Published:Updated:

`கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்கத்தான் கதவணையை நிறுத்துகிறது திமுக அரசு!'- கொந்தளிக்கும் விவசாயிகள்

கொள்ளிடம்

``இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தஞ்சை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களும் பாசன வசதி பெறும். இரு மாவட்டங்களில் தலா 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, நிலத்தடி நீர் மட்டம் உயரும்."

`கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்கத்தான் கதவணையை நிறுத்துகிறது திமுக அரசு!'- கொந்தளிக்கும் விவசாயிகள்

``இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தஞ்சை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களும் பாசன வசதி பெறும். இரு மாவட்டங்களில் தலா 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, நிலத்தடி நீர் மட்டம் உயரும்."

Published:Updated:
கொள்ளிடம்

கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்க வேண்டும் என்பது டெல்டா விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை. விவசாயிகளின் தொடர்ச்சியான வலியுறுத்தல்களின் காரணமாக, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இத்திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதைய தி.மு.க அரசு, இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருப்பது இப்பகுதி விவசாயிகளைப் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

தங்க.தர்மராஜன்
தங்க.தர்மராஜன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் அரியலூர் மாவட்டத் தலைவர் தங்க.தர்மராஜன், ``வெள்ள நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, அந்தத் தண்ணீரை விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்துக்கும் அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தோம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இதை ஆய்வு செய்ய ரூ.23 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாநில நீர்வளத்துறை வல்லுநர்கள் நேரில் பார்வையிட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்தார்கள். இதனால் தஞ்சை விவசாயிகளும் அரியலூர் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், தற்போது தமிழக அரசு, இந்தத் திட்டம் மக்களுக்கு பயனற்றது என்பதால் இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தவறான முடிவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தஞ்சை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களும் பாசன வசதி பெறும். இதுமட்டுமல்லாமல், இரு மாவட்டங்களில் தலா 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் ஆயிரக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகளில் தாராளமாகத் தண்ணீர் கிடைக்கும். எனவே, தமிழக அரசு தனது முடிவை, மறுபரிசீலனை செய்து, இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

கொள்ளிடம்
கொள்ளிடம்

கொள்ளிடத்தில் கதவணை அமைக்க வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வந்த, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``முக்கொம்பில் உள்ள மேலணைக்கும், அணைக்கரையில் உள்ள கீழணைக்கும் இடையே 122 கிலோ மீட்டர் தூரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இரண்டு அணைகளும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆர்தர் காட்டனால் கட்டப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு, கடந்த 75 ஆண்டுகளில் இந்த இரண்டு அணைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஓர் அணைகூட கட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியதாகும். பெருமழைக் காலங்களிலும் கர்நாடகாவில் இருந்து வெள்ளநீர் திறந்துவிடும் காலங்களிலும் கொள்ளிடம் ஆற்றின் வழியாகத் தண்ணீர் கடலில் கலந்து வீணாகிக்கொண்டிருக்கிறது.

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

இந்தத் தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்துக்கு பயன்படுத்த, மேலணைக்கும் கீழணைக்கும் இடைப்பட்ட பகுதியில் குறைந்தபட்சம் 7 கதவணைகளாவது கட்ட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளின் நலன்கள் கருதி, கொள்ளிடத்தில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். அதை நிறைவேற்றும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இத்திட்டம் பயன் அளிக்குமா என 19 வல்லுநர்கள் ஆய்வுகள் மேற்கொண்டுதான் இத்திட்டத்துக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆனால், இதனால் பயன் இல்லை எனத் தற்போதைய தி.மு.க அரசு அறிவித்திருப்பது வேடிக்கையான வேதனை. இது மிகவும் தவறான முடிவு. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், இப்பகுதியில் மணல் குவாரி அமைக்கும் நோக்கத்தோடும்தான் கொள்ளிடம் கதவணைத் திட்டத்தைக் கைவிட்டுள்ளார்கள். தமிழக அரசின் இத்தகைய முடிவை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்துவோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism