Election bannerElection banner
Published:Updated:

மும்முனை மின்சாரம்: `தேர்தல் வரைக்கான நாடகமா எடப்பாடி?' - கேள்வியெழுப்பும் விவசாயிகள்

Farmer
Farmer ( AP Photo / Rajesh Kumar Singh )

ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயத்துக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். நேற்று ஏப்ரல் 1-ம் தேதி பிறந்துவிட்டது. விவசாயத்துக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறதா?

ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயத்துக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியானபோது விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதேசமயம், இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் விவாதங்களும் எழுந்தன. விவசாயிகளின் வாக்குறுதிகளைக் கவர, பொய்யான, சாத்தியமில்லாத வாக்குறுதியைத் தமிழக முதல்வர் வழங்கியுள்ளதாக சர்ச்சை குரல்கள் எழுந்தன. ஏப்ரல் 1-ம் தேதி விவசாயிகளுக்கு ஏமாற்று தினமாகப் போகிறது என விமர்சிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க-வினரோ கண்டிப்பாக இதை நாங்கள் நிறைவேற்றிக் காட்டுவோம் என சவால் விட்டார்கள். நேற்று ஏப்ரல் 1-ம் தேதி பிறந்துவிட்டது. விவசாயத்துக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறதா?

மும்முனை மின்சாரம்: `தேர்தல் வரைக்கான நாடகமா எடப்பாடி?' - கேள்வியெழுப்பும் விவசாயிகள்

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``விவசாயத்துக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் எந்தளவுக்கு சாத்தியங்கிற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், விவசாயிகள் மத்தியில் இது தொடர்பா, பரவலான எநிர்பார்ப்பு நிலவிக்கிட்டேதான் இருந்துச்சு. வழக்கமா 12 மணிநேரம்தான் மும்முனை கொடுக்கப்பட்டுக்கிட்டு இருந்துச்சு, ஆனால், முந்தாநாள் இரவு 12 மணியில இருந்து, இப்ப வரைக்கும் தொடர்ச்சியாகப் பல கிராமங்கள்ல விவசாயத்துக்கு மும்முனை̀ மின்சாரம் கிடைச்சிக்கிட்டு இருக்கு. ஆனால், இதை நினைச்சு விவசாயிகள் முழுமையா சந்தோஷப்பட முடியலை. பல ஊர்கள்ல குறை அழுத்தம்தான் வழங்கப்படுது. கும்பகோணம் பக்கத்துல உள்ள கடிச்சம்பாடி மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்ல, நேத்து முழுக்கவே லோ-வோல்டேஜ். 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் கொடுத்தால் மட்டும் போதாது.

இதை முழு மின்னழுத்தத்துல கொடுத்தால்தான் விவசாயிகளுக்கு உண்மையான பலன் கிடைக்கும். லோ-வோல்டேஜ்ல மோட்டார் போட்டு தண்ணீர் எடுக்குறல பல சிரமங்கள் இருக்கு. தண்ணீர் தொடர்ச்சியா, சீக்கிரமா பாய்ச்ச முடியாது. இதையெல்லாம் விட மிகப் பெரிய பிரச்னை, மோட்டார் காயில் தீஞ்சிப் போயிடும். புதுசா காயில் சுத்தணும்னா 10,000 ரூபாய்க்கு மேல செலவாகும்.

விமல்நாதன்
விமல்நாதன்

இன்னும் சில ஊர்கள்ல, நேத்து இடையிடையே அரை மணிநேரம் மின் வெட்டு பண்ணியிருக்காங்க. விவசாயிகள் காரணம் கேட்டதுக்கு, பழுது பார்த்துக்கிட்டு இருக்கோம். அதனால்தான் கரன்ட் கட்னு மின்சார ஊழியர்கள் சொல்லிருக்காங்க. ஏப்ரல் 1-ம் தேதியில இருந்து மும்முனை மின்சாரம் வழங்கப்படும்னு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு மாசத்துக்கு முன்னாடியே சட்டசபையில் அறிவிச்சிட்டார். ஆனால், இதற்கான முன்னேற்பாடுகள் எதுவுமே நடக்கலை. முன்கூட்டியே இதுக்கான சாதனங்களை சீரமைச்சு தயார் நிலையில வச்சிருக்கணும். நடைமுறை யதார்த்தம் சொல்லணும்னா, 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக வழங்க வாய்ப்பே இல்லை.

ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு வரைக்குமோ, அதையும் மீறிப் போனால், அதிகபட்சம் மே 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை வரைக்கும்தான் 24 மணிநேரம் மின்சாரம் வழங்கப்படும். அதுக்குப் பிறகு, பெயரளவுக்கு மட்டுமே இது நடைமுறையில இருக்கும். அப்படியே இருந்தாலும் லோ-வோல்டேஜ் பிரச்னை அதிகமாக இருக்கும். மின் வெட்டும் அதிகமாக இருக்கும். காரணம் 24 மணிநெரம் மும்முனை மின்சாரம் வழங்குறதுக்கான தொழில் நுட்பக் கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் இல்லைங்கிறதுதான் கசப்பான, யதார்த்த உண்மை. மின்மாற்றி, மின்கடத்தி உட்பட மின் விநியோகத்துக்கான சாதனங்கள் எல்லாமே, ஊழல் முறைகேட்டால், தரமில்லாமல் இருக்கு. இந்த லட்சணத்துல இவங்க எப்படி 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் கொடுப்பாங்க. இந்த விஷயம் ஆட்சியாளர்களுக்கும் மின்சாரத்துறை அதிகாரிகளுக்கும் நல்லாவே தெரியும். ஆனால், எல்லாம் தெரிஞ்சு இருந்தும்கூட, இப்படி வாக்குறுதியை கொடுத்திருக்காங்க. லோ-வோல்டேஜ்ல 24 மணி நேரம் கொடுக்குறதுக்கு பதிலா, 20 மணிநேரமாகக் குறைச்சு முழுமையான மின் அழுத்தத்துல மும்முனை மின்சாரம் கொடுத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

வீரசேனன்
வீரசேனன்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வீரசேனன், ``தமிழ்நாட்டில் சாதாரண காலங்கள்ல தினசரி மின்சார தேவை 16,487 மெகாவாட். கோடைக் காலங்கள்ல மின்சார பயன்பாடு அதிகமாகுறதுனால, இதன் தேவை 17,000 மெகாவாட்டாக அதிகரிக்கும். ஆனால், இதுக்கான மின் உற்பத்தி இங்க போதுமானதாக இல்லை. இதுமட்டுமல்லாமல், வழக்கமாக மற்ற காலங்கள்ல கிடைச்சுக்கிட்டு இருந்த காற்றாலை மின்சாரம், நீர் மின்சாரத்தோட அளவு, கோடைக்காலங்கள்ல பெருமளவு குறைஞ்சுப் போயிடும். இப்படிப்பட்ட பற்றாக்குறை சூழல்ல, தமிழக அரசு விவசாயிகளுக்கு எப்படி 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் கொடுக்க முடியும். விவசாயிகள் காதுல பூ சுத்தப்போறாங்கனு சந்தேகமா இருக்கு’’ எனத் தெரிவித்தார். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்தோடு சொல்லி வருகிறார். இது எந்தளவுக்கு உண்மை என்பது மிக விரைவில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு