Published:Updated:

டெல்லி:`விருதை திருப்பி ஒப்படைப்பேன்’ ; கதகதப்பான ஆடைகளுக்கு உதவி! - விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆதரவுக் குரல்கள் பெருகிவரும் நிலையில், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று வேளாண் மசோதாக்களும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் `குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை நிர்மூலமாக்கிவிடும் என்று அதைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடந்த 27-ம் தேதி போலீஸாரின் தடியடி, கண்ணீர்ப் புகைக்குண்டுகளை மீறி தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளிலுள்ள நெடுஞ்சாலைகளில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆதரவுக் குரல்கள் பெருகிவரும் நிலையில், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதையடுத்து கடும் குளிரிலும் 10-வது நாளைக் கடந்து தொடர்கிறது போராட்டம். மத்திய அரசுடன் வரும் 9-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் நிலையில் சுமுகத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், பஞ்சாபி நடிகரும், பாடகருமான தில்ஜித் டோசன்ஜ் (Diljit Dosanjh) நேற்று டெல்லி - ஹரியானாவின் சிங்கு எல்லையில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். பின்னர், கடும் குளிரிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்குக் கதகதப்பான ஆடைகளை வாங்க, தில்ஜித் டோசன்ஜ் 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

சிங்கு எல்லையிலுள்ள விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய தில்ஜித், ``விவசாயிகள் அனைவருக்கும் வணக்கம். நீங்கள் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இந்த வரலாறு எதிர்காலச் சந்ததியினருக்கு விவரிக்கப்படும். விவசாயிகளின் பிரச்னைகள் யாராலும் திசைதிருப்பப்படக் கூடாது" என்றார்.

மேலும், ``எங்களுக்கு ஒரு கோரிக்கை மட்டுமே இருக்கிறது. தயவு செய்து எங்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். எல்லோரும் இங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். இந்தக் கிளர்ச்சி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளைப் பற்றியது. ட்விட்டரில் விஷயங்கள் திரிக்கப்படுகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், விவசாயிகள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே தவிர, இங்கு யாரும் வன்முறை பற்றிப் பேசவில்லை" என்றார் தில்ஜித் டோசன்ஜ்.

இந்தநிலையில், பஞ்சாபி பாடகர் சிங்கா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தில்ஜித் டோசன்ஜ், விவசாயிகள் போராட்டத்துக்காக ரூபாய் 1 கோடி நன்கொடை அளித்திருக்கிறார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார் பாடகர் சிங்கா.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

அந்த வீடியோவில் பஞ்சாபியில் பேசியிருக்கும் பாடகர் சிங்கா, ``நன்றி சகோதரா, விவசாயிகளுக்குக் கதகதப்பான ஆடைகள் வாங்க 1 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள். இது யாருக்கும் தெரியாது. இப்போதெல்லாம் 10 ரூபாய் நன்கொடை அளிக்கும் மக்களே வாயை மூடிக்கொண்டு இல்லாமல் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் நீங்கள் இதைப் பற்றி எந்தப் பதிவும் இடவில்லை" என்று தில்ஜித் டோசன்ஜ் பற்றி பேசியிருக்கிறார்.

இந்தநிலையில் பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவளித்துப் பேசுகையில், `வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைத் திருப்பி ஒப்படைப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு