, எளிதாக விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இ-டிபிசி இணையதளத்தில், விவசாயிகள் தங்கள் பெயர், ஆதார் எண், நிலத்தின் புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். நெல் கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இணைய வழியின் மூலமாகவே கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்கப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். விவசாயிகள் அந்த குறுஞ்செய்தி அடிப்படையில், குறித்த காலத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளர் அல்லது மண்டல மேலாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தங்களின் நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு வருமா என விவசாயிகளிடம் கேட்டோம். அப்போது பேசிய தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வெள்ளாம்பெரம்பூரைச் சேர்ந்த விவசாயி வள்ளல்குமார், ``நெல் கொள்முதல் நிலைய நிர்வாக சீர்கேடுகளால் விவசாயிகள் ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டு நொந்து கிடக்கிறோம். காலதாமத்துக்குத் தீர்வு காணப்போறோம் என்று சொல்லி, ஆன்லைன் முன்பதிவுத் திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

விவசாயி வள்ளல்குமார்
விவசாயி வள்ளல்குமார்

இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது மாதிரி உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் ஆங்கிலம் எழுத படிக்க தெரியாதவர்கள். அதுவும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்பது சாத்தியம் இல்லாதது. இதற்காக மற்றவர்களை சார்ந்திருக்க முடியாது’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், இதே பகுதியைச் சேர்ந்த விவசாயி துரை.ரமேஷ், ``இது ஒரு முட்டாள்தனமான திட்டம். ஒருவேளை எப்படியோ பிறர் உதவியோடு ஆன்லைன்ல பதிவு செய்ய முயற்சி செஞ்சாலுமேகூட, நெல் அறுவடை தேதியை முன் கூட்டியே தீர்மானிக்க முடியாது. காரணம், இது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யக்கூடிய பொருள் அல்ல. இயற்கை சூழல், அறுவடை இயந்திரம், வேலையாள்கள் கிடைக்குறது என இதையெல்லாம் பொறுத்து, அறுவடை முன்னே பின்னே மாறிப்போகும்.

துரை.ரமேஷ்
துரை.ரமேஷ்

ஆன்லைன் பதிவு மூலம், நெல் கொள்முதலுக்கு தீர்மானிக்கப்பட்ட தேதிக்கு நெல்லைக் கொண்டு போக முடியலைனா, விவசாயிகளோட நிலைமைய நினைச்சிப் பாருங்க. இதையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, கொள்முதல் நிலையங்கள்ல முறைகேடுகளும் லஞ்ச லாவண்யங்களும் மேலும் அதிகரிக்கும். மத்திய அரசின் மறைமுக உத்தரவால்தான் தமிழக அரசு, ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை இங்க அறிமுகம் செய்யுது. நெல் கொள்முதல் செய்வதை தமிழக அரசு கைவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள்கிட்ட ஒப்படைக்கப்போறாங்க. அதுக்கான முன்னேறுப்பாடுதான் இது’’ என்றார்.

இதுகுறித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், ``தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் இருக்காங்க. ஆன்லைன் முன்பதிவு மூலம் நெல் கொள்முதல் செய்றது சாத்தியம்தானானு ஒரு சில விவசாயிகள்கிட்ட கூட கருத்துக் கேட்கலை... சில அதிகாரிகளே இந்த முடிவை எடுத்து, தமிழக முதலமைச்சருக்கு தவறாக வழிகாட்டுறாங்க. முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு நல்லது செய்யணும்னு நினைக்குறார். ஆனால், அதிகாரிகளோ, விவசாயிகள் மத்தியில் முதல்வருக்கு கெட்டப்பேரை ஏற்படுத்த, முயற்சி செய்றாங்க. ஆன்லைன் முன்பதிவு என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் நடைமுறைகளுக்கு விவசாயிகளைப் பழக்கப்படுத்தக்கூடியது.

விவசாயி வீரசேனன்
விவசாயி வீரசேனன்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட நடைமுறைகளுக்கும் இதுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆன்லைன் முன்பதிவுல சொல்லப்பட்ட தேதியில், கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லைக் கொண்டு போவது சாத்தியமே படாது. ஒரு விவசாயி, தான் நினைச்ச நாள்ல, தன்னோட நெல்லை அறுவடை செஞ்சிட முடியாது... காரணம், அக்கம் பக்கத்து விவசாயிகள், அறுவடை செஞ்சு முடித்தால்தான், நெல்லைக் கொண்டு வந்து சேர்க்க பாதை கிடைக்கும். விவசாயிகள் வீட்ல நடக்கக்கூடிய எதிர்பாராத நிகழ்வுகள் இது மாதிரி இன்னும் பல காரணங்களால், ஒரு குறிப்பிட்ட தேதியில் கொள்முதல் நிலையத்துக்கு நெல்லைக் கொண்டு போக முடியாது. தமிழக அரசு உடனடியாக இத்திட்டத்தை வாபஸ் வாங்கணும்’ என வலியுறுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு