Published:Updated:

`எதுக்குமே வராத அந்த ஆம்புலன்ஸ் எதுக்குங்க?' கால்நடை ஆம்புலன்ஸ் சேவையும் விவசாயிகள் கவலையும்!

கால்நடை ஆம்புலன்ஸ்
கால்நடை ஆம்புலன்ஸ்

எவ்வளவுதான் அவசரம் என போன் செய்தாலும், தங்களது கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, இந்த ஆம்புலன்ஸ் வருவதே இல்லை என விவசாயிகள் மத்தியில் தொடர்ச்சியாக ஆதங்கக் குரல்கள் ஒலிக்கின்றன.

இந்தியாவிலேயே முதல் முறையாகத் தமிழ்நாட்டில்தான் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். உயிருக்குப் போராடும் நிலையிலும், நடக்க முடியாத நிலையிலும் உள்ள மாடு, ஆடு, எருமை, நாய் போன்றவற்றை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதால், கிராமப்புற மக்கள் மத்தியில் இத்திட்டத்துக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், தற்போதைய நடைமுறை எதார்த்தமோ விவசாயிகளை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி வருகிறது. எவ்வளவுதான் அவசரம் என போன் செய்தாலும், தங்களது கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, இந்த ஆம்புலன்ஸ் வருவதே இல்லை என விவசாயிகள் மத்தியில் தொடர்ச்சியாக ஆதங்கக் குரல்கள் ஒலிக்கின்றன.

பரிதாப நிலையில் பசு மாடு
பரிதாப நிலையில் பசு மாடு

மனிதர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு, விபத்து போன்ற பாதிப்புகள் நேரும்போது, முதலுதவி மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக, மருத்துவமனை கொண்டு செல்ல, 108 ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கால்நடைகளைக் காப்பாற்ற அதுபோல் எதுவும் இல்லையே என்ற குறை நிலவி வந்தது. இதைப் போக்கும் விதமாகத்தான், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தனது பதவிக்காலத்தில் அவர் தொடங்கி வைத்த கடைசி திட்டமும் இதுதான். 6.38 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலமாகச் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் முதல்கட்டமாகத் தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், காஞ்சிபுரம், மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டு, படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.

உயிருக்குப் போராடும் கால்நடைகளையும், உடல் உபாதைகளால் நடக்க முடியாத கால்நடைகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, 1962 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸில் அனைத்துவிதமான நவீன வசதிகளும் உள்ளன. நடமாட முடியாமல் படுத்துக் கிடக்கும் மாடுகளை, மிகவும் இலகுவாக ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கான அதிநவீன லிப்ட் வசதியும் இதில் உள்ளது. ஆரம்பத்தில் இத்திட்டம் ஓரளவுக்கு சிறப்பாகச் செயல்படுத்திய நிலையில், நாளடைவில் விவசாயிகள் கடும் அதிருப்தி அடையும் அளவுக்கு பெரும் தொய்வு ஏற்பட்டது. விவசாயிகள் தங்களது கால்நடை செல்வங்களைக் காப்பாற்ற, பதைபதைப்புடன் 1962 என்ற தொலைபேசி எண்ணுக்கு பலமுறை தொடர்புக்கொண்டாலும் பலன் இல்லை. இக்குற்றச்சாட்டுகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

பரிதாப நிலையில் வண்டியில் ஏற்றும் பசு
பரிதாப நிலையில் வண்டியில் ஏற்றும் பசு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகி வீரசேனன் இதுகுறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு, ``எங்க ஊரைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கத்தோட பசு மாடு ஒண்ணு கடந்த சில நாள்களாக, உடல் உபாதையால ரொம்பவே சிரமப்பட்டுக்கிட்டு இருந்துச்சு. கால்ல ஏதோ பிரச்னை, அதால நிக்க முடியலை. படுத்தே கிடந்தால், உடம்புல புண்ணு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தா போயிடும். அது மூணு மாத சினை மாடு. கால்நடை மருத்துவரை அழைச்சிக்கிட்டு வந்து காட்டினோம். ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு போனால், நிச்சயமா குணப்படுத்திடலாம்.

ஆனால், மாட்டை வண்டியில ஏத்துறப்ப, உடம்புல எந்தக் காயமும் எற்படாமல் ரொம்ப பாதுகாப்பாக ஏத்திட்டுப் போகணும்னு சொன்னார். அது ரொம்பவே கனமான மாடு. ஆள்கள் தூக்கிவிட்டு வண்டியில ஏத்துறதுங்கறது சாதாரண காரியமில்லை. அரசு தரப்புல இருந்து ஏதாவது உதவி கிடைக்குமானு எதிர்பார்த்து தஞ்சை மாவட்ட கால்நடை இணை இயக்குநரை தொடர்புகொண்டேன். கால்நடை ஆம்புலன்ஸ் 1962-க்குப் போன் பண்ணுங்க... கண்டிப்பா, உடனடியா ஆம்புலன்ஸ் வரும்னு சொன்னார். 1962-க்கு போன் பண்ணினேன். விவரங்களை எல்லாம் கேட்டாங்க. தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ள ஆம்புலன்ஸ் பிரிவு டாக்டருக்கு இணைப்பு கொடுக்குறதா சொன்னாங்க. ஆனால், இணைப்பு கிடைக்கவே இல்லை.

வீரசேனன்
வீரசேனன்

நானும் பல தடவை 1962-க்கு போன் பண்ணினேன். எந்த பலனும் இல்லை. இதுக்கு மேல தாமதிக்க முடியாதுனு, பத்து பதினைஞ்சு ஆள்கள் சேர்ந்து, அந்த மாட்டை பாடாய்ப்படுத்தி, ஒரு லாரில ஏத்தி, ஒரத்தநாடு அழைச்சிக்கிட்டுப் போக வேண்டியதாய போயிடுச்சு. இதுக்கு விவசாயி ராமலிங்கம் ஏகப்பட்ட செலவும் செஞ்சிருக்கார். ஆம்புலன்ஸ் வந்திருந்தால், மருத்துவர்கள் முதலுதவி செஞ்சு, பாதுகாப்பா கிரேன் மூலமா ஆம்புலன்ஸ்ல ஏத்தி அழைச்சிட்டுப் போயிருப்பாங்க. பாவம் அந்த சினை மாட்டுக்கு உடல் தொந்தரவு ஏற்படாமல் கொண்டு போயிருக்கலாம். மக்களோட வரிப்பணத்துல பல கோடி ரூபாய் செலவு பண்ணி, இதுமாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்படுது. ஆனால், இதனால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லைங்கிறத நினைக்கும்போது ரொம்ப வேதனையா இருக்கு” என்று கவலைப்பட்டார்.

``கால்நடை ஆம்புலன்ஸ்கள் வெறும் காட்சிப்பொருளா? இதை நம்பி 1962 என்ற எண்ணைத் தொடர்புகொள்வது வீண் வேலையா? எதற்குமே வராத அந்த ஆம்புலன்ஸ் எதற்கு?" என விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு